எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, April 23, 2009

பராசக்தி சினிமா வசன பாணியில் இலங்கை பிரச்னை

லோக்சபா தேர்தலில் காங்., கூட்டணியை தோற்கடிப்பதற்காக, தமிழ் அமைப்புகள் சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்னையில் காங்., மற்றும் தி.மு.க., கட்சிகள் செய்த துரோகத்தை பராசக்தி பட கோர்ட் காட்சியை போல் சித்தரித்து, 'CD' தயாரித்து பொதுமக்களிடையே வழங்கி வருகிறது.

'CD'யில் உள்ள மாற்றப்பட்ட வசனம்: "இந்த நீதிமன்றம் விசித்திரமிக்க பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. வித்தியாசமான மனிதர்களையும் கண்டிருக்கிறது. ஆனால், உங்கள் முன் வாதாடும் இந்தத் தமிழன் வித்தியாசமான மனிதனும் அல்ல, வாதாடும் இந்த வழக்கும் விசித்திரமான வழக்கு அல்ல. வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக காணக்கூடிய மனிதர்களில் நானும் ஒருவன்.மக்களுக்குள் கலகத்தை விளைவித்தேன்... அரசாங்கத்தை அதிரடியாக தாக்கினேன்... இப்படியெல்லாம் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் நான்.நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், இதையெல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை... நிச்சயமாக இல்லை.


மக்களுக்குள் கலகத்தை விளைவித்தேன். மக்களை கொடியவர்களாக ஆக்குவதற்காக அல்ல... மண்டிப்போன மந்தைக் கூட்டங்களாக மக்கள் ஆகிவிடக்கூடாதே என்பதற்காக. அரசாங்கத்தை தாக்கினேன். நான் அரசாள்வதற்காக அல்ல... அரசின் பகல் வேஷத்தை அம்பலப்படுத்துவதற்காக! (கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சி)உனக்கேன் இவ்வளவு அக்கறை. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்... என் இனம்தான் பாதிக்கப்பட்டது... நேரடியாக பாதிக்கப்பட்டது. என்னை குற்றவாளி என்கிறீர்களே? இந்த குற்றவாளியின் இன வரலாற்றை கொஞ்ச தூரம் பின்னோக்கிப் பார்த்தால்... என் இனம் கடந்து வந்துள்ள சிறப்புகள் எத்தனை என்பதைப் பார்க்க முடியும்.கேளுங்கள் தமிழனின் கதையை; தீர்ப்பு எழுதுவதற்கு முன் கேளுங்கள் தமிழனின் கதையை...!


லெமூரியா கண்டத்திலே பரந்து விரிந்து எல்லைகளற்று வாழ்ந்தவன் தமிழன். எதையும், எவரிடத்திலும் கற்றவர்கள் அல்ல நாம். அனைவருக்கும் கற்றுக் கொடுத்த இனம். பண்பாட்டைப் பழகியவர்கள் இல்லை நாம். பண்பாட்டைப் படைத்தவர்கள்.கடலுக்கு அப்புறத்தில் தென்னாடு; இப்புறத்தில் தமிழ்நாடு. கடல் கோடின் சீற்றத்திற்கு நாம் மட்டும் விதிவிலக்கா... சொந்த நாட்டிலே வாழும் என் சகோதிரிகளின் நிலையைக் கண்டேன்... (கற்பழிப்பு, கொலை சம்பவ வீடியோ காட்சிகள்) காணக்கூடாத அவலங்களை எல்லாம் கண்டேன்."வந்தாரை வாழவைக்கும் தமிழினம்' மங்களகரமான பெயர்.


ஆனால், மூச்சிலும் சுதந்திரமில்லை. வந்தேறிய சிங்கள குடியினரின் இனவெறிக்கு ஆளாகி, வாழ வழியின்றி தவித்தது என் தமிழ் இனம். செழித்து வாழ்ந்த இனம் இன்று சீரழிந்துவிட்டது.தமிழினம் துடித்தது; தமிழினத்திற்காக நான் துடித்தேன். அதற்கு கைமாறாக தமிழினத்திற்கு கருணை காட்டினர் சிலர் (ராஜிவ் படம்). அமைதிப்படை என்ற பெயரால் அக்கிரமத்தின் ஆணி வேர் பதிந்தது எமது ஈழமண்ணில். அதை அன்றே பிடுங்கி எரிந்திருக்காவிட்டால் (இலங்கை சென்ற அன்றை இந்திய பிரதமர் ராஜிவை சிங்கள போலீஸ்காரர் தாக்கும் காட்சி) என் இனம் வாழ்ந்ததற்கே அடையாளம் தெரியாமல் போயிருக்கும்.சொந்த நாட்டில் வாழ தமிழனுக்கு வழியில்லை.


சொந்த நாட்டை மீட்கும் முயற்சிக்கு ஆதரவு தர நாதியில்லை. என் தலைவன் மட்டும்(பிரபாகரன் ) கொஞ்சம் தலை அசைத்திருந்தால், எதிரிகள் (ராஜபக்ஷே) மட்டுமல்ல... அந்த இனத்தின் சுவடுகள் கூட இல்லாமல் போயிருக்கும் ஓர் நொடியில். இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது. என் தமிழ் இனத்தை விரட்டியவனின் விலா எலும்பு தெரித்திட நினைத்ததில் என்ன தவறு... ஆயுதம் எடுத்தது குற்றமா... அதர்மத்தை அழித்தது குற்றமா... அடிமைகளை விடுவித்தது குற்றமா...


தமிழனை நாதியின்றி அலைய வைத்தது யார் குற்றம்? விதியின் குற்றமா அல்லது வந்தேரிய சதிகார இனவெறி ஏகாதிபத்திய ஏகலைகளின் குற்றமா?இனி எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கத்தை புரட்டினாலும் (விடுதலைப் புலி கொடி) காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம். இவ்வாறு அந்த 'CD'யில் உள்ளது.