எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, February 22, 2008

07.நவாஸ்ஷெரீப்- சர்தாரி இணைந்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி


இஸ்லாமாபாத்: நவாஸ்ஷெரீப்- சர்தாரி கட்சிகள் இணைந்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில், கூட்டணி அரசு அமைவது உறுதியாகி விட்டது. பார்லிமென்ட் தேர்தலில், இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 258 தொகுதிகளில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பெனசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு, 85 இடங்கள் கிடைத்துள்ளன. இக்கட்சியின் இணைத் தலைவர் சர்தாரி, பிரதமராக போவது இல்லை என நேற்று முன்தினம் தெரிவித்தார். எனவே, பிரதமர் யார் என்பதை முடிவு செய்வதில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.

நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்( நவாஸ்) கட்சிக்கு 67 இடங்கள் கிடைத்துள்ளன. அதிபர் முஷாரப்பால் நீக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சவுத்ரி உட்பட அனைத்து நீதிபதிகளையும் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பதில் நவாஸ் மிகவும் பிடிவாதமாக உள்ளார்.

பெனசிர் மற்றும் சர்தாரி மீது பல ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதிபர் முஷாரப், பொது மன்னிப்பு அளித்து அவசர சட்டத்தை அறிவித்த பின்னரே, இருவரும் நாடு திரும்பினர். நீக்கப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்தினால், அவசர சட்டம் ரத்து செய்யப்படும்; தான் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்று சர்தாரி அச்சப்படுகிறார். எனவே தான், நவாஸ் ஷெரீப் கோரிக்கையை ஏற்க தயக்கம் காட்டி வருகிறார்.

பொது மன்னிப்பு சட்டத்துக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பொது மன்னிப்பு சட்டம் குறித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறும் வரை, இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இத்துடன், சுவிட்சர்லாந்து நாட்டில், சர்தாரி மீது பல கோடி ரூபாய் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என, பாகிஸ்தான் அரசு நேற்று கேட்டுக் கொண்டது. இவையெல்லாம், சர்தாரிக்கு அரசால் கொடுக்கப்படும் மறைமுக நெருக்கடிகள்.

இதுதவிர, தன்னுடன் இணைந்து செயல்பட வேண்டும்; இல்லாவிடில், அவசர சட்டம் ரத்து செய்யப்படும் என, சர்தாரியை அதிபர் முஷாரப் மறைமுகமாக எச்சரித்துள்ளார். முஷாரப்புடன் இணைந்து செயல்படும் அரசு தான் பாகிஸ்தானில் அமைய வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை, சர்தாரி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது, முஷாரப்புடன் இணைந்து செயல்படும்படி, அமெரிக்க தூதர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழ்நிலையில் தான், சர்தாரி-நவாஸ் ஷெரீப் சந்திப்பு நேற்று நடந்தது. வடமேற்கு எல்லை மாகாணத்தில் பலம் வாய்ந்த கட்சியாக தேசிய அவாமி லீக் கட்சி உருவெடுத்துள்ளது. பார்லிமென்ட் தேர்தலில் இக்கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்துள்ளன. இந்த கட்சியின் தலைவர் அஸ்பாந்தியார் வாலி கானையும், சர்தாரி சந்தித்துப் பேசினார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியினரும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்தினர். இதில் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு ஏற்பட்டது. மேலும் புட்டோ மரணம் குறித்து ஐ . நா., விசாரிக்க வேண்டும் என கோருவோம் என புட்டோ கணவர் சர்தாரி தெரிவித்துள்ளார். நீதிபதி விவகாரம் மற்றும் முஷாரப் பதவி விலக வற்புறுத்துவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

No comments: