எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, June 23, 2013

காங்கிரஸ் கமிட்டி மாற்றியமைப்பு

அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலில், தமிழக காங்கிரசாருக்கு, முக்கிய பதவியான, பொதுச் செயலர் பதவியை வழங்காமல், புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எந்த கோஷ்டியும் சாராமல், செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகிய, மூவருக்கு மட்டும், அகில இந்திய காங்., செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், பதவி கிடைக்காத கோஷ்டித் தலைவர்கள், சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் பதவியிலிருந்து, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் முகுல் வாஸினிக் பொறுப்பேற்றுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளர் பதவி வகித்த, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, நிரந்தர அழைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பா.ஜ.,விலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் இணைந்த போது, அவர் தேசிய செயலர் பதவியும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வகித்தார். ஆனால், நான்கு ஆண்டுகளாக, அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாமல் இருந்ததால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலிடம், தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். சமீபத்தில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், மகள் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு பா.ஜ., கட்சியில், அகில இந்திய செயலர் பதவி வழங்கப்பட்டது.
இதனால், பா.ஜ.,விலிருந்து, காங்கிரசுக்கு வந்த திருநாவுக்கரசருக்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியும், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ., செல்லக்குமார், கடந்த, 13 ஆண்டுகளாக எந்த பதவியும் இல்லாமல் வன வாசத்தை அனுபவித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அம்பிகா சோனியின் தயவால், அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியை பெற்றுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவி வகித்து வரும், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயக்குமார், மீண்டும் அதே பதவியில் நீடிக்க, மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே காரணமாக இருந்துள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு, இளைய தலைமுறை எம்.பி.,க்களில், விருதுநகர் எம்.பி., மாணிக்தாகூர் நெருக்கமானவர் என்பதால், அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ., வசந்தகுமார் ஆகிய மூவரும் தங்களுக்கு, முக்கிய பதவியான, அகில இந்திய பொதுச்செயலர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்தனர். ஆனால், மூவருக்கும் எந்த பதவியும் வழங்கவில்லை.
இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலில், மத்திய அமைச்சர் சிதம்பரம் மட்டும், பதவி உயர்வு பெற்றுள்ளார். ஆனால், அவரது ஆதரவாளர்களுக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. அதேபோல் மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளர்களுக்கும், அகில இந்திய அளவில் எந்த பொறுப்பும் வழங்கவில்லை.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, முகுல் வாஸினிக் இரு முறை எம்.பி.,யாக இருந்துள்ளார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை முகுல் வாஸினிக் தயாரித்து தான் வர வேண்டும் என்றால், இன்னும் ஓராண்டு வரை பட்டியல் வெளிவர வாய்ப்பில்லை. காரணம், அவரது செயல்பாடு வேகமாக இருக்காது என்ற கருத்து, கட்சியின் மத்தியில் நிலவுகிறது.
அதேசமயம், குலாம்நபி ஆசாத், தயாரித்து வைத்திருந்த நிர்வாகிகள் பட்டியல் என்றால், இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளிவந்து விடும் வாய்ப்பு உள்ளது. ராஜ்யசபா தேர்தல் முடிவடைந்த பின், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான, சத்தியமூர்த்தி பவனுக்கு முதன்முறையாக முகுல் வாஸினிக் வரவுள்ளார்

No comments: