எண்ணங்களின் பிரதிபலிப்பு

Tuesday, July 22, 2008

நூலிழையில் தப்பியது மத்திய அரசு! ஆதரவு : 275 எதிர்ப்பு: 256

பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு., கூட்டணி அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 275 ஓட்டுகளும், எதிராக 256 ஓட்டுகளும் விழுந்தன. இதன் மூலம், கடைசி நிமிடத்தில் நிகழ்ந்த பரபரப்பான திருப்பங்களுக்கு பின், நூலிழையில் மத்திய அரசு தப்பியது. அரசை கவிழ்த்து, அணுசக்தி ஒப்பந்தத்தை சீர்குலைப்பதோடு, மாயாவதியை பிரதமராக்கலாம் என, இடதுசாரி தலைவர்கள் கண்ட கனவும், மேற்கொண்ட வியூகமும் பெரும் தோல்வியை தழுவியுள்ளது. மீதமுள்ள ஆட்சிக் காலத்தை, இடதுசாரிகளின் நிர்பந்தம் இன்றி, பிரதமர் மன்மோகன் சிங் அரசு முடிக்கும்.


தீவிரமாக செயல்பட்டனர் : கடந்த 2004ம் ஆண்டு முதல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, இடதுசாரிகள் சமீபத்தில் வாபஸ் பெற்றனர். அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதையடுத்து, பார்லிமென்டை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, மன்மோகனை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, "அரசை எப்படியும் காப்பாற்றுவது' என, காங்கிரஸ் தலை மையிலான அணியும், "எப்படியும் வீழ்த்தி விடுவது' என, இடதுசாரி தலைமையிலான அணியினரும் தீவிரமாக செயல்பட்டனர்.


எம்.பி.,க்கள் 25 கோடி மற்றும் 100 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாக புகார்கள் எழுந்தன.இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் லோக்சபா கூடியது. அப்போது, அரசுக்கு நம்பிக்கை கோரும் ஒருவரி தீர்மானத்தை தாக்கல் செய்து பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். "நாட்டின் நலன் கருதியே அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றப்படுகிறது' என்றார். இதைத் தொடர்ந்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உட்பட பல கட்சித் தலைவர்கள் பேசினர்.இரண்டாவது நாளாக நேற்று தலைவர்களின் விவாதம் தொடர்ந்தது. விவாதம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில், பா.ஜ., கட்சியை சேர்ந்த எம்.பி., அசோக் அகர்வால், அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க தனக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் தெரிவித்தார். சபை வரலாற்றில் இல்லாத வகையில், கைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக்களை வெளியே எடுத்து சபையில் காண்பித்தார்.


இப்பிரச்னையால் மதியத்திற்கு மேல் சபையில் அமளி ஏற்பட்டு, பின் ஒரு வழியாக 6.30 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது, விவாதத்தை முடித்து வைக்க பிரதமர் அழைக்கப் பட்டார். அப்போதும் கூச்சல், குழப்பம் இருந்ததால், பிரதமர் தன் உரையை சில நிமிடங்களில் முடித்து விட்டார்.அவர் தாக்கல் செய்த ஆறு பக்க பதிலுரையில், "என்னை தங்களின் அடிமைகளாக நடத்த இடதுசாரி கட்சியினர் திட்டமிட்டனர். ஒவ்வொரு கட்ட சமரச பேச்சுவார்த்தையின் போது, தங்களின் வீட்டோ அதிகாரத்தை பயன் படுத்த விரும்பினர். அது ஏற்றுக் கொள்ள முடியாதது' என்று தெரிவித்திருந்தார்.


பின்னர், பல நாட்களாக நாடே ஆவலுடன் எதிர்பார்த்த நம்பிக்கை ஓட்டெடுப்பு துவங்கியது. எதிர்க்கட்சியினர் டிவிஷன் ஓட்டு நடத்த வேண்டும் என, வலியுறுத் தினாலும், எலக்ட்ரானிக் மிஷின் மூலம் முதலில் ஓட்டெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். ஆனால், எலக்ட்ரானிக் மிஷினில், 50க்கும் மேற்பட்ட ஓட்டுகள் பதிவாகவில்லை. மொத்த ஓட்டுகள் 487 என்றும், அரசுக்கு ஆதரவு 253 என்றும், எதிர்ப்பு 232 என்றும், ஓட்டுப் போடாதவர்கள் இரண்டு பேர் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, எம்.பி.,க்களிடம் சீட்டுக்கள் கொடுக்கப்பட்டு டிவிஷன் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அரசுக்கு ஆதரவாக 275 எம்.பி.,க்களும், எதிராக 256 எம்.பி.,க்களும் ஓட்டளித்தனர்.


10 எம்.பி.,க்கள் ஓட்டுப் போடவில்லை. சபையில் நேற்று 541 எம்.பி.,க்கள் ஆஜராகியிருந்தனர். இவர்களில் 271 பேர் ஆதரவு அரசுக்கு தேவை. இருந்தாலும், அதை விட கூடுதலாக நான்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.மொத்தத்தில் எதிரணியின் ஓட்டுகளை விட கூடுதலாக 19 ஓட்டுகள் பெற்று அரசு வெற்றி பெற்றது. நேற்றைய ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றதன் மூலம், கடந்த 30 ஆண்டுகளில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், வெற்றி பெற்ற ஏழாவது பிரதமர் என்ற பெருமையை மன்மோகன் பெற்றுள்ளார்.ஓட்டெடுப்பின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே, சபையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், உறுப்பினர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.


நேற்று நடந்த இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உட்பட பா.ஜ., எம்.பி.,க்கள் நான்கு பேருக்கு, பார்லிமென்டின் லாபியில் ஓட்டளிக்க அனுமதி வழங்கப்பட்டது.நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு வெற்றி பெற்றது குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாடி தலைவர் அமர்சிங், "என் அரசியல் வாழ்வில் இன்று தான் மகிழ்ச்சியான நாள்' என்றார். மத்திய அரசு பெற்ற வெற்றி, "ஊழல் மூலமாகவும், மோசடி வேலைகள் மூலமாகவும் பெற்ற வெற்றி' என, பா.ஜ., கூறியுள்ளது.அரசு வெற்றி பெற்றதை தொழில்துறையும் வரவேற்றுள்ளது.


கட்சி மாறிய எம்.பி.,க்கள் யார்?: பா.ஜ.,வைச் சேர்ந்த நான்கு பேர், தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், பிஜு ஜனதா தளம் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தலா ஒருவர் கட்சி மாறி ஓட்டு போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.ஐ.மு., கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டு போட்ட பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.பி., ஹரிஹர் ஸ்வெயின் அக்கட்சியிலிரு ந்து நீக்கப்பட்டுள்ளார் என, அக்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.

1 comment:

maatrangal said...

எப்படியோ காங்கிரஸ் அரசு பிழைத்தது.