எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, June 23, 2013

காங்கிரஸ் கமிட்டி மாற்றியமைப்பு

அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலில், தமிழக காங்கிரசாருக்கு, முக்கிய பதவியான, பொதுச் செயலர் பதவியை வழங்காமல், புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எந்த கோஷ்டியும் சாராமல், செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகிய, மூவருக்கு மட்டும், அகில இந்திய காங்., செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், பதவி கிடைக்காத கோஷ்டித் தலைவர்கள், சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் பதவியிலிருந்து, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் முகுல் வாஸினிக் பொறுப்பேற்றுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளர் பதவி வகித்த, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, நிரந்தர அழைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பா.ஜ.,விலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் இணைந்த போது, அவர் தேசிய செயலர் பதவியும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வகித்தார். ஆனால், நான்கு ஆண்டுகளாக, அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாமல் இருந்ததால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலிடம், தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். சமீபத்தில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், மகள் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு பா.ஜ., கட்சியில், அகில இந்திய செயலர் பதவி வழங்கப்பட்டது.
இதனால், பா.ஜ.,விலிருந்து, காங்கிரசுக்கு வந்த திருநாவுக்கரசருக்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியும், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ., செல்லக்குமார், கடந்த, 13 ஆண்டுகளாக எந்த பதவியும் இல்லாமல் வன வாசத்தை அனுபவித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அம்பிகா சோனியின் தயவால், அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியை பெற்றுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவி வகித்து வரும், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயக்குமார், மீண்டும் அதே பதவியில் நீடிக்க, மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே காரணமாக இருந்துள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு, இளைய தலைமுறை எம்.பி.,க்களில், விருதுநகர் எம்.பி., மாணிக்தாகூர் நெருக்கமானவர் என்பதால், அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ., வசந்தகுமார் ஆகிய மூவரும் தங்களுக்கு, முக்கிய பதவியான, அகில இந்திய பொதுச்செயலர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்தனர். ஆனால், மூவருக்கும் எந்த பதவியும் வழங்கவில்லை.
இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலில், மத்திய அமைச்சர் சிதம்பரம் மட்டும், பதவி உயர்வு பெற்றுள்ளார். ஆனால், அவரது ஆதரவாளர்களுக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. அதேபோல் மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளர்களுக்கும், அகில இந்திய அளவில் எந்த பொறுப்பும் வழங்கவில்லை.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, முகுல் வாஸினிக் இரு முறை எம்.பி.,யாக இருந்துள்ளார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை முகுல் வாஸினிக் தயாரித்து தான் வர வேண்டும் என்றால், இன்னும் ஓராண்டு வரை பட்டியல் வெளிவர வாய்ப்பில்லை. காரணம், அவரது செயல்பாடு வேகமாக இருக்காது என்ற கருத்து, கட்சியின் மத்தியில் நிலவுகிறது.
அதேசமயம், குலாம்நபி ஆசாத், தயாரித்து வைத்திருந்த நிர்வாகிகள் பட்டியல் என்றால், இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளிவந்து விடும் வாய்ப்பு உள்ளது. ராஜ்யசபா தேர்தல் முடிவடைந்த பின், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான, சத்தியமூர்த்தி பவனுக்கு முதன்முறையாக முகுல் வாஸினிக் வரவுள்ளார்

Monday, June 17, 2013

எட்டு அமைச்சர்கள் பொறுப்பேற்பு : சுதர்சன நாச்சியப்பன் இணை அமைச்சரானார்

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், காங்கிரஸ் கட்சியில், நேற்று முன்தினம், அதிரடி மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, மத்திய அமைச்சரவையிலும், நேற்று மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த, சுதர்சன நாச்சியப்பன் உட்பட, எட்டு பேர், புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்த, மல்லிகார்ஜுன கார்கே, ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்தாண்டில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு முன் கூட்டியே தயாராகியுள்ள காங்கிரஸ், அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. கட்சியிலும், ஆட்சியிலும், பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன.மத்திய அமைச்சர்களாக இருந்த, சி.பி.ஜோஷி, அஜய் மேகன், நேற்று முன்தினம், ராஜினாமா செய்தனர்; அவர்களுக்கு கட்சி பொறுப்பு வழங்கப்பட்டது. இது தவிர, காங்., கட்சிக்கு, 42 செயலர்களும் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, தேர்தலுக்கு தயாராகும் வகையிலான, பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.தி.மு.க., திரிணமுல் காங்., போன்ற, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியதால், அந்த கட்சிகள் சார்பில், அமைச்சர்களாக இருந்தவர்கள், ராஜினாமா செய்தனர். இதனால், பல இலாகாக்களுக்கு, அமைச்சர்கள் இல்லாமல் இருந்தனர். அமைச்சரவையில் இருந்த சிலர், கட்சி பொறுப்புகளுக்கு அனுப்பப்பட்டதாலும், அமைச்சரவையில், காலி இடங்கள் அதிகரித்தன. இதையடுத்து, அமைச்சரவையில், நேற்று மாற்றம் செய்யப்பட்டது.

பதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில், நேற்று மாலை நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர், மன்மோகன் சிங், காங்., தலைவர், சோனியா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.புதிய அமைச்சர்களுக்கு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.எட்டு பேர், புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில், சிஸ்ராம் ஓலா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், கே.எஸ்.ராவ் கேபினட் அமைச்சர்கள்.மாணிக்ராவ் கேவிட், சந்தோஷ் சவுத்ரி, சுதர்சன நாச்சியப்பன், ஜே.டி.சீலம் இணை அமைச்சர்கள்.எளிமையாக நடந்த, இந்த விழா, 20 நிமிடங்களில் முடிந்தது. அமைச்சர்களாக பதவியேற்றவர்கள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் வாழ்த்து பெற்றனர்.தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்த, கர்நாடகாவைச் சேர்ந்த, மல்லிகார்ஜுன கார்கே, இலாகா மாற்றப்பட்டது; அவர், ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கேபினட் அமைச்சர்கள்:

கேபினட் அமைச்சராக பதவியேற்ற, சிஸ்ராம் ஓலாவுக்கு, 86, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை வழங்கப்பட்டுள்ளது. இவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, காங்., மூத்த தலைவர். கடந்த லோக்சபா தேர்தலில், ராஜஸ்தானின் சுஞ்சுனு தொகுதியில், போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு, பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ.,வில், யாரும் முன்வரவில்லை. இதனால், வேட்பாளர் கிடைக்காமல், பா.ஜ., திண்டாடியது; அந்த அளவுக்கு செல்வாக்கானவர்.கர்நாடகாவைச் சேர்ந்த, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஐ.மு., கூட்டணி அரசில், முதல் அமைச்சரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, கிரிஜா வியாசுக்கு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு இலாகா வழங்கப்பட்டுள்ளது. இவர், தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர்.ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த, கே.எஸ். ராவ், ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில், தெலுங்கானா கோஷம் வலுத்துள்ள நிலையில், ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவாக, இவர் குரல் கொடுத்து வருவதால், அமைச்சரவையில், இவருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இணை அமைச்சர்கள்:

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, சுதர்சன நாச்சியப்பன், வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த, மாணிக்ராவ் கேவிட், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பழங்குடியினத்தை சேர்ந்தவர்.பஞ்சாபை சேர்ந்த, சந்தோஷ் சவுத்ரிக்கு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர், பஞ்சாப் மாநில காங்., கில், அனுபவம் வாய்ந்த, பெண் தலைவர்; தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, சீலம், நிதித் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்; இவர், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இந்த அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் உள்ள, அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை, 77 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் யார்:


மாணிக் ராவ் கவித்: மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பாரில், 1934, அக்.29 ல், மாணிக் ராவ் கவித் பிறந்தார். காங்., கட்சி சார்பாக, நந்துர்பார் லோக்சபா தொகுதியில் இருந்து, 1980ம் ஆண்டு முதல், தொடர்ந்து ஒன்பது முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மனைவி சுரேகா மாணிக்ராவ் கவித். இவருக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். உள்துறை அமைச்சர் மற்றும் இணையமைச்சர் பொறுப்புகள் வகித்துள்ளார்.

ஜே.டி.சீலம்: ஜே.டி.சீலம், ஆந்திரா குண்டூர் மாவட்டம் புசூலூர் கிராமத்தில் 1953, ஆக.,13ம் தேதி பிறந்தவர். காங்., கட்சியில் இணையும் முன், 1984-99ம் ஆண்டுவரை ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணிபுரிந்தவர். மகாத்மா காந்தி குடும்பத்தாருடன், நெருங்கிய தொடர்பு உடையவர். இவரது மனைவி சுஜாதா சீலம். ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2011 ல், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சந்தோஷ் சவுத்ரி: பஞ்சாப், ஹோஷியார்பூர் லோக்சபா தொகுதியில் இருந்து, சந்தோஷ் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூகசேவையில் ஈடுபாடு கொண்டவர். முதல்முறையாக, 1992 ல், லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1992, 1999, 2009 ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

கே.எஸ்.ராவ்: ஆந்திரா, மச்சிலிபட்டினத்தில் 1943 அக்.,2 ல், கே.எஸ்.ராவ் பிறந்தார். முழுப்பெயர், காவுரு சாம்பசிவ ராவ். மனைவி ஹேமலதா; ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். லோக்சபாவுக்கு, ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழில் அதிபராக இருந்து, அரசியல்வாதியானவர்.

புதிய அமைச்சர்கள் பின்னணி



சுதர்சன நாச்சியப்பன் : இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் 1947, செப்.29ம் தேதி பிறந்தார். இவரது தந்தை என்.வி.மாதவன், தாயார் சேதுராஜம் தங்கம். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பி.எஸ்சி., வேதியியலும், மதுரை காமராஜ் பல்கலையில் எம்.ஏ.,வும், பிஎச்.டி.,யும், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றார். டில்லி சுப்ரீம் கோர்ட்டில் சில காலம் வக்கீலாக பணியாற்றினார். இவரது மனைவி தேவகி. இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.இவரது தாத்தா, காங்., கட்சிக்காக தீவிரமாக பணியாற்றியவர். சுதர்சன நாச்சியப்பன் 1969ல் காங்., கட்சியில் இணைந்து பல்வேறு பொறுப்புகள் வகித்தார். 1989 சட்டசபை தேர்தலில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியுற்றார்; 1999 ல், சிவகங்கை தொகுதியில், நிதி அமைச்சர் சிதம்பரத்தை (அப்போதைய த.மா.கா.,) தோற்கடித்து, லோக்சபாவுக்கு தேர்தெடுக்கப்பட்டார். 2004 மற்றும் 2010 ம் ஆண்டுகளில், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு பெற்றார்.

சிஷ்ராம் ஓலா:ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனுவில் 1927, ஜூலை 30ம் தேதி சிஷ்ராம் ஓலா பிறந்தார். பிறந்த தொகுதியிலிருந்தே லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-90ம் ஆண்டு வரை ராஜஸ்தான் சட்டசபை உறுப்பினராக விளங்கினார். சிறப்பாக சமூகப்பணி ஆற்றியதற்காக 1968ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். 1996ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, உரத்துறை அமைச்சர் ஆனார். நீர்வளத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையிலும் அமைச்சராக இருந்துள்ளார். இவரது மகன் பிஜேந்தர் ஓலா, ஜூன்ஜூனு சட்டசபை தொகுதியில் வெற்றிபெற்று ராஜஸ்தான் மாநில அமைச்சராக இருக்கிறார்.

ஆஸ்கர் பெர்னாண்டஸ் : கர்நாடக மாநிலம் உடுப்பியில் 1941, மார்ச் 27ம் தேதி ஆஸ்கர் பெர்னாண்டஸ் பிறந்தார். முதன்முறையாக லோக்சபாவுக்கு 1980ம் ஆண்டு உடுப்பி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்., கட்சி சார்பாக லோக்சபாவுக்கு 1980, 84, 89, 91, 96 ஆகிய ஆண்டுகளிலும், ராஜ்யசபாவுக்கு 1998, 2004, 2009 ஆகிய ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெளிவிவகாரத்துறை, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையிலும் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

கிரிஜா வியாஸ்:ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார்த் லோக்சபா தொகுதியிலிருந்து பார்லிமென்ட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிரிஜா வியாஸ். அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் கவிஞர் என பன்முகம் கொண்டவர். மூன்று கவிதை தொகுப்புகளையும், ஐந்து புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். 1985ம் ஆண்டு காங்., கட்சியில் இணைந்தார். முதன்முதலாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் தொகுதியிலிருந்து, சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990ம் ஆண்டு வரை, மாநில அமைச்சராக பணியாற்றினார். 1991ம் ஆண்டு உதய்பூர் லோக்சபா தொகுதியில் வெற்றிபெற்று பார்லிமென்ட் சென்றார்.

நான்காண்டுகளில் 6 ரயில்வே மந்திரிகள் :

ரயில்வே அமைச்சராக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே நேற்று நியமிக்கப்பட்டதன் மூலம், கடந்த நான்காண்டுகளில், ஆறாவது ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்.மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாவது ஆட்சியில், கடந்த நான்காண்டுகளில், ஆறு ரயில்வே அமைச்சர்கள் பதவி வகித்துள்ளனர். ஆறு அமைச்சர்களில், திரிணமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள், மூன்று பேர். அவர்கள், மம்தா பானர்ஜி, தினேஷ் திரிவேதி மற்றும் முகுல் ராய்.அதற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வசம் அத்துறை மாறியது. சி.பி.தாக்கூர் வசம், கூடுதலாக இருந்த அத்துறை, பின்னர், பவன்குமார் பன்சாலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஊழல் முறைகேட்டில் அவர் சிக்கியதை அடுத்து, இப்போது, மல்லிகார்ஜுன கார்கே, புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

அமைச்சரவை மாற்றத்தில் மீனாட்சிக்கு இடமில்லை:

மத்திய அமைச்சரவை மாற்றத்தில், மீனாட்சி நடராஜன் எம்.பி.,க்கு இடம் கிடைக்காதது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலுக்கு மிக நெருக்கமானவர், மீனாட்சி நடராஜன். காங்கிரஸ் செயலராக உள்ள, மத்திய பிரதேசத்தை சேர்ந்த அவர், கடந்த லோக்சபா தேர்தலில், மாண்சார் தொகுதியில், 1971ம் ஆண்டு முதல் வெற்றி பெற்று வந்த, பா.ஜ., பிரமுகர் லட்சுமி நாராயண் பாண்டேவை வீழ்த்தினார்.இதன் மூலம் அவர் நாடு முழுவதும் அறியப்பட்டார். அதனால், ராகுலின், காங்., இளம் படை வட்டாரத்தில், செல்வாக்கு பெற்றிருந்தார்.நேற்றைய அமைச்சரவை மாற்றத்தில், மீனாட்சிக்கு, அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிபார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இது, பலருக்கும் ஏமாற்றம் அளித்தது.