எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, May 28, 2008

காங்கிரஸ் (தோல்வி) கர்நாடகத்தில்




காங்கிரஸ் தோல்வி?! கர்நாடகத்தில் உண்மையில் நடந்ததென்ன?



தோற்றார்களா ! தோற்கடிக்கப்பட்டார்களா !

முந்தைய தேர்தல் முடிவுகள்

பா.ஜ.க - 79

காங் - 65

ஜன - 58

மற்றவை - 22

இன்றைய தேர்தல் முடிவுகள்

பா.ஜ.க - 110

காங் - 80

ஜன - 28

மற்றவை - 6

பா.ஜ.க வுக்கு முதல் முறையாக எப்படியாவது ஆட்சியை அமைக்கவேண்டும் எனகி்ற தீவிரமோ கர்நாடகத்தை கைப்பற்றவேண்டும் என்ற வெறியோ?! எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
மக்களின் கவனமெல்லாம் அவர்களின் பக்கமே இருக்குமாறு பார்த்துக்கொண்டார்கள்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியை ஒப்படைக்க மறுத்த கணத்திலிருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் கணம் வரை இதை அவர்கள் கவனமாகக் கையாண்டார்கள்.
உதாரணத்துக்கு ஒகேனக்கல் பிரச்னையைக் கையாண்டவிதம். மேலும், முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டு, ஜனதா தளத்தின் குடும்ப அரசியல், வெளிப்படையான தேவகவுடாவின் சுயநலமிக்க அரசியல், கொள்கையில்லா அரசியல் நோக்கு, வாக்குறுதிகள்... இவற்றையெல்லாம் பா.ஜ.க தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது.

ஆனால் காங்கிரஸோ, இதைப் பயன்படுத்தத் தவறிவிட்டது, காங்கிரஸின் உள்கட்சிப் பூசலையும், முதல்வர் பெயரை அறிவிக்காத ஒரு தேர்தலையும் கீழ்த்தட்டு மக்கள் ஏற்காததுதான் காங்கிரஸின் தோல்விக்கு முக்கியக் காரணம்.


ஆதலால் அவர்கள் தோற்கடிக்கப்படவில்லை, தோற்றுத்தான் போனார்கள்


காங்கிரஸார் இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு வேற்றுமையை மறந்து ஒன்றுபட்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கத் தயாராகவேண்டும்.

Thursday, May 22, 2008

எந்த நாட்டுக்கும் சளைத்தது அல்ல இந்தியாவின் வேளாண்மைத் திறன்

"இந்தியா பல நூற்றாண்டுகளாக ஒரு ஏழை நாடாகவே இருந்திருக்கிறது' என்று மத்திய நிதியமைச்சர், குறிப் பிட்டுள்ளார். இப்படி பல அரசியல் தலைவர்கள் அடிக்கடி பேசி வருகின்றனர். இதற்கு ஆதாரம் என்னவென்று அவர்கள் யாருமே குறிப்பிடாததால், இந்தக் கருத்து எல்லா படித்தவர்கள் மத்தியிலும் பரவலாக இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால், நமது வரலாற்றை அலசி பார்க்கும்போது, இந்தக் கூற்று முற்றிலும் அபத்தமானது என்றே தோன்றுகிறது. இந்தியா மிக செழிப்புள்ள, செல்வம் மிகுந்த நாடாகவே ஆங்கிலேயர்கள் ஆட்சி வரையில் காணப்பட்டது என்பதற்கு பல வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. இந்திய சமுதாயத்தின் வேளாண்மைத் திறன் பற்றிய சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.


பதினெட்டாம் நூற்றாண்டின், செங்கல்பட்டு ஆய்வு பதிவுகள் சித்தரிப்பது ஒரு அமோகமான தானிய உற்பத்தியுடைய சமுதாயத்தையே. ஆய்வுப் பதிவுகள் அளிக்கும் விவரங்களின் வாயிலாக, கிட்டத்தட்ட இரண்டு லட்சம் காணி விளைச்சல் நிலத்தில் உற்பத்தியை மதிப்பீடு செய்ய முடிகிறது. இம்மதிப்பீட்டின்படி, 1762 முதல் 1766 வரையிலான ஐந்தாண்டுகளில் இந்த இரண்டு லட்சம் காணி நிலங்களில் ஆண்டு ஒன்றுக்கு, கிட்டத்தட்ட 20 லட்சம் கலம் நெல் மற்றும் இதர தானிய வகைகள் உற்பத்தியாயின.


செங்கல்பட்டின், அக்காலத்து ஒரு காணி கிட்டத்தட்ட இன்றைய அரை எக்டேருக்கு சமம். ஒரு கலம் என்பது, கிட்டத்தட்ட 125 கிலோ நெல்லுக்கு சமம். இப்பகுதியில், அக்காலத்தில் கிட்டத்தட்ட 46,000 குடும்பங்கள் வசித்து வந்ததாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆக, 18ம் நூற்றாண்டில் செங்கல்பட்டு பகுதியில், நிலத்தின் மொத்த விளைச்சல் வீடு ஒன்றுக்கு, ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 5.5 டன் என்று உணர முடிகிறது. மேலும், அப்போதைய செங்கல்பட்டு பகுதியில் ஒரு வீட்டுக்கு, நான்கு அல்லது ஐந்து உறுப்பினர்கள் இருந்தனர் என்பதையும் கணக்கில் கொண்டால், அப்பகுதியில் ஆள் ஒருவருக்கு, ஆண்டு ஒன்றுக்கு ஒரு டன்னுக்கும் அதிகமான உணவு உற்பத்தி இருந்ததாகக் கொள்ளலாம். எனவே, தற்போதைய தரத்தில் மட்டுமல்ல, உலகின் செல்வம் கொழிக்கும் நாடுகளின் பார்வையில் கூட, 18ம் நூற்றாண்டின் செங்கல்பட்டு பகுதியின் விளைச்சலும், மக்களின் நுகர்வளவும் மிக உயர்ந்தனவாக விளங்கியது.


ஆனால், 18ம் நூற்றாண்டில் செங்கல்பட்டு பகுதியின் விளை நிலங்களின் உற்பத்தித்திறன் மிக உயர்ந்தது என கூற முடியாது. காணிக்கு பத்து கலம் அல்லது, எக்டேருக்கு 2.5 டன் அளவிலான சராசரி உற்பத்தி திறன் தற்கால உற்பத்தி திறனை விட உயர்ந்தது. ஆனால், இந்தியாவின் மண்வளம் இதைவிட மிக அமோகமான விளைச்சலை அளித்து வந்துள்ளதற்கு, பல்வேறு சரித்திர சான்றுகள் உள்ளன. கி.பி. 900 - 1200க்கு உட்பட்ட தஞ்சாவூர் பகுதியின் சாசனங்கள் மூலமாக, அப்பகுதியின் உற்பத்தித் திறன் வேலிக்கு 600ல் இருந்து 720க்குள்ளதான தஞ்சாவூர் கலங்கள் அல்லது ஒரு எக்டேருக்கு 15ல் இருந்து 18 டன்கள் என்று மதிப்பிடப்படுகிறது. கி.பி. 1100ன் ஒரு சாசனம், தென் ஆற்காடு பகுதியில் வேலிக்கு 580 கலங்கள் அதாவது ஒரு எக்டேருக்கு 16.5 டன் நெல் உற்பத்தியைப் பற்றி கூறுகிறது. தவிர, ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த கி.பி.1325ம் ஆண்டின் சாசனம் ஒன்று வேலிக்கு 800 கலங்கள் அதாவது எக்டேருக்கு 20 டன் வரையிலான மிக உயர்ந்த நெல் உற்பத்தியைப் பற்றி குறிப்பிடுகிறது.


பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்க காலத்தின் குறிப்புகளும், இந்தியாவின் பல்வேறு பகுதிகள் உயர்ந்த உற்பத்தித் திறனைக் கொண்டு விளங்கியதை உறுதிபடுத்துகின்றன. 1803ல் அலகாபாத் பகுதியைப் பற்றிக் கூறும் ஒரு ஐரோப்பியர், அங்கு ஆண்டிற்கு, ஒரு எக்டேருக்கு 7.5 டன் தானிய உற்பத்தியை பற்றி கூறுகிறார்.


கோயம்புத்தூரில் 1807ம் ஆண்டில் காணப்பட்ட, எக்டேருக்கு 13 டன் அளவிலான நெல் உற்பத்தித் திறனைப் பற்றி அப்பகுதியின் பிரிட்டிஷ் அதிகாரியின் அறிக்கை தெரிவிக்கிறது.


பதினெட்டாம் நூற்றாண்டில், செங்கல்பட்டிலும் கூட செழிப்பான விளைச்சல் நிலங்கள் அப்பகுதியின் சராசரி உற்பத்தித் திறனான காணிக்கு 10 கலம் அல்லது எக்டேருக்கு 2.5 டன் என்பதை விட மிக உயர்ந்த உற்பத்தித் திறனை பெற்றிருந்தன.


அப்பகுதியின் மிக செழிப்பான நிலங்கள் காணிக்கு 35 கலங்கள், அதாவது எக்டேருக்கு 9 டன், அளவிலான உற்பத்தித் திறனைக் கொண்டிருந்தன. மேலும், சிறப்பான வேளாண்மையில் ஈடுபட்டு 5000 கலத்தை விட அதிகமான மொத்த உற்பத்தி கொண்டிருந்த 63 கிராமங்களின் சராசரி உற்பத்தித் திறன் காணி ஒன்றுக்கு 18 கலமாக, எக்டேருக்கு 4.5 டன்னாக விளங்கியது.


இந்த 63 கிராமங்கள், ஆய்வுக்குட்பட்ட செங்கல் பட்டு பகுதியின் மொத்த விளைச்சல், நிலத்தின் வெறும் ஆறில் ஒரு பங்கு நிலத்தில் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை உண்டாக்கின.


இப்படி அமோகமான விளைச்சல் எப்படி சாத்தியமானது? சில அறிஞர்கள் இதை இவ்வாறு விளக்குகிறார்கள். ஜனத்தொகை அதிகமில்லாததால், மண்வளம் மிக அதிகமாக உள்ள நிலங்களில் மட்டும் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது என்று. இது உண்மையாகவே இருக்கலாம். ஆனால், 17 - 19வது நூற்றாண்டுகளில் உலகத்தில் எல்லா நாடுகளிலும் இதே நிலைமை இருந்திருக்க வேண்டும். ஆனால், 18 - 19ம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் உற்பத்தித் திறன் இங்கிலாந்தின் உற்பத்தித் திறனை விட அதிகமாக இருந்தது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். 1840க்குப் பிறகு, இங்கிலாந்து விவசாயிகள் ரசாயன உரங்களை அதிகமாக பயன்படுத்தத் துவங்கினர். ஆயினும், இந்திய விவசாயிகளின் இயற்கை வழி விவசாயத்தின் உற்பத்தித் திறன் இங்கிலாந்தை விட அதிகமாகத்தான் இருந்தது.


ஆக, இந்திய விவசாயத்தின் உற்பத்தித் திறனானது மண்வளத்தை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இருக்கவில்லை. விவசாயத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது. 18ம் நூற்றாண்டில் பாரதத்தில், பயணம் செய்த மேற்கத்தியர் பலர் விவசாய தொழில் நுட்பத்தின் சிறப்புக்களை பற்றி எடுத்துரைத்துள்ளனர். அதன் முக்கிய அம்சங்கள் கீழ்வருமாறு:


* ஒவ்வொரு தானியத்திற்கும், எண்ணற்ற விதை வகைகள் பயன்படுத்தப்பட்டன.


* விவசாயக் கருவிகள் திறன் வாய்ந்தவையாகவும், எளிமையாகவும் இருந்தன.


* விவசாயிகள் மிகுந்த உன்னிப்புடன் பயிரையும், நிலத்தையும் பராமரித்தனர்.


அலெக்சாண்டர் வாக்கர் என்ற ஆங்கில அதிகாரி (1780-1810) கேரளத்தின் மலபார் பகுதியில் மட்டும், 50க்கும் மேற்பட்ட நெல் வகைகள் பயிரிடப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் வகைகள் பயிரிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் பல வகையான தானியங்களையும், ஒவ்வொரு தானியத்தின் பல்வேறு வகைகளையும், பருவத்திற்கும், மண்வளம், நீர்வளம் இவற்றிற்கு ஏற்றார்போல் பயன்படுத்தி உலகெங்கும் காணாத வகையில் விவசாய சாதனைகளை படைத்துள்ளனர்.


அலெக்சாண்டர் வாக்கர், பாரதத்தில் விவசாயிகள் பயன்படுத்திய பல விவசாயக் கருவிகளை பற்றியும் விளக்கியுள்ளார்.


விதை, மண்வளம் இவற்றிற்கு ஏற்றார்போல் பலவிதமான ஏர்கள் பயன்படுத்தப்பட்டன. 1795ல் கேப்டன் ஹால்காட் என்ற ஆங்கிலேயர், கொலுக்கலப்பை என்ற ஏர் (ஈணூடிடூடூ கடூணிதஞ்ட) தென் இந்தியாவில் பயன்படுத்தப்படுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். (இந்தக் கலப்பை இன்றைக்கும் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூர் பகுதியில் பயன்படுத்தப் படுவதைப் பார்க்கலாம்.) அதுவரையிலும், இந்தக் கலப்பை ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்றே எண்ணப்பட்டது.


ஆனால், பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் இந்தக் கலப்பை பயன்படுத்தப்பட்டதாகவும், இது ஐரோப்பாவில் அப்போது பயனில் இருந்த கலப்பையைக் காட்டிலும் சிறந்தது என்றும் கேப்டன் ஹால்காட் எண்ணினார். அவர் இந்தியாவில், பயன்படுத்தப்பட்ட பலவிதமான கலப்பைகளின் மாதிரிகளை ஆராய்ச்சிக்காக இங்கிலாந்திற்கு அனுப்பி வைத்தார்.


இந்திய விவசாயிகள், அவர்களின் பயிர்களிடத்தில் காட்டிய கவனம் மிக புகழ்வாய்ந்தது. அலெக்சாண்டர் வாக்கர், குஜராத்தின் விவசாய நிலத்தின் தூய்மையைப் பார்த்து ஆச்சரியத்துடன், இதுபோல் ஒரு தூய்மையை உலகத்தில் வேறு எங்குமே காணமுடியாது என கூறினார். தானும் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை மேற்கொண்ட பயணங்களில், விவசாயிகள் பயன்படுத்திய தொழில்நுட்பம் மிகவும் வியக்கத்தக்கதாக உள்ளது என்றார்.


இத்தகைய விவசாய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்திய விவசாயிகள் மிக அமோகமான உற்பத்தியை கண்டனர். அன்று விவசாயிகள் நிலத்தை பயன்படுத்திய முறையும், அறிவியல் சார்ந்ததாக இருந்தது. எடுத்துக்காட்டாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் 18ம் நூற்றாண்டில், விளைச்சல் நிலம் 54,000 எக்டேராகவும், ஏரி, குளம், குட்டை போன்ற நீர்த்தேக்கங்கள் 26,000 எக்டேராகவும், காடுகள் 18,000 எக்டேராகவும் இருந்தன. இப்படி நீர்த்தேக்கங்களுக்கும், காடுகளுக்கும் அதிகளவில் நிலம் ஒதுக்கப்பட்டிருந்ததும், அதிகமான உற்பத்தித் திறனுக்கு ஒரு காரணமாக இருந்தது.


விவசாயத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதைப் பற்றி, 1947 முதல் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. இதற்காக நாம் மேற்கத்திய நாடுகளில் இருந்து பல தொழில்நுட்பங்களைக் கடன் வாங்கியுள்ளோம்.


அனைத்து துறைகளிலுமே, மேற்கத்திய நாடுகளைக் கண்மூடித்தனமாக பின்பற்றி வரும் சூழ்நிலையில், இதில் ஒன்றும் நாம் ஆச்சரியப்படுவதற் கில்லை. இத்தகைய தொழில்நுட் பத்தைப் பின்பற்றிய பிறகுகூட, இது நமது உணவு பற்றாக்குறையை தீர்க்கவில்லை. இந்த தொழில்நுட்பமானது, நமது நிலத்துக்கு அழிவையே தருகிறது.


இப்படிப்பட்ட உற்பத்திக்காக நாம் நமது நிலத்தின் செழிப்பை இழந்துள்ளோம். இந்த தொழில்நுட்பம் அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு உபயோகமாயிருந்ததற்கு காரணம் அங்கு நிறைய மக்கள் வசிக்காத இடமிருந்தது. நமது நாடோ அதிக ஜனத்தொகை கொண்டது. இந்த தொழில்நுட்பத்தை நாம் பின்பற்றினோமேயானால், இது நமது, நிலத்தின் வளத்திற்கு இன்னும் 100 வருஷத்திற்குள் அழிவையே உண்டாக்கும்.


இத்தகைய அழிவுப்பாதையைப் பின்பற்றி வரும் நாம், நம் நாட்டு விவசாயிகள் 200 ஆண்டுகளுக்கு முன் நிலவளம், அழியாமல் நிரந்தரமான இயற்கை வழி விவசாயம் மேற் கொண்டு, எக்டேருக்கு 10 டன் உற் பத்தியை எப்படி உண்டாக்கினர் என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் வேண்டும்.

Wednesday, May 21, 2008

முகேஷ் அம்பானியின் சம்பளம் இப்போ ரூ.45 கோடி

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும், அதிக சம்பளம் வாங்குபவராகவும், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார். அவரது ஆண்டு சம்பளம் 41 சதவீதம் அதிகரித்து, ஆண்டுக்கு 45 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவி வகிக்கும் முகேஷ் அம்பானி, சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 1.8 லட்சம் கோடி. முகேஷ் அம்பானியின் சம்பளம் மற்றும் இதரபடிகள், 2007-08ம் நிதியாண்டில் 30 கோடி ரூபாயில் இருந்து, 44 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில், இவரது சம்பளம் 25 கோடி ரூபாயில் இருந்து, 30 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதில் பெருமளவு தொகை, லாபத்தின் அடிப்படையில் வழங்கப்படும் கமிஷன் தொகையாக கிடைக்கிறது.


இதன் மூலம், இந்தியாவில் அதிக சம்பளம் பெறுவோர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். 25 கோடி ரூபாய் ஆண்டு சம்பளம் பெறும், மெட்ராஸ் சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி.ஆர்.ஆர்.ராஜா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இருப்பினும், சர்வதேச அளவில் அதிக சம்பளம் பெறும் முதல் 20 பேர் பட்டியலில், முகேஷ் அம்பானியால் இடம் பிடிக்க முடியவில்லை. போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள, அதிக சம்பளம் பெறுவோரின் முதல் 500 பேர் பட்டியலில், முதலிடத்தை பிடித்திருப்பவர், அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லர்ரி எல்லிசியன். இவர் வாங்கும் ஆண்டு சம்பளம் 790 கோடி ரூபாய். இந்த பட்டியலில், 45 கோடி ரூபாய் ஆண்டு சம்பளம் பெறுவோர் 177 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி.