எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, May 21, 2008

முகேஷ் அம்பானியின் சம்பளம் இப்போ ரூ.45 கோடி

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும், அதிக சம்பளம் வாங்குபவராகவும், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி இடம் பிடித்துள்ளார். அவரது ஆண்டு சம்பளம் 41 சதவீதம் அதிகரித்து, ஆண்டுக்கு 45 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவி வகிக்கும் முகேஷ் அம்பானி, சர்வதேச அளவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ. 1.8 லட்சம் கோடி. முகேஷ் அம்பானியின் சம்பளம் மற்றும் இதரபடிகள், 2007-08ம் நிதியாண்டில் 30 கோடி ரூபாயில் இருந்து, 44 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில், இவரது சம்பளம் 25 கோடி ரூபாயில் இருந்து, 30 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதில் பெருமளவு தொகை, லாபத்தின் அடிப்படையில் வழங்கப்படும் கமிஷன் தொகையாக கிடைக்கிறது.


இதன் மூலம், இந்தியாவில் அதிக சம்பளம் பெறுவோர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். 25 கோடி ரூபாய் ஆண்டு சம்பளம் பெறும், மெட்ராஸ் சிமென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி.ஆர்.ஆர்.ராஜா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இருப்பினும், சர்வதேச அளவில் அதிக சம்பளம் பெறும் முதல் 20 பேர் பட்டியலில், முகேஷ் அம்பானியால் இடம் பிடிக்க முடியவில்லை. போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள, அதிக சம்பளம் பெறுவோரின் முதல் 500 பேர் பட்டியலில், முதலிடத்தை பிடித்திருப்பவர், அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி லர்ரி எல்லிசியன். இவர் வாங்கும் ஆண்டு சம்பளம் 790 கோடி ரூபாய். இந்த பட்டியலில், 45 கோடி ரூபாய் ஆண்டு சம்பளம் பெறுவோர் 177 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி.

No comments: