கடந்த 2007ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்திய ஆட்சிப் பணிக்கான மெயின் தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. சென்னையில் பயிற்சி பெற்ற பலர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்திய ஆட்சிப் பணியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தி வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு மத்திய அரசில் 734 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மே மாதம் முதல் நிலை(பிரிலிமினரி) தேர்வுகள் நடத்தப் பட்டன. மெயின் தேர்வு எழுத 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வானார்கள். மெயின் தேர்வு கடந்த அக்டோபரில் நடந்தது. இத்தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப் பட்டுள்ளன. அடுத்தக்கட்ட நேர்முகத் தேர்வுக்கு ஆயிரத்து 883 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் சார்பில் சென்னை அண்ணா மேம்பாட்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற 200 பேரில் 54 பேரும், சைதை துரைசாமி நடத்தி வரும் மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தை சேர்ந்த எட்டு பேரும் நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர். இதுகுறித்து, யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. இவர்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் 31ம் தேதி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை நடக்கிறது. நேர்முகத் தேர்வு நடக்கும் இடம், நாள் குறித்த தகவல்கள் தேர்வில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படுகிறது. இதுதவிர, இம்மாதம் 25ம் தேதி முதல் யு.பி.எஸ்.சி., இணைய தளத்திலும் வெளியிடப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ்., மெயின் தேர்வில், சென்னை மாணவர்கள் வெற்றி குறித்து மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய இயக்குனர் வாவூசி கூறியதாவது: கடந்த 2007ம் ஆண்டு அக்டோபரில் நடந்த ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான மெயின் தேர்வில் மனிதநேய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு மே மாதம் மற்றும் அக்டோபரில் நடந்த இத்தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் 17 மாணவ, மாணவியர் இணைந்து பயிற்சி பெற்றனர். இவர்களில் ஒரு மாணவி உட்பட எட்டு பேர் நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருப்ப பாடங்களில் புவியியல், வரலாறு, பொது நிர்வாகம், அரசியல் அறிவியல், சமூகவியல் மற்றும் வணிகவியல் ஆகியவற்றை முதலாவதாக எடுத்தவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இதில், சென்னை, பெரம்பலூர், ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும், தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு மாணவர்களும் அடங்குவர். முதல் ஆண்டிலேயே 47 சதவீதம் அளவிற்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நேர்முகத் தேர்வுக்கு தரமான பயிற்சியும், டில்லி சென்று தேர்வை எதிர்கொள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது பயிற்சி மையத்தில் 2008 ஆண்டிற்கான முதல் நிலை தேர்வுக்காக 100 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து மென்மேலும் தரமான பயிற்சியை தந்து மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கவேண்டும்.
டெல்லி சென்றால் தான் நல்ல பயிற்சியை பெறமுடியும் என்றெண்ணத்தை மாற்றி சென்னையில் அதைவிட தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது என்ற நிலை உருவாகவேண்டும்.
எண்ணங்களின் பிரதிபலிப்பு
Monday, March 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment