எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, May 30, 2013

மத்திய அரசால் அமைக்கப்படும் ” அல்ட்ரா மெகா பவர் “ திட்டத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து, எட்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும், செய்யூர், "அல்ட்ரா மெகா பவர்' அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. அது போல், உடன்குடி அனல் மின் திட்டத்திற்கும், சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்துள்ளது.

தமிழகத்தின் தற்போதைய மின் பற்றாக்குறை, 4,000 மெகா வாட்டாக உள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல், தமிழக அரசு திணறி வரும் நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில், இரண்டு முக்கிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு, ”ற்றுச்‹ழல் அனுமதி கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தை ஒட்டி அமைந்த செய்யூர் பகுதியில், 1995ம் ஆண்டில், 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் திட்டம் அமைக்க, பிரபல பொதுத்துறை நிறுவனமான, என்.டி.பி.சி., களம் இறங்கியது.ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த மிகப்பெரிய நிறுவனம் ஒன்று, தன் "கோல்ப்' விளையாட்டு மைதானம், அந்தத் திட்டத்தால் பாதிப்படையும் என கருதியதால், அந்த அனல் மின் நிலையத்தை, அமைய விடாமல் தடுத்து விட்டது.

கடந்த, 2005ம் ஆண்டு, நாடு முழுவதும், ஐந்து இடங்களில், "அல்ட்ரா மெகா பவர்' மின் உற்பத்தி திட்டங்கள் அமைக்கப் படும் என, மத்திய அரசுஅறிவித்தது. அதில் ஒன்று, தமிழகத்திற்கும் கிடைத்தது. செய்யூர் பகுதியில் அந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. நிலம் கையப்படுத்துவது உள்ளிட்ட பல காரணங்களால், அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், செய்யூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் திட்டத்திற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் கிடைத்துள்ளது. கடந்த, 20ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, இந்த திட்டத்திற்கான, ஆவணங்களை, மத்திய மின்சார அமைச்சகம் தயார் செய்து கொண்டிருக்கிறது. திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிவிவரங்களை தொகுத்து அந்த ஆவணம் தயாராகி வருகிறது.தனியார் நிறுவனத்துடன் இணைந்து தான், இந்த மெகா திட்டத்தை செயல்படுத்த முடியும். எனவே, அந்த தனியார் நிறுவனம் எது என்பதை தேர்வு செய்து, தேவையான நிதி விவரங்களை இறுதி செய்து, அதன் பிறகு தான் பிற வேலைகள் ஆரம்பமாகும். இவை எல்லாம் ஒழுங்காக நடைபெற்றாலும் கூட, திட்டத்தை செயல்படுத்த, எப்படியும், மூன்று
அல்லது நான்கு ஆண்டுகள் வரை ஆகிவிடும்.தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை, 4,000 மெகா வாட் என இருக்கும் நிலையில், இதை பூர்த்தி செய்ய, இந்தசெய்யூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் உற்பத்தி நிலையம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. திட்டத்தை விரைந்து செயல்படுத்த, ஆட்சியாளர்கள், ஆர்வமும், வேகமும் காட்டினால் மட்டுமே, இது சாத்தியமாகும்.

உடன்குடிக்கும் "ஓகே':தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை பிரச்னைக்கு ஓரளவு தீர்வு ஏற்படுவதற்கான வகையில், உடன்குடியில், 1,600 மெகா வாட் மின் உற்பத்தி திட்டத்திற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் கிடைத்துள்ளது.திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில், அனல் மின் நிலையம் அமைக்க, கடந்த 2006ம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது; அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. தமிழ்நாடு மின்சார வாரியமும், "பெல்' நிறுவனமும் இணைந்து, திட்டம் நிறைவேற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது.

உடன்குடியில், 800 மெகா வாட் திறன் கொண்ட, இரண்டு யூனிட்டுகளை அமைப்பது எனவும், 1,600 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.இந்தியாவில் உள்ள அனைத்து அனல்மின் நிலையங்களுக்கும், பாய்லர்களை தயாரித்து அளிக்கும் திருச்சியில் உள்ள, "பெல்' நிறுவனம், கடந்த, ஆறு ஆண்டுகளாக உடன்குடி மின் உற்பத்தி திட்டத்தை கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து, உடன்குடி மின் உற்பத்தி திட்டத்தில் இருந்து, கடந்தாண்டு, "பெல்' நிறுவனத்தை, தமிழக அரசு நீக்கிவிட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து, தமிழக அரசே இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.இந்த


திட்டத்தை ஆரம்பிக்க தேவையான,சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் கேட்டு, மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று, கடந்த, 10ம் தேதி, உடன்குடி அனல் மின் உற்பத்தி திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது.

கடலூரில் எப்போது?: மத்திய மின்சாரத்துறை அமைச்சராக, சுஷில்குமார் ஷிண்டே இருந்த போது, தமிழகத்துக்கு மேலும் ஒரு, "அல்ட்ரா மெகா பவர்' மின் திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தை கடலூரில் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த, தமிழக அரசு இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன், தமிழக காங்கிரஸ், எம்.பி.,க்கள் சிலர், கடலூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் திட்டம் குறித்து, மத்திய மின்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் முறையிட்டனர்.

அப்போது, நிலம் வழங்க மாநில அரசு முன்வந்தால், கடலூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க தயார் என, கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 8, 2013

கார்நாடகாவில் காங்கிரஸ் அபார வெற்றி :


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு, ஆளும் பாரதிய ஜனதாவுக்கு, நேற்று பேரிடியாக அமைந்தது. ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சியில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் துவங்கியுள்ளது. முதல்வராகப் பொறுப்பேற்பது, சித்தராமைய்யாவா அல்லது மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவா என்பது, இன்று தெரியும்.
மாறி மாறி முன்னிலைவட மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு பெற்றிருந்த பா. ஜ.,வுக்கு, ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என, தென் மாநிலங்களில் ஒன்றான, கர்நாடகாவில் ஆட்சி செய்ய, 2006ம் ஆண்டு வாய்ப்பு கிடைத்தது.
முதல்வராக இருந்த எடியூரப்பா மீது, ஊழல் புகார்கள் கூறப்பட்டதால், அவர் கட்சியிலிருந்து கழற்றி விடப்பட்டார். ஜெகதீஷ் ஷெட்டர், முதல்வராக இருந்தார்.கடந்த, 5ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. இதற்காக, மாநிலம் முழுவதும், ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுகள் எண்ணத் துவங்கிய சில நிமிடங்களில், பா.ஜ.,வும், அடுத்த சில நிமிடங்களில், தேவகவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளமும், மாறி மாறி முன்னிலையில் வந்தன.
அறுதிப் பெரும்பான்மை
காலை, 9:00 மணியளவில் முன்னிலை பெறத் துவங்கிய காங்கிரஸ், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, முன்னிலை பெற்று, ஆட்சி அமைக்கத் தேவையான, 113 இடங்களுக்கும் மேலாகப் பெற்றது.
மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்து விட்டதால், தேர்தல் நடைபெறவில்லை. ஓட்டுகள் பதிவான தொகுதிகளுக்கு நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையில், அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை பெற்ற காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்த தேர்தல் முடிவு, சில பெரிய தலைவர்களுக்கு, தோல்வியை அளித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநிலத் தலைவர், குமாரசாமியின் மனைவி அனிதா, மாநில காங்கிரஸ் தலைவர், பரமேஸ்வரா, மாநில, பா.ஜ., தலைவர், ஈஸ்வரப்பா, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் இப்ராகிம், தொழில்துறை அமைச்சராக இருந்த, நிரானி போன்றோர், தோல்வி அடைந்துள்ளனர்.
முன்னாள் துணை முதல்வர் சித்தராமைய்யா, பா.ஜ.,விலிருந்து பிரிந்து, தனிக்கட்சி துவக்கி, ஓட்டுகளைப் பிரித்து, பா.ஜ.,வுக்கு சிக்கலை ஏற்படுத்திய எடியூரப்பா, முடிவுகளைப் பார்த்த உடன், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த, ஜெகதீஷ் ஷெட்டர், முதல்வர் கனவில் மிதந்த, முன்னாள் முதல்வர் குமாரசாமி என, பலரும் வெற்றி பெற்றுள்ளனர்.
பா.ஜ.,வின் ஆதிக்கம் மிகுந்த, தக்ஷிண கன்னடா, உடுப்பி, பெல்லாரி போன்ற பகுதிகளிலும், அந்தக் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், முந்தைய தேர்தலை விட, இந்த தேர்தலில், காங்கிரஸ் வளர்ச்சி அமோகமாக இருந்ததை, முடிவுகளில் காண முடிந்தது.
சித்தராமைய்யாவுக்கு சிக்கல்
முடிவுகள் வெளியானதும் எழுந்த கேள்வி, காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தான். ஏனெனில், தேர்தலின் போது, முதல்வர் வேட்பாளர் யார் என, காங்கிரஸ் அறிவிக்கவில்லை. முன்னாள் துணை முதல்வர் சித்தராமைய்யா, தனக்குத் தான் அந்தப் பதவி என கூறி வந்தார்.இந்நிலையில், நேற்று திடீரென, மத்திய அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே, "நானும் போட்டியில் உள்ளேன்' என அறிவித்து, சித்தராமைய்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்.
வெற்றி பெற்றால், முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தோல்வி அடைந்துள்ளதால், இப்போதைக்கு போட்டி, சித்தராமைய்யாவுக்கும், கார்கேவுக்கும் தான்.
கார்கே தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்; சித்தராமையா, சிறுபான்மை குறும்பர் இனத்தை சேர்ந்தவர். மாநிலத்தின் பெரும்பான்மை சமுதாயங்களான, ஒக்காலிகா, லிங்காயத்தை சேர்ந்த யாரும், முதல்வர் வேட்பாளர் பட்டியலில், நேற்று இரவு வரை இல்லை.கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் புது முதல்வர் யார் என்பது, இன்று தெரிய வரும். அது போல், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெறப் போவது, பா.ஜ.,வா அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளமா என்பதும் தெளிவாகிவிடும்.


ஜெகதீஷ் ஷெட்டர் ராஜினாமா
சட்டசபை தேர்தல் தோல்வியை அடுத்து, கவர்னர் பரத்வாஜை சந்தித்த, முதல்வர், ஜெகதீஷ் ஷெட்டர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.நேற்று மதியம், கவர்னர் பரத்வாஜை சந்தித்த, முதல்வர், ஜெதீஷ் ஷெட்டர் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது, கவர்னர் பரத்வாஜ், புதிய அரசு அமையும் வரை, தற்காலிக முதல்வராக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.

சமாஜ்வாதி வெற்றி
உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி, கர்நாடக மாநிலத்தில், முதல் முறையாக வெற்றி பெற்று, கணக்கை துவக்கியுள்ளது.
சென்னபட்னா தொகுதியில் போட்டியிட்ட, சமாஜ்வாதியின், சி.பி.யோகேஸ்வரா, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான, குமாரசாமியின் மனைவி, அனிதாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
யோகேஸ்வராவுக்கு ஆதரவாக, உ.பி., முதல்வர், அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பதவிக்கு கார்கே போட்டி
""கட்சி மேலிடம் அனுமதித்தால், முதல்வர் பதவிக்கு போட்டியிட தயார்,'' என, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான, மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:கடந்த, 2009ம் ஆண்டு, லோக்சபா தேர்தலில் போட்டியிடுமாறு, கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டது. அதன் படி போட்டியிட்டு, வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளேன். அது போல், கர்நாடக முதல்வராக வேண்டும் என, கட்சி கேட்டுக் கொண்டால், அந்த உத்தரவை பணிந்து செயல்பட தயாராக உள்ளேன்.
எனினும், நான் தலித் சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால், மாநில முதல்வர் பதவியை வகிக்க விரும்பவில்லை. அந்தப் பதவிக்கு நான் தகுதியானவன் என கட்சி மேலிடம் தெரிவித்தால், ஏற்கத் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., கடும் அதிர்ச்சி
கர்நாடகாவில், பாரதிய ஜனதா, ஆட்சியைஇழந்துள்ளதால், அதன் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கட்சியின் செய்தித் தொடர்பாளர், ராஜிவ்பிரதாப் ரூடி கூறும் போது,""எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. தோல்வி எங்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்கு பல காரணங்கள் இருக்கின்றன. எல்லாமும் சேர்ந்து, எங்களை பாதித்து விட்டது,'' என்றார்.


நடிகை பூஜா காந்தி படுதோல்வி

டூ ராமநகரம் தொகுதியில் போட்டியிட்ட, மதச்சார்பற்ற ஜனதா தளம், கர்நாடக மாநில தலைவர், எச்.டி.குமாரசாமி, வெற்றி பெற்றார். அவரை அடுத்து வந்த, காங்கிரஸ் வேட்பாளர், மாரித்தேவரை விட, 25 ஆயிரம் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார்.மாநில காங்கிரஸ் தலைவர், ஜி.பரமேஸ்வரா தோல்வி அடைந்தார். கரடகெரே தொகுதியில் போட்டியிட்ட அவர், 18 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். வெற்றி பெற்றிருந்தால், முதல்வர் வேட்பாளர்கள் பட்டியலில் அவரும் இடம்பெற்றிருப்பார்.டியூரப்பா கட்சி சார்பில், ராய்ச்சூர் தொகுதியில் போட்டியிட்ட, கன்னட நடிகை பூஜா காந்தி, வெறும், 1,815 ஓட்டுகள் பெற்று, படுதோல்வி அடைந்தார்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, முன்னாள், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர், சி.எம்.இப்ராகிம், பத்ராவதி தொகுதியில் தோல்வி அடைந்தார்.ஜெகதீஷ் ஷெட்டர் அரசில், அமைச்சர்களாக இருந்தவர்களில், 12 பேர் படுதோல்வி அடைந்தனர்.