எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, November 4, 2012

ஊழல் ஒரு புற்றுநோய்.. ஊழலை ஒழிக்கப் போராடுவோம்: டெல்லி பொதுக்கூட்டத்தில் சோனியா


 ஊழல் ஒரு புற்றுநோய் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.. ஊழலை எதிர்த்து உறுதியுடன் போராடுவோம் என்று ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறைகூவல் விடுத்திருக்கிறார்.
மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு லட்சம் பேரை திரட்டி டெல்லியை உலுக்கி எடுத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் தொண்டர்களை டெல்லியில் திரட்டி குவித்து பிரம்மாண்ட பேரணியை காங்கிரஸ் கட்சி இன்று நடத்தியது. இப்பேரணிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தலைமை வகித்தார்.
பேரணியின் முடிவில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல்காந்தி ஆகியோர் உரையாற்றினர்.
ஊழலை ஒழிப்போம்- சோனியா
இக்கூட்டத்தில் சோனியா பேசுகையில்,
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன. ஊழல் ஒரு புற்றுநோய் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அது நோய்தான்.. இந்த நோய்க்கு எதிராக நாம் போராடுவோம். ஊழலை ஒழிக்க தொடர்ந்து போராடுவோம். ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானோர் தண்டனையில் இருந்து தப்பித்துவிடக் கூடாது. ஊழலைப் பற்றி பேசுகிறவர்கள் ஊழலில் திளைத்துப்போனவர்களாக இருப்பதையே காண முடிகிறது.
நாட்டின் ஜனநாயக அமைப்புகளை அதன் வேரை பலவீனப்படுத்தவே எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. நாடாளுமன்றத்தில் மக்களுக்கான மசோதாக்கள் நிறைவேற்றவிடாமல் முட்டுக்கட்டை போடுகின்றன எதிர்க்கட்சிகள். மக்கள் பிரச்சனைகளை பேசவிடாமல் விவாதிக்கவிடாமல் தடுக்கின்றன எதிர்க்கட்சிகள். இந்தப் போக்கை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.
நாட்டின் அரசியல் சாசனத்தை எப்போதும் காங்கிரஸ் கட்சி பாதுகாக்கவே செய்யும். காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கானது.விவசாயிகளுக்கானது. மதச்சார்பற்ற கட்சிதான் காங்கிரஸ். 2004,2009-ம் ஆண்டு தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றதைப் போல் மீண்டும் மக்களின் நம்பிக்கையை இனிவரும் தேர்தல்களிலும் பெறுவோம் என்றார் அவர்.
லோக்பாலை நிறைவேற்றுவோம்- ராகுல்
இக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி பேசுகையில்,
நாடாளுமன்றத்தில் விரைவில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றும். பொறுத்திருந்து பாருங்க.. லோக்பால் மசோதாவை நிறைவேற்றவிடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டன. ஆனால் நாங்கள் நிச்சயம் மீண்டும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம்.
அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பது பற்றி விவசாயிகளிடம் தவறான தகவல்களை பரப்புகின்றனர். அன்னிய நேரடி முதலீடு மூலமாக குளிர்பதன வசதி கிடைக்கும். நமது நாட்டின் விவசாயிகளுக்கு அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.
ஏழைகள் வெறும் வயிற்றுடன் படுக்கக் கூடாது என்பதே எங்கள் கொள்கை. ஏழை மக்களின் விளைநிலம் வலுக்கட்டாயமாக பறிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். இதற்காகவே உணவு பாதுகாப்பு மற்றும் நில ஆர்ஜித சட்டங்களை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வருகிறது என்றார்

No comments: