இந்தப் படத்தில் கதாநாயகனின் குடும்பம் வசதி குறைந்தது. அவன் மனைவி, ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். கதாநாயகன், தன் உடைமைகளை எல்லாம் விற்று, முதலீடு செய்து, மனித உடலின் ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தையும் பரிசோதித்து, நிலைமையைச் சொல்லும் பரிசோதனைக் கருவிகளை மொத்தமாக வாங்குகிறான். அவற்றை, மருத்துவமனைகளில் கொண்டுபோய் விற்பதற்காக, நெருங்குகிறான். வாங்குவார் இல்லை.
அவனது ஒரே மகன், ஆறு வயதுச் சிறுவன், பள்ளியில் படிக்கிறான். அலைந்து அலைந்து, எங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது, பசியோடும் பட்னியோடும் ஒவ்வொரு நாளும் இரவில் வீடு திரும்புகிறான். மனைவி கோபிக்கிறாள். இருக்கின்ற ரொட்டித்துண்டைப் பிள்ளைக்குக் கொடுத்துவிட்டு, பட்னியோடு தூங்குகிறான் தகப்பன். அந்தப் பரிசோதனைக் கருவிகளும் திருடு போகிறது.
‘ நியூ யார்க்கில் என் தமைக்கை வேலை பார்க்கும் நிறுவனத்தில் எனக்கும் வேலை கிடைத்துவிட்டது. நான் போகிறேன், மகனை நீயே பார்த்துக் கொள்’ என்று கூறிவிட்டு, மனைவி பிரிந்து செல்கிறாள். பள்ளிக்கூடத்தில் கட்டணம் செலுத்தமுடியாமல், பிள்ளைக்குக் கல்வி தடைப்படுகிறது. வீட்டு வாடகை செலுத்தவில்லை. காருக்கு வரி கட்டவில்லை. வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. இதற்க்காக் கைது செய்யப்பட்டு, ஒரு நாள் இரவு சிறையில் அடைக்கப்படுகிறான். அந்த இரவு முழுவதும் அவன் குழந்தை சிறைவாயிலிலேயே காத்துக் கிடக்கிறான். மறுநாள் விடுதலையாகி வருகிறான். வேலை தேடி, வீதிவீதியாக அலைகிறான். ஒரு கட்டத்தில், ஒரு வெள்ளை நிற கனவானுக்கு பயணத்தில் உதவுகிறான்.
இவன் மிகக் கூர்மையான அறிவாளி. எவராலும் எளிதில் சேர்க்க முடியா புதிர்க்கட்டங்களை அநாயசமாக அமைத்துக் காட்டுவான். முன்பு இவன் உதவிய கனவான் இயக்குநராக இருக்கின்ற பங்குச் சந்தை வேலை நேர்காணலுக்கு இவனுக்கு அழைப்பு அனுப்புகிறார். நேர்காணலுக்கு முதல் நாள்தான், வீட்டுக்கு வண்ணாம் பூசிக்கொண்டு இருந்த நிலையிலேயே கைது செய்யப்ப்ட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தான். காலையில் விடுதலை ஆனவுடன், போட்டு இருந்த பனியனோடு, நேர்காணல் அரங்கத்துக்கு ஓடுகிறான். நேர்காணல் குழுவினர், ஏளனமாகப் பார்க்கின்றனர். தன் நிலைமையைச் சொல்லிகிறான். கனவான் இரங்குகிறார். மூன்று மாதம் பயிற்சிக் காலம்.
பயிற்சி முடிந்து தேர்வு பெற்றால், வேலையில் சேரலாம் என்கின்றனர். அப்பயிற்சி நாள்களிலும் பட்டினிதான். தங்குவதற்கு இடம் இல்லை. நடைபதைகளில், ரயில் நிலைய பிளாட்பாரங்களில் பிள்ளையோடு படுத்துத் தூங்குகிறான்.
ஒருநாள், ஒரு ரயில்வே நிலையத்தில், தங்க இடம் இன்றி, கழிப்பறைக்கு உள்ளே தன் பிள்ளையோடு போய்த் தங்குகிறான். தரையில் செய்தித்தாள்களை விரித்துத் தன் பிள்ளையைப் படுக்க வைத்து இருக்கிறான், பிள்ளை தூங்கிறான்.
அந்தப் பிள்ளை ஒரு அற்புதமான பிள்ளை. அவன் கேட்பான் தகப்பனிடம், ‘அப்பா நான் பாரமாக இருப்பதால்தான் அம்மா போய்விட்டாளா? அப்படியானால் உனக்கும் நான் பாரமாக இருக்கின்றேனா?’ என்று கேட்கிறான்.
அவனை உச்சிமோந்து அள்ளிக்கொண்டு, ‘என் பிரிய மகனே, நீதானடா என்னை இயக்குகிறாய், என் பசி போக்கும் உணவுதான் உன் பார்வை, என் தாகம் தீர்க்கும் அமிர்தமும் நீதான்’ என்பான். அந்தப் பிள்ளை, கழிப்பறையில் இப்போது தூங்கிக்கொண்டு இருக்கிறான்.
அப்போது, கழிப்பறைக்கு உள்ளே வருவதற்காக யாரோ கதவைத் தட்டுகிறார்கள். காலால் அந்தக் கதவை மூடிக்கொண்டு, பிள்ளையை மடியில் போட்டுக்கொண்டு அமர்ந்து இருக்கிறான். அப்போதுதான், முதன்முதலாக அவனுடைய கண்களில் இருந்து இரண்டு கண்ணீர்த்துளிகள் உருண்டு விழுகின்றன. படம் பார்த்துக்கொண்டு இருந்த என்னுடைய கண்களிலும் கண்ணீர்த்திவலைகள். வாழ்க்கையில் எந்தப் பக்கம் திரும்பினாலும் அவனுக்குத் தோல்வி, எங்கு சென்றாலும் தோல்வி, எதைச் செய்தாலும் தோல்வி.
ஒரு வணிக வளாகத்தில் தன் சோதனைக் கருவியை விற்பதற்காக நின்றுகொன்று இருப்பான் பிள்ளையோடு. அப்போது அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியில், அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஜெபர்சனின் படத்துடன், அவருடைய பதவிப் பிரமாண உரையின் முக்கியமான பகுதி, காட்சியாக ஓடுகிறது. அந்த உரையின், ‘மகிழ்ச்சியைத் தேடி....’ என்ற சொற்கள் ஒலிக்கின்றன.
அந்த இடத்தைவிட்டு அகன்று, மகனோடு நடந்து செல்லும்போது, ‘அதற்கு என்ன பொருள்?’ என்று கேட்கிறான் மகன். ‘நம்முடைய நிலைதான் அதற்குப் பொருள். மகிழ்ச்சி என்பது கிடைக்காது, தேடிக்கொண்டே இருக்க வேண்டும்’ என்று சிரித்துக்கொண்டே சொல்லுவான்.
பங்குச்சந்தை பயிலகத்திலும் பல சோதனைகள். இனி இந்தத் துன்பத்தில் இருந்து விடுபட வழியே இல்லை. தொடரும் இருட்டில், இனி வெளிச்சமே இல்லை என்று, நிராசையே வாழ்வாகி, விரக்தியின் விளிம்பில் நிறுத்தப்படுகிறான். இந்த நிலையிலும், அவன் முடங்கி விடவில்லை. சோர்ந்து அடங்கி விடவில்லை. தொடர்கிறான்... தனது பயணத்தைத் தொடர்கிறான்! மூன்று மாத பயிற்சி முடிகிறது.
நேர்காணல் அறைக்கு மீண்டும் அழைக்கப்படுகிறான். முதலில் போனபோது, சிறையில் இருந்த வந்த அலங்கோலம். மேல்சட்டை அணியாத பரிதபம். இன்று, அங்கு அமர்ந்தவுடன் இயக்குநரிடம் சொல்லுகிறான். ‘இன்றைக்கு நான் ஒரு நல்ல சட்டை போட்டுக்கொண்டு வந்து இருக்கிறேன்’.
இரண்டு நிமிட இடைவெளிக்குப் பின்னர், பண்பான அந்தக் கனவான் சொல்கிறார்: ‘இன்று முதல் உனக்கு இந்தக் கம்பெனியில் நிரந்தர வெலை!’ அவன் நெஞ்சுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கின்றன. இதோ, அவனுக்கு விடிந்து விட்டது. கம்பெனியின் சில பங்குகளை அவனே விலைக்கு வாங்குகிறான். வெற்றித்தேவதை அவன் மீது பூ மழை பொழிகிறாள். செல்வம் குவிகிறது. அந்தக் கம்பெனியிலேயே ஓர் இயக்குநராகவும் உயர்கிறான். ஒரு கம்பெனியையே விலைக்கு வாங்குகிறான். இரவும் பகலும் பட்னி கிடந்து, வேதனை விம்மலுடன், வீடற்று வீதியில் திரிந்த அந்த நீக்ரோ இளைஞன், நகரத்தின் செல்வச் சீமான்களிள் ஒருவன் ஆகிறான்.
இந்தப் படம் கற்பனைக் கதை அல்ல. முழுக்க முழுக்க சிகாகோ நகரத்தில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம். இதில் கதாநாயகனாக நடித்த வில்ஸ்மித், அப்பாத்திரமாகவே உணர்வுபூர்வமாக ஒன்றிப் போய்விட்டார். அவர் பிறவியில் நீக்ரோ. அதைவிட, இப்படதுக்கு மேலும் ஓர் சிறப்பு என்னவென்றால், அவரது சொந்த மகன்தான் இந்தப் படத்திலும் அவரது பிள்ளையாக நடிக்கிறான்.
வைக்கோவின் ஆம்; நம்மால் முடியும்! புத்தகத்திலிருந்து நான் படித்து ரசித்த கதை.அப்பாவிற்க்கும் மகனுக்கும் உள்ள பாசபிணைப்பு மற்றும் அப்பாவிடம் அவன் கழிவறையில் கேட்கும் கேள்விகள் என் மனதை பாதித்த காட்சிகள்.
பார்க்க நேர்ந்தால் யாரும் தவறவிடாதீர்கள்.
படம் - Pursuit of Happyness
எண்ணங்களின் பிரதிபலிப்பு
Friday, December 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
யதார்தத்தை நோக்கிய ஒரு திரைப்படத்தை இப்படி செயற்கைத்தனமாக எழுத திராவிடத் தலைவர்களால் மட்டுமே முடியும். வாழ்க வைகோ!
ரொம்பவும் உருக்கமாக இருக்கிறது. டி.வி.டி கிடைத்தால் கண்டிப்பாக பார்க்கிறேன்.
Post a Comment