எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, November 20, 2013

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மோடியின் செல்வாக்கை நிர்ணயிக்காது : ராஜ்நாத் சிங் பேட்டி

 5 மாநில சட்டமன்ற தேர்தல், லோக்சபா தேர்தல் குறித்து பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல் முடிவுகளைக் கொண்டு மோடியின் செல்வாக்கை நிர்ணயிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

பா.ஜ., காங்கிரசிற்கு சமமான அல்லது அதை விட பெரிய கட்சி என்றே சொல்லலாம்; காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பழமையானதாக இருந்தாலும் அவற்றை விட பா.ஜ., ஒழுக்கம் நிறைந்த கட்சி; 1951 முதல் துவங்கிய பா.ஜ.,வின் பயணத்தில், சிலர் வந்து போயிருக்கலாம்; ஆனால் அதன் அடிப்படை கொள்கை என்றும் மாறியதில்லை; 1990ம் ஆண்டை விட 2013ல் பா.ஜ., வெகுவாக வளர்ச்சி அடைந்துள்ளது; அயோத்தி விவகாரத்தை தேர்தலின் போது கையில் எடுக்க நாங்கள் விரும்பவில்லை; அயோத்தி விவகாரம் என்பது தேசிய மற்றும் கலாச்சார பிரச்னை என்பது எங்களுக்கு தெரியும்; அயோத்தியில் ராமர் சிலை இருந்த இடத்தில் கோயில் அமைக்க அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது; ஆனால் அதனை எதிர்த்து சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்; அதனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்காக நாங்கள் காத்திருக்கிறோம்; உ.பி.,யில் அமித்ஷா கட்சியில் இருந்து விலக்கப்பட்டது எனது முடிவு; இதற்கு மோடி காரணம் எனவும்; கட்சியில் அவரது ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதாகவும் சிலர் தவறான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்; அவர் அமைதியாகவும், நாகரிகமாகவும் நடந்து கொள்பவர்; குஜராத்தில் அவர் ஏற்படுத்தி இருக்கும் வளர்ச்சி மற்றும் அவரின் திறமையான செயல்பாடு காரணமாக அவரை பிரதமர் வேட்பாளராக நான் தான் தேர்வு செய்தேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய மோடி மீதான குற்றச்சாட்டுக்களுக்கு காங்கிரசின் காழ்புணர்ச்சியே காரணம் என மக்கள் நன்றாக அறிந்துள்ளனர்; அவர்கள் ஆட்சியை பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள்; அதன் வெளிப்பாடு தான் மோடி மீதான குற்றச்சாட்டுக்கள்; நடைபெற்று வரும் 5 மாநில சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலின் முன்னோட்டம் என கூறுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்; இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது; சட்டசபை தேர்தலில் நிச்சயமாக 4 மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெறும்; சிலர் மோடியை பிரிவினைவாதி என கூறுகின்றனர்; ஆனால் அவரை நெருங்கி, அவரது நடவடிக்கைகளை கவனித்து பார்த்தால் அது தவறானது என்பது நன்றாக தெரியும்; மோடி ஒரு மிகச் சிறந்த மனிதநேயம் மிக்க நபர்; அவர் சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்றால் மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் சிறுபான்மையினரின் வருமானம் அதிகரித்து இருப்பது எவ்வாறு சாத்தியம் ஆகும்; தற்போது குஜராத்தில் உள்ள 70 முதல் 80 சதவீதம் நிறுவனங்கள் சிறுபான்மையினர் இனத்தவர்களுக்கு சொந்தமானதாகும்; 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரம் வேதனைக்குரியது; அதற்கு மோடி எவ்வாறு காரணமாக முடியும்; மோடி செய்த குற்றம் என்ன; எதற்காக அந்த கலவரத்திற்கு மோடி பொறுப்பேற்க வேண்டும்; ஒருவர் தவறு செய்திருந்தால் தான் அவர் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்; ஆனால் மத கலவரம் என்பது நாட்டில் குஜராத்தில் மட்டுமே முதலில் நடைபெற்றது அல்ல; 1969ல் அசாமில் நடைபெற்ற கலவரத்தில் 3 அல்லது 4 நாட்களில் 5000 பேர் கொல்லப்பட்டனர்; அப்போது அம்மாநில முதல்வர் அதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டாரா?.

காங்கிரசிற்கு வரலாறு என்பதே கிடையாது; மகாத்மாவின் விருப்பங்களையும் காங்கிரஸ் புறக்கணித்து விட்டது; நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தருவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் காங்கிரஸ்; அதறகாக தான் 1885ல் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது; சுதந்திரம் பெற்ற பின்னர் காங்கிரசை கலைத்து விடுமாறு மகாத்மா காந்தி கூறினார்; ஆனால் அக்கட்சியினர் காந்தியின் பெயரை மட்டும் பயன்படுத்திக் கொண்டு அவரது கொள்கைகளை விட்டுவிட்டனர்; காங்கிரஸ் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளது; ஆனால் நாட்டின் கிராமங்கள் பற்றி அக்கட்சி எவ்வித அக்கரையும் கொண்டதில்லை; மாறாக பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து கிராம நல திட்டங்களையும் பாழாக்கி உள்ளது; அனைத்தும் தமது நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

No comments: