எண்ணங்களின் பிரதிபலிப்பு

Monday, October 29, 2012

மத்திய அமைச்சரவை மாற்றம்:


 நேற்றைய மத்திய அமைச்சரவை மாற்றத்தில், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் தரப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தொழிலதிபரை எதிர்த்த, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், ஜெய்பால் ரெட்டி, அறிவியல், தொழில் நுட்பத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நீண்ட நாட்களாக நிலவிய யூகங்களுக்குப் பின், மத்திய அமைச்சரவை நேற்று மாற்றி அமைக்கப்பட்டது. இந்த மாற்றத்தில், ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர், ரகுமான் கான் (கர்நாடகா), தின்ஷா படேல் (குஜராத்), அஜய் மேக்கன் (டில்லி), பல்லம் ராஜு (ஆந்திரா), அஸ்வினி குமார் (பஞ்சாப்), ஹரீஷ் ராவத் (உத்தரகண்ட்) மற்றும் சந்திரேஷ் குமாரி (ராஜஸ்தான்) ஆகிய ஏழு பேர், கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவர்களில், ரகுமான் கானும், சந்திரேஷ் குமாரியும் அமைச்சரவைக்கு புதியவர்கள், மற்றவர்கள் எல்லாம், இணை அமைச்சர்களாக இருந்து, கேபினட் அமைச்சர்களாகியுள்ளனர்.
ஆந்திராவில் நடிகராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய, காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி., சிரஞ்சீவி, காங்கிரஸ் தகவல் தொடர்பாளரும், பஞ்சாப் லூதியானா லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான மணீஷ் திவாரி ஆகியோர், தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவர்கள் தவிர, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, தாரிக் அன்வர் (மகாராஷ்டிரா ராஜ்யசபா எம்.பி.,), கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் சசி தரூர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, ஏ.எச்.கான் சவுத்ரி, அதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் தீபா தாஸ்முன்ஷி, ஆந்திராவைச் சேர்ந்த, சத்திய நாராயணா, ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி, பல்ராம் நாயக், கில்லி கிருபா ராணி, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, லால் சந்த் கட்டாரியா, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராணி நரா, அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த, நினோங் எரிங் ஆகிய 13 பேரும், இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.
நேற்று மொத்தம், 22 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர். 

அவர்கள் அனைவருக்கும், ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
அதே நேரத்தில், மத்திய அமைச்சர்கள் பலரின் இலாகாக்களும் மாற்றப்பட்டன. 

ஊனமுற்றோருக்காக வழங்கிய நிதியை, தன் அறக்கட்டளை மூலம் பெற்று, மோசடி செய்ததாக, சமூக சேவகர், அரவிந்த் கெஜ்ரிவாலால் குற்றம் சாட்டப்பட்ட, மத்திய சட்ட அமைச்சராக இருந்த, சல்மான் குர்ஷித், வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதுவரை கம்பெனிகள் விவகாரம் மற்றும் மின் துறையை கவனித்து வந்த வீரப்ப மொய்லி, பெட்ரோலியத் துறை அமைச்சரானார். மத்திய நீர்வளத் துறை அமைச்சராக இருந்த, பவன் குமார் பன்சால், ரயில்வே துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இயற்கை எரிவாயு விலை நிர்ணயத்தில், பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து, அவருடன் மோதலில் ஈடுபட்ட, பெட்ரோலியத் துறையை கவனித்து வந்த, ஆந்திராவைச் சேர்ந்த ஜெய்பால்ரெட்டி, அந்த துறையிலிருந்து மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு, அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை ஒதுக்கப் பட்டுள்ளது.
இதுவரை இணை அமைச்சராக இருந்த,தின்ஷா படேல், தற்போது, கேபினட் அமைச்சராகியுள்ளனர். அவருக்கு சுரங்கத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தனிப் பொறுப்புடன் கூடிய, இணை அமைச்சராக நேற்று பதவியேற்ற, சிரஞ்சீவிக்கு, சுற்றுலா துறையும், மற்றொரு தனி பொறுப்பு அமைச்சராகியுள்ள, மணீஷ் திவாரிக்கு, தகவல், ஒளிபரப்புத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல்., கிரிக்கெட் அணி பங்குகளை வாங்கியது தொடர்பான சர்ச்சையில் சிக்கியதால், வெளியுறவு இணை அமைச்சர் பதவியை, 2010ல் ராஜினாமா செய்த, சசி தரூர், தற்போது, மனிதவள மேம்பாட்டுத் துறை துணை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர், கபில் சிபல் வசமிருந்த, மனிதவள மேம்பாட்டுத் துறை, நேற்று கேபினட் அமைச்சராக பதவியேற்ற, பல்லம் ராஜுவிடம் தரப்பட்டுள்ளது. ராஜு, முன்னர் ராணுவத் துறை இணை அமைச்சராக பதவி வகித்தார்.
உத்தரகண்ட் மாநில முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு, அது கிடைக்காததால், தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய, விவசாயத் துறை இணை அமைச்சர், ஹரீஷ் ராவத், நேற்று கேபினட் அமைச்சரானார். அவருக்கு, நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை இணை அமைச்சர்களாக பதவி வகித்து, நேற்று கேபினட் அமைச்சரான, தின்ஷா படேலுக்கு சுரங்கத் துறையும், அஜய் மேக்கனுக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையும் தரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலுக்கு, மிக நெருக்கமானவர்களாகக் கருதப்படும், காங்கிரஸ் இளம் தலைவர்களான, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, சச்சின் பைலட் மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேற்று, கேபினட் அமைச்சர்களாகப்பட்டு, அவர்களுக்கு மின்சாரம், கம்பெனி விவகாரம் மற்றும் இளைஞர் நலம்மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
முதுபெரும் காங்கிரஸ் தலைவரான, கே.எச்.முனியப்பா, ரயில்வே துறை இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து, சிறு, குறு மற்றும் மத்திய தொழில்கள் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். ரயில்வே இணை அமைச்சராக இருந்த, பரத்சிங் சோலங்கி, ரயில்வே இணை அமைச்சர் பொறுப்பிலிருந்து, குடி தண்ணீர் மற்றும் சுகாதாரத் துறை (தனி பொறுப்புடன் கூடியது) அமைச்சராகியுள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த புரந்தரேஸ்வரி, அந்தத் துறையிலிருந்து மாற்றப்பட்டு, வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சராகவும், சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சராக இருந்த, ஜிதின் பிரசாதா, ராணுவம் மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராகவும், தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர், ஜெகத்ரட்சகன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.அதேபோல், மின் துறை இணை அமைச்சர், வேணுகோபால், விமான போக்குவரத்து துறை அமைச்சராகியுள்ளார். பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், ராஜிவ் சுக்லாவுக்கு, திட்டமிடல் துறை கூடுதலாக தரப்பட்டுள்ளது.
வெளியுறவு துறை இணை அமைச்சர், அகமதுவிடம் கூடுதலாக இருந்த, மனிதவள மேம்பாட்டுத் துறை பறிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியத் துறை இணை அமைச்சரான, ஆர்.பி.என்.சிங், உள்துறை இணை அமைச்சராகியுள்ளார். நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறையை கவனித்து வந்த, குமாரி செல்ஜா, சமூக நீதி மற்றும் அமலாக்கத் துறைக்கு மாற்றப் பட்டுள்ளார்.நேற்று புதிதாக இணை அமைச்சர்களாக பதவியேற்ற, கொடி குன்னில் சுரேஷுக்கு, தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறையும், தாரிக் அன்வருக்கு, விவசாயத் துறையும், சூரிய பிரகாஷ் ரெட்டிக்கு ரயில்வே துறையும், ராணி நராவுக்கு பழங்குடியினர் விவகாரமும், அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு, ரயில்வே துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான, ஏ.எச்.கான் சவுத்ரி (சுகாதாரம்மற்றும் குடும்ப நலம்), சத்திய நாராயணா (சாலை போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை), நினோங் எரிங் ( சிறுபான்மையினர் நலம்), தீபா தாஸ்முன்ஷி (நகர்ப்புற மேம்பாடு), பல்ராம் நாயக் ( சமூக நீதிபதி மற்றும் அதிகாரம் வழங்கல்), கில்லி கிருபா ராணி (தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம்) மற்றும் லால் சந்த் கட்டாரியாவுக்கு ராணுவத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகுல் ராய், பதவி விலகியது முதல், ரயில்வே துறையை, சி.பி.ஜோஷி கூடுதலாக கவனித்து வந்தார். அவரிடமிருந்த ரயில்வே துறை, பவன் குமார் பன்சாலுக்கு தரப்பட்டுள்ளது. இனி, சாலை போக்குவரத்து துறை அமைச்சராக மட்டும், ஜோஷி தொடர்வார்.
நேற்று கேபினட் அமைச்சராக பதவியேற்ற, ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர், ரகுமான் கானுக்கு, சிறுபான்மையினர் நலத்துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், இந்தத் துறை, சல்மான் குர்ஷித்திடம் இருந்தது.நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின் மூலம், பிரதமரையும் சேர்த்து, மத்தியஅமைச்சர்களின் எண்ணிக்கை, 79 ஆக உயர்ந்தது. வரும், டிசம்பர் மாதம், குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அதை கருத்தில் கொண்டும், ஆந்திரா உட்பட சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், பிரதமர் மன்மோகன் சிங், நேற்றைய அமைச்சரவை மாற்றத்தை நிகழ்த்தியிருப்பதாக நம்பப்படுகிறது.

16 ஆண்டுகளுக்கு பிறகுகாங்., வசம் ரயில்வே:மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாகக் கருதப்படும், ரயில்வே துறை, 16 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் வசம் வந்துள்ளது. இந்த முறை, மிச்சம் மீதி இல்லாமல், ஒட்டுமொத்த துறையும், காங்கிரஸ் வசமே வந்துள்ளது; இணையமைச்சர்கள் அனைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே.
தனி பட்ஜெட், ஏகப்பட்ட நிதி ஒதுக்கீடு, தனி ரயில் என, ஏராளமான வசதிகள் கொண்ட ரயில்வே துறையின், காங்கிரஸ் அமைச்சராக, கடைசியாக இருந்தது, காமன்வெல்த் ஊழல் புகழ், சுரேஷ் கல்மாடி. 1996ல், நரசிம்மராவ் ஆட்சியின் போது, ரயில்வே அமைச்சராக, கல்மாடி இருந்தார்.அதற்குப் பிறகு, கடந்த, 16 ஆண்டுகளாக, காங்கிரஸ் வசம் அந்தத் துறை வரவே இல்லை. கூட்டணி கட்சிகளின் நிர்பந்தம், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய ஆசை போன்றவற்றால், கூட்டணி கட்சிகளுக்கு அந்தத் துறை, தாரை வார்க்கப்பட்டது.காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், இரண்டாவது ஆட்சியில், கடந்த மூன்றாண்டுகளாக, ரயில்வே துறையின் அமைச்சர்களாக, மம்தா பானர்ஜி, தினேஷ் திவேதி மற்றும் முகுல் ராய் இருந்தனர். முகுல் ராய் ராஜினாமா செய்த பிறகு, காங்கிரஸ் கட்சியின், மூத்த அமைச்சர்களில் ஒருவரான, சி.பி.ஜோஷி தற்காலிகமாக கவனித்து வந்தார்.

நேற்றைய அமைச்சரவை மாற்றத்தின் போது, ரயில்வே துறை அமைச்சராக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, பவன்குமார் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தத் துறையின் இணையமைச்சர்களாக, அதிர் ரஞ்சன் சவுத்ரி, ஜெயசூர்ய பிரகாஷ் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளனர்.