எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, March 23, 2008

லாலுவின் `மாயாஜால' பட்ஜெட்: பின்னணி என்ன? சுப்ரீம் கோர்ட்டில் கோவை அமைப்பு பொதுநல மனு

கடந்த நிதியாண்டில் (2007-08) ரயில்வேத் துறைக்கு கிடைத்த நிகர வருவாய் மட்டும் 18 ஆயிரத்து 416 கோடி ரூபாய். இதில், மத்திய அரசுக்கு பங்குத் தொகையாக அளித்த தொகை ரூ. 13 ஆயிரத்து 534 கோடி.

இந்த ஆண்டில், சரக்கு வருமானமாக ரூ. 47 ஆயிரத்து 743 கோடியும், பயணிகள் போக்குவரத்து மூலமாக ரூ. 20 ஆயிரத்து 75 கோடியும் வருவாய் வரும் என எதிர்பார்க்கிறது ரயில்வே.இத்துறையின் அமைச்சராக லாலு பொறுப்பேற்ற பின், கடந்த நான்காண்டுகளில் ரூ. 68 ஆயிரம் கோடி லாபம் கிடைத்திருப்பதாக பேசப்படுகிறது. பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல், சரக்கு கட்டணத்தில் பெரிய மாற்றம் செய்யாமல் இவ்வளவு பெரிய சாதனையை லாலு எப்படிச் செய்தார் என்பது எல்லாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.

இதன் பின்னணியில் இருக்கும் `செப்படி வித்தை' பற்றி அரசியல் கட்சியினருக்கும் அப்பாவி மக்களுக்கும் புரியாமல் இருக்கலாம்; பொருளாதார மேதைகளுக்கும், ரயில்வே உயரதிகாரிகளுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.`பகிரங்கமாக பட்ஜெட்டில் சலுகைகளை வாரி வழங்கும் லாலுவும் வேலுவும், அதற்குப் பின் நிர்வாக உத்தரவுகள், சுற்றறிக்கைகள் மூலமாக மறைமுகமாக கட்டணங்களை மக்கள் தலையில் கட்டுகின்றனர்' என்பதுதான் இந்த லாபக்கணக்கின் பின்னணி.

பா.ஜ., எம்.பி.,க்களும் கூட, இதுபற்றி பார்லிமென்ட்டில் புகார் கிளப்பினர். அதை அரசியல்ரீதியான புகார் என்றே பல தரப்பினரும் ஒதுக்கி விட்டனர். ஏனெனில், தங்கள் குற்றச்சாட்டுகளுக்கான காரணத்தை அவர்கள் தெளிவாக விளக்கவில்லை.இந்நிலையில், கோவையைச் சேர்ந்த `கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ்' என்ற நுகர்வோர் அமைப்பு, இந்த மறைமுகக் கட்டணம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது. இவ்வழக்கில் கோவையைச் சேர்ந்த ராஜாராமன் என்ற வக்கீல் ஆஜராகியுள்ளார். வழக்கின் விசாரணை, வரும் ஆக., 1ல் வர உள்ளது.இந்த மனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக, ரயில்வேத் துறையில் மறைமுகக் கட்டணங்களை வசூலிப்பது தொடர்பான பல்வேறு தகவல்களை, கடந்த ஒன்றரை ஆண்டாக சேகரித்துள்ளது இந்த அமைப்பு. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் உதவியுடன் இத்தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.சூப்பர் பாஸ்ட் ரயில்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பாதுகாப்பு கட்டணம், தத்கல் முறையில் கூடுதல் கட்டணம் பெறுவது, முன்பதிவுக்காக அதிகத் தொகை வாங்குவது என நான்கு விதமான மறைமுக கட்டணங்களை வசூலிப்பதாக, சுட்டிக்காட்டுகிறது இந்த மனு.ஓரிரு ரயில்களில் மட்டுமே வசூலிக்கப்படும் மறைமுக கட்டணங்களே, பல கோடி ரூபாயாக உள்ளது; நூற்றுக்கணக்கான ரயில்களில் இவற்றை வசூலிக்கும் போது, அதுவே பல ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து விடுகிறது.

`சூப்பர் பாஸ்ட்' ரயில்கள்: இந்தியாவில் தற்போது இயக்கப்படும் 628 ரயில்களில் 306 ரயில்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் (2005 ஜன., 1லிருந்து) `சூப்பர் பாஸ்ட்' ரயில்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றில், 198 ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்ட ரயில்களிலிருந்து `சூப்பர் பாஸ்ட்' ஆக மாற்றப்பட்டவை.கடந்த 2005-06ல் 70 ரயில்களும், 2006-07ல் 38 ரயில்களும்`சூப்பர் பாஸ்ட்' ரயில்களாக அறிமுகம் செய்யப்பட்டன. மற்ற ரயில்களை விட இந்த ரயில்களில் பயணம் செய்ய `ஏசி' வகுப்புக்கு டிக்கெட் கட்டணத்தை விட ரூ. 50ம், படுக்கை வசதி கொண்ட வகுப்புக்கு ரூ. 20ம் கூடுதலாக செலுத்த வேண்டும்.உதாரணமாக, கோவையிலிருந்து சென்னைக்கு சாதாரண பாசஞ்சர் ரயில்களில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 121 ஆகவும், எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 215 ஆகவும், `சூப்பர் பாஸ்ட்' ரயிலில் ரூ. 235 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; இந்த டிக்கெட்டை கோவையில் வாங்காமல், போத்தனூரில் வாங்கினால் கூடுதலாக ரூ. 10 செலுத்த வேண்டும்.மற்ற ரயில்களை விட இந்த ரயில்களில் கூடுதல் வேகமோ, கூடுதல் வசதியோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாசஞ்சர் ரயிலை விட சற்று வேகமாகச் செல்வதே எக்ஸ்பிரஸ் ரயில் என்று சொல்லும் ரயில்வேத் துறை, அதற்கென ஒரு வேகத்தை நிர்ணயிக்கவில்லை.அதே நேரத்தில் `சூப்பர் பாஸ்ட்' ரயில்கள், அகல ரயில் பாதையில் மணிக்கு 55 கி.மீ., வேகம் செல்பவை, என்று கூறுகிறது ரயில்வேத் துறை. ஆனால், ரயில்வே சட்டத்தில் `சூப்பர் பாஸ்ட்' ரயில்களுக்கான வேகம் பற்றி குறிப்பிடப்படவில்லை. இந்த ரயில்களில் பாசஞ்சர் ரயிலை விட கூடுதலாக எந்த வசதியும் இருப்பதில்லை; அதேபோன்று, இத்தனை ஸ்டேஷன்களில்தான் நிறுத்த வேண்டுமென்ற குறிப்புகளோ, கட்டுப்பாடுகளோ இல்லை. தவிர, இவ்வளவு தூரத்துக்கு இடையில் மட்டுமே `சூப்பர் பாஸ்ட்' ரயிலை இயக்க வேண்டுமென்ற நியதியும் கூட இல்லை. கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பாசஞ்சர் ரயிலைக் கூட, ரயில்வேத் துறை நினைத்தால் `சூப்பர் பாஸ்ட்' ரயில் என்று பெயர் மாற்றி, கட்டணத்தை உயர்த்த முடியும். ரயில்களில் கூடுதலாக எந்த வசதியையும் செய்யாமல், சிறிதும் வேகத்தையும் கூட்டாமல், செலவே இல்லாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதே, ரயில்வேத் துறையின் அதீத லாபத்துக்கு அஸ்திவாரம்.

பாதுகாப்பு கட்டணம்: சாமர்த்தியமாக ரயில்வேத் துறை செய்யும் இன்னொரு வசூல், பாதுகாப்பு கட்டணம். ரயில்களில் `ஏசி' வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 100ம், படுக்கை வசதியுள்ள வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கு ரூ. 20ம் பாதுகாப்பு கட்டணமாக ரயில்வேத் துறை வசூலிக்கிறது. ஆயிரம் கி.மீ., தொலைவில் செல்லும் ரயில்களில் இந்த கட்டணம் ரூ. 20 என்றும், 200 கி.மீ., செல்லும் ரயில்களில் ரூ. 10 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மட்டுமே ஒரு நாளில் `சூப்பர் பாஸ்ட்' கட்டணமாக ரூ. 60 ஆயிரம் வசூலாகிறது; தவிர, பாதுகாப்பு கட்டணமாக ஒரு நாளில் ரூ. 75 ஆயிரம் வசூலாகிறது. பயணிகளின் வசதிக்கும் பாதுகாப்புக்கும் எந்த உத்தரவாதமும் தராமல், இந்த ஒரு ரயிலில் மட்டும் ஆண்டுக்கு ஐந்து கோடி லாபம் பார்க்கிறது ரயில்வேத் துறை. இந்த அடிப்படையில் கணக்கிட்டால், இந்தியாவிலுள்ள 306 சூப்பர் பாஸ்ட் ரயில்களில், ஆண்டுக்கு மூவாயிரத்து 500 கோடி ரூபாயும், அனைத்து ரயில்களிலும் சேர்த்து ஐயாயிரம் கோடி ரூபாயும் ரயில்வேத் துறைக்கு பணம் கிடைக்கிறது. இவற்றை மிஞ்சும் வகையில் ரயில்வேத் துறை, மற்றொரு பகல் கொள்ளையும் அடிக்கிறது.

தத்கல் பதிவில் கொள்ளை:அதற்குப் பெயர்தான் `தத்கல்' முறை. ஐந்தாண்டுகளுக்கு முன், இந்த முறையை அறிமுகம் செய்தபோது `அவசர கால முன்பதிவு' என்று விளக்கம் தரப்பட்டது. பயணம் செய்வதற்கு இரு நாட்களுக்கு முன்பாக டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு, கூடுதல் கட்டணத்தை பெற்றுக் கொண்டு, இடத்தை உறுதி செய்வதே இந்த முறை. அதாவது, சாதாரணத் தொகைக்கு வழங்க வேண்டிய இடத்தை ரயில்வேத் துறையே அதிக விலைக்கு விற்றது. இந்த ஒதுக்கீட்டுக்காக கூடுதல் பெட்டிகளும் அப்போது ஒதுக்கப்பட்டன; சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே இந்த முறை கொண்டு வரப்பட்டது.

ஆனால், 2004லிருந்து இந்த முறையில் மாற்றம் செய்து, எல்லா ரயில்களிலும் இந்த முறை கொண்டு வந்ததுடன், கூடுதல் பெட்டிகள் இல்லாமலே, பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் `தத்கல்' முறைக்கு 10- 20 சதவீத இடம் ஒதுக்கப்பட்டது.இந்த முறையில், வழக்கமாக தரப்படும் டிக்கெட் கட்டணத்தை விட ரூ. 50 செலுத்த வேண்டும் என முதலில் கூறப்பட்டது. பின்பு, அத்தொகையை ரூ. 75 ஆகவும், கூட்டம் அதிகமாகவுள்ள ரயில்களில் (பீக் சீசன்) ரூ. 150 ஆகவும் உயர்த்தியது; ஆண்டுக்கு எட்டு மாதங்கள், இந்த ரயில்களுக்கு `பீக் சீசன்'தான். சாதாரண ரயில்களில் இந்த `தத்கல்' ஒதுக்கீடு, 10 சதவீதம் என்றும், முக்கிய ரயில்களில் 20 சதவீதம் (ஸ்லீப்பர் கிளாஸ் டிக்கெட்) என்றும் கூறப்பட்டது. ஆனால், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேட்டுப்பாளையத்திலிருந்து சென்னை செல்லும் போது 33.33 சதவீதமும், சென்னையிலிருந்து வரும் போது 28.37 சதவீதமும் `தத்கல்' டிக்கெட்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.

தென்னக ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் மட்டுமே, 15 ஆயிரம் டிக்கெட்கள் `தத்கல்' முறைக்கு ஒதுக்கப்படுகின்றன. இவற்றில், முக்கிய ரயில்களில் இந்த `தத்கல்' டிக்கெட் கட்டணம், 200 சதவீதம். தென்னக ரயில்வேக்கு, ஒரு நாளுக்கு சராசரியாக ரூ. 11 லட்சம் `தத்கல்' மூலமாக வசூலாகிறது.இந்த முறையில் கிடைக்கும் அதிக வருவாய் காரணமாக, இப்போது எத்தனை மாதத்துக்கு முன்பாக `வெயிட்டிங் லிஸ்ட்' இருந்தாலும் அப்போதே `தத்கல்' டிக்கெட் தொகையைக் கட்டிவிட்டால் முன்னுரிமையில் இடம் தரலாம் என்றும் புதுச்சலுகையை அறிவித்துள்ளது ரயில்வேத் துறை.நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்களில் மட்டுமே, ஒவ்வொரு ஆண்டும் `தத்கல்' கட்டணத்தால் நான்கு கோடியே 25 லட்சம் ரூபாய் வசூலாகிறது. ஒரே ஒரு ரயிலில் இவ்வளவு வருவாய் என்றால், இந்தியாவில் இயக்கப்படும் பல நூறு ரயில்களில் வருவாய் பற்றி மக்களே கணக்கிட்டுக் கொள்ளலாம்.ஏற்கனவே, `எமர்ஜென்சி கோட்டா (இ.க்யூ.,)' இருக்கும்போது, இந்த `எமர்ஜென்சி ரிசர்வேஷன்' முறையை (தத்கல்) கொண்டு வந்ததற்கு, பணம் சம்பாதிப்பதே ஒரே நோக்கம் என்பது தெளிவாகியுள்ளது.

சரக்கு கட்டண உயர்வு:ரயில்வேத் துறையின் மறைமுக வசூல் பட்டியலில் சமீபமாகச் சேர்ந்து இருப்பது, சரக்கு கட்டண உயர்வு. பட்ஜெட்டில் சரக்கு கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்று செய்திகள் வந்த ஒரே வாரத்துக்குள், சரக்கு கட்டணத்தை அதிரடியாக உயர்த்தினர், ரயில்வே அதிகாரிகள்.சரக்குகள் அனுப்புவதை ஸ்டாண்டர்டு, பிரீமியம், ராஜதானி, லக்கேஜ் என நான்காகப் பிரித்து, தாறுமாறாக கட்டணம் வசூலிக்கின்றனர். உதாரணமாக, மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு `பைக்' அனுப்ப முன்பு ரூ. 145 மட்டுமே கட்டணமாக இருந்தது; இப்போது ரூ. 435 வசூலிக்கப்படுகிறது.ஒரு குவிண்டால் காய்கறிக்கு ரூ. 55 ஆக இருந்த கட்டணம், இப்போது ரூ. 120 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு கட்டணம் இவ்வாறு பல மடங்கு உயர்த்தப்பட்டு இருந்தாலும், பட்ஜெட்டில் இதுபற்றி லாலு வாய் திறக்கவே இல்லை.

Thursday, March 20, 2008

தமிழக அரசின் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

* தாலி மற்றும் பிற மதத்தினர் மணவிழாவில் பயன்படுத்தும் சிலுவை, கருகமணி ஆகியவற்றுக்கு எடை வரம்பின்றி வரி விலக்கு.

* சித்த மருந்துகளுக்கு வரி விலக்கு.

* பன், ரஸ்க், சோயா எண்ணெய், வெல்லம் ரப்பர் பூச்சுள்ள நெசவுத் துணிகள் ஆகியவைகளுக்கு வரி விலக்கு- மற்றும் பல பொருட்களுக்கு வரி குறைப்பு

* பயிர்க் காப்பீட்டுத் திட்டம்-25 லட்சம் விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 50 சதவிகிதத்தை அரசே வழங்கும்.

* கூட்டுறவு வங்கிகள் மூலம் 1500 கோடி புதிய பயிர்க்கடன்.

* கூட்டுறவுப் பயிர்க்கடன் வட்டி ரூ.4 ஆகக் குறைப்பு.

* சிவகங்கை மற்றும் பெரம்பலூரில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள்.

* திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரத்தில் அண்ணா பல்கலைக்கழக புதிய பொறியியல் கல்லூரிகள்.

* புதிய திருப்பூர் மாவட்டம் உதயம்

* புதுக்கோட்டை மாவட்டத்தில் கரம்பக்குடி மற்றும் பொன்னமராவதி புதிய வருவாய் வட்டங்கள்.

* வேலூர் நகராட்சி மாநகராட்சியாக நிலை உயர்த்தப்படும்

* 3500 புதிய அரசு பேருந்துகள் வாங்கப்படும்

* ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவித் திட்டம்-ரூ. 15,000 லிருந்து ரூ. 20,000 ஆக உயர்வு.

* ரூ. 6000 மகப்பேறு நிதி உதவி பெற இனி வருமான சான்றிதழ் தேவையில்லை.

* சிறு வணிகம் செய்யும் மகளிர் உட்பட 2 லட்சம் வணிகர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 50 கோடி கடன்.

* கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்ட வாங்கிய ரூ.15 கோடி கடன் அறவே ரத்து.

* ஆதிதிராவிட விவசாயிகள் தாட்கோவிலிருந்து பெற்ற விவசாயக் கடன்கள் ரூ. 5 கோடி அறவே தள்ளுபடி.

* கேபிள் டிவி நடத்துவோர் மீதான கேளிக்கை வரி ரத்து - ஏற்கனவே உள்ள நிலுவை ரூ. 16 கோடி முழுவதும் தள்ளுபடி.

* பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் பெற்ற கூட்டுறவு வீட்டு வசதிக் கடன் நிலுவை முழுவதும் தள்ளுபடி. குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவினர் கடனைத் திருப்பி செலுத்தினால் அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப் படுவதோடு, வட்டியில் ஒரு பகுதியும் தள்ளுபடி.

* 50 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் முற்றிலும் ரத்து

* அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் சிறப்புக் கட்டணம் ரத்து

* விசைத்தறி நெசவாளர்களுக்கு தனி நல வாரியம்

* கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஒரு தனி நல வாரியம்.

* நரிக்குறவர்களுக்கு தனி நல வாரியம்

* அரவாணிகள் நல வாரியம் - மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி.

* அருந்ததியர் உள் ஒதுக்கீடு - பரிந்துரை செய்ய நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களைக் கொண்ட ஒரு நபர் குழு நியமனம்

* கழிவு நீர்க் குழாய்களில் தூய்மைப்பணி புரிவோருக்கு பாதுகாப்பு உடைகள், இலவச மருத்துவக் காப்பீடு மற்றும் இலவச உடல்நலப் பரிசோதனை.

* கழிவு நீர் குழாய்களில் இறங்கி பணிபுரிவதைத் தவிர்க்க சிறப்பு இயந்திரங்கள்.

* சின்னத்திரை கலைஞர்களுக்கு நல நிதியம் - ரூ. ஒரு கோடி நிதி ஒதுக்கீடு.

* ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஓர் உடற்பயிற்சி நிலையம்.

* தமிழ்வழிக் கல்வியில் பயின்று பத்தாம் வகுப்பில் அதிக மதிப் பெண்கள்பெறும் 1000 மாணவ மாணவியர்களுக்கு கணினி பரிசு

* எயிட்ஸ் நோயினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க அரசின் சார்பில் அறக்கட்டளை - ரூ. 5 கோடி ஒதுக்கீடு

* 5440 கிராமங்களில் இணைய வசதிகளுடன் கூடிய பொதுச்சேவை மையங்கள் - அங்கே அரசு சான்றிதழ்கள், விண்ணப்பங்கள் பெற வும், கட்டணங்கள் செலுத்தவும் வசதி

* மீனவர் மற்றும் மீனவ மகளிருக்கான நவீன மீன்பிடி தொழில்நுட்பப் பயிற்சி மையம் அமைக்கப்படும்

* குளச்சலில் புதிய மீன்பிடி துறைமுகம்.

* வேலூர் நகரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா

* ஒரு இலட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 10 ஆயிரம் விவசாயிகள் சுயஉதவிக் குழுக்கள் - 10 கோடி ரூபாய் சுழல்நிதியாக அரசு நிதியுதவி.

* ரூ. 12 கோடியில் மதுரை வெள்ளத் தடுப்புத் திட்டம்.

* ரூ. 211 கோடி மதிப்பீட்டில் திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங் களில் காவிரி கொள்ளிடம் ஆறுகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டம்.

* அரசு அலுவலர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - ரூ. 2 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை.

* அரசு அலுவலர்களுக்கு 47 சதவீதமாக 1.1.2008 முதல் அகவிலைப்படி உயர்வு.

* ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவு ஈட்டுத் தொகை ரூ. 50,000லிருந்து ரூ. 1 லட்சமாக உயர்வு.

* 100 புதிய அரசு உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* 100 புதிய அரசு மேல்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* அனைவருக்கும் இடைநிலைக் கல்வி - புதிய திட்டம் - ரூ. 200 கோடி ஒதுக்கீடு

* இயற்கை சீற்றங்கள் மற்றும் பெரும் விபத்துக்கள் நடைபெற்று ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏதுவாக சென்னை யில் சிறப்பு மருத்துவ மையம்.

* தொழிலில் பின்தங்கிய பகுதிகளான திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டையில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள்.

* நாகர்கோவில் மற்றும் அரியலூரில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.

* ரூ. 1000 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி உட்பட 5 மாநகராட்சிகள் - 7 நகராட்சிகளில் நகர்புறச் சாலைகள் மேம்பாடு

* போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னை மாநகரில் அதிவேக உயரச் சாலை

* தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 22,000 வீடுகள் கட்டப்படும்.

* மேலும் 2521 கிராம ஊராட்சிகளில் அனைத்து அண்ணா கிராம மறுமலர்ச்சித் திட்டம்

* மேலும் 8 இலட்சம் இலவச எரிவாயு அடுப்புகள் மற்றும் இணைப்புகள் வழங்க ரூபாய் 160 கோடி ஒதுக்கீடு.

* ரூ. 750 கோடி செலவில் இந்த ஆண்டு, வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்

* 25,000 மகளிர் புதிய சுய உதவிக் குழுக்கள்.

* 1,50,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 150 கோடி சுழல்நிதி.

* மகளிர் ஆணையத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம்.

* அரவாணிகளாக உணர்வோருக்கு இடைக்கால தங்கும் விடுதி

* கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வரும் நிதி ஆண்டிலிருந்து 4 சதவீத வட்டி மானியம்.

* கைத்தறி நெசவாளர் காப்பீட்டுத் திட்டம் - நெசவாளர் பங்கையும் அரசே செலுத்தும்.

* காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.

* பனைத் தொழிலாளர்களுக்கு இலவசக் கருவிகள்.

* 8 புதிய ஆதிதிராவிடர் உயர் நிலைப் பள்ளிகள் - 3 புதிய பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளிகள் தொடங்கப்படும்.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உணவுப்படி, மாதம் ஒன்றுக்கு பள்ளி மாணவர்களுக்கு ரூ. 400 லிருந்து ரூ. 450 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 500 லிருந்து ரூ. 550 ஆகவும் உயர்வு.

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு 25 புதிய இல்லங்கள்- இவர்கள் தங்கி பயிலும் 25 இல்லங்களுக்கு புதிய கட்டடங்கள்.

* சிறுபான்மையினருக்கு இந்த ஆண்டு ரூ.40கோடி கடன் உதவி.

* 350 சத்துணவு மையங்கள் மற்றும் 2000 குழந்தைகள் மையங்கள் நவீனமயம் ஆக்கப்படும் - எரிவாயு இணைப்பு மற்றும் ப்ரஷர் குக்கர் கள் வழங்கப்படும்.

* சென்னைக்கு அருகில் உள்ள முட்டுக்காடு பகுதியில் கடலின் அடியில் மீன் அருங்காட்சியகம்.

* 25,000 ஏக்கர் பரப்பில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம்.

உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்து திட்டம் எதுவும் இடம்பெறாதது பெரும் ஏமாற்றமே.
மற்றும் தொழில்நுட்பபூங்காக்களை மேலும் சில இடங்களில் விரிவு படுத்த நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

ஓசூரில் தொடங்கும் தொழில்நுட்பபூங்கா பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.

10ம் வகுப்பு வரை கட்டாயக்கல்வி, அதில் இரண்டாம் மொழித்தேர்வாக ஆங்கிலம் மட்டுமே இன்று வரை உள்ளது அதில் இந்தி மொழியையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க ஏதாவது அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து நடைமுறை படுத்தினால் தமிழக மக்களும் மொழிப்பிரச்சினையின்றி மற்ற மாநிலங்களுக்கு சென்றுவர மற்றும் தொழில் செய்யவும் நாட்டின் பொருளாதாரம் மேமபாடு்பாடையவும் உதவும்.

Monday, March 17, 2008

ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் - தேர்வு

கடந்த 2007ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்திய ஆட்சிப் பணிக்கான மெயின் தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. சென்னையில் பயிற்சி பெற்ற பலர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய ஆட்சிப் பணியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தி வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு மத்திய அரசில் 734 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மே மாதம் முதல் நிலை(பிரிலிமினரி) தேர்வுகள் நடத்தப் பட்டன. மெயின் தேர்வு எழுத 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வானார்கள். மெயின் தேர்வு கடந்த அக்டோபரில் நடந்தது. இத்தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப் பட்டுள்ளன. அடுத்தக்கட்ட நேர்முகத் தேர்வுக்கு ஆயிரத்து 883 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் சார்பில் சென்னை அண்ணா மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 200 பேரில் 54 பேரும், சைதை துரைசாமி நடத்தி வரும் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை சேர்ந்த எட்டு பேரும் நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர். இதுகுறித்து, யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. இவர்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் 31ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடக்கிறது. நேர்முகத் தேர்வு நடக்கும் இடம், நாள் குறித்த தகவல்கள் தேர்வில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படுகிறது. இதுதவிர, இம்மாதம் 25ம் தேதி முதல் யு.பி.எஸ்.சி., இணைய தளத்திலும் வெளியிடப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., மெயின் தேர்வில், சென்னை மாணவர்கள் வெற்றி குறித்து மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய இயக்குனர் வாவூசி கூறியதாவது: கடந்த 2007ம் ஆண்டு அக்டோபரில் நடந்த ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான மெயின் தேர்வில் மனிதநேய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு மே மாதம் மற்றும் அக்டோபரில் நடந்த இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் 17 மாணவ, மாணவியர் இணைந்து பயிற்சி பெற்றனர். இவர்களில் ஒரு மாணவி உட்பட எட்டு பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

விருப்ப பாடங்களில் புவியியல், வரலாறு, பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் வணிகவியல் ஆகியவற்றை முதலாவதாக எடுத்தவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இதில், சென்னை, பெரம்பலூர், ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும், தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு மாணவர்களும் அடங்குவர். முதல் ஆண்டிலேயே 47 சதவீதம் அளவிற்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நேர்முகத் தேர்வுக்கு தரமான பயிற்சியும், டில்லி சென்று தேர்வை எதிர்கொள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது பயிற்சி மையத்தில் 2008 ஆண்டிற்கான முதல் நிலை தேர்வுக்காக 100 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து மென்மேலும் தரமான பயிற்சியை தந்து மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கவேண்டும்.

டெல்லி சென்றால் தான் நல்ல பயிற்சியை பெறமுடியும் என்றெண்ணத்தை மாற்றி சென்னையில் அதைவிட தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது என்ற நிலை உருவாகவேண்டும்.

ஒகேனக்கல் எல்லை விவகாரம்

ஒகேனக்கலை உரிமை கோரும் கன்னட அமைப்பினருக்கு, பிரிட்டிஷ் இந்திய அரசு காலத்தில் தயார் செய்யப்பட்ட வரை படங்களே பதில் அளிக்கின்றன. காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக, தமிழகம் - கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. அதை வாய்ப்பாக பயன்படுத்தி, தமிழகத்துக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.

‘ஒகேனக்கலில் சில பகுதிகள், கர்நாடகாவுக்கு சொந்தமானவை’ என்று, கன்னட அமைப்பினர் கூறி வருகின்றனர். தேசிய கண்ணோட்டம் இல்லாத இந்த கூட்டத்தில் கர்நாடகா பா.ஜ., கட்சியினரும் சேர்ந்துள்ளது தான் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.நேற்று முன்தினம் ஒகேனக்கல் மணல் திட்டு பகுதிக்கு வந்த எடியூரப்பா, ‘காவிரி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, யார் அனுமதியை பெற்று தமிழக முதல்வர் கருணாநிதி மிகப்பெரிய குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்? எல்லை பிரச்னை குறித்து இரு மாநில அரசுகளும் சர்வே செய்த பின்னரே திட்டத்தை துவங்க வேண்டும்’ என கூறிச் சென்றுள்ளார்.

தமிழகம், கர்நாடகா இடையே தற்போதுள்ள எல்லையானது, பிரிட்டிஷ் இந்திய அரசு இருந்த காலத்திலேயே தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கான தெளிவான வரைபடங்களும், அரசு வசம் உள்ளன. அதையறிந்தும், கர்நாடகா அரசும், குறிப்பாக அம்மாநில வனத்துறையினரும், தேவையற்ற சர்ச்சையை உண்டாக்கி வருகின்றனர். தமிழகத்தில் காவிரி நுழையும் பிலிகுண்டுலுவில் இருந்து 50 கிலோமீட்டர் துõரத்தில், ஒரு கரைப்பகுதியில் தமிழகத்துக்கு உட்பட்ட ராசிமணல், பிலிகுண்டுலு, ஊட்டமலை, கூத்தப் பாடி, ஒகேனக்கல் பகுதிகள் உள்ளன. மறு கரைப்பகுதியில் கர்நாடகா மாநில கிராமங்களான மாறுகொட்டாய், ஜம்புபட்டி, செங்கம்பாடி ஆகியவை உள்ளன. காவிரியின் ஒரு கரைப்பகுதி தமிழகத்துக்கும், மறு கரைப்பகுதி கர்நாடகா மாநிலத்துக்குமாக பிரித்து, பிரிட்டிஷ் அரசு வன நீர் பரப்பு எல்லையாக வரையறுத்துள்ளது. தற்போதைய கர்நாடகா மாநில பகுதிகள், அப்போதைய மைசூர் மாவட்ட பகுதியிலும், தற்போதைய தமிழக பகுதிகள், அப்போதைய சேலம் மாவட்ட பகுதியாகவும் எல்லை வரையறுக்கப் பட்டுள்ளது.

நீர் பரந்து விரிந்து வரும் கரைக்கு இடைப்பட்ட பரப்பு, இரு மாநிலத் துக்கும் சரி சமமாக பிரிக்கப் பட்டுள்ளது. இரு கரைக்கும் இடைப்பட்ட நீர் பரப்பானது, 50 கிலோ மீட்டர் துõரத்தில் 500 மீட்டர் முதல் இரண்டாயிரம் மீட்டர் இடைவெளியில் உள்ளது. இந்த பரப்பும், சரி சமமாக இரு மாநிலங்களுக்கும் பிரித்து பிரிட்டிஷ் ஆட்சியில் வனத்துறை வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரச்னைக்குரிய சிறுமலை பகுதியானது, ஊட்டமலையில் இருந்து வரும் காவிரி நீர் பெரிய நீர்வீழ்ச்சி அருகே இரு பிரிவாக பிரியும் மையப்பகுதியில் பாறை பரப்பாக உள்ளது. ஊட்டமலையில் இருந்து காவிரி பிரியும் ஒரு பிரிவு, தமிழக கரையோர பகுதி வழியாக சென்று பெரிய அருவி பகுதியிலும், சினிபால்ஸ் பகுதியிலும் அருவியாக கொட்டுகிறது.

கர்நாடகா உரிமை கொண்டாடும் பகுதி அனைத்தும் தமிழக கரைப்பகுதியையொட்டி உள்ள சினி பால்ஸ், தொங்கும் பாலம் உள்ளிட்ட பகுதியாகும். பிரிட்டிஷ் வனத்துறை சர்வே வரைபடங்களின்படி, இந்த பகுதிகள் தமிழக கரைப்பகுதியில் உள்ளன. பிரிட்டிஷ் வரைபட அமைப்புபடியும், உபயோக அடிப்படையிலும் கர்நாடகா மாநில அமைப்புகள் உரிமை கோரும் பகுதி அனைத்தும் தமிழக எல்லையில் உள்ளது. இரு மாநில எல்லைகளுக்கு இடையில் சர்வே செய்வது என்றாலும், மத்திய நீர் நில அளவை நிர்வாகம் பெங்களூருவில் உள்ள ‘சர்வே ஆப் இந்தியா’ அலுவலகத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசில் வரையறுக்கப்பட்ட வனப்பகுதி நீர் நிலை வரைபடங்களை அடிப்படையாக கொண்டே மீண்டும் சர்வே செய்யும். பிரிட்டிஷ் அரசால் வரையறுக்கப்பட்ட எல்லையை அடிப்படையாக கொண்டு, மீண்டும் மறு சர்வே செய்தாலும் கர்நாடகா மாநிலம் உரிமை கோரும் பகுதிகள் அனைத்தும் தமிழக கரைப்பகுதியில் இருப்பதால், தமிழக பகுதிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

இனியும் கர்நாடக அரசியல்வாதிகள் திருந்துவார்களா என்பது ஒரு கேள்வி(?)க்குறியாக உள்ளது.
கர்நாடக மக்களின் அத்தியாவச தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல் அண்டையமாநிலங்களை வம்புக்கிழுத்து அதில் உள்ளூர் அரசியல் லாபம் தேட நினைகிறார்கள்.

கர்நாடக மக்கள் சும்மா இருந்தாலும் கர்நாடக அரசியல்வாதிகள் மக்களைத் தூண்டிவிட்டு இருமாநிலத்து மக்களிடையேயும் பகைமையுணர்ச்சியை வளர்த்து வருகிறார்கள்.

இது கவலையளிக்ககூடியதாக உள்ளது.