எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, December 5, 2012

எப்.டி.ஐ. வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி!


சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக லோக்சபாவில் பாஜக கொண்டு வந்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 218 வாக்குகளும் எதிராக 253 வாக்குகளும் பதிவாயின. இதையடுத்து மத்திய அரசு தப்பியது.
இந்தத் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடந்தது. மாலையில் வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில் அரசைக் காப்பாற்ற பல திரைமறைவு வேலைகள், பேரங்கள் நடந்தன.
குறிப்பாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி ஆகியவற்றை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க பல்வேறு முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டது.
இந்த விவகாரத்தில் இருவருமே திட்டவட்டமாக எதையும் கூறவில்லை. ஆனாலும் இருவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோ அல்லது வெளிநடப்பு செய்தோ மத்திய அரசைக் காப்பாற்றி விடுவார்கள் என்பது காலையிலேயே தெரிந்துவிட்டது.
அதே போல ஓட்டெடுப்புக்கு சற்று முன் பகுஜன் சமாஜ் கட்சியும் அதைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சியும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டன.
அது எப்படி வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றினர்?.. தொடர்ந்து படியுங்கள்.
544 பேர் கொண்ட மக்களவையில் காங்கிரஸ் கூட்டணிக்கு 261 எம்பிக்கள் உள்ளனர். பாஜக, எதிர்க் கட்சிகளிடம் 219 எம்பிக்கள் உள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணியில் எப்டிஐக்கு ஆதரவான எம்பிக்கள் எண்ணிக்கை:
காங்கிரஸ்- 206
திமுக- 18
மற்ற கூட்டணிக் கட்சிகள்- 30
கூட்டணியில் இல்லாவிட்டாலும் மத்திய அரசை ஆதரிக்கும் கட்சிகள்:
லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்- 4
கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம்- 3
ஆக மொத்தம் காங்கிரஸ் கூட்டணிக்கு 261 எம்பிக்கள் ஆதரவு இருந்தது.
எப்டிஐக்கு எதிரான கட்சிகள், எம்பிக்கள் எண்ணிக்கை:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் எண்ணிக்கை- 152
இடதுசாரிக் கட்சிகள்- 24
மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ்- 19
அதிமுக- 9
ஆக மொத்தம் இவர்களது எண்ணிக்கை 204
544 எம்பிக்களும் அவையில் இருந்தால் ஓட்டெடுப்பில் அரசு வெல்ல 272 வாக்குகள் தேவைப்பட்டிருக்கும். ஆனால், பகுஜன் சமாஜ் (21 எம்பிக்கள்), சமாஜ்வாடி (22 எம்பிக்கள்) கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டால் அவையில் மொத்தமுள்ள எம்பிக்கள் எண்ணிக்கை 501 ஆகக் குறைந்துவிட்டது. இந்த நிலையில் வாக்கெடுப்பில் அரசு வெல்ல 501ல் பாதி அளவான 251 வாக்குகள் இருந்தாலே போதும் என்ற நிலை உருவானது.
இந் நிலையில் வாக்கெடுப்பு நடந்தபோது அவையில் 501 எம்பிக்கள் இல்லை. 471 எம்பிக்களே இருந்தனர். இதில்
253 எம்பிக்களின் ஆதரவுடன் ஓட்டெடுப்பில் மத்திய அரசு வென்றது. இதில் திமுக எம்பிக்களின் ஆதரவும் அடக்கம். அரசுக்கு எதிராக 218 வாக்குகள் பதிவாயின.
சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் அவையில் இருந்திருந்தால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் தான் அரசு வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், எப்டிஐக்கு ஆதரவாக வாக்களிக்க இவர்கள் விரும்பவில்லை. இதனால் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றிவிட்டனர்.
இதனால் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு இனி சாத்தியமாகிவிடும்.

No comments: