எண்ணங்களின் பிரதிபலிப்பு

Saturday, April 30, 2011

தேர்தல் களம் - வெற்றி நமதே! வாய்மையே வெல்லும் !

   எப்படியோ தேர்தல் கூத்தெல்லாம் நடந்து முடிஞ்சிருச்சி. அப்பப்பா தேர்தல் தேதி அறிவித்த உடனே எல்லா கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு கூட்டணி அமைப்பதில் மும்முரமாகி, திமுக மற்றும் அ.இ.அ.தி.மு.க வும் பெரிய கட்சியான மற்றும் அதிக வாக்கு வங்கியை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியை இழுக்க போட்டிப் போட்டு அதில் தி.மு.க வெற்றிப் பெற்று காங்கிரஸ் தயவுடன் கூட்டணி அமைத்து தமிழக தேர்தலில் போட்டியிட்டது.

காங்கிரஸ் கூட்டணியில் திமுக,பாமக,விடுதலை சிறுத்தைகள்,இந்திய முஸ்லீம் லீக்,கொங்குநாடு முன்னேற்றக் கழகம், முவேந்தர் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.

அதிமுக கூட்டணியில் தேமுதிக,CPI, CPI(M),சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு நாடு இளைஞர் பேரவை, மனித நேய மக்கள் கட்சி,இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்ன்னி கழகம், பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.

காங்கிரஸ் கூட்டணியில் முதலில் இழுபறி ஏற்பட்டு சிறிய குழப்பத்திற்கு பிறகு சுமுகமாக தொகுதி பங்கீடு முடிந்தது. அப்பொழுது மற்றவர்களின் கவனமெல்லாம் காங்கிரஸ் கூட்டணியில் தான் இருந்தது.

 என்ன கூட்டணி அமையுமா இல்லை அமையாதா என்று இருந்தார்கள். ஒரு கட்டத்தில் திமுக செயற்குழு கூடி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியில் வந்து போட்டியிடுவது, மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அமைச்சரவையில் இருந்து விலகி மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பது என்று தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவித்தது.

  தி.மு.க வினர் மத்திய அரசியலில் இருந்து வெளியில் வந்தாலும் மத்திய அரசுக்கு போதிய பலம் பெற சமாஜ்வாடி கட்சி ஆதரவளிக்க தன்னிச்சையாக முன் வந்தது. இது போன்று நிறைய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மத்திய அரசுக்கு ஆதரவளிக்க முன்வந்தது.

ஆனால் காங்கிரஸ் கட்சி மிகவும் மனமுடைந்தது திமுக வின் தன்னிச்சையான விலகல் என்கிற முடிவுக்கு. தி.மு.க கேட்ட மந்திரி சபை கொடுத்து அழகு பார்த்தும் கூட்டணி தர்மத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களின் அத்துமீறலை, அதிகார துஷ்பிரயோகத்தை நம் வீட்டில் நம் குழந்தை ஒரு தப்பு செய்தால் எப்படி வலிக்காமலும் அவர்களுடைய மனம் புண்படாமலும் தவறை சுட்டிக் காட்டுவோமோ அதுபோல சுட்டிக் காட்டியும் எப்படி அந்த குழந்தை தனது தவறை உணராமல் மீண்டும் மீண்டும் தவறை செய்யுமோ அதுபோல திமுக அமைச்சர்கள் செய்தாலும் தாய்மையுள்ளதோடு அரவணைத்து மத்திய அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் பேரியக்கம். அப்படி இருக்கும்போது தன்னிச்சையாக தி.மு.க விலகல் என்பது மிகவும் வேதனையானது என்று காங்கிரஸ் கருதியது.

திமுக செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை தெரிவிப்பதற்காக சென்ற மத்திய அமைச்சர்கள் அழகிரி மற்றும் தயாநிதிமாறனிடம் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் அன்னை சோனியா அவர்கள் தன்னுடைய வருத்தத்தை சொல்லியிருக்கிறார்கள். அதை கேட்ட அமைச்சர்கள் இருவரும் என்ன செய்வதென்றே தெரியாமல் நாமும் நமது கழகமும் எப்படிபட்ட மாபெரும் வரலாற்று பிழையை மற்றும் இப்படிபட்ட நேர்மையான காங்கிரஸுக்கு துரோகம் செய்ய நினைத்தோமே என்று மனவருத்தம் அடைந்து உடனே திமுக தலைவரை அழைத்து நடந்த தவறை சுட்டிக்காட்டி நாம் தவறை உணர்ந்து மீண்டும் மறுப்பறிக்கை விடவேண்டும் கூட்டணியில் நீடிக்க வேண்டும் வரலாற்றுப் பிழையை நாம் செய்யக் கூடாது என்று சொன்னவுடன் அதை உடனே ஏற்று மறுப்பறிக்கை விட்டது தி.மு.க தலைமை.

இது போன்ற சிக்கலை எளிமையாக தீர்த்துக் கொண்ட விதம் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை விதைத்துவிட்டது இது தான் சரியான கூட்டணி தாம் செய்யவிருந்த வரலாற்று பிழை திருத்தி கொண்டாரே கலைஞர் அவர் தான் தங்களுடைய முதல்வராக வரவேண்டும் என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்.

ஆனால் அதிமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் தொகுதி பங்கீடு நீண்ட இழுபறி, எண்ணிக்கை முடிந்தாலும் இன்ன இன்ன தொகுதிகள் முடிவாகவில்லை இப்படி இருக்கும் போது அதிமுக தனது 160 தொகுதி பட்டியலை வெளியிட்டு கூட்டணி கட்சிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.

இடதுசாரிகளின் தலைவர்கள் ஒன்று கூடி மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி அதன்படி தேமுதிக தலைவர் விஜயகாந்தை சென்று சந்திப்பது என்று முடிவெடுத்து, சந்தித்து மீண்டும் அதிமுக வுடன் பேசி பார்ப்பது உடன்பட்டால் கூட்டணி இல்லை என்றால் மூன்றாவது அணி என்று முடிவெடுத்தார்கள்.

இந்நிலையில் விஜயகாந்து, அப்பொழுது தனது தலைமையில் கூட்டணி அமைப்பது என்றே முடிவெடுத்து இருந்தார் ஆனால் அவருடன் இருந்த முன்னணி தலைவர் ஒருவர் சிபிஐ மாநில செயலாளர் த.பாண்டியன் ஒரு நம்பக தன்மையற்றவர் அவரை நம்பி நீங்கள் தவறான முடிவு மற்றும் அறிக்கை வெளியிடவேண்டாம் என்று சொல்லி இருக்கிறார், இவரும் இவர் தரப்புக்கு நாம் இந்த கம்யூனிஸ்டுகாரர்களையே நம்பக் கூடாதென்று சொல்லியிருக்கிறார்.

மீண்டும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை ஒரு சுமூக உடன்பாடு வந்தது இந்நிலையில் மக்களின் ஆத்திரத்தை சம்பாதித்துக் கொண்டார் ஜெயலலிதா அவர்கள்.

 இந்த அம்மையார் எப்பொழுதும் இப்படித் தான் யாரையும் மதிக்காது, தான் தோன்றிதனமாக எதையும் செய்யும். கூட்டணி கட்சித் தலைவர்களையே மதிப்பதில்லை எப்படி ஓட்டுப் போடும் மக்களை மதிக்கும் என்று மக்கள் கொந்தளித்தார்கள்.

இந்த குழப்பம் போதாதென்று மதிமுகவை அசிங்கபடுத்தியது, கடந்த தேர்தலில் 35 இடங்களில் போட்டியிட்டு மற்றும் கடந்த காலங்களில் அதிமுக போட்டியிட்ட எல்லா இடைத்தேர்ல்களிலும் தனது கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டால் எப்படி பிரசாரம் செய்வாரோ அதைவிட 100 மடங்கிற்கு அதிகமாக அதிமுக வேட்பாளருக்காக பிரசாரம் செய்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், அவருக்கு இந்த தேர்தலில் வெறும் 9 இடங்கள் தான் தரமுடியும் இல்லை இல்லை உங்களுக்கு 8 இடங்கள் தான் தரமுடியும் இல்லை இல்லை உங்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை அதனால் 7 தொகுதிகள் தான் தரமுடியும் என்று சொல்லி மதிமுகவின் தன்மானத்தை விலை பேசியது, இந்த செயல் மதிமுகவினரிடம் மட்டுமல்லாமல் படித்த மக்களில் இருந்து பாமர மக்கள் வரைக்கும் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி அதிமுக மீது மீண்டும் மீண்டும் வெறுபுணர்ச்சியை அதிகப்படுத்தியது.

இது மட்டுமா தேர்தல் பிரசாரத்தில் கூட்டணி கட்சி தலைவரான விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளரை பிரசாரக் கூட்டம் என்று பாராமல் தான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்கிற நாகரிகத்தை மறந்து அடித்து உதைத்தது மக்களிடையே மேலும் வெறுப்பை ஏற்படுத்தியது.

இதுபோன்று மீண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர் போட்டியிடும் கட்சி சின்னத்தையே மாற்றிக் கூறி நான் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார். இதையெல்லாம் கண்ட மக்கள் வெறுப்பின் உச்சிக்கே சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற அதிமுக கூட்டணியின் குளறுபடிகளால் காங்கிரஸ் கூட்டணிக்கு அபாரா வெற்றியை தேடித்தந்துவிட்டார்கள்.

இது ஒரு புறமிருக்க திமுக கடந்தகாலங்களில் செய்த சாதனைகளை சொல்லியும், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு போன்றவர்களின் கடும் பிரசாரத்தினால் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி செய்யப்பட்டுவிட்டது.

அதனால் காங்கிரஸ் கூட்டணிக்கு 130+ தொகுதிகளும் அதிமுக கூட்டணிக்கு 104 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஒவ்வொரு தொகுதியின் வெற்றி வாய்ப்பு என்பது குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் இருக்கும் என்பதால் காங்கிரஸ் கூட்டணிக்கு தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

 காங்கிரஸ் கட்சியானது கலைஞரை 6 வது முறையாக அரியணையில் ஏற்றியே தீர்வது என்று முடிவெடுத்து உழைத்த கடுமையான உழைப்பிற்கு வருகின்ற மே 13 அன்று விடைத் தெரியும்.

2 comments:

இந்திராமைந்தன் said...

தேர்தல்னு சொன்னதிலிருந்து... தேர்தல் முடிந்த வரையிலும், இனி வரப் போவதையும் துல்லியமாகக் கணித்துச் சொன்ன சேலத்துக்காரருக்கு வாழ்த்துகள்

ananda said...

அதெல்லாம் நடக்காதுப்பா அ.தி.மு.க தான் ஜெயிக்குமனு நினைக்கிறேன்.