எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, June 25, 2010

" தமிழுக்கு அரசு என்ன செய்ய வேண்டும் : முதல்வர் வேண்டுகோள்

""தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள்,'' என்று செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்றுள்ள தமிழறிஞர்களிடம் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கங்களின் துவக்க விழா, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள "டி' ஹாலில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நேற்று காலை நடந்தது.

ஆய்வரங்கத்தை துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது:தமிழ் மொழியை மேலும் செழுமைப்படுத்திடவும், அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்திடும் வகையில், அதை வளர்த்து 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துகளையும் இந்த ஆய்வரங்கத்தின் மூலமாகப் பெற இருக்கிறோம்.தமிழ் மொழி - தமிழர் பண்பாடு - நாகரிகத்தைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது எல்லா முனைகளிலும் புதிய எழுச்சியைக் காண முடிகிறது. ஏறத்தாழ 50க்கும் மேலான நாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது, புதிய தெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.ஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களை புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும். அந்த அளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாக கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டும்.

கோல்கட்டாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786ல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கம், சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது. திராவிட மொழிக் குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816ல் எல்லிசு, 1856ல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர்.இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட மொழிக் குடும்பம். அக்குடும்பத்தின் முதன்மை மொழி, தமிழ் என்னும் உண்மையை உலகிற்கு அவர்கள் உணர்த்தினர். 1927ல் ஜான் மார்ஷலின் சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்னும் கண்டுபிடிப்பு, உலகின் கருத்தைத் தமிழின் பால் ஈர்த்தது.அதன் பின், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் குறித்து அறிந்து கொள்வதில், உலக நாடுகளின் அறிஞர்கள் ஆர்வம் காட்டினர்.

அவர்கள் ஆராய்ந்து, தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை, தமிழர் தம் இலக்கிய விழுமியம், கலைநயம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.திராவிட இனத்தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர். திராவிடம் தந்த செழிப்பும், வலிவும் தான், ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.வட மாநில திராவிட மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டு, தமிழர்கள், தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என வாதிட்டு நிலைநாட்டுகிறார் சோவியத் மொழி அறிஞர் சாகிரப்.காஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள், திராவிட மொழிப் பிரிவின் கிளை மொழிகளைப் பேசுகின்றனர்.

பீகாரின் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் "குருக்கர்' என்போர் திராவிட மக்களே என்பது, அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது.இந்திய நாகரிக அடையாளமான சேலையும், வேட்டியும் திராவிட நாட்டின் கொடையாகுமென்று பேராசிரியர் சட்டர்ஜி, "இந்தோ - ஆரியன் - இந்து' என்ற நூலில் எழுதியுள்ளார். ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ வழிபாடு, திராவிட வழிபாடே.அமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன் கோவில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது. ஆதிச்சநல்லூரின் மண்டை ஓடுகள், சிந்துவெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன.சங்க காலம், கி.மு., நான்காவது நூற்றாண்டின் துவக்க காலம் எனக் கொண்டால், சங்க இலக்கியங்களிலிருந்து திராவிட நாகரிகத்தை அறிய முடிகிறது.

ராமச்சந்திர தீட்சிதர் எழுதிய, "தமிழர் தோற்றமும், பரவியதும்' என்ற நூலில், "மத்திய தரைக்கடல், குமரிக் கண்டம், சிந்துவெளி, எகிப்து, சுமேரியா எங்கும் பரவியது தமிழர் நாகரிகமே' என்று கூறியுள்ளார்.தமிழ் மொழியின் தொன்மையைப் பொறுத்தவரை, தொல்காப்பியம் போன்றதோர் பழமை இலக்கணம், எந்த மொழியிலும் இல்லை. திருக்குறள் போல அற இலக்கியம், எந்த மொழியிலும் இல்லை. சிலப்பதிகாரம் போல ஒரு தொன்மையான காப்பியம், எந்த மொழியிலும் இல்லை. ஆசியா முழுவதும் கோலோச்சிய பவுத்த சமயத்துக்கு மணிமேகலை போல ஒரு காப்பியம், பாலி மொழியிலும் இல்லை.எல்லா சமயங்களையும், சைவ, வைணவ சமயங்களையும், சமண, பவுத்த சமயங்களையும், கிறித்துவ, இசுலாமிய சமயங்களையும், இதயத்திலே ஏந்திக்கொண்ட மொழி தமிழ். சமயந்தோறும் நின்ற தையல் எனப் போற்றப் பெறும் தமிழ், சமயங்களையும் வளர்த்து தன்னையும் வளர்த்துக் கொண்ட மொழி.

திக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம் தமிழினம். மயிலாடுதுறைக்கு அருகில் கழுக்காணி முட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறையினரால், முதலாம் ராசாதிராசன் காலத்தைச் சேர்ந்த கி.பி., 1053வது ஆண்டைச் சேர்ந்த 85 செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.வில், புலி, கயல் ஆகிய சேர, சோழ, பாண்டியர்களின் முத்திரைகளோடு கிடைத்துள்ள அந்தச் செப்பேடுகள், வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரும் கருவூலம். தஞ்சை விசயாலயச் சோழன், பல்லவர்களிடமிருந்து கைப்பற்றியதற்கான புதிய வரலாற்றுக் குறிப்பு, இச்செப்பேட்டில் கிடைத்துள்ளது.இந்த செப்பேடு, மாநாட்டு கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி முறையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது உத்திரமேரூர் கல்வெட்டு. இவையெல்லாம் தமிழர்களின் தொடர்ச்சியான வரலாற்றுப் பதிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

இந்த பெருமையையெல்லாம் தமிழர்கள் தான், வெளிநாட்டவர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர், அவற்றை தமிழர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிலை தான் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.தமிழுக்கும், தமிழினத்துக்கும் ஆற்ற வேண்டியவை, இன்னும் ஏராளமாக உள்ளன. இந்திய மொழிகள், உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும். கிரேக்கம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் தமிழியல், தமிழினம் குறித்தும் எழுதப்பட்ட நூல்கள், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

உலகெங்கும் உள்ள தமிழியல் நூல்கள், ஆவணங்கள் மின்மயமாக்கப் பெற்று, உலகில் உள்ள ஒரு பகுதியில் உள்ளவர்களும் அவற்றைப் பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும். துறைதோறும் தமிழ் பயன்பட வேண்டும். வகை வகையாய் அகராதிகளும், தொகை தொகையாய் கலைக் களஞ்சியங்களும் வர வேண்டும்.இன்னும் என்னென்ன தமிழுக்கு வேண்டும் என ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கிற அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்லி, இந்த அரசுக்கு ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

1 comment:

Anonymous said...

subject: create an archive page in your blog as like writer marudhan. see his archive page here


http://marudhang.blogspot.com/p/archives.html

To create an archive page as like writer marudhan follow steps mentioned here


http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html


(NOTE: if you create an archive page by following the instructions in the above site the archive page will not show all post titles immediately. you should wait upto 1 week...)