எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, November 27, 2008

இந்தியாவுக்கு பிரபாகரன் வேண்டுகோள்

எனது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள்.

தமிழீழ தாய் நாட்டின் விடிவிற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்து எமது இதயம் எல்லாம் நிறைந்து நிற்கும் வீரர்களை நினைவு கூர்ந்து கவுரவிக்கும் புனித நாள்.

என்றும் இல்லாதவாறு ஒரு பெரும்போரை தமிழீழ தேசம் இன்று எதிர்கொண்டு நிற்கிறது. சிங்கள இனவாத அரசு ஏவி விட்டுள்ள தமிழ் இன அழிப்பு போருக்கு உலகின் பல்வேறு நாடுகளும் முண்டு கொடுத்து நிற்க, எமது மக்களின் தார்மீக பலத்துடன் நாம் தனித்து நின்று போராடி வருகிறோம்.

இந்த மண் எமக்கு சொந்தமான மண். பழந்தமிழர் நாகரீகம் நிலைபெற்ற மண். வரலாற்று காலத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராஜ்ஜியங்களை அமைத்து அரசாண்டார்கள்.

எங்கள் மண்ணில் ஆங்கிலேயே காலனியாதிக்கம் அகன்று சிங்கள ஆதிக்கம் கவிந்த நாள் முதல் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பி தேர்வு செய்யவில்லை.

திம்புவில் தொடங்கி ஜெனீவா வரை பல்வேறு வரலாற்று சூழல்களில் பேச்சுகளில் பங்குபெற்று வந்திருக்கிறோம். சிங்கள அரசுகளின் கடும்போக்கும் நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளுமே பேச்சு தோல்விகளுக்கு காரணம்.

புலிகள் இயக்கத்தை பலவீனப்படுத்தி தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிங்கள அரசு இந்த பேச்சு வார்த்தைகளை பயன்படுத்தியது. அனைத்து உலகத்தின் அனுசரணையோடு கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒரு தலைப்பட்சமாக சிங்கள அரசு கிழித்து எறிந்து விட்டு தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது.

அப்போது, சமாதானம் பேசிய உலக நாடுகள் எதுவும் ஒப்புக்காக கூட கண்டிக்கவில்லை. மாறாக, சிங்கள தேசத்துக்கு அழிவு ஆயுதங்களை சில நாடுகள் அள்ளிக் கொடுத்தன. ராணுவ பயிற்சிகளையும், ராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் தமிழருக்கு எதிரான இன அழிப்பு போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவு இரக்கமின்றியும் சிங்கள அரசு தொடர்ந்து வருகிறது.

எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. ஆகாயத்தில் இருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது. உலகத் தமிழினத்தின் ஒட்டு மொத்தப் பேராதரவோடு இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம். எமது போராட்டம், எந்தவொரு நாட்டின் தேசிய நலனுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம். அண்டை நாடான இந்தியாவுடன் நட்புறவை வளர்த்துச் செயல்படவே விரும்புகிறோம். எமது மக்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டு எம் மீதான தடையை நீக்கி எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று எம்மை தடை செய்துள்ள நாடுகளை அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

இந்திய தேசத்தில் இன்று பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக் கிடந்த எமது போராட்ட ஆதரவு குரல்கள் இன்று மீண்டும் ஓங்கி ஒலிக்கின்றன. எமது போராட்டத்தை ஏற்றுக் கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்த கால மாற்றத்துக்கு ஏற்ப, இந்திய பேரரசுடன் அறுந்துபோன எமது உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள நாம் விரும்புகிறோம்.

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மை பிரித்து நிற்கின்றபோதும் எமது மக்களின் இதயத்துடிப்பை அறிந்து தமிழகம் இந்த வேளையில் எமக்காக எழுச்சி கொண்டு நிற்பது தமிழீழ மக்களுக்கும் எமது விடுதலை இயக்கத்துக்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எம் மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி அன்புக் கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழக தலைவர்களுக்கும் இந்திய தலைவர்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே நேரம் இந்தியாவுக்கும் எமது இயக்கத்துக்கும் இடையிலான நல்லுறவிற்கு பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில், அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடைïறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும்வரை நாம் தொடர்ந்து போராடுவாம்.

No comments: