எண்ணங்களின் பிரதிபலிப்பு

Monday, September 28, 2009

சனி பெயர்ச்சி பலன்கள்


இந்த சனி பகவான் என்பவர் யார்?சனி பெயர்ந்தால் என்ன ஆகும்?


உண்மையாக சனி பெயர்ந்தால் என்ன ஆகும்?

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக சனிப்பெயர்ச்சி - சனிப்பெயர்ச்சி என்று எந்த ஏட்டைப் பார்த்தாலும் சனிப்பெயர்ச்சி மயம்தான்.

சனி பகவான் - சிம்ம ராசியிலிருந்து - கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்து குடிபெயர்கிறாராம்!

சரி; இந்த சனி பகவான் என்பவர் யார்?-வானமண்டலத்திலிருந்து கத்திரி - அக்னி நட்சத்திரம் என்ற பெயர்களில் நம்மையெல்லாம் சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருக்கிறதே சூரியன்; அந்த சூரியனுக்கும் சாயாதேவி என்ற பெண்ணுக்கும் பிறந்தவர்தான் இந்த சனி பகவான் என்கிறார்கள்.

சுட்டெரிக்கும் சூரியனைக் கட்டியணைத்து கர்ப்பம் தரித்து ஒரு மகனையும் பெற்றெடுத்தாள் ஒரு பெண் என்றால் எத்தனை வோல்டேஜ் - ஏ.சி. வசதி படைத்த பெண்ணாக அவள் இருந்திருக்கவேண்டும்?

வோல்டாஸ் - ஏ.சி. கம்பெனிக்காரர்களைத்தான் கேட்கவேண்டும். ஏனெனில் அவர்கள்தான்

தங்களது ஏ.சி. கருவிகளை எரிமலையையும் பனிமலையாக்கும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள்!

இந்த சனி என்பது பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

சனி என்பது விண்வெளியிலுள்ள ஒரு கோள் என்கிறது விஞ்ஞானம். வியாழன் என்ற கோளுக்கு அடுத்தபடியாக இது ஒரு மிகப்பெரிய கோள். இந்தக்கோளின் குறுக்களவு மட்டுமே 73 ஆயிரம் மைல் என்று அறுதியிட்டு உறுதிபட வரையறுத்திருக்கிறது விஞ்ஞானம்.

பூமிக்கும் இந்த சனி என்கிற கோளுக்குமிடையில் உள்ள தூரம் எவ்வளவு? 75 கோடி மைலாகும்!

இந்த சனிக் கிரகத்தை - கோளைத்தான் இங்கே சனி பகவான் என்கிறார்கள்.

விஞ்ஞானம் கூறும் சனி ஒரு கோள் என்பதை நம்புவதா? நம்மூர் சோதிடர்கள் சனிபகவான் என்கிறார்களே அதை நம்புவதா?

விடை காண்பது மிக எளிது!

விஞ்ஞானம் கூறுவது - அதன் அடிப்படையிலான கண்டுபிடிப்புகள் எல்லாமே உலகம் முழுவதிலுமுள்ள நாடுகள் - மக்களுக்குப் பொதுவானது!

தொலைக்காட்சி என்றால் உலகத்தின் எந்த நாட்டிலும் - எந்த வீட்டிலும் படிப்பறிவற்ற பாமரன்கூட இயக்கலாம். காட்சிகளைக் கண்டுகளிக்கலாம்!

செல்போன் என்றால் முதலாளியின் கையிலும் வைத்துக்கொள்ள முடியும்; அவரின்கீழ் பணியாற்றும் கடைநிலை ஊழியரின் பையிலும் வைத்துக் கொள்ளலாம்; அவரும் பேசலாம். இவராலும் பேச முடியும்.

இப்படி விஞ்ஞானம் கூறுவதையும் அதன் அடிப்படையிலான கண்டுபிடிப்புகளின் பயன்களையும் எல்லோரும் அனுபவிக்கலாம்! ஆனால் -சோதிடம் சொல்லும் இந்த சனிபகவான் - அவரது பெயர்ச்சி பற்றியெல்லாம் - உலகில் எத்தனை நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியும்? அவர்களுக்கெல்லாம் சனிப் பெயர்ச்சிப் பலன்கள் பற்றி எதுவும் தெரியுமா? அந்த நாடுகளில் எல்லாம் நம்ம ஊர்த் திருநள்ளாறு போல - சனீஸ்வரன் கோயில் என்று உண்டா? அங்கே எல்லாம் நளதீர்த்தக்குளங்கள்தான் உண்டா?

காக்கையின் மேல் ஓர் ஆளே ஏறி உட்காரலாம். காக்கை நசுங்காது. சனீஸ்வரர் ஏறி அமர்ந்த பிறகும் பிள்ளையார் சதுர்த்திக் கொழுக்கட்டை போல காக்கை அப்படியே இருக்கும் என்றால் நம்புவார்களா?

நம்பமாட்டார்கள் - என்ன காரணம்?

தொலைக்காட்சிப் பெட்டி போல - செல்போன் போல எல்லோரும் சனி பகவானைக் கண்ணால் காணமுடியாது! அவன் எங்கேயிருந்து எங்கே போகிறான் என்பதை ஜோதிடர்கள்தான் கண்டுபிடித்துப் பலன் சொல்ல வேண்டும். யாரை ஏழரைநாட்டுச் சனி பிடித்துக்கொள்ளும்? யாரை விட்டுவிடும்? என்பது பற்றியெல்லாம் ஜோதிடர்கள் சொல்வதைத்தான் நம்பித் தொலையவேண்டும். ஆனால் -

செல்போன்களால் என்ன பயன் என்பதை ஒவ்வொருவரும் உலகம் முழுவதும் ஒவ்வொரு நொடியிலும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது விஞ்ஞானத்தின் சக்தி.

ஜோதிடர்கள் கூறும் சனிபகவான் சக்தி என்ன?

திருநள்ளாறில் சனிப் பெயர்ச்சி விழா.

பக்தர்கள் நளதீர்த்தத்தில் நீராடும்போது அவர்களது உடைமைகள் திருட்டுப் போவதாகப் புகார்!

யாரிடம் புகார் கூறுகிறார்கள்? சனீஸ்வரரிடமா? போலீசாரிடம்தான் தங்கள் உடைமைகளைப் பாதுகாத்துத் தரும்படி கோருகிறார்கள்.

பக்தர்களின் உடைமைகள் திருட்டுப் போகாமல் பாதுகாக்க கோவிலைச் சுற்றி 37 ரகசியக் கேமராக்களை போலீசார் பொறுத்தியிருக்கிறார்கள்.

பக்தர்களைப் பாதுகாக்க மொத்தம் அங்கே 1500 போலீசார்!

பக்தர்கள் சனீஸ்வரனுக்குச் சக்தி அதிகமா? போலீசாருக்கு சக்தி அதிகமா? தங்கள் உடையைக் காக்கும் சக்தி போலீசாருக்கே உண்டு என்று நம்புகிறார்கள்!

இவைகள் எல்லாம் ஒருபுறமிருக்க, -

73 ஆயிரம் மைல் குறுக்களவு கொண்ட சனி நிஜமாகவே பெயர்ந்தால் என்ன ஆகும்?

நினைத்துப் பார்ப்பவர்களின் நெஞ்சம் பதறும்!

- நாற்பதாண்டுகளுக்கு முன்பு -

விண்ணிலே பறந்து கொண்டிருந்த சாட்டிலைட் ஒன்று பூமிப் பந்து நோக்கி வருகிறது; எங்கே விழும் என்று கணிக்க முடியவில்லை; எங்கே விழுந்தாலும் நாசம்; சர்வநாசம்தான் என்று உலகமே பயந்து நடுங்கியது!

அதுபோல சனி என்ற கோள் இடம்பெயர்ந்து பூமி நோக்கி வந்தால் என்ன ஆகும்?

சனிப் பெயர்ச்சியின் பலன் எழுதுபவர்கள், அதனை நம்புகிறவர்கள் எல்லாம் சிந்தித்துப் பார்த்ததாகத் தெரியவில்லை,

நளன்குளம் என்கிற மூடநம்பிக்கைக் குளத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களது உடைமைகளை சனி பகவானால் பாதுகாக்க முடியவில்லை. அதைத்தான் -

நளன்குளத்தைச் சுற்றி பொருத்தப்பட்டுள்ள 12 கேமராக்கள் எடுத்துக்காட்டுவனவாக இருக்கின்றன.

அதனால்தான்

இந்த கேமராக்களின் கட்டுப்பாட்டு அறை, கோவில் நிருவாக அதிகாரி அறைக்குள்ளும், திருநள்ளாறு காவல் நிலையத்திலும் செயல்படுகிறது.

இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் திருட்டுச் சம்பவங்களைத் தவிர்க்க முடியும் என்றும், இதனால் பொது மக்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க முடியும் என கோவில் நிர்வாக அதிகாரி பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார் -
என்கிறது பத்திரிகைச் செய்தி!

-------------------------(நன்றி: முரசொலி 27.9.2009)

6 comments:

ரோஸ்விக் said...

வெளுத்துக்கட்டுங்க பாஸ்! கும்புடுரவுங்களுக்கெல்லாம் நன்மை கிடைக்கும் என்றால்....அதெர்க்குப் பெயர் கடவுளுமில்லை....கடவுள் அனைவருக்கும் சமமானவராக இருக்க வேண்டும்.

Anonymous said...

முரசொலி கட்டுரையா? தங்கள் கட்டுரையா? எதுவாக இருந்தாலும் மூடநம்பிக்கையுள்ளவர்களுக்கு சரியான ‘குட்டு’ வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளீஸ்வரன்

Anonymous said...

தங்கம் இதுபோன்று கட்டுரைகள் தங்களது தளத்தில் அதிகம் வர விரும்புகிறேன். ப்பேக் அடித்து விடாதீர்கள்.

மணி
பெரியார் கழகம்

TAMILSUJATHA said...

முரசொலி ஊருக்குத்தான் உபதேசம், கிண்டல் எல்லாம். அவர்கள் வீடுகளில் பெண்கள் கடவுள் முதல் ஜோதிடம் வரை மூட நம்பிக்கைகளில் மூழ்கி்யவர்களாக இருக்கிறார்கள்!

கருப்புசாமி குத்தகைதாரர் said...

உமக்காக சனி பகவானிடம் பிரார்த்தனை செய்கிறேன், என்ன ராசி என்று சொல்லுங்கள்!

Tamil Home Recipes said...

மிகவும் அருமை