எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, June 16, 2010

D.D, தூர்தர்ஷன் நினைவுகள்

" பழைய நினைவுகள் என்றுமே சுகமானதாக இருக்கும் எல்லாருக்கும், எனக்கும் அப்படித்தான் "

ஒரு நல்ல பாட்டு கமலஹாசன் நடிச்ச பாட்டு, அந்தப் பாட்டுக்கூட ‘அவள் ஒரு தொடர்கதை’ன்னு நினைக்கிறேன். அது வந்து ஒரு ‘விகடகவி’ என்று ஆரம்பிக்கும், சரியாக தெரியவில்லை. அதுல சின்னப்பசங்கல கவர்பன்ற மாதிரி சூப்பராக இருக்கும். நான் அப்படியே ஆழ்ந்து பாடல பார்த்து பாட்ல-சிரிக்கிறப் பசங்கக்கூட சேர்ந்து நானும் சிரிச்சிட்டு இருந்தப்ப ‘டப்பு டிப்பு’ன்னு ஒரு சாத்து விழுந்தது. என்னடான்னு பார்த்தா,

"என்னை அம்மா அடிச்சிருக்காங்க".

என்னடா இன்னும் தூக்கம் சாயங்கால நேரத்துல, போயி மூஞ்சிக் கழுவிட்டு வந்து படின்னு ஒரு சத்தம் போட்டாங்க. அப்பதான் தெரிந்தது, அந்தப் பாட்டு கனவுல வந்தது. போனவாரம் சென்னைத் தொலைக்காட்சியில போட்ட ‘ஒலியும் ஒளியும்’ நினைவுக்கு வந்தது.

நான் சாயங்காலாமா ஸ்கூல்ல இருந்து வந்து தூங்கிட்டேன். வெள்ளிக்கிழமை (அன்று மதியம் தான் எனக்கு விளையாட்டு பிரியடு(Period)) முடிந்துவிட்டு வந்து அப்படியே புத்தகப் பையைபோட்டுட்டு களைப்பாக படுத்துட்டேன். எப்பமே வெள்ளிக் கிழமைன்னால ஒரு சந்தோஷம் வந்துவிடும். அடுத்த இரண்டுநாளுமே பள்ளிவிடுமுறை நாட்கள் சனி, ஞாயிறு.

ஒரே ஜாலியாக விளையாடலாம் என்பதைவிட நிறைய நிகழ்ச்சிகள் சென்னைத் தொலைக்காட்சியில் (D.D) ல வரும்.

என்னை ‘ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்னு’ வடிவேல் சொல்ற மாதிரி ‘நல்ல நிகழ்ச்சி’ வயலும் வாழ்வும். இந்த நிகழ்ச்சியைத் தவிர எல்லா நிகழ்ச்சியும் நான் பார்ப்பேன்.

முக்கியமாக வெள்ளிக் கிழமைன்னு சொன்னாலே ‘ஒளியும் ஒலியும்’ தான் 7:30லிருந்து 8:30 வரைக்கும் தவறாமல் ஏழு எட்டு பாட்டு வருதோ இல்லையோ, கண்டிப்பாக ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ வரும். அதலவேற விளம்பரங்கள், என்னப் பண்றது எல்லைவற்றையும் சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும். இப்ப மாதிரியா? நிறைய சேனல்கள், அப்ப சென்னைத் தொலைக்காட்சி மட்டும்தானே!

எனக்கு அரையாண்டு பரீட்சைத் திங்கக்கிழமை ஆரம்பிக்குது. (நான் ஏழாவது படிச்சிட்டு இருக்கிறேன், சரியாக தெரியவில்லை) அப்பதான் என்னை எழுப்பி (அடிச்சி) படிக்கச் சொன்னாங்க எங்க அம்மா! சரி என்ன பண்றது புரியலை, எழுந்து உட்கார்ந்து கடிகாரத்தை பார்த்தா, ”மணி 7:20” ஆயிடுச்சு.

மூஞ்சி கழுவி விட்டு வந்து படிடான்னு அம்மா சொன்னாங்க.

சரின்னு போயி முகம் கழுவிட்டு, அம்மா பசிக்குதுன்னு சொன்னேன். எங்க அம்மா லேட்டாகும், இப்பதான் சப்பாத்தி மாவு பெசைஞ்சு கிட்டு இருக்கேன் ‘எட்டரை மணி’ ஆகும் அப்படின்னாங்க (ஆனால் எனக்கு பசிச்ச மாதிரி ஞாபகம் இல்லை.) அப்படிச் சொன்னாதானே பசியில படிப்பு மண்டையில ஏறாது, போய் டி.வி. பார்த்துவிட்டு வந்து, சாப்பிட்டு அப்புறம் படிப்பியான்னு சொல்லுவாங்க.

நான் நினைச்ச மாதிரியே நடந்தது.

எனக்கு பயங்கர சந்தோஷம். பக்கத்துவீட்டில போய், அது எதிர் வீடுதான் ‘ஒளியும் ஒலியும்’ பார்த்தேன். (ஆனா... ஒளியும் ஒலியும் பார்த்துட்டு படிக்கல அதுவேற விஷயம்). அடுத்த நாள் சனிக்கிழமை...

எப்பவுமே, சனிக்கிழமை மதியம் ஒவ்வொரு வாரமும் மாநில மொழித் திரைப்படம் போடுவாங்க, அன்னிக்குன்னு பார்த்து, தமிழ் படம் போட்டாங்க. அந்தப் படம் பேரு, ‘பேசும் படம்’, அது கமல் நடிச்ச படம். அந்தப் படத்தைப் பார்த்ததே ஒரு பெரிய கதை...

என்னுடைய பக்கத்து வீட்டுக்காரங்க மதியத்துல சாப்பிட்டு தூங்கறப் பழக்கம் உண்டு. அன்றைக்கும் அப்படித்தான் ஆச்சு. சாப்பிட்டுத் தூங்கிட்டாங்க. படம் பார்த்தே ஆகவேண்டுமே என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல. என்னுடைய அண்ணன் சொன்னான், இன்னிக்கு உங்க ஆள் ‘படம் டா.’ அதுதான் நான் கமலுடைய ரசிகன் ஆச்சே... இப்படிச் சொல்லி என்னுடைய ஆர்வத்தைத் தூண்டிடுச்சு...

அண்ணனுடைய உள்நோக்கம் புரியாமா இருந்த நான் ஒரு அப்பாவி!

வீட்ல நாங்க எல்லாரும் மதியம் சாப்பிட்டு முடிச்சுட்டோம், எங்க அம்மா சொன்னாங்க ஒழுங்கா எல்லாம் எடுத்து வைச்சு படிங்கன்னு. அப்படி சொல்லிட்டு போய் அவங்க படுத்துட்டாங்க.

நானும் எங்க அக்காவும், எலியும் பூனை மாதிரி. எப்பவும் சண்டைப் போட்டுக் கொண்டே இருப்போம்.

என்னுடைய அண்ணன் ஒரு கூத்தாடி மாதிரிதான். எப்படின்னு கேட்கிறீங்களா, ‘ஊரு ரெண்டுப்பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு’ சொல்லுவாங்கயில்ல, அதுமாதிரி நானும் என்னுடைய அக்காவும் சண்டைப்போட்டால், எங்க அண்ணனுக்கு சந்தோஷம். இரண்டுபேரையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பான். கடைசில அடிவாங்கறது என்னமோ நான் தான்...

அன்றைக்கு சனிக் கிழமையாச்சே...

கமல் படம் வேற...

என்னடா படம் பார்க்கப்போகலையான்னு என்னுடைய அண்ணன் கேட்டுச்சு. (அதான் சாப்பிட்டு மூணு பேரும் ரூம்ல உட்கார்ந்து படிச்சிக்கிட்டு இருந்தோம் (உண்மையிலே அரட்டை அடிச்சிட்டு தான் இருந்தோம்)). அப்பதான் இந்த டிஸ்கஸ்ஷன்!

இல்லண்ணா,

பக்கத்து வீட்டு சுபேஷ் வீட்லதான் எல்லாம் கதவை மூடித் தூங்கிட்டாங்கல எப்படி டி.வி. பார்க்கறதுன்னு சொன்னேன்.

எங்க அண்ணன் சொன்னாங்க பக்கத்துல ரெண்டு தெரு தள்ளி என்னுடைய ப்ரண்ட் வீட்ல டி.வி இருக்கு அங்கப்போய் பாரு, அப்படின்னு சொல்லிச்சு. நானும் ஒரு அப்பாவியாச்சே ‘கருத்ததெல்லாம் தண்ணி, வெளுத்ததெல்லாம் பாலு’ன்னு நினைக்கிற ஆளு.

அப்பக்கூட நீ அவ(அக்கா)கிட்ட, சொல்லிடாத அம்மாகிட்ட சொல்லிடுவாள், அப்படிச் சொல்லிட்டு நான் டி.வி பார்க்க போயிட்டேன். படம் சூப்பரா இருந்தது. அதுல ‘ஐஸ் க்யூப் கத்தி, கமலோட ஆக்டிங்’ என்னுடைய ஆள் படம் வேற கசக்கவா செய்யும் பயங்கர சூப்பர்.

படம் முடிஞ்சி வீட்டுக்கு வந்தா, எங்க அண்ணன் அக்காகிட்டச் சொல்லிடுச்சு, எங்க அக்கா போனவாரம் சண்(டே)டையில என்னை இந்த வாரம் பழித்தீர்த்துட்டா எங்க அம்மாகிட்ட சொல்லி. படிக்கச் சொன்னா படம் பார்க்கப் போயிட்டியான்னு அடி... செம அடி... உங்கவீட்டு அடி, எங்க வீட்டு அடியில்ல! அப்படி அடி...

அப்பப்போ இரண்டுமுறை ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்’ என்று வந்தப்பக்கூட வீட்டுக்கு வந்து அம்மா முழிச்சிட்டாங்காளான்னுப் பார்த்துட்டுப் போனேன். என்னப் பண்றது. அடிவாங்கணும்னு இருந்துருக்குப் போல...

எல்லாம் அந்த ஒரே ஒரு சேனல்தான் அப்ப... இப்பமாதிரியா? என்ன.

அன்னிக்கு சாயங்காலம் இந்திப்படம், அப்ப எதிர்வீடுதான்(சுபேஷ் வீடு), பிரச்னை ஒன்னும் இல்ல, ஏன்னா அம்மாவும் டி.வி. பார்த்தாங்க. (அன்று இரவு எனக்கும் அக்காவுக்கும் சண்டை, நான் பழி தீர்த்துட்டேன் அதுவேற கதை).

அடுத்தநாள், காலையில நீலா - மாலா
தொடர்கதை, அது ரொம்ப நல்லா இருக்கும். தவறாம பார்ப்பேன்.10 மணிக்கு இராமாயணம், எங்க ஏரியாவுல பக்கம் பக்கமா ஒரு 4 டி.விதான் இருக்கும். எல்லாம் 100 மீட்டர் 200 மீட்டர் தூரத்தில்தான் டி.வி இருக்கும். அன்றைக்கு சாயங்காலம் தமிழ்ப்படம் இடையிடையே ‘தடங்கலுக்கு வருந்துகிறோம்.’

மற்ற நாட்களில் எனக்கு தெரிஞ்சு புதன் கிழமை, இரவு ‘அப்புச்சாமி படம் எடுக்கிறார்’ மெகாத் தொடர் வரும். அது ரொம்ப காமெடியா, நல்லா இருக்கும். அதுக்கப்புறம் ‘சித்தாரா’ போடுவாங்க. அது ஒளியும் ஒலியும் மாதிரிதான் தெரியும்லா...

“சங்கர்லால் துப்பறிகிறார்” நல்லா இருக்கும்.

திங்கள் கிழமை தமிழ் பரீட்சைத்தான் ஓரளவு நல்லாத் தெரியும், பிரச்னையில்லை. நல்லா எழுதிட்டேன்.

இப்படியெல்லாம், நான் பள்ளியில் படிக்கும்போது சென்னைத் தொலைக்காட்சியில் பார்த்த நினைவுகள் இன்றும் பசுமையாக இருக்கிறது.

மீண்டும் அப்படி ஒரு ‘வயலும் வாழ்வும்’ பார்க்க முடியுமா?

…………….

No comments: