எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, August 7, 2013

வீராணம் ஏரி நிரம்புமா ?

காட்டுமன்னார்கோவில்
வறண்டு போய் கிடந்த வீராணம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
வறண்டு போன வீராணம்
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரிக்கு சாதாரணகாலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், செந்தூறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் செங்கால், கருவாட்டு ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவதுண்டு.
இதன் மூலமாக ஒரு லட்சம் ஏக்கர் வரையில் நேரடியாகவும், மறைமுகமாவும் பசனம் பெறுவதுடன், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக இங்கிருந்து தண்ணீர் அனுப்பப்படும். கடந்த 5 மாத காலமாக வீராணம் ஏரி தண்ணீர் இன்றி வறண்டு போய் காட்சி அளித்தது.
10 நாட்கள் வரையில்...
இந்த நிலையில் கல்லணையில் இருந்து கீழணைக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் கன அடி வரையில் தண்ணீர் வந்ததை அடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் வடவாறு வழியாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை வீரணாம் ஏரிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
இந்த நீர் நேற்று மதியம் 1.30 மணி அளவில் வீராணம் ஏரியை வந்தடைந்தது. மாலை நிலவரப்படி ஏரிக்கு விநாடிக்கு 2 ஆயிரத்து 33 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதை அளவிற்கு நீர் வரத்து இருந்தால் ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டுவதற்கு 10 நாட்கள் வரையில் ஆகும்.
5 ஆண்டுகளுக்கு பின்
மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின் ஆகஸ்ட்டு மாதத்தில் முதன் முறையாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவது இதுவே முதல் முறையாகும். ஏனைய ஆண்டுகளில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தான் ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏரிக்கு தண்ணீர் வருவது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்று வருகிறார்கள். அதோடு சமபா சாகுபடி செய்வதற்கு இந்த ஆண்டில் தேவை£யன அளவிற்கு தண்ணீர் கிடைக்கும் என்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
வீராணத்திற்கு கூடுதலாக தண்ணீர் கொண்டு செல்ல வசதி இல்லை வீணாக கடலில் கலக்கும் ஒருலட்சம் கன அடி நீர்
வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வரும் வடவாற்றில் 2 ஆயிரத்து 300 கன அடி நீர் வரையிலேயே தாக்கு பிடிக்கும். எனவே இதற்கு மேலாக தண்ணீர் அனுப்ப இயலாது. எனவே தற்போது 2 ஆயிரம் கன அடி வரையில் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டும், முக்கிய நீர் ஆதாரமாக வீராணத்திற்கு தண்ணீரை கொண்டு செல்ல போதிய வசதிகள் ஏதும் இல்லை.
நீரின் அளவு குறைய வாய்ப்பு
இதன் காரணமாக தற்போது ஒருலட்சம் கன அடி வரையில் கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டு வீணாக கடலில் கலந்து வருகிறது. மேலும் கர்நாடகத்தில் மழைக்குறைவால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்து இருப்பதுடன், அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீரின் அளவையும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் கீழணைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்து போகும் நிலை ஏற்படும்.
வீணாகும் நீர்
இதனால் நீர்ஆதாரமாக உள்ள வீராணம் ஏரி முழுவதுமாக நிரம்புமா என்பது சந்தேகமே. இத்தகைய சூழ்நிலையில் ஏரிக்கு தேவையான தண்ணீரை கொண்டு செல்ல போதிய அளவிற்கு வசதி இல்லாத காரணத்தினால் தற்போது வீணாக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு வங்காள விரிகுடா கடலில் கலந்து வருகிறது.

No comments: