எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, March 21, 2013

தமிழக அரசின் 2013-2014 நிதிநிலை ஆண்டுக்கா பட்ஜெட்

தமிழகத்தின் 2013 - 14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பில்லை; இருக்கும் வரியை உயர்த்தவும் இல்லை. அதே நேரத்தில், அரசு வழங்கும் அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட விலையில்லா திட்டங்களுக்கு, பட்ஜெட் மதிப்பில், 31 சதவீதத் தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால், நிதிப் பற்றாக்குறை, 23 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

"புதிய வரி விதிக்கப்படவில்லை, இருக்கும் வரியை உயர்த்தவுமில்லை' என்ற கோஷத் துடன், 2013 - 14ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். காவிரி டெல்டா மாவட்டங்களைப் போல, வறட்சி பாதிப்புக்கு உள்ளான பிற மாவட்டங்களுக்கு, நிவாரணம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடரும் என்ற அறிவிப்பும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளையுமே, பட்ஜெட்டில், நிதி அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.வேளாண்மை: இதுவரை இல்லாத அளவாக, வேளாண்மை துறைக்கு, 5,189 கோடி ரூபாய் ஒதுக்கீடும், அரசு அலுவலகங்களுக்கு, சூரிய மின் சக்தி அமைக்க, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடும், 17 ஆயிரம் காவலர்கள், 1,091 துணை ஆய்வாளர்கள், 1,005 தீயணைப்பு பணியாளர்கள் தேர்வு, பொது வினியோகத் திட்டத்துக்கு, 4,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு போன்றவை, பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

ரூ.20க்கு அரிசி: அரிசி விலையை கட்டுப்படுத்த, கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலம், ஒரு லட்சம் டன் அரிசி, கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்படும். இதேபோல், காய்கறி விலையைக் கட்டுப்படுத்த, கூட்டுறவு மற்றும் தோட்டக்கலை துறைகள் மூலம், "பண்ணை பசுமை நுகர்வோர்' கடைகள் திறக்கப்படும்.

நில வங்கி: தொழில் உற்பத்தியைப் பெருக்க, புதிய தொழில்களை ஊக்குவிப்பதற்காக, சிப்காட் நிறுவனம் மூலம், 25 ஆயிரம் ஏக்கர் கொண்ட நில வங்கி ஏற்படுத்தப்படும். தென் மாவட்டங்களில் தொழில்களை ஊக்குவிக்க, புதிய சலுகை தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும். சிறிய மற்றும் நடுத்தர கட்டமைப்பு திட்டங்களுக்கு, 770 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கவும், சிறப்பு சலுகை தொகுப்பு அறிவிக்கப்படும்.

சாலை மேம்பாடு: நெடுஞ்சாலைத் துறையின் ஒதுக்கீடு, 6,452 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்புக்கு, 2,032 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் போல, தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை
ஆணையம் உருவாக்கப்படும். சென்னையில், பல்வேறு போக்குவரத்துகளை இணைக்க, ஆய்வுப் பணிகள் துவங்கப்படும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துக்கு, 6,511 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. முகாம்களுக்கு வெளியில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும், முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.

கல்வி: அனைத்துப் பள்ளிகளிலும் 2013 - 14ம் ஆண்டுக்குள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்படும். பள்ளிக் கல்விக்காக, 1,299 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். நான்காவது மாநில நிதி ஆணைய அறிக்கை, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, பசுமை வீடுகள், முதல்வரின் காப்பீட்டுத் திட்டம், மாணவர்களுக்கு மடி கணினி உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், வரும் நிதியாண்டிலும் தொடர்கின்றன. இத்திட்டங்களுக்காக, 43 ஆயிரத்து 449 கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது.

நிதி நெருக்கடி: பட்ஜெட்டின் முடிவுரையில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், ""கடும் நிதி நெருக்கடி நிலவும் சூழலில், புதிய முயற்சிகளுக்கும், நடப்புத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொது விவாதத்தின் போதும், மானிய கோரிக்கை விவாதங்களின் போதும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பல அறிவிப்புகளையும், திட்டங்களையும் வெளிப்படுத்துவர்,'' என்றார். நிதி அமைச்சரின் அறிவிப்பை அடுத்து, பட்ஜெட் அறிவிப்புகளை, முதல்வர் வெளியிடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்புகளுக்காக, பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தமிழக பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்

*தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம், 17,138 காவலர்கள், 1,091 எஸ்.ஐ.,க்கள், 1,005 தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் 292 சிறை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
* 2013- 14ம் நிதியாண்டில், 2 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
* காய்கறி சாகுபடி பரப்பளவை, 7.25 லட்சம் ஏக்கரில் இருந்து, 8.2 லட்சம் ஏக்கராக உயர்த்த, சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
* மேலும், 5 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி பரப்பு, திருந்திய நெல் சாகுபடி முறையின் கீழ் கொண்டு வரப்படும்.
* சிறு, குறு விவசாயிகள், நுண்ணீர் பாசன திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கான ஒரு ஏக்கர் உச்சவரம்பு நீக்கப்படும். மேலும், 530 கோடி ரூபாய் செலவில், 1.30 லட்சம் ஏக்கர் பாசன பரப்பு, இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
* இந்த நிதி ஆண்டு ஆறு லட்சம் ஆடுகள் மற்றும் 12
ஆயிரம் கறவை பசுக்கள் இலவசமாக வழங்கப்படும்.
*பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கும் திட்டம், 2014, மார்ச் வரை நீடிக்கப்படுகிறது.
* தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சிப்காட் நிறுவனம் மூலம், 25 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பு கொண்ட, நில வங்கி ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் மூலம், தூத்துக்குடியில், புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்.
*168 கி.மீ., நீள, இடைவழித்தட மாநில நெடுஞ்சாலைகள், இருவழித்தடங்களாகவும்; 1,000 கி.மீ., நீள, ஒருவழித்தட முக்கிய மாவட்ட சாலைகள், இடைவழித் தடங்களாகவும், தரம் உயர்த்தப்படும். ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு, 2,032 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது.
*சென்னையில், 271.68 கோடி ரூபாய் செலவில், நான்கு மேம்பாலங்களும், மதுரை, காளவாசல், கோரிபாளையம் ஆகிய இடங்களில், 130 கோடி ரூபாய் செலவில், இரண்டு மேம்பாலங்களும் அமைக்கப்படும்.
*தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணியின்கீழ், அதிக போக்குவரத்து உள்ள, 1,678 கி.மீ., சாலைகள், 8,580 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.
* தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை போல, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
*தஞ்சை மற்றும் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், 30 கோடி ரூபாயில், இரண்டு மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
*பசுமை வீடுகள் திட்டத்தில், 60 ஆயிரம் வீடுகளும், இந்திரா வீட்டு வசதி திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகளும் கட்டப்படும்.
*தமிழ்நாடு கிராம குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில், 750 கோடி ரூபாயில், 15 ஆயிரத்து 115 குடியிருப்புகள் கட்டப்படும்.
*மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகை, வேலூர், சேலம், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களின், முக்கிய கூட்டுகுடிநீர் திட்டங்களுக்கு, 212.54 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது.

No comments: