எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, September 10, 2009

5 ஆண்டுகளில் தமிழகத்தில் காங். ஆட்சியைப் பிடிக்கும்

தமிழக இளைஞர் காங்கிரஸார் கடுமையாகவும், தீவிரமாகவும் பாடுபட்டால் ஐந்தே ஆண்டுகளில் தமிழகத்தில் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியும் என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.

தமிழகத்தில் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேற்று மாலை சென்னைக்கு வந்தார். நான்கு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கூட்டத்தில் மாணவர்களிடையே பேசினார். பின்னர் காமராசர் அரங்கத்தி்ல நடந்த கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸாருடன் பேசினார். பின்னர் பத்திரிக்கை நிறுவன அதிபர்கள், ஆசிரியர்களுக்குப் பேட்டி அளித்தார். அதேபோல சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாலை 6.48 மணிக்கு காமராஜர் அரங்கத்துக்கு ராகுல் காந்தி வந்தார். அரங்கத்துக்குள் 35 வயதுக்குட்பட்ட கட்சித்தொண்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மாலை 6.50 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரையில் இளைஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி பேசினார்.

அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துப் பேசியதாவது..

உங்களிடமுள்ள எழுச்சி கட்சியை மேலும் வளர்ப்பதற்கான நம்பிக்கையை கொடுத்து உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, இளைஞர் காங்கிரசார் கையில் கட்சியை ஒப்படைக்கிறேன். காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது என்றும், மக்கள் நலனுக்கான பணிகளில் ஈடுபடவில்லை என்றும் சொல்கிறீர்கள். நான் அடிக்கடி தமிழகத்துக்கு வரவேண்டும் என்றும் தொண்டர்களையும், மக்களையும் சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறீர்கள்.

மக்களுக்கு சேவை செய்வதற்காக இளைஞர் காங்கிரசார் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். மக்கள் நலப்பணிகளுக்காக உரத்த குரல் கொடுக்க வேண்டும். மக்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் இளைஞர் காங்கிரசாரின் பணிகள் அமைய வேண்டும்.

40 ஆண்டுகளாக இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கமுடியவில்லை. இளைஞர் காங்கிரசார் மக்கள் நலப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டால் தமிழ்நாட்டில் நிச்சயம் ஐந்தே ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்.

கட்சியை பலப்படுத்துவதற்காக, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நான் எத்தனை முறை வேண்டுமானாலும் தமிழகத்துக்கு வரத் தயாராக இருக்கிறேன். மத்திய அரசின் மக்கள் நலனுக்கான திட்டங்களை கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சென்றடையும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளுங்கள்.

கோஷ்டிகள் ஒழிக்கப்படும்...

கட்சிக்குள் எழுந்துள்ள கோஷ்டி பூசல்கள் பற்றி குறிப்பிட்டீர்கள். விரைவில் கோஷ்டி பூசல்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகள் முடிந்ததும், பஞ்சாயத்து அளவில் இருந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முறைப்படியான தேர்தலுக்குப்பின் கோஷ்டி பூசல்கள் இருக்காது.

உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் கோஷ்டி பூசல்கள் மறைந்துள்ளது.

இதேபோல், தலைவர்கள் பெயர்களில் தொடங்கப்பட்டு உள்ள பேரவைகளும் கலைக்கப்படும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் உங்கள் கையில் இளைஞர் காங்கிரசை ஒப்படைத்து இருக்கிறேன். கட்சி வளர்ச்சிக்காக கடுமையாக உழையுங்கள். பெண்களுக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படும்.

திமுக, அதிமுக கட்சிகளின் பலத்தைப்பற்றி குறிப்பிடுகிறீர்கள். தமிழ்நாட்டு மக்கள் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை கடைக்கோடியில் உள்ள பாமர மக்களும் உணரும் வகையில் இளைஞர் காங்கிரசார் பிரசாரம் செய்தால், நம் பலம் மக்கள் மத்தியில் பிரகாசிக்கும். அதைக் கருத்தில் கொண்டு உங்கள் பணிகளை அமைத்துக் கொள்ளுங்கள் என்றார் ராகுல்.

மக்களே ஊழலை ஒழிக்க வேண்டும்...

முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடல்..

கலையரங்கின் நுழைவுவாயிலில் மாணவி ஷிரீன் பாத்திமா பொன்னாடை போர்த்தி ராகுல் காந்தியை வரவேற்றார். அரங்கின் உள்ளே சென்றதும் துணைவேந்தர் பி.மன்னர் ஜவகர் பொன்னாடை போர்த்தினார்.

பின்னர் கலந்துரையாடல் தொடங்கியது. முதலில் ராகுல்காந்தி மாணவ-மாணவிகளிடம் பல கேள்விகளை கேட்டார். அதற்கு அவர்கள் பதில் அளித்தனர்.

பின்னர் மாணவ-மாணவிகளும் ராகுல்காந்தியிடம் கேள்வி கேட்டனர். அதற்கு ராகுல்காந்தி பதில் அளித்தார். இந்த நிகழ்ச்சி ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

மாணவ, மாணவிகள் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில்,

இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக இளைஞர்கள்தான் உள்ளனர். இந்திய மக்கள் தொகையில் இளைஞர்கள் 48 சதவீதம் உள்ளனர். உலகின் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்று அதிக இளைஞர்களை காண முடியாது.

இவர்களில் 7 சதவீதம் பேர் தான் உயர்கல்விக்கு செல்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் கடினமாக உழைக்கும் திறன், புதியவற்றை கண்டுபிடிக்கும் திறமை, எதையும் சாதிக்கும் திறன் படைத்தவர்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் உள்ளனர். ஏழைகளும் இருக்கிறார்கள். கல்வி கற்பதன் மூலமே வறுமையை ஒழிக்க முடியும். வளமாகவும் வாழ முடியும்.

உயர்கல்வி படிக்கும் 7 சதவீதம் பேர்களை ஒரு இந்தியாவாகவும், உயர்கல்வி படிக்காத மீதமுள்ள 93 சதவீதம் பேர்களை மற்றொரு இந்தியாவாகவும் பார்க்கிறேன். உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போவதற்கு பல காரணங்கள் உள்ளன. கிராமத்து மக்களுக்கு போதுமான சாலை வசதி, பஸ் வசதி, மின்சார வசதி, தகவல் தொடர்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன.

இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்கான பாதையில்தான் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு கிராமப்புறங்களில் பல கட்டமைப்பு வசதி இன்னும் குறைவாக உள்ளதால் விவசாய பொருட்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவு அதிகமாக உள்ளது. எனவே, அவர்களுக்கும் உற்பத்தி செலவை குறைக்க இந்த கட்டமைப்பு வசதிகள் உதவும். விவசாயத்தை எல்லோரும் ஊக்கப்படுத்த வேண்டும்.

நன்கு படித்தவர்கள் படிக்காத மற்றவர்கள் படிப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அதோடு படிப்புக்கு உதவியும் செய்ய வேண்டும். ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடு மறைய கல்வி ஒன்றே ஆயுதமாக இருக்க முடியும் என்பதுதான் உண்மை.

எனவே, இரு வேறு இந்தியாவாக இல்லாமல் 100 சதவீதம் பேரும் உயர்கல்வி கற்கும் நிலையை இந்தியா அடைய வேண்டும். அதற்கு உங்களைப் போன்ற இளைஞர்களின் ஒத்துழைப்பு தேவை.

நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த எழுத்தறிவு மற்றும் கல்வி தரத்தை விட இப்போது அதிகம் உயர்ந்துள்ளது. அது மட்டுமல்ல, மாணவர்களே, உங்கள், தாத்தா-பாட்டி காலத்தில் இல்லாத வசதி வாய்ப்புகளை உங்கள் தாய், தந்தையர் பெற்றிருப்பார்கள்.

உங்கள் தாய், தந்தையர் பெற்றிருக்காத வசதியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதுவும், சிறப்பு வாய்ந்த இந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் நீங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உண்மையிலேயே நாட்டில் நடக்கும் ஊழலுக்கு அரசியல்வாதிகள் மட்டுமே காரணம் என்பதை ஏற்க முடியாது.

நன்றி:தட்ஸ்தமிழ்

No comments: