எண்ணங்களின் பிரதிபலிப்பு

Tuesday, March 19, 2013

திமுக கூட்டணியில் இருந்து விலகியது :


ஐக்கிய முற்போக்கு கூட்‌டணி அரசில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் முறைப்படி விலகியதற்கான கடிதம் நேற்று இரவு ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பார்லிமென்டில் நிறைவேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா ஏற்றுக் கொண்டால், தன் முடிவை மறுபரிசீலனை செய்யத் தயார் என, கருணாநிதி அறிவித்திருந்த நிலையில் இந்த விலகல் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நேற்று நடந்த காங். எம்.பி.க்கள் கூட்டத்தில், கருணாநிதியின் கோரிக்கை குறித்து சோனியா கருத்து தெரிவிக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசில் இருந்து தி.மு.க., விலகுவதாக கருணாநிதி அறிவித்தார். இதனால் மத்தியில் 9 ஆண்டுகளாக இருந்த காங்.-தி.மு.க.கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவே தி.மு.க.பார்லிமென்ட் கட்சி எம்.பி.க்கள் தலைவர் டி.ஆர்.பாலு, டில்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, முறைப்படி தி.மு.க. விலகியதற்கான கடிதத்தினை கொடுத்தார்.

அமைச்ர்கள் இன்று ராஜினாமா:

இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை, நேரில் சந்தித்து அவரது அமைச்சரவையில் உள்ள 5 தி.மு.க.அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளனர். இதற்கிடையே தி.மு.க., விலகல் கடிதம் கொடுத்ததையடுத்து, காங். ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் பிரதமர் இல்லத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குறித்தும், தி.மு.க.வின் கோரிக்கை குறித்தும் தீவிர ஆ‌லோசனை நடத்தப்பட்டது. இதனால் டில்லி அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது. திருத்தங்களை ஏற்றால் பரிசீலிப்போம் என கருணாநிதி அறிவித்திருப்பதால் இன்றும் திடீர் அரசியல் திருப்பங்கள் நிகழலாம் என கூறப்படுகிறது.இலங்கை தமிழர் விவகாரத்தை முன்னிறுத்தி விலகியுள்ளதால், லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் புது கூட்டணி உருவாக்கும் வாய்ப்புள்ளது என்ற அரசியல் கணக்கும், தி.மு.க., வகுத்துள்ளது.
இலங்கையில், 2009ல், நடந்த இறுதிக்கட்டப் போரின் போது, மனித உரிமை மீறல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிரான, ஒரு தீர்மானத்தை, அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இதன் மீதான ஓட்டெடுப்பு, 21ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில், அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
எச்சரிக்கை:

"அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்களை கொண்டு வரவில்லை என்றால், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவோம்' என, மத்திய அரசுக்கு ஏற்கனவே, தி.மு.க., மிரட்டல் விடுத்தது. மேலும், "இலங்கையில் நடந்த படுகொலையை, இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும். சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் அமைத்து, குறிப்பிட்ட காலவரையற்றுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், ஐ.மு., கூட்டணியிலிருந்து விலகுவோம்' என, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, கருணாநிதி, கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தூதர்கள்:

இதையடுத்து, நேற்று முன்தினம், சோனியாவின் தூதர்களாக, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் ஆகியோர் கருணாநிதியை, அவரது, சி.ஐ.டி., காலனி இல்லத்தில் சந்தித்து பேசினர். அவர்களின் பேச்சுவார்த்தை இரண்டரை மணி நேரம் நீடித்தது. பேச்சுவார்த்தையின் போது, எந்த உத்தரவாதமும் கருணாநிதியிடம், மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கவில்லை. சோனியா மற்றும் ராகுலுடன் மத்திய அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்; ஆனால், எந்த முடிவும் எட்டவில்லை. நேற்று காலை, டில்லியிலிருந்து எந்த தகவலும் கருணாநிதிக்கு வரவில்லை என்பதால், அவர் அதிருப்தி அடைந்தார். இதற்கிடையில், அமெரிக்கா வெளியிட்ட தீர்மானமும், கருணாநிதியை எரிச்சல் அடைய வைத்தது. உடனடியாக அவர் பொதுச்செயலர் அன்பழகனிடம் தொடர்பு கொண்டு பேசினார். பின், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன், அறிவாலயத்தில் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். பின், நிருபர்களின் சந்திப்பில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக, தி.மு.க., வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்யாததால், மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐ.மு., கூட்டணியிலிருந்தும், தி.மு.க., விலகுவதாக கருணாநிதி அறிவித்தார். "வெளியில் இருந்து மத்திய அரசுக்கு ஆதரவு தரப்போவதில்லை' என்றும் தெரிவித்தார்.
தி.மு.க., ஆதரவை விலக்கிக் கொண்டாலும், மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்று, நிதியமைச்சர் சிதம்பரமும், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், கமல்நாத்தும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
6 முறை மிரட்டல்:

இதுவரை மிரட்டிய தி.மு.க.,: தி.மு.க., இதுவரை, ஐந்து முறை மிரட்டல் விடுத்து, ஆறாவது முறையில்தான், கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.
* 2006 அக்., - நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், 10 சதவீத பங்குகளை, தனியாருக்கு விற்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "கூட்டணியை விட்டு விலக நேரிடும்' என, தி.மு.க., எச்சரித்தது. இதனால், மத்திய அரசு, முடிவை மாற்றிக் கொண்டது.
* 2008 அக்., - இலங்கையில் இறுதிக் கட்டப் போர் நடந்த போது, போர் நிறுத்தம் கோரி, கூட்டணியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தது. அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, சென்னையில் கருணாநிதியை சந்தித்த உடன், திடீரென முடிவு மாறி விட்டது.
* 2011 மார்ச் - தமிழக சட்டசபை தேர்தலின் போது, தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் - தி.மு.க., இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணியிலிருந்து விலக தி.மு.க., முடிவு செய்தது. மீண்டும் முடிவு மாறியது.
* 2012 மார்ச் - "இலங்கைக்கு எதிராக, ஐ.நா.,வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததை ஆதரிக்காவிட்டால், கூட்டணியிலிருந்து விலகுவோம்' என, அப்போதும் தி.மு.க., எச்சரித்தது. நீர்த்துப்போன தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததும், முடிவில் மாற்றம் செய்யப்பட்டது.
* 2012 மே - பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. "விலை உயர்வை குறைக்காவிட்டால், கூட்டணியிலிருந்து விலகுவோம்' என, ஆவேசமாக அறிவித்தது. பின் முடிவை மாற்றிக் கொண்டது.
* 2013 மார்ச் - "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் கூட்டணியிலிருந்து விலக நேரிடலாம்' என, எச்சரித்தது. நேற்று கூட்டணியிலிருந்து விலகியது.
இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க., நிலைப்பாடு:

இலங்கை பிரச்னையில், தி.மு.க.,வின் நிலைப்பாடு, அவ்வப்போது பல வடிவங்கள் எடுத்துள்ளது.
1956: சிதம்பரத்தில் நடந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவளித்து தீர்மானம் நிறைவேற்றம்.
1977: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, சென்னையில் பேரணியை தி.மு.க., நடத்தியது.
1981: அப்போதைய பிரதமர் இந்திராவிடம் இலங்கை பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் கருணாநிதி கைது.
1981: வெலிக்கடை சிறையில், முப்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, மறுநாள் சென்னையில் கண்டன பேரணியை தி.மு.க., நடத்தியது.
1983: தமிழக சட்டசபையில், இலங்கை தமிழர் குறித்து நடத்தப்பட்ட விவாதம் பிரச்னையானது. மத்திய, மாநில அரசுகள் இலங்கை பிரச்னையை கண்டு கொள்ள மறுக்கின்றன எனக்கூறி கருணாநிதியும், அன்பழகனும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர்.
1985 மே 13: தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பை (டெசோ) சென்னையில்கருணாநிதி துவங்கினார்.
1986 மே: டெசோ சார்பாக "ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை', மதுரையில் தி.மு.க., நடத்தியது.
1989: ராஜிவ் ஆட்சிக்காலத்தில் அனுப்பப்பட்ட அமைதிப்படை சென்னை திரும்பியது. முதல்வராக இருந்த கருணாநிதி, அமைதிப்படையை வரவேற்க மறுத்துவிட்டார். இதனால், இந்திய இறையாண்மையை அவர் அவமதித்ததாக பிரச்னை கிளம்பியது.
2009 ஏப்.27: இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த போது, போரை நிறுத்தக்கோரி கருணாநிதி திடீர் உண்ணாவிரதத்தை துவக்கினார். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக கூறி அன்று மதியமே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
2012 ஆக.12: டெசோ துவங்கி 27 ஆண்டுகள் கழித்து, "ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு' சென்னையில் நடத்தப்பட்டது.
அக்.21: டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தி.மு.க., எம்.பி.,க்கள் குழு பிரதமரிடம் அளித்தது.
2013 மார்ச் 5: டெசோ சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்ததாக ஸ்டாலின் கைது.
மார்ச் 7: டில்லியில் டெசோ சார்பாக அகில இந்திய மாநாடு, கருத்தரங்கம் நடந்தது. அழைப்பு விடுக்கப்பட்ட பெரும்பாலான முக்கிய வட மாநில தலைவர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை.
மார்ச் 12: இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு, மத்திய அரசு ஆதரவளிக்கக் கோரி, தமிழகத்தில் டெசோ சார்பில் பந்த் நடத்தப்பட்டது.
மார்ச் 19: அமைச்சரவையில் நான்கு ஆண்டுகள் கழித்த பிறகு, இலங்கை தமிழர் விவகாரத்தில், மத்திய அரசின் போக்கு அதிருப்தி அளிப்பதாகக் கூறி, அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கருணாநிதி அறிவித்தார். அதன்படி நள்ளிரவில் ஜனாதிபதியிடம் விலகல் கடிதம் கொடுக்கப்பட்டது.

No comments: