எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, March 28, 2013

கலைஞர் விளக்கம் ஜெயலலிதாவிற்கு இலங்கை தமிழர் விவகாரத்தில்


ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி
திமுக தீர்மானம் கண்துடைப்பு என்றால் அதிமுக தீர்மானம் ஓரங்க நாடகமா?சென்னை : இலங்கை தமிழர்களுக்காக திமுக அரசு நிறைவேற்றிய தீர்மானம் கண்துடைப்பு நாடகம் என்றால் அதிமுக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஓரங்க நாடகமா என்று ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில நாட்களாக சட்டப் பேரவை நடைபெற்றுக் கொண்டிருப்பதையும், அங்கே திமுகவினரை வாய் திறந்து கருத்து தெரிவிக்க விடாமல் ஆளும் கட்சி தங்களது மெஜாரிட்டியை கொண்டு விருப்பம் போல் பேசியும் வெளியேற்றியும் வருவதையும், முதலமைச்சர் பதிலுரை என்ற பெயரால் பிரச்னையை விட்டுவிட்டு முழுக்க முழுக்க என்னை தனிப்பட்ட முறையில் எப்படியெல்லாம் தாக்கி தரக் குறைவாக பேச முடியுமோ அந்த அளவிற்குத் தாக்கி உரையாற்றுவதையும் கண்டு வருகிறோம்.

அந்த வரிசையில் நேற்று ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை நசுக்கிட காவல் துறையினர் முயற்சிப்பது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம். அதற்கு பதிலளிக்க வேண்டிய முதலமைச்சர் தன் பேச்சு முழுவதிலும் இலங்கை பிரச்னையில் நான் கபட நாடகம் ஆடுவதாகவும், இரட்டை வேடம் போடுவதாகவும் பல பக்க பேச்சை தயார் செய்து அவையில் படித்து விட்டு ஏடுகளுக்கும் விநியோகம் செய்திருக்கிறார்.

இலங்கைப் பிரச்னையில் நான் கபட நாடகம் ஆடுவதாக ஜெயலலிதா பழி சுமத்துவது இது எத் தனையாவது முறை என்றே ஞாபகம் இல்லை. கச்சத்தீவு பிரச்னையாக இருந்தாலும், இலங்கைப் பிரச்னையாக இருந்தாலும், காவிரி பிரச்னையாக இருந்தாலும் அரைத்த மாவையே அரைப்பதைப் போல், ஜெயலலிதா சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். அந்தப் பேச்சினை ஏடுகள் பெரிதாக வெளியிடுகின்ற காரணத்தால், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமையாகிறது.

தமிழர் நலன் கருதி மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேற வேண்டுமென்று அவர் 2009ம் ஆண்டே கூறியதாகவும், நானோ அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி 2 வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன்வராவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார் கள் என்ற தீர்மானம் நிறைவேற்றியதாகவும், பின்னர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்னை சந்தித்த பிறகு மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்து ராஜினாமா நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன் என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இதில் எதை அவர் நாடகம் என்கிறார்? இலங்கையில் போர் கடுமையாக நடக்கிறது என்று கேள்விப்பட்ட உடனே 14.10.2008ல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது நாடகமா? (அவரது அகராதியில் அனைத்துக் கட்சி கூட்டம் என்றாலே அலர்ஜி ஆயிற்றே?) அந்த கூட்டத்தில் ‘போர் நிறுத்தம் செய்ய முன்வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது நாடகமா?

அந்த தீர்மானத்தை உடனடியாக பிரதமருக்கு அனுப்பி, பிரதமர் அரசியல் தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவாக எடுத்திடும் என்று கூறியது நாடகமா?
அந்த அனைத்துக் கட்சி தீர்மானத்தைப் பற்றி ஜெயலலிதா என்ன சொன்னார்? ‘தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இலங்கைப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிட்டால், பின்னர் நம் உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடும் வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது’ என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

அதை தற்போது வசதியாக மறந்து விட்டுப் பேசுவதற்கு பெயர்தான் இரட்டை வேடம். நமது வேண்டுகோளினை ஏற்று இந்திய பிரதமர் 18,10&08ல் இலங்கை அதிபருடன் பேசியதும், பிறகு 24,10,08ல் சென்னையில் நாம் பிரமாண்டமான மனிதச் சங்கிலி நடத்தியதும், 26,10,08ல் பிரணாப் சென்னை வந்து என்னை சந்தித்ததும்,

12&11&08ல் இலங்கைத் தமிழர்களுக்காக பேரவையில் நான் தீர்மானம் முன் மொழிந்து நிறைவேற்றியதும், 4,12,08ல் அனைத்துக் கட்சி தலைவர்களையும் பிரதமரிடம் அழைத்துச் சென்று பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனு ப்பி பேசச் சொன்னதும், அவ்வாறே பிரணாப் சென்று பேசியதும், 27,12,08ல் திமுக பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றியதும் நாடகமா? இரட்டை வேடமா?

அதற்குப் பிறகும் திமுக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி ஏற்கனவே நான் விரிவாக எழுதி விட்டேன். ஆனால் ஜெயலலிதா பல்வேறு கண்துடைப்பு நாடகங்கள்தான் அப்போது நடந்தன என்று சொல்லியிருக்கிறார். திமுக தீர்மானம் நிறைவேற்றியது கண்துடைப்பு என்றால், நேற்று ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஓரங்க நாடகமா?

ஜெயலலிதா போன்ற ஒரு சிலரின் அபிலாஷையின்படி, திமுக மத்திய அரசிலிருந்து தற்போது வெளியேறி விட்டது.
இதனால் என்ன நடந்துவிட்டது? ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற் பட்டுவிட்டதா?
அமெரிக்கத் தீர்மானத் தில் இந்தியா திருத்தங் களைக் கொண்டு வந்து விட்டதா?
நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை திருத்தங்களோடு நிறைவேற்றி விட்டதா?

மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறியது மட்டும்தான் நடந்தது.
ஆனால் அதற்காக திமுக சிறிதும் கவலைப்படவில்லை. 2009ல் திமுக மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தாலும் இதே நிலைதான் என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்ப்பவர்கள் உணர்வார்கள்.

அப்போதே வெளியேறியி ருந்தால் இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், திமுக மீது பழியைப் போடுகின்ற செயலே தவிர வேறல்ல. அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை உறுதி செய்வதை, வரலாறு அறிந்தவர்கள் ஏற்கமாட்டார்கள். அதுமாத்திரமல்ல. திமுக ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் ஈழத் தமிழர்களுக்காக இத் தனைப் போராட்டங்களையும் நடத்தியது;

அரசியல் ரீதியாகப் பல்வேறு இழப்புகளுக்கும் ஆளானது. ஆனால் ஜெயலலிதா, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்யாமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பின், திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல இலங்கைத் தமிழர் பிரச்னையில் அதிக அக்கறை செலுத்துவது போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறேன் என்றெல்லாம் ஏதோ ஈழத் தமிழர்களுக்காக இழப்பைச் சந்தித்தவரை போல குறிப்பிட்டிருக்கிறார்.

ஆட்சிக்கு வருவதைப் பற்றி கற்பனைகூட செய்துபார்க்காத 1956ம் ஆண்டிலேயே, சிதம் பரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஈழத் தமிழர்களுக்காக தீர்மானத்தை முன்மொழிந்த எனக்கு திடீரென்று ஞானோதயம் என்று கூறுகின்ற ஜெயலலிதாவிற்கு இலங்கைத் தமிழர்கள் மீது எத்தனை நாட்களாக அக்கறை?
தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா?

1956ம் ஆண்டிலிருந்து நடந்து வரும் நிகழ்வுகளையும், ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பின் நடக்கும் நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்களா?
16,4,02ல் இதே சட்டசபையில் ‘பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடுவார்களா?

17,1,09ல் இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ‘போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்’ என்று ஜெயலலிதா கூறியதை மறக்க முடியுமா? இதையெல்லாம் மறைத்துவிட்டு நான் இரட்டை வேடம் போட்டேன் என்பதா? பேரவையில் மெஜாரிட்டி உள்ளது என்ற கித்தாப்பில் எதை வேண்டுமென்றாலும் பேசுவதா?

அடுத்து ஜெயலலிதா தன் பேச்சில் என் மீது சாற்றியுள்ள குற்றச்சாட்டு, நான் இருந்த உண்ணாவிர தத்தை பற்றி புது விளக்கத்தை சமீப காலமாக கூறுவதாகவும், போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அரசு மத்திய அரசுக்கு தெரிவித்ததாகவும், அதனை மத்திய அரசு நம்பி தனக்கு தெரியப்படுத்தியதாகவும், அதனை நான் நம்பியதாகவும் எந்தத் தமிழரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

சமீப காலமாக நான் இதைக் கூறவில்லை. இதோ, 28,4,09 தினத்தந்தியின் தலைப்பு: ‘மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார்

கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி போரை நிறுத்தி விட்டதாக இலங்கை அறிவிப்பு’
இதைத் தவிர 2ம் பக்கத்தில் ‘போர் நடவடிக்கை முடிவுக்கு வந்தது; இலங்கை ராணுவம் அறிவிப்பு’ என்ற தலைப்பில் இலங்கை அதிபர் ராஜபக்சே அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

எனவே நான் சமீபகாலமாக இதை கூறவில்லை. அன்றே வெளியான செய்தி இது. ஜெயலலிதா கூறியுள்ள உண்மைக்கு மாறான தகவல்களுக்கு இதுவும் ஓர் உதாரணம்.
திமுக பொதுச் செயலா ளர் பேராசிரியர், ‘மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகிய போதிலும், மத்திய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சியில் யாராவது ஈடுபட்டால் அதற்கு திமுக துணை போகாது’ என்று பேசியதை எடுத்துக்காட்டி, இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். எப்படியாவது மத்திய ஆட்சி கவிழாதா? சந்தடிசாக்கில் தான் பிரதமராகிவிட முடியாதா? என்ற நப்பாசை ஜெயலலிதாவுக்கு. அதனால் நாங்கள் செய்வதெல்லாம் துரோகமாக தெரிகிறது.

எதற்கெடுத்தாலும் நான் இரட்டை வேடம் போடுவதாக கூறுகிறார். சேது திட்டம் வேண்டுமென்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தற்போது வேண்டாம் என்கிறாரே, அதற்கு பெயர்தானே இரட்டை வேடம்!

காவிரி ஆணையத்தை பல் இல்லாத வாரியம் என்றெல்லாம் கூறிவிட்டு, தற்போது அதை ஆதரிப்பதற்கு பெயர்தானே இரட்டை வேடம்! இன்று (28&3&13) இந்து நாளிதழில் வெளிவந்துள்ள ‘விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்தவர், தமிழ் ஈழத்தின் ஆதரவாளராகியுள்ளார்’ என்ற செய்தியை படித்துப் பார்த்தால் யார் இரட்டை வேடம் போடுபவர் யார் இரட்டை முகம் கொண்டவர் என்பதை அறிந்து கொள்ளலாம் இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Thursday, March 21, 2013

இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி: இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஆதரவு


ஜெனிவா: இலங்கைக்கு எதிராக, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா உள்ளிட்ட 25 நாடுகள் ஓட்டளித்துள்ளன.
இலங்கையில், 2009ல், ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே, இறுதி கட்ட சண்டை நடந்தது. இதில், விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். ஏராளமான விடுதலைப் புலிகள், ராணுவத்திடம் சரணடைந்தனர். சரணடைந்த விடுதலை புலிகள், ரகசியமான இடங்களில் வைக்கப்பட்டு, ராணுவத்தினரால், பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், பெண் விடுதலை புலிகள், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாகவும், மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கான, மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும், நல்லிணக்க ஆணைக்குழு, சில பரிந்துரைகளை செய்திருந்தது. இந்த குழு பரிந்துரைகள் மீது, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக கூறி, கடந்த ஆண்டு, ஜெனிவாவில் உள்ள, சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் தொடர்பாக, இலங்கை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால், இந்த ஆண்டும், மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக, அமெரிக்காவால்,தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சுவிட்சர்லாந்தின், ஜெனிவாவில், மனித உரிமை ஆணையத்தின், 22வது ஆண்டு கூட்டம் தற்போது நடக்கிறது. "இலங்கையில், நடந்த சண்டையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இது குறித்து சுதந்திரமான, நம்பத் தகுந்த சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்' என கூறி, மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா, கடந்த வாரம் தீர்மானம் தாக்கல் செய்தது.


இந்த தீர்மானத்தில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு, நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. நல்லிணக்க குழுவின் பல பரிந்துரைகளை இலங்கை அரசு ஏற்க மறுத்துள்ளது கவலையளிக்கிறது. இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை அமைப்பினர் உள்ளிட்டோர் காணாமல் போவது குறித்தும், சுதந்திரமான விசாரணை நடத்தப்படவில்லை. அதிகார பரவலாக்கத்துக்கு ஒப்புதல் அளித்த இலங்கை அரசு, தற்போது அதை செயல்படுத்த முடியாது என, மறுத்துள்ளது. இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகள் தொடர்பாக, விசாரிக்க, ஐ.நா., பிரதிநிதிகளுக்கும், மனித உரிமை அமைப்பினருக்கும், இலங்கை அரசு அனுமதி அளிக்க வேண்டும் என, இத்தீர்மானம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், மொத்தம், 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நேற்று நடந்த ஓட்டெடுப்பில், இந்தியா, ஆஸ்திரியா, கனடா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நார்வே, பிரிட்டன் உள்ளிட்ட, 25 நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவித்தன. தீர்மானத்தை எதிர்த்து, பாகிஸ்தான், கியூபா, வெனிசுலா, பிலிப்பைன்ஸ், மாலத்தீவு,இந்தோனேசியா, ஐக்கிய அரபு எமிரேட், காங்கோ, குவைத், ஈக்வடார் உள்ளிட்ட 13 நாடுகள் ஓட்டுப்போட்டன. நடுநிலை வகிக்கும் நோக்கில், எட்டு நாடுகள் இந்த ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. முன்னதாக இந்த தீர்மானம் தொடர்பாக பல்வேறு நாடுகள் விவாதித்தன.

இந்த தீர்மானத்தை, வன்மையாக கண்டித்த, இலங்கை பிரதிநிதி, மகிந்தா சமரசிங்கா குறிப்பிடுகையில், ""இந்த தீர்மானம் உள்நோக்கம் கொண்டது. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள புகார்கள் தவறானவை. இலங்கை மேற்கொண்ட மறுவாழ்வு பணிகள் கவனத்தில் எடுத்து கொள்ளப்படவில்லை. இலங்கையை தனித்து விடுவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது,'' என்றார்.


இந்த தீர்மானத்தை ஆதரித்து இந்திய உறுப்பினர் திலீப் சின்கா பேசியதாவது: இலங்கை, 13வது அரசியல் சட்டதிருத்தத்தை அமல்படுத்த வேண்டும். மனித உரிமை ஆணைய பிரதிநிதிகள் இலங்கையை பார்வையிட அனுமதிக்க வேண்டும். வடக்கு மாகாண மக்கள் தேர்தலை சந்திப்பதற்குரிய சூழலை உருவாக்க வேண்டும். மனித உரிமை மீறல்கள் குறித்து உலக நாடுகள் ஏற்கும் வகையிலான, நம்பிக்கைக்குரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இலங்கை எடுத்துவரும் நல்லிணக்க நடவடிக்கைகள், விரிவு மற்றும் விரைவு படுத்தவும் வேண்டும். எனினும், இலங்கை உடனான உறவை துண்டிக்க விரும்பவில்லை. இவ்வாறு திலீப் சின்கா கூறினார்.

பாக்.,எதிர்ப்பு: இந்த தீர்மானத்தை ஏற்க முடியாது. அமெரிக்கா கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தில், திருத்தங்கள் பல செய்யப்பட வேண்டும், என கூறிய பாகிஸ்தான் பிரதிநிதி, எதிர்த்து ஓட்டளித்தார்.

எழுத்து பூர்வமாக தாக்கல்: தீர்மானம் குறித்து கடைசி நேரம் வரை இந்தியாவின் முடிவு சஸ்பென்சாக இருந்ததால், "எழுத்து பூர்வமான கருத்தை இந்தியா பதிவு செய்ய முடியாது' என, கூறப்பட்டது. ஆனால், தீர்மானம் தொடர்பான கருத்து வலுவுள்ளதாக இருக்க வேண்டும், என்பதால்,இந்தியா, எழுத்து பூர்வமான கருத்தை, இந்த சபையில் பதிவு செய்துள்ளது.

திருத்தம் இல்லை: இலங்கையில் "இனப் படுகொலை' நடந்ததாக கூறி, இந்தியா தனது கருத்தை பதிவு செய்யும் படி, தமிழக கட்சிகள் வற்புறுத்தின. ஆனால், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில், இந்தியாவின் தரப்பில் எந்த திருத்தமும் செய்யப்படவில்லை.

தமிழக அரசின் 2013-2014 நிதிநிலை ஆண்டுக்கா பட்ஜெட்

தமிழகத்தின் 2013 - 14ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பில்லை; இருக்கும் வரியை உயர்த்தவும் இல்லை. அதே நேரத்தில், அரசு வழங்கும் அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட விலையில்லா திட்டங்களுக்கு, பட்ஜெட் மதிப்பில், 31 சதவீதத் தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால், நிதிப் பற்றாக்குறை, 23 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

"புதிய வரி விதிக்கப்படவில்லை, இருக்கும் வரியை உயர்த்தவுமில்லை' என்ற கோஷத் துடன், 2013 - 14ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். காவிரி டெல்டா மாவட்டங்களைப் போல, வறட்சி பாதிப்புக்கு உள்ளான பிற மாவட்டங்களுக்கு, நிவாரணம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடரும் என்ற அறிவிப்பும், அதற்கான நிதி ஒதுக்கீடுகளையுமே, பட்ஜெட்டில், நிதி அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.வேளாண்மை: இதுவரை இல்லாத அளவாக, வேளாண்மை துறைக்கு, 5,189 கோடி ரூபாய் ஒதுக்கீடும், அரசு அலுவலகங்களுக்கு, சூரிய மின் சக்தி அமைக்க, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், ஐந்து லட்சம் ரூபாய் ஒதுக்கீடும், 17 ஆயிரம் காவலர்கள், 1,091 துணை ஆய்வாளர்கள், 1,005 தீயணைப்பு பணியாளர்கள் தேர்வு, பொது வினியோகத் திட்டத்துக்கு, 4,900 கோடி ரூபாய் ஒதுக்கீடு போன்றவை, பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

ரூ.20க்கு அரிசி: அரிசி விலையை கட்டுப்படுத்த, கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகள் மூலம், ஒரு லட்சம் டன் அரிசி, கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்படும். இதேபோல், காய்கறி விலையைக் கட்டுப்படுத்த, கூட்டுறவு மற்றும் தோட்டக்கலை துறைகள் மூலம், "பண்ணை பசுமை நுகர்வோர்' கடைகள் திறக்கப்படும்.

நில வங்கி: தொழில் உற்பத்தியைப் பெருக்க, புதிய தொழில்களை ஊக்குவிப்பதற்காக, சிப்காட் நிறுவனம் மூலம், 25 ஆயிரம் ஏக்கர் கொண்ட நில வங்கி ஏற்படுத்தப்படும். தென் மாவட்டங்களில் தொழில்களை ஊக்குவிக்க, புதிய சலுகை தொகுப்பு விரைவில் அறிவிக்கப்படும். சிறிய மற்றும் நடுத்தர கட்டமைப்பு திட்டங்களுக்கு, 770 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்கவும், சிறப்பு சலுகை தொகுப்பு அறிவிக்கப்படும்.

சாலை மேம்பாடு: நெடுஞ்சாலைத் துறையின் ஒதுக்கீடு, 6,452 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்புக்கு, 2,032 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை ஆணை யம் போல, தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலை
ஆணையம் உருவாக்கப்படும். சென்னையில், பல்வேறு போக்குவரத்துகளை இணைக்க, ஆய்வுப் பணிகள் துவங்கப்படும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துக்கு, 6,511 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. முகாம்களுக்கு வெளியில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும், முதல்வரின் காப்பீட்டுத் திட்டம் அமல்படுத்தப்படும்.

கல்வி: அனைத்துப் பள்ளிகளிலும் 2013 - 14ம் ஆண்டுக்குள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் கிடைப்பது உறுதி செய்யப்படும். பள்ளிக் கல்விக்காக, 1,299 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். நான்காவது மாநில நிதி ஆணைய அறிக்கை, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. விலையில்லா அரிசி, மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, பசுமை வீடுகள், முதல்வரின் காப்பீட்டுத் திட்டம், மாணவர்களுக்கு மடி கணினி உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், வரும் நிதியாண்டிலும் தொடர்கின்றன. இத்திட்டங்களுக்காக, 43 ஆயிரத்து 449 கோடி ரூபாய், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு உள்ளது.

நிதி நெருக்கடி: பட்ஜெட்டின் முடிவுரையில், நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், ""கடும் நிதி நெருக்கடி நிலவும் சூழலில், புதிய முயற்சிகளுக்கும், நடப்புத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பொது விவாதத்தின் போதும், மானிய கோரிக்கை விவாதங்களின் போதும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பல அறிவிப்புகளையும், திட்டங்களையும் வெளிப்படுத்துவர்,'' என்றார். நிதி அமைச்சரின் அறிவிப்பை அடுத்து, பட்ஜெட் அறிவிப்புகளை, முதல்வர் வெளியிடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்புகளுக்காக, பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தமிழக பட்ஜெட்: முக்கிய அறிவிப்புகள்

*தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம், 17,138 காவலர்கள், 1,091 எஸ்.ஐ.,க்கள், 1,005 தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் 292 சிறை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
* 2013- 14ம் நிதியாண்டில், 2 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
* காய்கறி சாகுபடி பரப்பளவை, 7.25 லட்சம் ஏக்கரில் இருந்து, 8.2 லட்சம் ஏக்கராக உயர்த்த, சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
* மேலும், 5 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி பரப்பு, திருந்திய நெல் சாகுபடி முறையின் கீழ் கொண்டு வரப்படும்.
* சிறு, குறு விவசாயிகள், நுண்ணீர் பாசன திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கான ஒரு ஏக்கர் உச்சவரம்பு நீக்கப்படும். மேலும், 530 கோடி ரூபாய் செலவில், 1.30 லட்சம் ஏக்கர் பாசன பரப்பு, இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
* இந்த நிதி ஆண்டு ஆறு லட்சம் ஆடுகள் மற்றும் 12
ஆயிரம் கறவை பசுக்கள் இலவசமாக வழங்கப்படும்.
*பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கும் திட்டம், 2014, மார்ச் வரை நீடிக்கப்படுகிறது.
* தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சிப்காட் நிறுவனம் மூலம், 25 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பு கொண்ட, நில வங்கி ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் மூலம், தூத்துக்குடியில், புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்.
*168 கி.மீ., நீள, இடைவழித்தட மாநில நெடுஞ்சாலைகள், இருவழித்தடங்களாகவும்; 1,000 கி.மீ., நீள, ஒருவழித்தட முக்கிய மாவட்ட சாலைகள், இடைவழித் தடங்களாகவும், தரம் உயர்த்தப்படும். ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கு, 2,032 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது.
*சென்னையில், 271.68 கோடி ரூபாய் செலவில், நான்கு மேம்பாலங்களும், மதுரை, காளவாசல், கோரிபாளையம் ஆகிய இடங்களில், 130 கோடி ரூபாய் செலவில், இரண்டு மேம்பாலங்களும் அமைக்கப்படும்.
*தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணியின்கீழ், அதிக போக்குவரத்து உள்ள, 1,678 கி.மீ., சாலைகள், 8,580 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்.
* தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை போல, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
*தஞ்சை மற்றும் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், 30 கோடி ரூபாயில், இரண்டு மண்டல புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
*பசுமை வீடுகள் திட்டத்தில், 60 ஆயிரம் வீடுகளும், இந்திரா வீட்டு வசதி திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகளும் கட்டப்படும்.
*தமிழ்நாடு கிராம குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில், 750 கோடி ரூபாயில், 15 ஆயிரத்து 115 குடியிருப்புகள் கட்டப்படும்.
*மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாகை, வேலூர், சேலம், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களின், முக்கிய கூட்டுகுடிநீர் திட்டங்களுக்கு, 212.54 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது.

Tuesday, March 19, 2013

திமுக கூட்டணியில் இருந்து விலகியது :


ஐக்கிய முற்போக்கு கூட்‌டணி அரசில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் முறைப்படி விலகியதற்கான கடிதம் நேற்று இரவு ஜனாதிபதியிடம் அளிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை பார்லிமென்டில் நிறைவேற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா ஏற்றுக் கொண்டால், தன் முடிவை மறுபரிசீலனை செய்யத் தயார் என, கருணாநிதி அறிவித்திருந்த நிலையில் இந்த விலகல் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நேற்று நடந்த காங். எம்.பி.க்கள் கூட்டத்தில், கருணாநிதியின் கோரிக்கை குறித்து சோனியா கருத்து தெரிவிக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசில் இருந்து தி.மு.க., விலகுவதாக கருணாநிதி அறிவித்தார். இதனால் மத்தியில் 9 ஆண்டுகளாக இருந்த காங்.-தி.மு.க.கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவே தி.மு.க.பார்லிமென்ட் கட்சி எம்.பி.க்கள் தலைவர் டி.ஆர்.பாலு, டில்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, முறைப்படி தி.மு.க. விலகியதற்கான கடிதத்தினை கொடுத்தார்.

அமைச்ர்கள் இன்று ராஜினாமா:

இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை, நேரில் சந்தித்து அவரது அமைச்சரவையில் உள்ள 5 தி.மு.க.அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளனர். இதற்கிடையே தி.மு.க., விலகல் கடிதம் கொடுத்ததையடுத்து, காங். ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் பிரதமர் இல்லத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குறித்தும், தி.மு.க.வின் கோரிக்கை குறித்தும் தீவிர ஆ‌லோசனை நடத்தப்பட்டது. இதனால் டில்லி அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது. திருத்தங்களை ஏற்றால் பரிசீலிப்போம் என கருணாநிதி அறிவித்திருப்பதால் இன்றும் திடீர் அரசியல் திருப்பங்கள் நிகழலாம் என கூறப்படுகிறது.இலங்கை தமிழர் விவகாரத்தை முன்னிறுத்தி விலகியுள்ளதால், லோக்சபா தேர்தலில், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் புது கூட்டணி உருவாக்கும் வாய்ப்புள்ளது என்ற அரசியல் கணக்கும், தி.மு.க., வகுத்துள்ளது.
இலங்கையில், 2009ல், நடந்த இறுதிக்கட்டப் போரின் போது, மனித உரிமை மீறல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிரான, ஒரு தீர்மானத்தை, அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இதன் மீதான ஓட்டெடுப்பு, 21ம் தேதி நடக்கவுள்ளது. இந்நிலையில், அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
எச்சரிக்கை:

"அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்களை கொண்டு வரவில்லை என்றால், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவோம்' என, மத்திய அரசுக்கு ஏற்கனவே, தி.மு.க., மிரட்டல் விடுத்தது. மேலும், "இலங்கையில் நடந்த படுகொலையை, இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும். சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் அமைத்து, குறிப்பிட்ட காலவரையற்றுக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், ஐ.மு., கூட்டணியிலிருந்து விலகுவோம்' என, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, கருணாநிதி, கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தூதர்கள்:

இதையடுத்து, நேற்று முன்தினம், சோனியாவின் தூதர்களாக, மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் ஆகியோர் கருணாநிதியை, அவரது, சி.ஐ.டி., காலனி இல்லத்தில் சந்தித்து பேசினர். அவர்களின் பேச்சுவார்த்தை இரண்டரை மணி நேரம் நீடித்தது. பேச்சுவார்த்தையின் போது, எந்த உத்தரவாதமும் கருணாநிதியிடம், மத்திய அமைச்சர்கள் தெரிவிக்கவில்லை. சோனியா மற்றும் ராகுலுடன் மத்திய அமைச்சர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்; ஆனால், எந்த முடிவும் எட்டவில்லை. நேற்று காலை, டில்லியிலிருந்து எந்த தகவலும் கருணாநிதிக்கு வரவில்லை என்பதால், அவர் அதிருப்தி அடைந்தார். இதற்கிடையில், அமெரிக்கா வெளியிட்ட தீர்மானமும், கருணாநிதியை எரிச்சல் அடைய வைத்தது. உடனடியாக அவர் பொதுச்செயலர் அன்பழகனிடம் தொடர்பு கொண்டு பேசினார். பின், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன், அறிவாலயத்தில் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். பின், நிருபர்களின் சந்திப்பில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக, தி.மு.க., வின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்யாததால், மத்திய அமைச்சரவையிலிருந்தும், ஐ.மு., கூட்டணியிலிருந்தும், தி.மு.க., விலகுவதாக கருணாநிதி அறிவித்தார். "வெளியில் இருந்து மத்திய அரசுக்கு ஆதரவு தரப்போவதில்லை' என்றும் தெரிவித்தார்.
தி.மு.க., ஆதரவை விலக்கிக் கொண்டாலும், மத்திய அரசுக்கு ஆபத்து இல்லை என்று, நிதியமைச்சர் சிதம்பரமும், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர், கமல்நாத்தும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
6 முறை மிரட்டல்:

இதுவரை மிரட்டிய தி.மு.க.,: தி.மு.க., இதுவரை, ஐந்து முறை மிரட்டல் விடுத்து, ஆறாவது முறையில்தான், கூட்டணியிலிருந்து விலகியுள்ளது.
* 2006 அக்., - நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், 10 சதவீத பங்குகளை, தனியாருக்கு விற்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "கூட்டணியை விட்டு விலக நேரிடும்' என, தி.மு.க., எச்சரித்தது. இதனால், மத்திய அரசு, முடிவை மாற்றிக் கொண்டது.
* 2008 அக்., - இலங்கையில் இறுதிக் கட்டப் போர் நடந்த போது, போர் நிறுத்தம் கோரி, கூட்டணியிலிருந்து விலகப் போவதாக அறிவித்தது. அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, சென்னையில் கருணாநிதியை சந்தித்த உடன், திடீரென முடிவு மாறி விட்டது.
* 2011 மார்ச் - தமிழக சட்டசபை தேர்தலின் போது, தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் - தி.மு.க., இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கூட்டணியிலிருந்து விலக தி.மு.க., முடிவு செய்தது. மீண்டும் முடிவு மாறியது.
* 2012 மார்ச் - "இலங்கைக்கு எதிராக, ஐ.நா.,வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்ததை ஆதரிக்காவிட்டால், கூட்டணியிலிருந்து விலகுவோம்' என, அப்போதும் தி.மு.க., எச்சரித்தது. நீர்த்துப்போன தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததும், முடிவில் மாற்றம் செய்யப்பட்டது.
* 2012 மே - பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது. "விலை உயர்வை குறைக்காவிட்டால், கூட்டணியிலிருந்து விலகுவோம்' என, ஆவேசமாக அறிவித்தது. பின் முடிவை மாற்றிக் கொண்டது.
* 2013 மார்ச் - "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால் கூட்டணியிலிருந்து விலக நேரிடலாம்' என, எச்சரித்தது. நேற்று கூட்டணியிலிருந்து விலகியது.
இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க., நிலைப்பாடு:

இலங்கை பிரச்னையில், தி.மு.க.,வின் நிலைப்பாடு, அவ்வப்போது பல வடிவங்கள் எடுத்துள்ளது.
1956: சிதம்பரத்தில் நடந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவளித்து தீர்மானம் நிறைவேற்றம்.
1977: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, சென்னையில் பேரணியை தி.மு.க., நடத்தியது.
1981: அப்போதைய பிரதமர் இந்திராவிடம் இலங்கை பிரச்னை கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தில் நடந்த போராட்டத்தில் கருணாநிதி கைது.
1981: வெலிக்கடை சிறையில், முப்பதுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, மறுநாள் சென்னையில் கண்டன பேரணியை தி.மு.க., நடத்தியது.
1983: தமிழக சட்டசபையில், இலங்கை தமிழர் குறித்து நடத்தப்பட்ட விவாதம் பிரச்னையானது. மத்திய, மாநில அரசுகள் இலங்கை பிரச்னையை கண்டு கொள்ள மறுக்கின்றன எனக்கூறி கருணாநிதியும், அன்பழகனும் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர்.
1985 மே 13: தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பை (டெசோ) சென்னையில்கருணாநிதி துவங்கினார்.
1986 மே: டெசோ சார்பாக "ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாட்டை', மதுரையில் தி.மு.க., நடத்தியது.
1989: ராஜிவ் ஆட்சிக்காலத்தில் அனுப்பப்பட்ட அமைதிப்படை சென்னை திரும்பியது. முதல்வராக இருந்த கருணாநிதி, அமைதிப்படையை வரவேற்க மறுத்துவிட்டார். இதனால், இந்திய இறையாண்மையை அவர் அவமதித்ததாக பிரச்னை கிளம்பியது.
2009 ஏப்.27: இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த போது, போரை நிறுத்தக்கோரி கருணாநிதி திடீர் உண்ணாவிரதத்தை துவக்கினார். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக கூறி அன்று மதியமே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
2012 ஆக.12: டெசோ துவங்கி 27 ஆண்டுகள் கழித்து, "ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு' சென்னையில் நடத்தப்பட்டது.
அக்.21: டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, தி.மு.க., எம்.பி.,க்கள் குழு பிரதமரிடம் அளித்தது.
2013 மார்ச் 5: டெசோ சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி செய்ததாக ஸ்டாலின் கைது.
மார்ச் 7: டில்லியில் டெசோ சார்பாக அகில இந்திய மாநாடு, கருத்தரங்கம் நடந்தது. அழைப்பு விடுக்கப்பட்ட பெரும்பாலான முக்கிய வட மாநில தலைவர்கள் இதில் கலந்துகொள்ளவில்லை.
மார்ச் 12: இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு, மத்திய அரசு ஆதரவளிக்கக் கோரி, தமிழகத்தில் டெசோ சார்பில் பந்த் நடத்தப்பட்டது.
மார்ச் 19: அமைச்சரவையில் நான்கு ஆண்டுகள் கழித்த பிறகு, இலங்கை தமிழர் விவகாரத்தில், மத்திய அரசின் போக்கு அதிருப்தி அளிப்பதாகக் கூறி, அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக கருணாநிதி அறிவித்தார். அதன்படி நள்ளிரவில் ஜனாதிபதியிடம் விலகல் கடிதம் கொடுக்கப்பட்டது.