எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, February 7, 2016

தோணிமடுவு திட்டத்தையும், மேட்டூர் அணை காவிரி உபரிநீர் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.

தோணிமடுவு திட்டத்தையும், மேட்டூர் அணை காவிரி உபரிநீர் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.

 ''தமிழகத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் மேட்டூர் அணையாகும். அதிலிருந்து வெளியேற்றப்படும் நீர்தான் காவிரி டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதிவரை சென்றடைந்து, அதன்மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும், விவசாயிகளும் பயன்பெறுகின்றனர். மேட்டூர் அணையின் அருகில் இருக்கின்ற கொளத்தூர் மற்றும் மேச்சேரி பகுதிக்கு இந்த அணையால் எவ்வித பயனும் இல்லை. மேலும் கனமழை காலங்களில் சுமார் 100 டி.எம்.சி வரை தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கும் நிலையும் உள்ளது.

கொளத்தூர் மற்றும் மேச்சேரி பகுதி பயன்பெறும் வகையிலும், வீணாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை தடுக்கவும், கொளத்தூர் அருகிலுள்ள தோணி மடுவிலிருந்து, பாலாறு வழியாக காவிரியில் கலக்கும் உபரி நீரை தடுப்பணை கட்டி தேக்கிவைக்க தோணி மடுவு திட்டத்தையும், மேட்டூர் அணைக்கு அருகிலுள்ள ஏத்துவாமலைக்கு காவிரி நீரை ஏற்றி கோனூர், கூணான்டியூர் வழியாக மேச்சேரி ஏரியை இணைத்திட தானதியூர் - மூலக்காடு நீரேற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் சுமார் 50 ஆண்டுகாலமாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள்.

1984ல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தோணி மடுவு திட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அவர் மறைவிற்குப்பின் தமிழகத்தில் மாறி, மாறி ஏற்பட்ட ஆட்சிகளால் தோணி மடுவு திட்டம் என்றால் என்னவென ஆட்சியாளர்கள் கேட்கும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், மேச்சேரி ஏரியிலிருந்து இயற்கையாக அமைந்துள்ள நீர்வழிப் பாதைகளை பயன்படுத்தி தாரமங்கலம், சின்னப்பம்பட்டி வழியாக சரபங்கா ஆறு, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளுடன் காவிரி நதியின் உபரி நீரை இணைத்தால், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், குட்டை களுக்கு காவிரியின் உபரி நீர் சென்றடையும். நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதற்கு மேட்டூர் அணை காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.

தற்போது இப்பிரச்சனை மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. எனவே தோணிமடுவு திட்டத்தையும், தானதியூர்-மூலக்காடு நீரேற்று திட்டத்தையும், மேட்டூர் அணை காவிரி உபரிநீர் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் ர்.

No comments: