எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, March 21, 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி: இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு


ஜெனிவா: இலங்கைக்கு எதிராக, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஓட்டளித்துள்ளன.
இலங்கையில், 2009ல், ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, இறுதி கட்ட சண்டை நடந்தது. இதில், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். ஏராளமான விடுதலைப் புலிகள், ராணுவத்திடம் சரணடைந்தனர். சரணடைந்த விடுதலை புலிகள், ரகசியமான இடங்களில் வைக்கப்பட்டு, ராணுவத்தினரால், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் விடுதலை புலிகள், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாகவும், மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கான, மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும், நல்லிணக்க ஆணைக்குழு, சில பரிந்துரைகளை செய்திருந்தது. இந்த குழு பரிந்துரைகள் மீது, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக கூறி, கடந்த ஆண்டு, ஜெனிவாவில் உள்ள, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் தொடர்பாக, இலங்கை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால், இந்த ஆண்டும், மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக, அமெரிக்காவால்,தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சுவிட்சர்லாந்தின், ஜெனிவாவில், மனித உரிமை ஆணையத்தின், 22வது ஆண்டு கூட்டம் தற்போது நடக்கிறது. "இலங்கையில், நடந்த சண்டையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இது குறித்து சுதந்திரமான, நம்பத் தகுந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என கூறி, மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா, கடந்த வாரம் தீர்மானம் தாக்கல் செய்தது.


இந்த தீர்மானத்தில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. நல்லிணக்க குழுவின் பல பரிந்துரைகளை இலங்கை அரசு ஏற்க மறுத்துள்ளது கவலையளிக்கிறது. இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை அமைப்பினர் உள்ளிட்டோர் காணாமல் போவது குறித்தும், சுதந்திரமான விசாரணை நடத்தப்படவில்லை. அதிகார பரவலாக்கத்துக்கு ஒப்புதல் அளித்த இலங்கை அரசு, தற்போது அதை செயல்படுத்த முடியாது என, மறுத்துள்ளது. இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாக, விசாரிக்க, ஐ.நா., பிரதிநிதிகளுக்கும், மனித உரிமை அமைப்பினருக்கும், இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும் என, இத்தீர்மானம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், மொத்தம், 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நேற்று நடந்த ஓட்டெடுப்பில், இந்தியா, ஆஸ்திரியா, கனடா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நார்வே, பிரிட்டன் உள்ளிட்ட, 25 நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவித்தன. தீர்மானத்தை எதிர்த்து, பாகிஸ்தான், கியூபா, வெனிசுலா, பிலிப்பைன்ஸ், மாலத்தீவு,இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட், காங்கோ, குவைத், ஈக்வடார் உள்ளிட்ட 13 நாடுகள் ஓட்டுப்போட்டன. நடுநிலை வகிக்கும் நோக்கில், எட்டு நாடுகள் இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. முன்னதாக இந்த தீர்மானம் தொடர்பாக பல்வேறு நாடுகள் விவாதித்தன.

இந்த தீர்மானத்தை, வன்மையாக கண்டித்த, இலங்கை பிரதிநிதி, மகிந்தா சமரசிங்கா குறிப்பிடுகையில், ""இந்த தீர்மானம் உள்நோக்கம் கொண்டது. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள புகார்கள் தவறானவை. இலங்கை மேற்கொண்ட மறுவாழ்வு பணிகள் கவனத்தில் எடுத்து கொள்ளப்படவில்லை. இலங்கையை தனித்து விடுவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது,'' என்றார்.


இந்த தீர்மானத்தை ஆதரித்து இந்திய உறுப்பினர் திலீப் சின்கா பேசியதாவது: இலங்கை, 13வது அரசியல் சட்டதிருத்தத்தை அமல்படுத்த வேண்டும். மனித உரிமை ஆணைய பிரதிநிதிகள் இலங்கையை பார்வையிட அனுமதிக்க வேண்டும். வடக்கு மாகாண மக்கள் தேர்தலை சந்திப்பதற்குரிய சூழலை உருவாக்க வேண்டும். மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் ஏற்கும் வகையிலான, நம்பிக்கைக்குரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இலங்கை எடுத்துவரும் நல்லிணக்க நடவடிக்கைகள், விரிவு மற்றும் விரைவு படுத்தவும் வேண்டும். எனினும், இலங்கை உடனான உறவை துண்டிக்க விரும்பவில்லை. இவ்வாறு திலீப் சின்கா கூறினார்.

பாக்.,எதிர்ப்பு: இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது. அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தில், திருத்தங்கள் பல செய்யப்பட வேண்டும், என கூறிய பாகிஸ்தான் பிரதிநிதி, எதிர்த்து ஓட்டளித்தார்.

எழுத்து பூர்வமாக தாக்கல்: தீர்மானம் குறித்து கடைசி நேரம் வரை இந்தியாவின் முடிவு சஸ்பென்சாக இருந்ததால், "எழுத்து பூர்வமான கருத்தை இந்தியா பதிவு செய்ய முடியாது' என, கூறப்பட்டது. ஆனால், தீர்மானம் தொடர்பான கருத்து வலுவுள்ளதாக இருக்க வேண்டும், என்பதால்,இந்தியா, எழுத்து பூர்வமான கருத்தை, இந்த சபையில் பதிவு செய்துள்ளது.

திருத்தம் இல்லை: இலங்கையில் "இனப் படுகொலை' நடந்ததாக கூறி, இந்தியா தனது கருத்தை பதிவு செய்யும் படி, தமிழக கட்சிகள் வற்புறுத்தின. ஆனால், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில், இந்தியாவின் தரப்பில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை.

No comments: