எண்ணங்களின் பிரதிபலிப்பு

Monday, December 8, 2008

டில்லியில் ஷீலா தீட்சித் எதிர்பாரா வெற்றி : ம.பி., - சட்டீஸ்கரில் மீண்டும் பா.ஜ., ஆட்சி: ஐந்தில் மூன்று காங்கிரஸ்!

நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மகிழ்ச்சியையும், பா.ஜ.,வுக்கு ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில் மூன்றில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் உட்கட்சி மோதலால் வசுந்தரா தலைமையிலான பா.ஜ., அரசு தோல்வியை சந்தித்துள்ளது. டில்லியில் ஷீலா தீட்சித் எதிர்பாராத வெற்றி பெற்று, ஹாட்ரிக் அடித்துள்ளார்.


."மினி' பொதுத் தேர்தல் : ம.பி., - சட்டீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ., தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது."மினி' பொதுத் தேர்தல் என வர்ணிக்கப்பட்ட, ராஜஸ்தான், டில்லி, மிசோரம், ம.பி., சட்டீஸ்கர் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.மும்பை பயங்கரவாத தாக்குதல், பொருளாதார மந்த நிலை போன்ற பரபரப்பான சூழ்நிலையில் இந்த தேர்தல்கள் நடந்ததால் அனைத்து தரப்பினரின் கவனமும் இந்த தேர்தல் முடிவுகளிலேயே இருந்தது. அடுத்த ஆண்டில் லோக்சபாத் தேர்தல் நடக்கவுள்ளதால், இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் அதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் எதிர்பார்ப்பு அதிகரித்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தது.திட்டமிட்டபடி ஐந்து மாநில தேர்தல்களிலும் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மகிழ்ச்சியையும், பா.ஜ.,வுக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.


ஷீலா அடித்த ஹாட்ரிக் (டில்லி): டில்லியில் ஆளுங்கட்சியான காங்கிரஸ் தோல்வி அடையும் என்றே கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டது. மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் வேறு நடந்ததால், காங்கிரஸ் தோல்வி உறுதி எனக் கூறப்பட்டது. குறிப்பாக, பா.ஜ., இந்த மாநிலத்தில் வெற்றி பெறுவோம் என பெரிதும் நம்பியது. எதிர்பாராத வகையில் காங்கிரஸ் 42 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. பா.ஜ.,வுக்கு 23 இடங்களே கிடைத்தன. மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று, ஷீலா தீட்சித் ஹாட்ரிக் அடித்துள்ளார். டில்லியில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளே இதற்குக் காரணம் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.


மகுடம் இழந்த மகாராணி (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலத்தில் துவக்கத்தில் இருந்தே பா.ஜ., தோல்வி அடையும் எனக் கூறப்பட்டது. இருந்தாலும், மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் தேர்தல் நடந்ததால், பா.ஜ., வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது. ஆனால், மும்பை சம்பவம் ராஜஸ்தான் தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. காங்கிரஸ் 96 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு ஐந்து இடங்கள் காங்கிரசுக்கு குறைவாக உள்ளன. பா.ஜ.,வில் நிலவிய உட்கட்சித் தகராறு தான் வசுந்தரா தலைமையிலான அரசின் தோல்விக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. பா.ஜ.,வுக்கு 78 தொகுதிகள் கிடைத்துள்ளன.


சாதித்துக் காட்டிய சவுகான் (ம.பி.,): மத்தியப்பிரதேசத்தில் உமா பாரதியின் பாரதிய ஜனசக்தி கட்சியால் பா.ஜ., தரப்பு ஒரளவு கலக்கம் அடைந்திருந்தது. இருந்தாலும், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் அபாரமான செயல்பாடு, சரியான வேட்பாளர் தேர்வு, மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் போன்றவற்றின் காரணமாக பா.ஜ., ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் தரப்பில் தீவிர பிரசாரம் செய்தும், பா.ஜ.,வின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.


அசத்திய ராமன் சிங் (சட்டீஸ்கர்):சட்டீஸ்கரில் நக்சலைட்களின் அச்சுறுத்தல், விலைவாசி அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை முன் வைத்து, காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்தது. இருந்தாலும், பா.ஜ., முதல்வரான ராமன் சிங், தனது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை எடுத்துக் கூறி பிரசாரம் செய்தார்.கடும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோதும் காங்கிரஸ் தலைவர் அஜித் ஜோகி, மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரசாரம் செய்தார். ஆனால், அதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை. பா.ஜ., இங்கு ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது.இங்கு 50 தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. காங்கிரசுக்கு 38 தொகுதிகள் கிடைத்துள்ளன.


மிசோரம் காங்கிரஸ் வசம்: மிசோரமில், மிசோ தேசிய முன்னணியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மிசோ தேசிய முன்னணிக்கு நான்கு இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.


இந்த ஐந்து மாநில தேர்தலில், மூன்றில் வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரஸ் உற்சாகம் அடைந்துள்ளது. எனவே, லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வெற்றி பெற்ற மாநிலங்களில் முதல்வர் தேர்வுடன், லோக்சபாத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாரிப்பில் இறங்கிவிட்டது. பயங்கரவாதம், பொருளாதார மந்தநிலை போன்ற பிரச்னைகளைத் தாண்டி நிலைத்த அரசு என்ற அடிப்படையில் மக்கள் தெளிவாக ஓட்டளித்திருப்பதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்திருக்கிறது. ம.பி.,யில் சவுகானும், சட்டீஸ்கரில் ராமன் சிங்கும் தொடர்ந்து முதல்வர்களாக இருப்பார்கள் என்ற முடிவுடன், டில்லி, ராஜஸ்தான் தேர்தல் தோல்வி குறித்து ஆராய, பார்லிமென்டரி குழுவை பா.ஜ., நியமித்திருக்கிறது.


தேர்தல் முழுமுடிவுகள்


டில்லி:


மொத்த தொகுதிகள்:70
தேர்தல் நடந்தவை:69
அறிவிக்கப்பட்டவை:69
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:42
பா.ஜ., :23
பகுஜன் சமாஜ்:2
மற்றவை:2


ராஜஸ்தான் :


மொத்த தொகுதிகள்:200
அறிவிக்கப்பட்வை :200
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:96
பா.ஜ., :78
பகுஜன் சமாஜ் :6
மற்றவைகள்:20


மத்திய பிரதேசம்


மொத்த தொகுதிகள்: 230
தேர்தல் நடந்தவை: 230
அறிவிக்கப்பட்டவை: 230
வெற்றி பெற்ற தொகுதிகள்
பா.ஜ., - 144
காங்., - 70
பகுஜன் சமாஜ் - 6
மற்றவை - 10


மிசோரம்:


மொத்த தொகுதிகள்:40
தேர்தல் நடந்தவை:40
அறிவிக்கப்பட்டவை:40
வெற்றி பெற்ற தொகுதிகள் :
காங்கிரஸ்:31
மிசோ தேசிய முன்னணி:4
சொரம் தேசியவாத முன்னணி:2
மற்றவை:3


சட்டீஸ்கர் :


மொத்த தொகுதிகள்:90
தேர்தல் நடந்தவை:90
அறிவிக்கப்பட்டவை:90
வெற்றி பெற்ற தொகுதிகள் :
பா.ஜ.,:50
காங்கிரஸ்:38
பகுஜன் சமாஜ் கட்சி:2

No comments: