எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, November 22, 2012

2G : விவகாரம் ஆர்.பி.சிங் விளக்கம்


 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிஏஜி வினோத் ராய் கூறிய தகவல்கள் முழுக்க முழுக்க அவரது சொந்த கற்பனை என்ற விவரம் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே வினோத் ராயின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டிருந்தால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி கிடைத்திருக்கும் என்றார் வினோத் ராய். ஆனால், சமீபத்தில் இதை ஏலம் விட்டபோது வாங்கக் கூட ஆள் இல்லாமல் வெறும் ரூ. 9,000 கோடிக்கே அது விற்பனையானது. இதிலிருந்தே ஸ்பெக்ட்ரத்தின் விலை தொடர்பாக வினோத் ராய் கூறிய 'மனக் கணக்கு' எந்த அளவுக்கு ஏற்றிச் சொல்லப்பட்ட ஒன்று என்பது நிரூபணமாகிவிட்டது.
இந் நிலையில் வினோத் ராய் மற்றும் அவரது துணை அதிகாரியான ரேகா குப்தாவின் அடுத்த தகிடுதித்தம் வெளியே வந்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து உண்மையிலேயே ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டியது, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய டைரக்டர் ஜெனராலான ஆர்.பி.சிங் தான். இவர் தான் தொலைத் தொடர்பு மற்றும் தபால் துறைக்கான சிஏஜியின் தணிக்கை அதிகாரி ஆவார்.
ஆனால், வினோத் ராய் அண்ட் கோ ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தாங்களே ஒரு அறிக்கையை தயார் செய்து அதில் ஆர்.பி.சிங்கிடம் கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளது. இந்த நஷ்டக் கணக்கு சரியானதல்ல என்று ஆர்.பி.சிங் கூறியும் கூட அவரது உயர் அதிகாரியான வினோத் ராய் அதில் கையெழுத்து போட வைத்துள்ளார். இதை ஆர்.பி. சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.
முரளி மனோகர் ஜோஷி...:
2ஜி விவகாரம் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு 2008ம் ஆண்டு முதலே விசாரித்து வந்தது. இந் நிலையில் இதன் தலைவராக பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி 2010ம் ஆண்டு பதவியேற்றார்.
அதே நேரத்தில் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகமான சிஏஜியின் அலுவலகமும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து ஆய்வு செய்து வந்தது. அப்போது, சிஏஜி அலுவலகத்தை முரளி மனோகர் ஜோஷி பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிஏஜி தயாரித்து வந்த ரகசிய 2ஜி அறிக்கை குறித்து விவாதித்துள்ளார். இதை சிஏஜி அலுவலகத்தின் தலைமையக டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சின்ஹா தனது அலுவலகக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.
இதன் பின்னர் தான் சிஏஜியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அதில், ஸ்பெக்ட்ரம் விற்பனையால் மத்திய அரசுக்கு ரூ. 57,666 கோடி முதல் ரூ. 1.76 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
சிஏஜி ஒரு விஷயத்தை ஆய்வு செய்து வந்தபோது முரளி மனோகர் ஜோஷி ஏன் அந்த விவரங்களைப் பெறவும், அது குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கவும் ஆர்வம் காட்டினார் என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்கே போய் உதவிய சிஏஜி அதிகாரிகள்:
மேலும் முரளி மனோகர் ஜோஷி இந்த விவகாரத்தில் அறிக்கை தயாரிக்க உதவுவதற்காக சிஏஜி அலுவலக அதிகாரிகள் அவரது வீட்டுக்கே நேரில் சென்று, அதுவும் விடுமுறை நாட்களில், உதவி செய்துள்ள விவரத்தையும் ஆர்.பி.சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஆர்.பி.சிங் 2ஜி விவகாரத்தில் சிஏஜி வினோத் ராயின் செயல்பாடுகள் குறித்து பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில்,
கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி, குட் பிரைடே விடுமுறை தினத்தில், சிஏஜி அலுவலக அதிகாரிகள் முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்குச் சென்றனர். பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் குற்றம் சாட்டி ஜோஷி தயாரித்த 2ஜி அறிக்கையை தயாரிக்க உதவினர்.
ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அலுவலக அறிக்கை என்னுடையதே அல்ல. தனக்கு இப்படித்தான் (ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் நஷ்டம் என்று கூறி) அறிக்கை வேண்டும் என்று எனது அதிகாரியான சிஏஜி (வினோத் ராய்) எழுத்துப்பூர்வமாகவே உத்தரவு போட்டுவிட்டால் நான் என்ன செய்ய முடியும்?.
நான் செய்த கணக்குத் தணிக்கையின்படி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் எந்த நஷ்டமும் இல்லை என்றே எழுதியிருந்தேன். அதே நேரத்தில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் வைத்திருக்கும் நிறுவனங்களிடம் இருந்து இன்னும் ரூ. 37,000 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தான் எழுதியிருந்தேன்.
இது நடந்தது 2010ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி. இதையடுத்து எனது தலைமையிலான குழுவை சிஏஜி தலைமையகத்தில் உள்ள துணை சிஏஜியான ரேகா குப்தாவின் கீழ் இணைத்துவிட்டனர். மேலும் மத்திய நிதித்துறையின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் பணியையும் என்னிடம் தரவில்லை.
2010ம் ஆண்டு ஜூலை மாதம் நான் கொடுத்த அறிக்கையை முழுவதுமாகவே திருத்தி (ரூ. 1.76 லட்சம் கோடி வரை நஷ்டம் என்று எழுதி) அதை மத்திய நிதித்துறைக்கும், தொலைத் தொடர்புத்துறைக்கும் அனுப்புமாறு உத்தரவு போட்டனர். இந்த உத்தரவு மேலதிகாரிகளிடம் இருந்து வந்ததால் என்னால் ஏதும் செய்ய முடியவில்லை.
மேலும் எந்தவித ஆடிட் வழிகாட்டுதல்களும் இல்லாமல் இந்த அறிக்கையை தயார் செய்திருந்தனர். எதை வைத்து இந்த நஷ்டக் கணக்குக்கு வந்தீர்கள், அந்த வழிகாட்டு விதிமுறைகள் என்ன என்று கேட்டு ரேகா குப்தாவுக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பியும் பதிலே வரவில்லை.
அதே போல இந்த நஷ்டக் கணக்கை நான் ஏற்கவில்லை என்பதையும், சரியான வழிகாட்டுதல்கள்- ஆவணங்கள் இல்லாமல் இந்த ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் காட்டுப்படுவதையும் எதிர்த்து வினோத் ராய்க்கும் ரேகா குப்தாவுக்கும் அலுவலகரீதியாக பலமுறை எனது எதிர்ப்பைக் காட்டினேன்.
ஸ்பெக்ட்ரத்துக்கு இது தான் விலை என்று டிராய் அமைப்போ, மத்திய அரசோ எந்த கட்டணத்தையும் நிர்ணயித்திருக்கவில்லை. இதனால் எதை வைத்து ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று சொல்ல முடியும். நம்மிடம் இதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லையே என்று சுட்டிக் காட்டினேன். ஆனால், சிஏஜி தலைமையகம் (வினோத் ராய்) சொன்னதை வைத்து இது தான் நஷ்டம் (ரூ. 1.76 லட்சம் கோடி) என்று எழுதி அனுப்ப வேண்டிய நிலைக்கு எனது அலுவலகம் தள்ளப்பட்டது.
இவ்வாறு போட்டு உடைத்துள்ளார் ஆர்.பி.சிங்.
நஷ்டம் குறித்து வினோத் ராய் கூறிய தகவல்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் ஏற்கனவே பலமுறை ஆஜராகி ஆர்.பி.சிங் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இப்போது தான் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் தலையீடுகளையும் வினோத் ராயின் 'வேலைகளையும்' வெளியே விளக்கமாகப் பேசியுள்ளார் சிங்.

No comments: