எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, November 20, 2013

குலசேகரப்பட்டனம் ராக்கெட் ஏவுதளத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கேரள, ஆந்திர 'லாபி'.. கருணாநி

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க பல நிபுணர்கள் வலியுறுத்தி வந்தபோதிலும், அதை வர விடாமல் இஸ்ரோவில் உள்ள கேரள, ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்களே காரணம், அவர்களே முட்டுக்கட்டையாக உள்ளனர் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ‘ஏவுதளம்' இங்கே வந்திட ஏன் வீண் தயக்கம்? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை
மகேந்திரகிரியைச் சேர்ந்த திரவ எரிவாயு மையத்தில் பணிபுரிவோர் அனுப்பிய வேண்டுகோளினை பரிந்துரை செய்து நான் கடந்த 19-8-2013 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தேன்.
கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் "இஸ்ரோ" சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்திய வானியல் தொழில் நுட்பப் பயிலகம், வான்வெளி
தொடர்பான நுட்பவியல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால் வானியல் மற்றும் திரவ எரிவாயு தொடர்பானவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பயிலகம் அமைக்கப்பட வேண்டுமென்பது தற்போதைய நிலையில் மிக அவசரமும், முக்கியத்துவமும் வாய்ந்ததாகும்.
நமது நாட்டில் வான்வெளி மற்றும் திரவ எரிவாயு தொடர்பான நிபுணத்துவம் மிக்கவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதாக எனக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. விமானங்கள் வடிவமைப்பு, கெலிகாப்டர் வடிவமைப்பு, அதிவேக விமானங்கள் உருவாக்கம், வான்வெளி தொழில் நுட்ப ஆய்வுகள் ஆகியவை சார்ந்த படிப்புகளுக்கு மகேந்திரகிரியில் ஏற்படவிருக்கும் திரவ எரிவாயு மையம் தகுதி வாய்ந்த ஒரு சிறப்பு நிறுவனமாக இருக்கும் என்பதால், அதனை ஏற்படுத்திட நான் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.
அந்தப் புதிய மையத்திற்குத் தேவையான அளவு நிலமும், நடைமுறைப்படுத்திட ஆலோசனை வழங்கும் தொழில் நுட்ப
நிபுணத்துவமும் உள்ளன என்பதையும் தெரிவித்திட விரும்புகிறேன். வானியல் துறையில் "இஸ்ரோ" தனது இரண்டாவது ஏவுதளத்தை
அமைக்கும் திட்டம் 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதற்காகக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு புதிய ஏவுதளம் அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக அந்தக் குழு ஆய்வு செய்தும் வருகிறது. எதிர்பார்த்த அளவிற்கு தென்தமிழ்நாடு தொழிற் துறையில் முன்னேற்றம் அடையாமல் இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்த அடிப்படை அம்சங்களும் பூகோள ரீதியாகத் தென் தமிழகத்தில் அமைந்திருப்பதோடு, திறன்மிக்க மனித ஆற்றல் மிகுதியாகவே அங்கே இருக்கின்றன.
எனவே, அந்தப் பகுதி மத்திய அரசின் உரிய கவனத்திற்கும், தொழில் வளர்ச்சித் திட்டங்களுக் கும் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும். நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் "இந்திய வான்வெளி - திரவ எரிவாயு மையம்" மற்றும் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் "இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்"" அமைப்பதன் மூலம் அந்த மண்டலமே வளர்ச்சி பெற்ற மண்டலமாக நிச்சயம் மாற்றமடையும் என்பதோடு நமது நாட்டில் தொழில் நுட்பப்புரட்சிக்கு வித்திடும் பகுதியாகவும் அது உருவாகும். எனவே இந்த இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை அமைப்பது குறித்து உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று என்னுடைய அந்தக் கடிதத்தில் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.
இந்த நிலையில்தான், கடந்த வாரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து "மங்கல்யான்" விண்கலம், முதன் முறையாக செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக வெற்றிகரமாகச் செலுத்தப்பட் டுள்ளது. 450 கோடி ரூபாய்ச் செலவில், இந்திய விஞ்ஞானிகளால், உருவாக்கப்பட்ட விண்கலம் ஆகும் அது. செவ்வாய்க் கிரகத்துக்கான இந்த விண்கலத்தைத் திட்டமிட்ட பாதையில் தொழில் நுட்ப ரீதியாகத் துல்லியமாக நிலைநிறுத்தியதன் மூலம் நமது இந்திய விஞ்ஞானிகள் உலகத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளனர்.
பூமியிலிருந்து சுமார் 300 நாட்களில் 44 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்து செவ்வாய்க் கிரகத்துக்கு அருகில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் செல்ல விருக்கும் இந்த விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் வரிசையில் நான்காவதாக இந்தியா இந்த முயற்சியில் இடம் பெற்றுள்ளது என்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளத்தக்க செய்தியாகும்.
இதற்குக் காரணமாக இருந்த இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அரும்பணியாற்றியிருக்கும் அனைத்து விஞ்ஞானி களுக்கும் எனது இதயபூர்வமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். இந்தியாவுக்குப் பெருமையையும், மகிழ்ச்சி யையும் தேடித் தந்துள்ள "இஸ்ரோ", தமிழகத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து கசப்புணர்வோடும் பாராமுகமாகவும் நடந்து கொள்கிறதோ என்ற ஒரு அய்யப்பாடு 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக ஆண்டுக்கு 60 திட்டங்கள் என வகுக்கப்பட்டன. இதற்காகக் கணிசமான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ராக்கெட் ஏவு தளங்கள் ஏற்கனவே உள்ளன. பல செயற்கைக் கோள் திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாலும், பல நாடுகள் செயற்கைக்கோள்களை ஏவிட இந்தியாவை அணுகுவதாலும் மேலும் ஒரு ராக்கெட் ஏவுதளத்தை அங்கேயே அமைக்க "இஸ்ரோ" முடிவெடுத்தது. ஆனால் அதற்கு மிகவும் பொருத்தமான இடம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினமே என்றுதான் "இஸ்ரோ"வைச் சேர்ந்த பல நிபுணர்கள் வலியுறுத்தினார்கள். எனினும் அதனைப் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல், ஸ்ரீஹரி கோட்டாவிலேயே தொடர்ந்து மூன்றாவது தளத்தையும் அமைக்கும் பணிகளை "இஸ்ரோ" தொடங்கி விட்டது என்கிறார்கள்.
அறிவியல் அடிப்படையிலும், பூகோள ரீதியாகவும், பாதுகாப்புக் கோணத்திலும் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ள குலசேகரப்பட்டினத்தில்
ஏவுதளம் அமைத்தால், வழக்கமாக ஆகும் செலவில் பல கோடி ரூபாயை மீதப்படுத்த வாய்ப்பு இருந்தும், சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய இந்தத் திட்டத்தைச் சிலர் திசை மாற்றி விட்டதாக அதிகாரிகளே வருந்துகிறார்கள்.
இதைப்பற்றித் திரவ இயக்க உந்து மைய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். மனோகரன் கூறும்போது, "ஸ்ரீஹரிகோட்டாவை விட ராக்கெட் ஏவுதளம் அமைக்க மிகச் சிறந்த இடம் குலசேகரப்பட்டினம். இதனைச் தொழில் நுட்ப விபரங்கள் மூலமே உறுதிப்படுத்திட முடியும். பி.எஸ்.எல்.வி. செயற்கைக்கோள்களை தெற்கு நோக்கி ஏவி 450 முதல் 1000 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்த வேண்டும். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை பூமத்திய ரேகைக்கு மேலாக கிழக்கு நோக்கி ஏவி 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்த வேண்டும்.

உலக விண்வெளி விதிமுறைப்படி ஒரு நாடு ஏவும் ராக்கெட்டுகள், இன்னொரு நாட்டின் மீது பறக்கக்கூடாது. ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேரடியாக ராக்கெட்டுகளை ஏவினால், அது இலங்கை, இந்தோனேசியா நாடுகள் மீது பறக்க வாய்ப்பு உண்டு. அதற்காக தென்கிழக்காக அனுப்பி, மீண்டும் திசை திருப்பி, சுற்றுப்பாதைக்கு இப்போது கொண்டுவர வேண்டியிருக்கிறது. இதனால் பல கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகிறது.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் பகுதி நான்கு பாகங்களை உள்ளடக்கியது. இலங்கையைச் சுற்ற கூடுதல் எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே நான்காவது பாகம் இணைக்கப்படுகிறது. இதற்கு மட்டுமே செலவாகும் தொகை சுமார் இருபது கோடி ரூபாயாகும். குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டை அனுப்பினால், இதனைத் தவிர்க்க முடியும்.
செயற்கைக்கோளின் பயன்பாடு அதன் எடையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. கூடுதல் எடையுள்ள செயற்கைக்கோளில் கூடுத லாக
டிரான்ஸ்பாண்டர்கள், ஆராய்ச்சிக் கருவிகள் எடுத்துச் செல்ல முடியும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மூலம் 1600 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை 650 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்த முடியும். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவும் போது 2200 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்புவது சாத்தியம். 600 கிலோ கூடுதல் எடை கிடைக்கும்.
இன்றைக்கு சர்வதேச மார்க்கெட்டில் 1 கிலோ எடையை விண்ணில் அனுப்ப பன்னிரண்டு இலட்சம் ரூபாய் முதல் பதினெட்டு இலட்சம் ரூபாய் வரை செலவாகும். அப்படிப் பார்த்தால் 600 கிலோ கூடுதல் எடைக்கான செலவு 90 கோடி ரூபாய். எனவே குலசேகரப்பட்டினத்திலிருந்து ஏவும்போது, கூடுதல் எடையும் செலவை மீதப்படுத்தும் நன்மைகளும் ஏற்படும்.
குலசேகரப்பட்டினத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை ஏவினால் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை குறைவான பயண நேரத்தில் கடந்து விட முடியும். இலக்கைத் தொட்ட பிறகு, மிஞ்சியுள்ள எரிபொருளை வைத்தே செயற்கைக்கோளின் ஆயுள் நிச்சயிக்கப்படும். பயண நேரம் குறைவதால், எரிபொருள் மீதமாகி, செயற்கைக்கோளின் ஆயுள் இரண்டு ஆண்டுகள் வரை கூடுதலாகும். எனவே குலசேகரப்பட்டினத்தி லிருந்து ஒரு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவுவதன் மூலம் குறைந்தபட்சம் 110 கோடி ரூபாய் மூன்றாவது ஏவுதளம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 12 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தொகையை 109 பி.எஸ்.எல்.வி. ராக்கெட் அனுப்புவதால் மிச்சமாகும் தொகையை வைத்தே ஈட்டி விடலாம். ஒரே இடத்தில் கூடுதல் ஏவுதளங்களை அமைப்பதில் பல பிரச்சினைகள் உண்டு.
ஸ்ரீஹரிகோட்டா புயல் பாதிப்பு அதிகமுள்ள பகுதி என்பதால், ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் பணி நடப்பதில்லை. அதனால் உற்பத்தித் திறன் குறைகிறது. எதிர்பாராத விதமாக ஒரு ஏவுதளத்தில் விபத்துகள் நடந்தால் மற்ற ராக்கெட் தளங்களும் பாதிக்கப்படும். இயற்கைச் சீற்றங்களாலும், அந்நிய சக்திகளாலும் ஆபத்து வரும்போது ஒட்டுமொத்தத் தொழில் நுட்பமும் சிதைய வாய்ப்புண்டு" என்று புள்ளி விபரங்களோடு மனோகரன் விவரித்திருக்கிறார்.
குலசேகரப்பட்டினம் புறக்கணிக்கப்படுவதற்குச் சில காரணங்கள் கூறப்படுகிறது. கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களின் செல்வாக்குதான்
"இஸ்ரோ"வில் அதிகமாக உள்ளது. தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தமிழ்நாட்டிற்குக் கிடைத்து விடக்கூடாது என்ற பிடிவாத மனநிலையில் சிலர் செயல்படுகிறார்கள். ராக்கெட் தயாரிப்பில் அறுபது சதவிகிதப் பணிகள் தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரியில்தான் நடக்கின்றன. ஆனால் அதற்கான ஆளெடுப்புப் பணிகளோ திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதனால் சில குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே பணிக்கு வருகிறார்கள்.
புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவெடுத்த உடனேயே அவசர கோலத்தில் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் 300 ஏக்கர் நிலத்தைக்
கையகப்படுத்தி விட்டார்கள். தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, பேராசிரியர் நாராயணா தலைமையில் ஒரு குழு அமைத்தார்கள். 2013 பிப்ரவரிக்குள் இடத்தைத் தேர்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அந்தக் குழுவில் இடம் பெற்றவர்களில் நான்கு பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டுமே தமிழர். இந்தக் குழு குலசேகரப்பட்டினத்தை ஆய்வு செய்யவே இல்லை.
இடத்திற்காக ஆந்திர முதல்வரைச் சந்தித்த "இஸ்ரோ" அதிகாரிகள், தமிழக முதல்வரைச் சந்திக்கவே இல்லை என்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட அரிய தொழில் வளர்ச்சிக் கான தேவைகளைப்பற்றியெல்லாம் சிந்தித்துச் செயல்படுவதற்கு தமிழ்நாட்டில் மக்கள் நலனைத் தலையானதெனக் கருதும் ஓர் அரசு வேண்டும்; அது செயல் ஊக்கம் மிக்கதாக இருந்திட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் இதைப் பற்றியெல்லாமா சிந்திக்கிறார்கள்!
இந்தக் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்காக நான் பிரதமருக்கு கடந்த ஆகஸ்ட் மாதமே கடிதம் எழுதி, அந்தச் செய்தி ஏடுகளிலும் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்னதான் நாம் பிரதமருக்கு எழுதினாலும், தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைத்தால்தானே அந்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெறும். இதற்குத் தமிழக அரசு ஏன் முன்வரவில்லை?
ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைந்தால் நேரடியாக 4000 பேருக்கும், மறைமுகமாக 10 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். அதிகப்பட்சமாக 3 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் வரும். அவற்றின் மூலம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பும், சுமார் ஒரு இலட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும். திரவ உந்துவிசை கல்வி நிறுவனம் ஏற்படுத்தப் படுவதால், இதன்மூலம் தமிழகத்திலிருந்து ஏராளமான விஞ்ஞானிகள் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். ரயில் வசதிகள் மேம்படுத்தப்படும். சாலைகள் விரிவாக்கப்படும். தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும். இந்த நன்மைகளெல்லாம் விளைந்திட குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைய வேண்டும். அந்த ஏவுதளம் அமைய, அதனை அமைத்தே ஆக

வேண்டுமென்ற முனைப்போடு செயல்படுகின்ற ஒரு அரசு தமிழகத்திலே அமைய வேண்டும். அதுவே நாட்டிற்கும் நல்லது! நாட்டு மக்களுக்கும் நல்லது என்று கருணாநிதி கூறியுள்ளார்

No comments: