ஒகேனக்கலை உரிமை கோரும் கன்னட அமைப்பினருக்கு, பிரிட்டிஷ் இந்திய அரசு காலத்தில் தயார் செய்யப்பட்ட வரை படங்களே பதில் அளிக்கின்றன. காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னை தொடர்பாக, தமிழகம் - கர்நாடகா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. அதை வாய்ப்பாக பயன்படுத்தி, தமிழகத்துக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம்.
‘ஒகேனக்கலில் சில பகுதிகள், கர்நாடகாவுக்கு சொந்தமானவை’ என்று, கன்னட அமைப்பினர் கூறி வருகின்றனர். தேசிய கண்ணோட்டம் இல்லாத இந்த கூட்டத்தில் கர்நாடகா பா.ஜ., கட்சியினரும் சேர்ந்துள்ளது தான் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.நேற்று முன்தினம் ஒகேனக்கல் மணல் திட்டு பகுதிக்கு வந்த எடியூரப்பா, ‘காவிரி குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது, யார் அனுமதியை பெற்று தமிழக முதல்வர் கருணாநிதி மிகப்பெரிய குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்? எல்லை பிரச்னை குறித்து இரு மாநில அரசுகளும் சர்வே செய்த பின்னரே திட்டத்தை துவங்க வேண்டும்’ என கூறிச் சென்றுள்ளார்.
தமிழகம், கர்நாடகா இடையே தற்போதுள்ள எல்லையானது, பிரிட்டிஷ் இந்திய அரசு இருந்த காலத்திலேயே தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதற்கான தெளிவான வரைபடங்களும், அரசு வசம் உள்ளன. அதையறிந்தும், கர்நாடகா அரசும், குறிப்பாக அம்மாநில வனத்துறையினரும், தேவையற்ற சர்ச்சையை உண்டாக்கி வருகின்றனர். தமிழகத்தில் காவிரி நுழையும் பிலிகுண்டுலுவில் இருந்து 50 கிலோமீட்டர் துõரத்தில், ஒரு கரைப்பகுதியில் தமிழகத்துக்கு உட்பட்ட ராசிமணல், பிலிகுண்டுலு, ஊட்டமலை, கூத்தப் பாடி, ஒகேனக்கல் பகுதிகள் உள்ளன. மறு கரைப்பகுதியில் கர்நாடகா மாநில கிராமங்களான மாறுகொட்டாய், ஜம்புபட்டி, செங்கம்பாடி ஆகியவை உள்ளன. காவிரியின் ஒரு கரைப்பகுதி தமிழகத்துக்கும், மறு கரைப்பகுதி கர்நாடகா மாநிலத்துக்குமாக பிரித்து, பிரிட்டிஷ் அரசு வன நீர் பரப்பு எல்லையாக வரையறுத்துள்ளது. தற்போதைய கர்நாடகா மாநில பகுதிகள், அப்போதைய மைசூர் மாவட்ட பகுதியிலும், தற்போதைய தமிழக பகுதிகள், அப்போதைய சேலம் மாவட்ட பகுதியாகவும் எல்லை வரையறுக்கப் பட்டுள்ளது.
நீர் பரந்து விரிந்து வரும் கரைக்கு இடைப்பட்ட பரப்பு, இரு மாநிலத் துக்கும் சரி சமமாக பிரிக்கப் பட்டுள்ளது. இரு கரைக்கும் இடைப்பட்ட நீர் பரப்பானது, 50 கிலோ மீட்டர் துõரத்தில் 500 மீட்டர் முதல் இரண்டாயிரம் மீட்டர் இடைவெளியில் உள்ளது. இந்த பரப்பும், சரி சமமாக இரு மாநிலங்களுக்கும் பிரித்து பிரிட்டிஷ் ஆட்சியில் வனத்துறை வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரச்னைக்குரிய சிறுமலை பகுதியானது, ஊட்டமலையில் இருந்து வரும் காவிரி நீர் பெரிய நீர்வீழ்ச்சி அருகே இரு பிரிவாக பிரியும் மையப்பகுதியில் பாறை பரப்பாக உள்ளது. ஊட்டமலையில் இருந்து காவிரி பிரியும் ஒரு பிரிவு, தமிழக கரையோர பகுதி வழியாக சென்று பெரிய அருவி பகுதியிலும், சினிபால்ஸ் பகுதியிலும் அருவியாக கொட்டுகிறது.
கர்நாடகா உரிமை கொண்டாடும் பகுதி அனைத்தும் தமிழக கரைப்பகுதியையொட்டி உள்ள சினி பால்ஸ், தொங்கும் பாலம் உள்ளிட்ட பகுதியாகும். பிரிட்டிஷ் வனத்துறை சர்வே வரைபடங்களின்படி, இந்த பகுதிகள் தமிழக கரைப்பகுதியில் உள்ளன. பிரிட்டிஷ் வரைபட அமைப்புபடியும், உபயோக அடிப்படையிலும் கர்நாடகா மாநில அமைப்புகள் உரிமை கோரும் பகுதி அனைத்தும் தமிழக எல்லையில் உள்ளது. இரு மாநில எல்லைகளுக்கு இடையில் சர்வே செய்வது என்றாலும், மத்திய நீர் நில அளவை நிர்வாகம் பெங்களூருவில் உள்ள ‘சர்வே ஆப் இந்தியா’ அலுவலகத்தில் இருந்து பிரிட்டிஷ் அரசில் வரையறுக்கப்பட்ட வனப்பகுதி நீர் நிலை வரைபடங்களை அடிப்படையாக கொண்டே மீண்டும் சர்வே செய்யும். பிரிட்டிஷ் அரசால் வரையறுக்கப்பட்ட எல்லையை அடிப்படையாக கொண்டு, மீண்டும் மறு சர்வே செய்தாலும் கர்நாடகா மாநிலம் உரிமை கோரும் பகுதிகள் அனைத்தும் தமிழக கரைப்பகுதியில் இருப்பதால், தமிழக பகுதிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
இனியும் கர்நாடக அரசியல்வாதிகள் திருந்துவார்களா என்பது ஒரு கேள்வி(?)க்குறியாக உள்ளது.
கர்நாடக மக்களின் அத்தியாவச தேவைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல் அண்டையமாநிலங்களை வம்புக்கிழுத்து அதில் உள்ளூர் அரசியல் லாபம் தேட நினைகிறார்கள்.
கர்நாடக மக்கள் சும்மா இருந்தாலும் கர்நாடக அரசியல்வாதிகள் மக்களைத் தூண்டிவிட்டு இருமாநிலத்து மக்களிடையேயும் பகைமையுணர்ச்சியை வளர்த்து வருகிறார்கள்.
இது கவலையளிக்ககூடியதாக உள்ளது.
எண்ணங்களின் பிரதிபலிப்பு
Monday, March 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment