எண்ணங்களின் பிரதிபலிப்பு

Tuesday, March 24, 2009

கங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் கட்சி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு கிலோ மூன்று ரூபாய் விலையில் மாதம் 25 கிலோ அரிசி, தலித் மற்றும் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்கலை வரை இலவசக் கல்வி,வங்கியில் வாங்கிய கடனை சரியாகத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகை போன்றவை வழங்கப்படும் என, அறிவிக்கப் பட்டுள்ளது. பாமர மக்கள் நலன் குறித்து அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

தேர்தல் அறிக்கை:

1. லோக்சபா மற்றும் சட்ட சபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பது உறுதி செய்யப்படும். 15வது லோக்சபாவில் இதுதொடர் பான சட்ட மசோதா நிறைவேற்றப்படும். அதனால், 2014ம் ஆண்டு நடக்கும் லோக்சபாத் தேர்தலில், பெண்கள் 33 சதவீத அளவுக்கு போட்டியிடுவர்.
2. வீடில்லாதவர்களும், இடம் பெயர்ந்து வருவோரும் நகரங்களில் மானிய விலையில் உணவைப் பெறும் வகையில், சமுதாய சமையல் அறைகள் அமைக்கப்படும்.
3. நகரங்களிலும், கிராமங்களிலும் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும், கிலோ மூன்று ரூபாய் விலையில், மாதம் ஒன்றுக்கு 25 கிலோ உணவுதானியம் வழங்கப்படும். இதற்கேற்ற வகையில், உணவு உரிமைச் சட்டம் இயற்றப்படும்.
3. ஆதிவாசி மற்றும் தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல்கலை வரை இலவசக் கல்வி அளிக்கப்படும்.
4. வங்கிகளில் வாங்கிய கடனை சரியாகத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும்.
5. அனைவருக்கும் தரமான கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படும். ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பாட வகுப்பில், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் மற்றும் பல்கலைக் கழகத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகையோ அல்லது கல்விக் கடனோ வழங்கப் படும். இந்தக் கல்வி கடன் எந்தவிதமான நிபந்தனை உத்தரவாதமும் இல்லாமல் வழங்கப்படும்.
6. சாதாரண மக்கள் நிவாரணம் பெறும் வகையில், மிதமான வகையில் சேவை வரிகள் விதிக்கப்படும்.
7. வரும் 2010ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல், "பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.,)' அறிமுகப் படுத்தப்படும்.
இந்த வரி அமலுக்கு வந்து விட்டால் மத்திய, மாநில அரசுகளால் விதிக்கப் படும் இதர வரிகளான "வாட்,' கலால் வரி, சேவை வரி, கேளிக்கை வரி, ஆடம்பர வரி போன்றவை முற்றிலும் ஒழிக்கப்படும். இதனால், வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.
8. இளைஞர்களும், இளம் பெண்களும் (18 முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்கள்) நாட்டின் தேசிய கட்டமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில், அவற்றில் அனுபவம் பெறும் வகையில், பயிற்சித் திட்டம் ஒன்று அறிமுகப்படுத் தப்படும். இதன்மூலம் அவர்கள் மிகுந்த பலன் பெறலாம்.
9. காங்கிரஸ் கட்சி மட்டுமே அகில இந்திய அளவில் பரவியிருப்பதோடு, அகில இந்திய அளவிலான பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு செயல் படுகிறது.
ஐந்து ஆண்டு கால பதவிக்காலத்தை காங்கிரஸ் கட்சி வெற்றிகரமாக முடித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு, கவுரவம் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்ய தொடர்ந்து பாடுபடும்.
10. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். குறைவான பணவீக்கத்துடன் உயரிய பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கப் படும்.
11. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றும் வகையில், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்து, விளைப் பொருட்களை விவசாயிகளின் வீட்டிற்கே சென்று கொள்முதல் செய்யும் முறை துவக்கப்படும்.
12. நீதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க நீதித்துறை சீர்திருத்தம் தொடரும். போலீஸ் துறையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
13. தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
14. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் ஜனநாயக மயமாக்கப்படும்.
15. எரிசக்தி, போக்குவரத்து, தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் இன்சூரன்ஸ் போன்ற துறைகளில் உள்ள அரசு நிறுவனங்களின் மீது அரசின் கட்டுப்பாடு தொடரும்.
16. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கிராமமும் அகண்ட அலைவரிசை இணைப்புடன் இருப்பது உறுதி செய்யப்படும்.
17. ஏழைக் குடும்பங்கள் அனைத்திற்கும் சுகாதார காப்பீடு திட்டம் மூன்று ஆண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப் படும். மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.
18. நடப்பு 2008-09ம் ஆண்டில் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலைமை நீடித்தது. இருந்த போதிலும், இந்தியா 7 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு அறிவித்த சலுகைத் திட்டங்களால் அடுத்த சில வாரங்களில் பலன் கிடைக்கும்.
19. ஆண் - பெண் எண்ணிக் கையில் ஏற்றத்தாழ்வு நிலவுவதைச் சரிக்கட்ட பெண் குழந்தைகளுக்கான சிறப்பு சலுகை திட்டங்கள் அறிவிக்கப் படும். அவர்களுக்குக் கல்வி கிடைப்பதும் உறுதி செய்யப் படும்.
ஆரம்பப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவிகளுக்குப் பண உதவி அளிக்கும் திட்டம் துவக்கப்படும். அவர்களின் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணம் வரவு வைக்கப்படும்.
20. இந்திய தேசிய காங்கிரஸ் நான்கு "இசங்களை' எதிர்க்கிறது. நாட்டை நாசமாக்கும் மொழிவெறி, மாநில வெறி, சாதி வெறி, மதசம்பந்தப்பட்ட எல்லாவித வெறி ஆகியவற்றை எதிர்க்கிறோம்.

தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

No comments: