எண்ணங்களின் பிரதிபலிப்பு

Saturday, March 12, 2016

ஆளுங்கட்சியை எதிர்ப்பது மட்டும் தான் எதிர்க்கட்சியின் வேலையா?

ஆளுங்கட்சியை எதிர்ப்பது மட்டும் தான் எதிர்க்கட்சியின் வேலையா?
'அரசின் அறிவிப்புகள், மக்கள் நலனுக்கு எதிரானவை; விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ஏழை, எளியவர்களின் நலன் சார்ந்த எந்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை; இது கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட். இதுவரை அறிவித்த அனைத்து திட்டங்களும், கானல் நீராவே உள்ளன; ஒரு திட்டம் கூட முழுமை பெறவில்லை' இவை, மாநில சட்டசபை மற்றும் பார்லிமென்ட்டில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளன்று, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஊடகங்களுக்கு தந்த பேட்டியில் குறிப்பிட்டவை.முக்கிய மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு மற்றும் விவாதங்களின் போது சபையில் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தி மையப்பகுதியில் கூடி, துறை அமைச்சரை பேசவிடாமல் செய்வது, கூண்டோடு வெளிநடப்பு செய்து சபை நேரத்தை வீணடிப்பது, இவை தான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களின் ஆஸ்தான செயல்பாடு; இது, தங்கள் தொகுதியை மேம்படுத்துவார் என நம்பி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் தார்மீக கடமையாகி விட்டது!


எதிர்க்கட்சி என்ற பிம்பம் :

இதன் மூலம் அரசின், ஆளுங்கட்சியின் அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளை எதிர்க்கும் கட்சியே, எதிர்க்கட்சி என்ற பிம்பம் உருவாகி விட்டது. இன்னும் சொல்லப் போனால் அரசின் செயல்பாடுகள் அனைத்தையும், கண்மூடித்தனமாக எதிர்ப்பது மட்டுமே தங்கள் பணி என்ற வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. நம் நாட்டில் மட்டும் தான் இந்த நிலையா அல்லது உலகெங்கும் உள்ள அரசியல் அகராதியில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்றாலே அரசை எதிர்ப்பவர்கள் என்ற வகையில் தான் நடந்து கொள்கின்றனரா?


'ஷேடோ கேபினட்':

சமீபத்தில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி தலைமையில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அதில் அவர், 'ஷேடோ கேபினட்' பற்றிக் கூறினார். அப்படி என்றால் என்ன? பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், எதிர்க்கட்சி உறுப்பினர்களும், அமைச்சர்களை போல் செயல்படுகின்றனர். ஆளுங்கட்சி அமைக்கும் அரசில், ஒவ்வொரு துறைக்கென தனித்தனி அமைச்சர்கள் இருப்பது போல், எதிர்க்கட்சியினரும் அந்தந்த துறைக்கென அமைச்சர்களை நியமிப்பர். இவர்களுக்கு, 'நிழல் அமைச்சர்'கள் எனப்பெயர். இவர்கள் அமைக்கும் அமைச்சரவை தான் ஷேடோ கேபினட் எனப்படும், 'நிழல் அமைச்சரவை!' இந்த நிழல் அமைச்சரவை, அரசின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கூர்ந்து கவனிக்கும். நிழல் அமைச்சர்கள், அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களின் செயல்பாட்டை கண் கொத்திப் பாம்பாக கவனிப்பர்.அரசின் திட்டங்கள், அதற்காக ஒதுக்கப்படும் நிதி, திட்டத்தின் சாதக பாதகங்களை, நிழல் அமைச்சரவை விரிவாக அலசும். பார்லிமென்டில் இதுகுறித்த விவாதங்களும் இடம்பெறும். அரசு, ஒரு திட்டத்தை முன்

மொழிந்தால், அதுகுறித்து அமைச்சர்கள் விளக்க வேண்டும். அதற்கு செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காண்பிக்க வேண்டும்.


நிழல் அமைச்சரவை :

அதே திட்டத்தை, எவ்வளவு தொகை செலவில் முடிக்கலாம்; அதனால்,ஏற்படும் சாதக பாதங்கங்கள் குறித்து, நிழல் அமைச்சரவை ஆய்வு செய்யும். இதன் மூலம் அரசின் பிடி, எதிர்க்கட்சிகளின் கையில் இருக்கும்; ஊழல், தன்னிச்சையான செயல்பாடு, எதேச்சதிகாரம் தடுக்கப்படும். நிழல் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ன்று நிழல் அமைச்சர்களாக செயல்படும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அடுத்த தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அதே துறையின் அமைச்சர்களாக அவர்கள் பொறுப்பேற்கின்றனர். அப்போது, முந்தைய அரசின் செயல்பாட்டில் இருந்த குறைகளை களைந்து, சிறப்பான ஆட்சியை வழங்க முடிகிறது.

நம் நாட்டில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. ஐந்து ஆண்டுகளும் சபையில் கூச்சலிட்டு, சபை நடவடிக்கையை முடக்கி, அரசின் செயல்பாடுகள் அனைத்தையும் குறை கூறிய எதிர்க்கட்சிகள், தேர்தல் பிரசாரத்தின் போது மட்டும், ஒரு நீண்ட அறிக்கையை வெளியிடுகின்றன. அதில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' என்ற அடைமொழியுடன், இலவச அறிவிப்பு, ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் ஆசை துாண்டும் வகையிலான அறிவிப்புகள் அந்த அறிக்கையில் இடம்பெறும்.





இலவச அறிவிப்பு:

இவர்களுக்கு சற்றும் சளைக்காமல், ஆளுங்கட்சியின் சாதனை என்ற பெயரில், ஆளுயர போஸ்டர், பேனர்கள் வைக்கப்படும். கடந்த முறை வழங்கிய இலவசங்களை மிஞ்சும் வகையில், புதிய இலவச அறிவிப்புகள் வெளியாகும். ஒரு வேளை ஆளுங்கட்சி மீண்டும் வென்றால், மெகா ஊழல்கள் மீண்டும் அரங்கேறும்.

எதிர்க்கட்சி வெற்றி பெற்றால், புதியவர்களுக்கு கொள்ளையடிக்க வாய்ப்பு கிடைக்கும். சபை நாகரிகம், சபை நடவடிக்கை கூட தெரியாத பலரும், அமைச்சர்களாகி, சட்டசபை, பார்லிமென்டை அலங்கரிப்பர். கிரிமினல் குற்றவாளிகள், குண்டா ராஜ்யம் செய்வோர் என, பல தரப்பினரும் மக்கள் பிரதிநிதிகளாய், நம் சார்பாக அங்கு அமர்ந்திருப்பர். ஆனால், நாம் எதை எண்ணி ஓட்டளித்தோமோ அதற்கு நேர்மாறாக அவர்களின் நடவடிக்கைகள் அமையும்.
கடந்த முறை ஆளுங்கட்சியின் எந்த திட்டங்களை குறை கூறினார்களோ, அதே திட்டங்களை இன்னும் கூடுதல் செலவில், புதிதாக அமைந்த அரசு நிறைவேற்றும். இதுதான், அன்றைக்கு எதிர்க்கட்சியாக செயல்பட்டவர்களின் உச்சபட்ச சாதனை.


Advertisement
மக்கள் மத்தியில்...

இவை அனைத்திற்கும் தீர்வாக, வெளிநாடுகளில் இருப்பது போல் நம் நாட்டிலும், எதிர்க்கட்சிகள் நிழல் அமைச்சரவை அமைத்து, ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கலாம். அவர்களின் தவறுகளை, சட்டசபை அல்லது பார்லிமென்டில் தைரியமாக சுட்டிக் காட்டலாம். அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்களின் வழிகாட்டுதலின் படி, பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்களை ஆய்வு செய்து ஆய்வறிக்கை வெளியிடலாம். ஊடகங்கள் வாயிலாக, தங்கள் ஆய்வறிக்கையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கலாம்.இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்க்கட்சியினர், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, நீண்ட தேர்தல் அறிக்கையை வெளியிடத் தேவையில்லை. அதில், இலவசங்களை அள்ளி வீசி, விலை மதிப்பற்ற ஓட்டுகளை விலை பேசி விற்க வேண்டிய அவசியமில்லை; ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடத் தேவையில்லை. இப்படி செயல்படுவதன் மூலம் தங்கள் தொகுதி மக்களிடையே நல்ல, நேர்மையான மக்கள் பிரதிநிதி என்ற பெயரெடுத்து, தங்கள் தொகுதியை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ளலாம்; மக்கள் நம்பிக்கையை பெறுவதின் மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம். இதுபோல், நேர்மையான வகையில் செயல்பட்டு, தன் கடமையை சரிவர செய்த எதிர்க்கட்சி உறுப்பினர், ஆளுங்கட்சி வரிசையில் அமரும் போது, முந்தைய ஆட்சியின் தவறை எண்ணிப் பார்த்து, சரியான பாதையில் அரசை வழி நடத்துவார்.

வேலைவாய்ப்பு பெருகும் :

தான் தவறிழைத்தால், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர் தன் செயல்பாடுகளை விமர்சிப்பர் என்ற அச்ச உணர்வுடன் செயல்படுவார். இதனால் ஊழல், சர்வாதிகாரம் மெல்ல மெல்ல மறையும். நல்லாட்சியின் மூலம் நாடு வளம் பெறும்; இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெருகும். தரமான கல்வி, சுத்தமான குடிநீர், குண்டு குழி இல்லா சாலைகள், சிறந்த இலவச மருத்துவ வசதி, அனைவருக்கும் உணவு என, நாட்டு மக்களின் கனவு மெய்ப்படும்.இவை அனைத்தும், ஆளுங்கட்சியின் கையில் மட்டுமில்லை; எதிர்க்கட்சியினர் நினைத்தால் எதையும் மாற்றலாம். அரசின் கொள்கை முடிவுகள், திட்டங்களை எதிர்ப்பவர்கள் மட்டும் எதிர்க்கட்சியினர் அல்ல; ஊழலை எதிர்த்து, எதிர்பாராத மாற்றங்களை கொண்டு வருபவர்கள் தான் எதிர்க்கட்சிகள் என்பதை உணர வேண்டும்.