எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, November 20, 2013

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மோடியின் செல்வாக்கை நிர்ணயிக்காது : ராஜ்நாத் சிங் பேட்டி

 5 மாநில சட்டமன்ற தேர்தல், லோக்சபா தேர்தல் குறித்து பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல் முடிவுகளைக் கொண்டு மோடியின் செல்வாக்கை நிர்ணயிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

பா.ஜ., காங்கிரசிற்கு சமமான அல்லது அதை விட பெரிய கட்சி என்றே சொல்லலாம்; காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பழமையானதாக இருந்தாலும் அவற்றை விட பா.ஜ., ஒழுக்கம் நிறைந்த கட்சி; 1951 முதல் துவங்கிய பா.ஜ.,வின் பயணத்தில், சிலர் வந்து போயிருக்கலாம்; ஆனால் அதன் அடிப்படை கொள்கை என்றும் மாறியதில்லை; 1990ம் ஆண்டை விட 2013ல் பா.ஜ., வெகுவாக வளர்ச்சி அடைந்துள்ளது; அயோத்தி விவகாரத்தை தேர்தலின் போது கையில் எடுக்க நாங்கள் விரும்பவில்லை; அயோத்தி விவகாரம் என்பது தேசிய மற்றும் கலாச்சார பிரச்னை என்பது எங்களுக்கு தெரியும்; அயோத்தியில் ராமர் சிலை இருந்த இடத்தில் கோயில் அமைக்க அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது; ஆனால் அதனை எதிர்த்து சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்; அதனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்காக நாங்கள் காத்திருக்கிறோம்; உ.பி.,யில் அமித்ஷா கட்சியில் இருந்து விலக்கப்பட்டது எனது முடிவு; இதற்கு மோடி காரணம் எனவும்; கட்சியில் அவரது ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதாகவும் சிலர் தவறான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்; அவர் அமைதியாகவும், நாகரிகமாகவும் நடந்து கொள்பவர்; குஜராத்தில் அவர் ஏற்படுத்தி இருக்கும் வளர்ச்சி மற்றும் அவரின் திறமையான செயல்பாடு காரணமாக அவரை பிரதமர் வேட்பாளராக நான் தான் தேர்வு செய்தேன். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய மோடி மீதான குற்றச்சாட்டுக்களுக்கு காங்கிரசின் காழ்புணர்ச்சியே காரணம் என மக்கள் நன்றாக அறிந்துள்ளனர்; அவர்கள் ஆட்சியை பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்கள்; அதன் வெளிப்பாடு தான் மோடி மீதான குற்றச்சாட்டுக்கள்; நடைபெற்று வரும் 5 மாநில சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலின் முன்னோட்டம் என கூறுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்; இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது; சட்டசபை தேர்தலில் நிச்சயமாக 4 மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெறும்; சிலர் மோடியை பிரிவினைவாதி என கூறுகின்றனர்; ஆனால் அவரை நெருங்கி, அவரது நடவடிக்கைகளை கவனித்து பார்த்தால் அது தவறானது என்பது நன்றாக தெரியும்; மோடி ஒரு மிகச் சிறந்த மனிதநேயம் மிக்க நபர்; அவர் சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்றால் மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் சிறுபான்மையினரின் வருமானம் அதிகரித்து இருப்பது எவ்வாறு சாத்தியம் ஆகும்; தற்போது குஜராத்தில் உள்ள 70 முதல் 80 சதவீதம் நிறுவனங்கள் சிறுபான்மையினர் இனத்தவர்களுக்கு சொந்தமானதாகும்; 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரம் வேதனைக்குரியது; அதற்கு மோடி எவ்வாறு காரணமாக முடியும்; மோடி செய்த குற்றம் என்ன; எதற்காக அந்த கலவரத்திற்கு மோடி பொறுப்பேற்க வேண்டும்; ஒருவர் தவறு செய்திருந்தால் தான் அவர் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்; ஆனால் மத கலவரம் என்பது நாட்டில் குஜராத்தில் மட்டுமே முதலில் நடைபெற்றது அல்ல; 1969ல் அசாமில் நடைபெற்ற கலவரத்தில் 3 அல்லது 4 நாட்களில் 5000 பேர் கொல்லப்பட்டனர்; அப்போது அம்மாநில முதல்வர் அதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டாரா?.

காங்கிரசிற்கு வரலாறு என்பதே கிடையாது; மகாத்மாவின் விருப்பங்களையும் காங்கிரஸ் புறக்கணித்து விட்டது; நாட்டிற்கு சுதந்திரம் பெற்று தருவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் காங்கிரஸ்; அதறகாக தான் 1885ல் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது; சுதந்திரம் பெற்ற பின்னர் காங்கிரசை கலைத்து விடுமாறு மகாத்மா காந்தி கூறினார்; ஆனால் அக்கட்சியினர் காந்தியின் பெயரை மட்டும் பயன்படுத்திக் கொண்டு அவரது கொள்கைகளை விட்டுவிட்டனர்; காங்கிரஸ் 50 ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளது; ஆனால் நாட்டின் கிராமங்கள் பற்றி அக்கட்சி எவ்வித அக்கரையும் கொண்டதில்லை; மாறாக பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து கிராம நல திட்டங்களையும் பாழாக்கி உள்ளது; அனைத்தும் தமது நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

குலசேகரப்பட்டனம் ராக்கெட் ஏவுதளத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் கேரள, ஆந்திர 'லாபி'.. கருணாநி

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க பல நிபுணர்கள் வலியுறுத்தி வந்தபோதிலும், அதை வர விடாமல் இஸ்ரோவில் உள்ள கேரள, ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்களே காரணம், அவர்களே முட்டுக்கட்டையாக உள்ளனர் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ‘ஏவுதளம்' இங்கே வந்திட ஏன் வீண் தயக்கம்? என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை
மகேந்திரகிரியைச் சேர்ந்த திரவ எரிவாயு மையத்தில் பணிபுரிவோர் அனுப்பிய வேண்டுகோளினை பரிந்துரை செய்து நான் கடந்த 19-8-2013 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தேன்.
கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் "இஸ்ரோ" சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்திய வானியல் தொழில் நுட்பப் பயிலகம், வான்வெளி
தொடர்பான நுட்பவியல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால் வானியல் மற்றும் திரவ எரிவாயு தொடர்பானவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து பயிலகம் அமைக்கப்பட வேண்டுமென்பது தற்போதைய நிலையில் மிக அவசரமும், முக்கியத்துவமும் வாய்ந்ததாகும்.
நமது நாட்டில் வான்வெளி மற்றும் திரவ எரிவாயு தொடர்பான நிபுணத்துவம் மிக்கவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதாக எனக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. விமானங்கள் வடிவமைப்பு, கெலிகாப்டர் வடிவமைப்பு, அதிவேக விமானங்கள் உருவாக்கம், வான்வெளி தொழில் நுட்ப ஆய்வுகள் ஆகியவை சார்ந்த படிப்புகளுக்கு மகேந்திரகிரியில் ஏற்படவிருக்கும் திரவ எரிவாயு மையம் தகுதி வாய்ந்த ஒரு சிறப்பு நிறுவனமாக இருக்கும் என்பதால், அதனை ஏற்படுத்திட நான் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.
அந்தப் புதிய மையத்திற்குத் தேவையான அளவு நிலமும், நடைமுறைப்படுத்திட ஆலோசனை வழங்கும் தொழில் நுட்ப
நிபுணத்துவமும் உள்ளன என்பதையும் தெரிவித்திட விரும்புகிறேன். வானியல் துறையில் "இஸ்ரோ" தனது இரண்டாவது ஏவுதளத்தை
அமைக்கும் திட்டம் 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதற்காகக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு புதிய ஏவுதளம் அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக அந்தக் குழு ஆய்வு செய்தும் வருகிறது. எதிர்பார்த்த அளவிற்கு தென்தமிழ்நாடு தொழிற் துறையில் முன்னேற்றம் அடையாமல் இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்த அடிப்படை அம்சங்களும் பூகோள ரீதியாகத் தென் தமிழகத்தில் அமைந்திருப்பதோடு, திறன்மிக்க மனித ஆற்றல் மிகுதியாகவே அங்கே இருக்கின்றன.
எனவே, அந்தப் பகுதி மத்திய அரசின் உரிய கவனத்திற்கும், தொழில் வளர்ச்சித் திட்டங்களுக் கும் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும். நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் "இந்திய வான்வெளி - திரவ எரிவாயு மையம்" மற்றும் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் "இரண்டாவது ராக்கெட் ஏவுதளம்"" அமைப்பதன் மூலம் அந்த மண்டலமே வளர்ச்சி பெற்ற மண்டலமாக நிச்சயம் மாற்றமடையும் என்பதோடு நமது நாட்டில் தொழில் நுட்பப்புரட்சிக்கு வித்திடும் பகுதியாகவும் அது உருவாகும். எனவே இந்த இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை அமைப்பது குறித்து உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று என்னுடைய அந்தக் கடிதத்தில் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.
இந்த நிலையில்தான், கடந்த வாரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து "மங்கல்யான்" விண்கலம், முதன் முறையாக செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக வெற்றிகரமாகச் செலுத்தப்பட் டுள்ளது. 450 கோடி ரூபாய்ச் செலவில், இந்திய விஞ்ஞானிகளால், உருவாக்கப்பட்ட விண்கலம் ஆகும் அது. செவ்வாய்க் கிரகத்துக்கான இந்த விண்கலத்தைத் திட்டமிட்ட பாதையில் தொழில் நுட்ப ரீதியாகத் துல்லியமாக நிலைநிறுத்தியதன் மூலம் நமது இந்திய விஞ்ஞானிகள் உலகத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளனர்.
பூமியிலிருந்து சுமார் 300 நாட்களில் 44 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்து செவ்வாய்க் கிரகத்துக்கு அருகில் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் செல்ல விருக்கும் இந்த விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் வரிசையில் நான்காவதாக இந்தியா இந்த முயற்சியில் இடம் பெற்றுள்ளது என்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளத்தக்க செய்தியாகும்.
இதற்குக் காரணமாக இருந்த இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அரும்பணியாற்றியிருக்கும் அனைத்து விஞ்ஞானி களுக்கும் எனது இதயபூர்வமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். இந்தியாவுக்குப் பெருமையையும், மகிழ்ச்சி யையும் தேடித் தந்துள்ள "இஸ்ரோ", தமிழகத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து கசப்புணர்வோடும் பாராமுகமாகவும் நடந்து கொள்கிறதோ என்ற ஒரு அய்யப்பாடு 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சியை ஊக்கப்படுத்துவதற்காக ஆண்டுக்கு 60 திட்டங்கள் என வகுக்கப்பட்டன. இதற்காகக் கணிசமான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ராக்கெட் ஏவு தளங்கள் ஏற்கனவே உள்ளன. பல செயற்கைக் கோள் திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாலும், பல நாடுகள் செயற்கைக்கோள்களை ஏவிட இந்தியாவை அணுகுவதாலும் மேலும் ஒரு ராக்கெட் ஏவுதளத்தை அங்கேயே அமைக்க "இஸ்ரோ" முடிவெடுத்தது. ஆனால் அதற்கு மிகவும் பொருத்தமான இடம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினமே என்றுதான் "இஸ்ரோ"வைச் சேர்ந்த பல நிபுணர்கள் வலியுறுத்தினார்கள். எனினும் அதனைப் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல், ஸ்ரீஹரி கோட்டாவிலேயே தொடர்ந்து மூன்றாவது தளத்தையும் அமைக்கும் பணிகளை "இஸ்ரோ" தொடங்கி விட்டது என்கிறார்கள்.
அறிவியல் அடிப்படையிலும், பூகோள ரீதியாகவும், பாதுகாப்புக் கோணத்திலும் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ள குலசேகரப்பட்டினத்தில்
ஏவுதளம் அமைத்தால், வழக்கமாக ஆகும் செலவில் பல கோடி ரூபாயை மீதப்படுத்த வாய்ப்பு இருந்தும், சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய இந்தத் திட்டத்தைச் சிலர் திசை மாற்றி விட்டதாக அதிகாரிகளே வருந்துகிறார்கள்.
இதைப்பற்றித் திரவ இயக்க உந்து மைய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம். மனோகரன் கூறும்போது, "ஸ்ரீஹரிகோட்டாவை விட ராக்கெட் ஏவுதளம் அமைக்க மிகச் சிறந்த இடம் குலசேகரப்பட்டினம். இதனைச் தொழில் நுட்ப விபரங்கள் மூலமே உறுதிப்படுத்திட முடியும். பி.எஸ்.எல்.வி. செயற்கைக்கோள்களை தெற்கு நோக்கி ஏவி 450 முதல் 1000 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்த வேண்டும். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை பூமத்திய ரேகைக்கு மேலாக கிழக்கு நோக்கி ஏவி 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்த வேண்டும்.

உலக விண்வெளி விதிமுறைப்படி ஒரு நாடு ஏவும் ராக்கெட்டுகள், இன்னொரு நாட்டின் மீது பறக்கக்கூடாது. ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேரடியாக ராக்கெட்டுகளை ஏவினால், அது இலங்கை, இந்தோனேசியா நாடுகள் மீது பறக்க வாய்ப்பு உண்டு. அதற்காக தென்கிழக்காக அனுப்பி, மீண்டும் திசை திருப்பி, சுற்றுப்பாதைக்கு இப்போது கொண்டுவர வேண்டியிருக்கிறது. இதனால் பல கோடி ரூபாய் கூடுதலாகச் செலவாகிறது.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் பகுதி நான்கு பாகங்களை உள்ளடக்கியது. இலங்கையைச் சுற்ற கூடுதல் எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே நான்காவது பாகம் இணைக்கப்படுகிறது. இதற்கு மட்டுமே செலவாகும் தொகை சுமார் இருபது கோடி ரூபாயாகும். குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டை அனுப்பினால், இதனைத் தவிர்க்க முடியும்.
செயற்கைக்கோளின் பயன்பாடு அதன் எடையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. கூடுதல் எடையுள்ள செயற்கைக்கோளில் கூடுத லாக
டிரான்ஸ்பாண்டர்கள், ஆராய்ச்சிக் கருவிகள் எடுத்துச் செல்ல முடியும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மூலம் 1600 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை 650 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்த முடியும். ஆனால் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவும் போது 2200 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்புவது சாத்தியம். 600 கிலோ கூடுதல் எடை கிடைக்கும்.
இன்றைக்கு சர்வதேச மார்க்கெட்டில் 1 கிலோ எடையை விண்ணில் அனுப்ப பன்னிரண்டு இலட்சம் ரூபாய் முதல் பதினெட்டு இலட்சம் ரூபாய் வரை செலவாகும். அப்படிப் பார்த்தால் 600 கிலோ கூடுதல் எடைக்கான செலவு 90 கோடி ரூபாய். எனவே குலசேகரப்பட்டினத்திலிருந்து ஏவும்போது, கூடுதல் எடையும் செலவை மீதப்படுத்தும் நன்மைகளும் ஏற்படும்.
குலசேகரப்பட்டினத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை ஏவினால் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை குறைவான பயண நேரத்தில் கடந்து விட முடியும். இலக்கைத் தொட்ட பிறகு, மிஞ்சியுள்ள எரிபொருளை வைத்தே செயற்கைக்கோளின் ஆயுள் நிச்சயிக்கப்படும். பயண நேரம் குறைவதால், எரிபொருள் மீதமாகி, செயற்கைக்கோளின் ஆயுள் இரண்டு ஆண்டுகள் வரை கூடுதலாகும். எனவே குலசேகரப்பட்டினத்தி லிருந்து ஒரு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவுவதன் மூலம் குறைந்தபட்சம் 110 கோடி ரூபாய் மூன்றாவது ஏவுதளம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 12 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தொகையை 109 பி.எஸ்.எல்.வி. ராக்கெட் அனுப்புவதால் மிச்சமாகும் தொகையை வைத்தே ஈட்டி விடலாம். ஒரே இடத்தில் கூடுதல் ஏவுதளங்களை அமைப்பதில் பல பிரச்சினைகள் உண்டு.
ஸ்ரீஹரிகோட்டா புயல் பாதிப்பு அதிகமுள்ள பகுதி என்பதால், ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் பணி நடப்பதில்லை. அதனால் உற்பத்தித் திறன் குறைகிறது. எதிர்பாராத விதமாக ஒரு ஏவுதளத்தில் விபத்துகள் நடந்தால் மற்ற ராக்கெட் தளங்களும் பாதிக்கப்படும். இயற்கைச் சீற்றங்களாலும், அந்நிய சக்திகளாலும் ஆபத்து வரும்போது ஒட்டுமொத்தத் தொழில் நுட்பமும் சிதைய வாய்ப்புண்டு" என்று புள்ளி விபரங்களோடு மனோகரன் விவரித்திருக்கிறார்.
குலசேகரப்பட்டினம் புறக்கணிக்கப்படுவதற்குச் சில காரணங்கள் கூறப்படுகிறது. கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களின் செல்வாக்குதான்
"இஸ்ரோ"வில் அதிகமாக உள்ளது. தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தமிழ்நாட்டிற்குக் கிடைத்து விடக்கூடாது என்ற பிடிவாத மனநிலையில் சிலர் செயல்படுகிறார்கள். ராக்கெட் தயாரிப்பில் அறுபது சதவிகிதப் பணிகள் தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரியில்தான் நடக்கின்றன. ஆனால் அதற்கான ஆளெடுப்புப் பணிகளோ திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதனால் சில குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே பணிக்கு வருகிறார்கள்.
புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவெடுத்த உடனேயே அவசர கோலத்தில் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் 300 ஏக்கர் நிலத்தைக்
கையகப்படுத்தி விட்டார்கள். தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, பேராசிரியர் நாராயணா தலைமையில் ஒரு குழு அமைத்தார்கள். 2013 பிப்ரவரிக்குள் இடத்தைத் தேர்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அந்தக் குழுவில் இடம் பெற்றவர்களில் நான்கு பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இரண்டு பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டுமே தமிழர். இந்தக் குழு குலசேகரப்பட்டினத்தை ஆய்வு செய்யவே இல்லை.
இடத்திற்காக ஆந்திர முதல்வரைச் சந்தித்த "இஸ்ரோ" அதிகாரிகள், தமிழக முதல்வரைச் சந்திக்கவே இல்லை என்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட அரிய தொழில் வளர்ச்சிக் கான தேவைகளைப்பற்றியெல்லாம் சிந்தித்துச் செயல்படுவதற்கு தமிழ்நாட்டில் மக்கள் நலனைத் தலையானதெனக் கருதும் ஓர் அரசு வேண்டும்; அது செயல் ஊக்கம் மிக்கதாக இருந்திட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் இதைப் பற்றியெல்லாமா சிந்திக்கிறார்கள்!
இந்தக் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்காக நான் பிரதமருக்கு கடந்த ஆகஸ்ட் மாதமே கடிதம் எழுதி, அந்தச் செய்தி ஏடுகளிலும் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்னதான் நாம் பிரதமருக்கு எழுதினாலும், தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைத்தால்தானே அந்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெறும். இதற்குத் தமிழக அரசு ஏன் முன்வரவில்லை?
ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைந்தால் நேரடியாக 4000 பேருக்கும், மறைமுகமாக 10 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும். அதிகப்பட்சமாக 3 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் வரும். அவற்றின் மூலம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பும், சுமார் ஒரு இலட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும். திரவ உந்துவிசை கல்வி நிறுவனம் ஏற்படுத்தப் படுவதால், இதன்மூலம் தமிழகத்திலிருந்து ஏராளமான விஞ்ஞானிகள் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். ரயில் வசதிகள் மேம்படுத்தப்படும். சாலைகள் விரிவாக்கப்படும். தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும். இந்த நன்மைகளெல்லாம் விளைந்திட குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைய வேண்டும். அந்த ஏவுதளம் அமைய, அதனை அமைத்தே ஆக

வேண்டுமென்ற முனைப்போடு செயல்படுகின்ற ஒரு அரசு தமிழகத்திலே அமைய வேண்டும். அதுவே நாட்டிற்கும் நல்லது! நாட்டு மக்களுக்கும் நல்லது என்று கருணாநிதி கூறியுள்ளார்

Tuesday, August 13, 2013

ஜெயலலிதா அரசினால் தமிழகத்தில் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநில அரசு ஒத்துழைக்காத காரணத்தால் சென்னையில் மட்டும் 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இது தவிர இது தவிர பல்லாயிரம் கோடி மதிப்புள்ள 7 நெடுஞ்சாலைத் திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் தாமதமாவதால் தமிழகத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய-மாநில அரசுகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக செயல்பட்டால் தான் நாடு முன்னேற முடியும். ஆனால், துரதிருஷ்டவசமாக காலம்காலமாக நிலவி வரும் தமிழக அரசியல் மோதல் காரணமாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே சரியான ஒத்துழைப்பு இல்லாமல் இருப்பதால் மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களிலும் எதிரொலிப்பது தான் மிகவும் கவலை அளிக்கிறது.

சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்காகவும், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னை மதுரவாயல் முதல் துறைமுகம் வரை 19 கி.மீ தொலைவுக்கு பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது.

அத்திட்டத்திற்கு கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்றிருந்தால் இந்நேரம் பணிகள் முடிவடைந்து அப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியிருக்கும். ஆனால், கடந்த 2011-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு உள்ளூர் அரசியல் மோதல்களை மனதில் வைத்துக் கொண்டு இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. 10% பணிகள் கூட முடிவடையாத நிலையில் இத்திட்டம் தடைபட்டதால் இதுவரை ரூ.872 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இது இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டில் சுமார் பாதியளவாகும்.

இந்த அளவு இழப்பீட்டை செலுத்துவது சாத்தியமல்ல என்பதால் இத்திட்டத்தை கைவிடலாமா? என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

இத்திட்டம் கைவிடப்படும் ஆபத்து இருப்பதால் சென்னை துறைமுகத்தில் ரூ.3686 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள மெகா சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் திட்டமும், திருப்பெரும்புதூர் அருகில் ரூ. 415 கோடியில் உலர் துறைமுகம் அமைக்கும் திட்டமும் தடைபட்டிருக்கின்றன. மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் பாலத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த இரு திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதால், தமிழக அரசின் தடை காரணமாக மொத்தம் சுமார் ரூ. 6000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் கைவிடப்படக்கூடும்.

இத்திட்டங்கள் கைவிடப்பட்டால், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சென்னை துறைமுகத்தின் விரிவாக்கமும், தமிழகத்திலிருந்து செய்யப்படும் ஏற்றுமதிகளும் பாதிக்கப்படும். இது தமிழகத்தின் வளர்ச்சியிலும், வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும்பாலத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் அதற்கு தடை விதித்திருப்பதாக தமிழக அரசு கூறுகிறது.

தமிழக அரசு, சாதாரண பாலம் அமைக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுவிடும் என்று கூறுவது வியப்பாக உள்ளது.

இவைமட்டுமின்றி,

எண்ணூர்- மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம்,
திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலைத் திட்டம்,
திருச்சி-கரூர் சாலைத் திட்டம்,

திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலைத் திட்டம் உள்ளிட்ட மேலும் 7 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் தமிழக அரசின் ஒப்புதல் கிடைக்காததால் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இத்திட்டங்கள் முடக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு வகை செய்ய வேண்டியது தான் மாநில அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக இருக்கக் கூடாது. எனவே, மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் அனைத்துக்கும் போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை அகற்றி, இவற்றை விரைந்து செயல்படுத்த மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்.

Monday, August 12, 2013

அத்வானி வருகையின் போது பைப் வெடிகுண்டுவைத்த நபர் கைது

நேற்றைய சன் செய்திகள் நேர்காணலில் நம்ம அக்கா தமிழிசை சௌந்தரராஜன் நமது மறதியை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உலகின் அமைதி உருவம்(!) அத்வானி ரதயாத்திரை சென்ற பாதையில் வெடிகுண்டு வைத்தது முஸ்லிம்கள் என முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்த்தார்கள். ஆனால் வெடிகுண்டு வைத்த இந்துத்துவ தீவிரவாதிகளான சிவசங்கர், தீனதயாளன், மற்றும் குபேரனை விட்டு விட்டு மீண்டும் முஸ்லிம்கள் மீது பழியை போட்டு
கொலை வழக்கை மத மோதலாக்கி சமுதாயத்தை பிளவுபடுத்தி ஊட்டு பிச்சை எடுக்க என்னே ஒரு தந்திரம்?
மூன்று முஸ்லிம்களை பற்று சந்தேகப் பட்டு அவர்களை பற்றி துப்பு கொடுப்பவர்களு பரிசு என காவல்துறை அறிவித்தது...இவரோ குற்றவாளியாகவே அறிவித்துவிட்டார்!... அக்கா உங்கள் பேச்சு கேட்டு ஆட்டம் போட இது ஒன்றும் குஜராத் அல்ல!

அத்வானி பாதையில் குண்டு வைத்தது யார்?... உண்மை ஆதாரம் கீழே!
''ஹைதராபாத் குண்டுவெடிப்பை இல்லாத இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையிலிருந்து புதுவை வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

ஒரு மோசடி வழக்கிற்காக திருச்சியை சேர்ந்த குபேரனை விசாரித்த போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆம்! கடந்த மாதம் மும்பையிலிருந்து புதுவையை நோக்கி வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலில் வைக்கப்பட்ட வெடிக்குண்டு தொடர்பு பற்றியும் அதனோடு தொடர்புடைய நபர்களை பற்றியும் அவன் வெளியிட்ட வாக்குமூலம் தான் அது. உடனே இது பற்றிய தகவலை வெடிக்குண்டு வழக்கை விசாரிக்கும் புதுவை மாநில சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தந்தனர். புதுவை போலீசாரும் இதுபற்றிய தீவிர விசாரணையில் இறங்கினர். புதுவையை சேர்ந்த அந்த நபர்களுடன் (பெயர் வெளியிடப்படவில்லை) குபேரனை விசாரிக்க திருவண்ணாமலை ஆரணியை அடுத்த மட்டதாரியை சேர்ந்த தீனதயாளன் மற்றும் மட்டாசிமங்கலம் துறையூர் சிவசங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது. இதுதொடர்பாக புதுவை சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

புதுவை போலீசார் திருச்சி சென்று சிவசங்கரை காவலில் புதுவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 நாள் விசாரணைக்காக அவரை காவலில் எடுத்தனர். விசாரணையில் ரயிலில் வெடிக்குண்டு வைத்ததை ஒப்புக்கொண்டுள்ளான் சிவசங்கர். அவனிடம் சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவன் அளித்த தகவலின் அடிப்படையில் அவன் வீட்டிலிருந்து 5 டெட்டனேட்டர், 5 ஜெலட்டின் குச்சிகள், 7 செல்போன், 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

‘குடும்ப பிரச்சனை காரணமாக தன் மீது ஜோதிடர் ஒருவர் பில்லி சூனியம் வைத்ததாகவும், அவரை கொல்வதற்காகத்தான் ரயிலில் குண்டு வைத்ததாகவும’ விசாரணையில் கூறி இருக்கிறான் இந்த சிவசங்கர். விசாரணையை திசை திருப்பவே அவன் இவ்வாறு தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் ரயில் எந்த இடத்தில் நின்றபோது குண்டுவைத்தான், அந்த ஜோதிடர் ரயிலில் இருந்தாரா? போன்ற விவரங்களை அவன் தெரிவிக்கவில்லை. மேலும் தனி மனிதன் ஒருவரை கொல்வதற்காக அவன் ஏன் இத்தகைய திட்டத்தை தீட்டவேண்டும்? நுட்பமான திரவ வெடிக்குண்டு அவனுக்கு எப்படி கிடைத்தது? மேலும் பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தொடர்புகள் ஏதேனும் உண்டா? போன்ற விவரங்களை சேகரிக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளனர் போலீசார்.

இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட தீனதயாளனை விசாரித்தபோது மதுரையில் பா.ஜ.க அத்வானியின் ரதயாத்திரை வழியில் வைக்கப்பட்ட பைப் வெடிக்குண்டுடன் தொடர்புடையவன் என கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்தும் இதன் பின்ணணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக மதுரை சம்பவத்தை வைத்து பல அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் காவி பயங்கரவாதிகளின் சூழ்ச்சி திட்டம் வெளிப்பட்ட நிலையில், அதுபோன்ற இந்த சம்பவமும் காவி பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விசாரணையில் கைது செய்யப்பட்டிருப்பது சிவசங்கர், தீனதயாளன் மற்றும் குபேரன் என்பதால் பெரும்பாலான ஊடகங்கள் இதனை வெளியிடவில்லை. அவ்வாறு செய்தி வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு மூலையில் அறிவிப்புகள் போன்று சிறிய பெட்டி செய்தியாகத்தான் அவை இருக்கும். மாறாக இது ஒரு இஸ்லாமியரின் பெயராக இருந்திருந்தால் அவற்றின் வெளிப்பாடு, அவற்றின் பத்திரிக்கை தர்மம் அனைத்தும் கேள்விக்குறியாத்தான் இருந்திருக்கும். மேலும் கைது செய்யப்பட்டவரின் முகவரி இல்லாத அமைப்பு என தலைப்புச் செய்தியாக, விவாத பொருளாக தங்களின் முஸ்லிம் விரோத போக்கை தீர்த்திருக்கும் என்பதில் ஐயமில்லை!

Wednesday, August 7, 2013

வீராணம் ஏரி நிரம்புமா ?

காட்டுமன்னார்கோவில்
வறண்டு போய் கிடந்த வீராணம் ஏரிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.
வறண்டு போன வீராணம்
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரிக்கு சாதாரணகாலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், செந்தூறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் செங்கால், கருவாட்டு ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவதுண்டு.
இதன் மூலமாக ஒரு லட்சம் ஏக்கர் வரையில் நேரடியாகவும், மறைமுகமாவும் பசனம் பெறுவதுடன், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக இங்கிருந்து தண்ணீர் அனுப்பப்படும். கடந்த 5 மாத காலமாக வீராணம் ஏரி தண்ணீர் இன்றி வறண்டு போய் காட்சி அளித்தது.
10 நாட்கள் வரையில்...
இந்த நிலையில் கல்லணையில் இருந்து கீழணைக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் கன அடி வரையில் தண்ணீர் வந்ததை அடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் வடவாறு வழியாக 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை வீரணாம் ஏரிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
இந்த நீர் நேற்று மதியம் 1.30 மணி அளவில் வீராணம் ஏரியை வந்தடைந்தது. மாலை நிலவரப்படி ஏரிக்கு விநாடிக்கு 2 ஆயிரத்து 33 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதை அளவிற்கு நீர் வரத்து இருந்தால் ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டுவதற்கு 10 நாட்கள் வரையில் ஆகும்.
5 ஆண்டுகளுக்கு பின்
மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு பின் ஆகஸ்ட்டு மாதத்தில் முதன் முறையாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவது இதுவே முதல் முறையாகும். ஏனைய ஆண்டுகளில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தான் ஏரிக்கு தண்ணீர் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏரிக்கு தண்ணீர் வருவது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்று வருகிறார்கள். அதோடு சமபா சாகுபடி செய்வதற்கு இந்த ஆண்டில் தேவை£யன அளவிற்கு தண்ணீர் கிடைக்கும் என்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
வீராணத்திற்கு கூடுதலாக தண்ணீர் கொண்டு செல்ல வசதி இல்லை வீணாக கடலில் கலக்கும் ஒருலட்சம் கன அடி நீர்
வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வரும் வடவாற்றில் 2 ஆயிரத்து 300 கன அடி நீர் வரையிலேயே தாக்கு பிடிக்கும். எனவே இதற்கு மேலாக தண்ணீர் அனுப்ப இயலாது. எனவே தற்போது 2 ஆயிரம் கன அடி வரையில் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் தற்போது திறந்து விடப்பட்டும், முக்கிய நீர் ஆதாரமாக வீராணத்திற்கு தண்ணீரை கொண்டு செல்ல போதிய வசதிகள் ஏதும் இல்லை.
நீரின் அளவு குறைய வாய்ப்பு
இதன் காரணமாக தற்போது ஒருலட்சம் கன அடி வரையில் கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டு வீணாக கடலில் கலந்து வருகிறது. மேலும் கர்நாடகத்தில் மழைக்குறைவால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்து இருப்பதுடன், அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீரின் அளவையும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் கீழணைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்து போகும் நிலை ஏற்படும்.
வீணாகும் நீர்
இதனால் நீர்ஆதாரமாக உள்ள வீராணம் ஏரி முழுவதுமாக நிரம்புமா என்பது சந்தேகமே. இத்தகைய சூழ்நிலையில் ஏரிக்கு தேவையான தண்ணீரை கொண்டு செல்ல போதிய அளவிற்கு வசதி இல்லாத காரணத்தினால் தற்போது வீணாக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு வங்காள விரிகுடா கடலில் கலந்து வருகிறது.

Sunday, June 23, 2013

காங்கிரஸ் கமிட்டி மாற்றியமைப்பு

அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலில், தமிழக காங்கிரசாருக்கு, முக்கிய பதவியான, பொதுச் செயலர் பதவியை வழங்காமல், புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எந்த கோஷ்டியும் சாராமல், செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்லக்குமார், ஜெயக்குமார் ஆகிய, மூவருக்கு மட்டும், அகில இந்திய காங்., செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், பதவி கிடைக்காத கோஷ்டித் தலைவர்கள், சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் பதவியிலிருந்து, மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் முகுல் வாஸினிக் பொறுப்பேற்றுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளர் பதவி வகித்த, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, நிரந்தர அழைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பா.ஜ.,விலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் இணைந்த போது, அவர் தேசிய செயலர் பதவியும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வகித்தார். ஆனால், நான்கு ஆண்டுகளாக, அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாமல் இருந்ததால், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலிடம், தன் அதிருப்தியை வெளிப்படுத்தினார். சமீபத்தில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன், மகள் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு பா.ஜ., கட்சியில், அகில இந்திய செயலர் பதவி வழங்கப்பட்டது.
இதனால், பா.ஜ.,விலிருந்து, காங்கிரசுக்கு வந்த திருநாவுக்கரசருக்கு, அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியும், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்கு பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ., செல்லக்குமார், கடந்த, 13 ஆண்டுகளாக எந்த பதவியும் இல்லாமல் வன வாசத்தை அனுபவித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் அம்பிகா சோனியின் தயவால், அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவியை பெற்றுள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவி வகித்து வரும், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயக்குமார், மீண்டும் அதே பதவியில் நீடிக்க, மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே காரணமாக இருந்துள்ளார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு, இளைய தலைமுறை எம்.பி.,க்களில், விருதுநகர் எம்.பி., மாணிக்தாகூர் நெருக்கமானவர் என்பதால், அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர்கள் இளங்கோவன், தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ., வசந்தகுமார் ஆகிய மூவரும் தங்களுக்கு, முக்கிய பதவியான, அகில இந்திய பொதுச்செயலர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்தனர். ஆனால், மூவருக்கும் எந்த பதவியும் வழங்கவில்லை.
இதுகுறித்து, காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலில், மத்திய அமைச்சர் சிதம்பரம் மட்டும், பதவி உயர்வு பெற்றுள்ளார். ஆனால், அவரது ஆதரவாளர்களுக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. அதேபோல் மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளர்களுக்கும், அகில இந்திய அளவில் எந்த பொறுப்பும் வழங்கவில்லை.
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, முகுல் வாஸினிக் இரு முறை எம்.பி.,யாக இருந்துள்ளார். தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலை முகுல் வாஸினிக் தயாரித்து தான் வர வேண்டும் என்றால், இன்னும் ஓராண்டு வரை பட்டியல் வெளிவர வாய்ப்பில்லை. காரணம், அவரது செயல்பாடு வேகமாக இருக்காது என்ற கருத்து, கட்சியின் மத்தியில் நிலவுகிறது.
அதேசமயம், குலாம்நபி ஆசாத், தயாரித்து வைத்திருந்த நிர்வாகிகள் பட்டியல் என்றால், இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளிவந்து விடும் வாய்ப்பு உள்ளது. ராஜ்யசபா தேர்தல் முடிவடைந்த பின், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான, சத்தியமூர்த்தி பவனுக்கு முதன்முறையாக முகுல் வாஸினிக் வரவுள்ளார்

Monday, June 17, 2013

எட்டு அமைச்சர்கள் பொறுப்பேற்பு : சுதர்சன நாச்சியப்பன் இணை அமைச்சரானார்

லோக்சபா தேர்தல் நெருங்குவதால், காங்கிரஸ் கட்சியில், நேற்று முன்தினம், அதிரடி மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, மத்திய அமைச்சரவையிலும், நேற்று மாற்றம் செய்யப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த, சுதர்சன நாச்சியப்பன் உட்பட, எட்டு பேர், புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்த, மல்லிகார்ஜுன கார்கே, ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்தாண்டில், லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தலுக்கு முன் கூட்டியே தயாராகியுள்ள காங்கிரஸ், அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. கட்சியிலும், ஆட்சியிலும், பல மாற்றங்கள் செய்யப்படுகின்றன.மத்திய அமைச்சர்களாக இருந்த, சி.பி.ஜோஷி, அஜய் மேகன், நேற்று முன்தினம், ராஜினாமா செய்தனர்; அவர்களுக்கு கட்சி பொறுப்பு வழங்கப்பட்டது. இது தவிர, காங்., கட்சிக்கு, 42 செயலர்களும் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, தேர்தலுக்கு தயாராகும் வகையிலான, பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.தி.மு.க., திரிணமுல் காங்., போன்ற, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறியதால், அந்த கட்சிகள் சார்பில், அமைச்சர்களாக இருந்தவர்கள், ராஜினாமா செய்தனர். இதனால், பல இலாகாக்களுக்கு, அமைச்சர்கள் இல்லாமல் இருந்தனர். அமைச்சரவையில் இருந்த சிலர், கட்சி பொறுப்புகளுக்கு அனுப்பப்பட்டதாலும், அமைச்சரவையில், காலி இடங்கள் அதிகரித்தன. இதையடுத்து, அமைச்சரவையில், நேற்று மாற்றம் செய்யப்பட்டது.

பதவியேற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில், நேற்று மாலை நடந்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர், மன்மோகன் சிங், காங்., தலைவர், சோனியா மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.புதிய அமைச்சர்களுக்கு, ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.எட்டு பேர், புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில், சிஸ்ராம் ஓலா, ஆஸ்கர் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், கே.எஸ்.ராவ் கேபினட் அமைச்சர்கள்.மாணிக்ராவ் கேவிட், சந்தோஷ் சவுத்ரி, சுதர்சன நாச்சியப்பன், ஜே.டி.சீலம் இணை அமைச்சர்கள்.எளிமையாக நடந்த, இந்த விழா, 20 நிமிடங்களில் முடிந்தது. அமைச்சர்களாக பதவியேற்றவர்கள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் வாழ்த்து பெற்றனர்.தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்த, கர்நாடகாவைச் சேர்ந்த, மல்லிகார்ஜுன கார்கே, இலாகா மாற்றப்பட்டது; அவர், ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கேபினட் அமைச்சர்கள்:

கேபினட் அமைச்சராக பதவியேற்ற, சிஸ்ராம் ஓலாவுக்கு, 86, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை வழங்கப்பட்டுள்ளது. இவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, காங்., மூத்த தலைவர். கடந்த லோக்சபா தேர்தலில், ராஜஸ்தானின் சுஞ்சுனு தொகுதியில், போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிடுவதற்கு, பிரதான எதிர்க்கட்சியான, பா.ஜ.,வில், யாரும் முன்வரவில்லை. இதனால், வேட்பாளர் கிடைக்காமல், பா.ஜ., திண்டாடியது; அந்த அளவுக்கு செல்வாக்கானவர்.கர்நாடகாவைச் சேர்ந்த, ஆஸ்கர் பெர்னாண்டஸ், சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஐ.மு., கூட்டணி அரசில், முதல் அமைச்சரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த, கிரிஜா வியாசுக்கு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு இலாகா வழங்கப்பட்டுள்ளது. இவர், தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர்.ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த, கே.எஸ். ராவ், ஜவுளித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திராவில், தெலுங்கானா கோஷம் வலுத்துள்ள நிலையில், ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவாக, இவர் குரல் கொடுத்து வருவதால், அமைச்சரவையில், இவருக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இணை அமைச்சர்கள்:

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான, சுதர்சன நாச்சியப்பன், வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த, மாணிக்ராவ் கேவிட், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், பழங்குடியினத்தை சேர்ந்தவர்.பஞ்சாபை சேர்ந்த, சந்தோஷ் சவுத்ரிக்கு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இவர், பஞ்சாப் மாநில காங்., கில், அனுபவம் வாய்ந்த, பெண் தலைவர்; தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்.ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, சீலம், நிதித் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்; இவர், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இந்த அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் உள்ள, அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை, 77 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் யார்:


மாணிக் ராவ் கவித்: மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பாரில், 1934, அக்.29 ல், மாணிக் ராவ் கவித் பிறந்தார். காங்., கட்சி சார்பாக, நந்துர்பார் லோக்சபா தொகுதியில் இருந்து, 1980ம் ஆண்டு முதல், தொடர்ந்து ஒன்பது முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மனைவி சுரேகா மாணிக்ராவ் கவித். இவருக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். உள்துறை அமைச்சர் மற்றும் இணையமைச்சர் பொறுப்புகள் வகித்துள்ளார்.

ஜே.டி.சீலம்: ஜே.டி.சீலம், ஆந்திரா குண்டூர் மாவட்டம் புசூலூர் கிராமத்தில் 1953, ஆக.,13ம் தேதி பிறந்தவர். காங்., கட்சியில் இணையும் முன், 1984-99ம் ஆண்டுவரை ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணிபுரிந்தவர். மகாத்மா காந்தி குடும்பத்தாருடன், நெருங்கிய தொடர்பு உடையவர். இவரது மனைவி சுஜாதா சீலம். ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2011 ல், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சந்தோஷ் சவுத்ரி: பஞ்சாப், ஹோஷியார்பூர் லோக்சபா தொகுதியில் இருந்து, சந்தோஷ் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். சமூகசேவையில் ஈடுபாடு கொண்டவர். முதல்முறையாக, 1992 ல், லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 1992, 1999, 2009 ம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

கே.எஸ்.ராவ்: ஆந்திரா, மச்சிலிபட்டினத்தில் 1943 அக்.,2 ல், கே.எஸ்.ராவ் பிறந்தார். முழுப்பெயர், காவுரு சாம்பசிவ ராவ். மனைவி ஹேமலதா; ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். லோக்சபாவுக்கு, ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொழில் அதிபராக இருந்து, அரசியல்வாதியானவர்.

புதிய அமைச்சர்கள் பின்னணி



சுதர்சன நாச்சியப்பன் : இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் 1947, செப்.29ம் தேதி பிறந்தார். இவரது தந்தை என்.வி.மாதவன், தாயார் சேதுராஜம் தங்கம். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பி.எஸ்சி., வேதியியலும், மதுரை காமராஜ் பல்கலையில் எம்.ஏ.,வும், பிஎச்.டி.,யும், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டமும் பெற்றார். டில்லி சுப்ரீம் கோர்ட்டில் சில காலம் வக்கீலாக பணியாற்றினார். இவரது மனைவி தேவகி. இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.இவரது தாத்தா, காங்., கட்சிக்காக தீவிரமாக பணியாற்றியவர். சுதர்சன நாச்சியப்பன் 1969ல் காங்., கட்சியில் இணைந்து பல்வேறு பொறுப்புகள் வகித்தார். 1989 சட்டசபை தேர்தலில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியுற்றார்; 1999 ல், சிவகங்கை தொகுதியில், நிதி அமைச்சர் சிதம்பரத்தை (அப்போதைய த.மா.கா.,) தோற்கடித்து, லோக்சபாவுக்கு தேர்தெடுக்கப்பட்டார். 2004 மற்றும் 2010 ம் ஆண்டுகளில், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு பெற்றார்.

சிஷ்ராம் ஓலா:ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனுவில் 1927, ஜூலை 30ம் தேதி சிஷ்ராம் ஓலா பிறந்தார். பிறந்த தொகுதியிலிருந்தே லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-90ம் ஆண்டு வரை ராஜஸ்தான் சட்டசபை உறுப்பினராக விளங்கினார். சிறப்பாக சமூகப்பணி ஆற்றியதற்காக 1968ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். 1996ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, உரத்துறை அமைச்சர் ஆனார். நீர்வளத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையிலும் அமைச்சராக இருந்துள்ளார். இவரது மகன் பிஜேந்தர் ஓலா, ஜூன்ஜூனு சட்டசபை தொகுதியில் வெற்றிபெற்று ராஜஸ்தான் மாநில அமைச்சராக இருக்கிறார்.

ஆஸ்கர் பெர்னாண்டஸ் : கர்நாடக மாநிலம் உடுப்பியில் 1941, மார்ச் 27ம் தேதி ஆஸ்கர் பெர்னாண்டஸ் பிறந்தார். முதன்முறையாக லோக்சபாவுக்கு 1980ம் ஆண்டு உடுப்பி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்., கட்சி சார்பாக லோக்சபாவுக்கு 1980, 84, 89, 91, 96 ஆகிய ஆண்டுகளிலும், ராஜ்யசபாவுக்கு 1998, 2004, 2009 ஆகிய ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெளிவிவகாரத்துறை, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையிலும் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

கிரிஜா வியாஸ்:ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார்த் லோக்சபா தொகுதியிலிருந்து பார்லிமென்ட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிரிஜா வியாஸ். அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் கவிஞர் என பன்முகம் கொண்டவர். மூன்று கவிதை தொகுப்புகளையும், ஐந்து புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். 1985ம் ஆண்டு காங்., கட்சியில் இணைந்தார். முதன்முதலாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் தொகுதியிலிருந்து, சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1990ம் ஆண்டு வரை, மாநில அமைச்சராக பணியாற்றினார். 1991ம் ஆண்டு உதய்பூர் லோக்சபா தொகுதியில் வெற்றிபெற்று பார்லிமென்ட் சென்றார்.

நான்காண்டுகளில் 6 ரயில்வே மந்திரிகள் :

ரயில்வே அமைச்சராக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே நேற்று நியமிக்கப்பட்டதன் மூலம், கடந்த நான்காண்டுகளில், ஆறாவது ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்.மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாவது ஆட்சியில், கடந்த நான்காண்டுகளில், ஆறு ரயில்வே அமைச்சர்கள் பதவி வகித்துள்ளனர். ஆறு அமைச்சர்களில், திரிணமுல் காங்கிரசை சேர்ந்தவர்கள், மூன்று பேர். அவர்கள், மம்தா பானர்ஜி, தினேஷ் திரிவேதி மற்றும் முகுல் ராய்.அதற்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வசம் அத்துறை மாறியது. சி.பி.தாக்கூர் வசம், கூடுதலாக இருந்த அத்துறை, பின்னர், பவன்குமார் பன்சாலிடம் ஒப்படைக்கப்பட்டது. ஊழல் முறைகேட்டில் அவர் சிக்கியதை அடுத்து, இப்போது, மல்லிகார்ஜுன கார்கே, புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

அமைச்சரவை மாற்றத்தில் மீனாட்சிக்கு இடமில்லை:

மத்திய அமைச்சரவை மாற்றத்தில், மீனாட்சி நடராஜன் எம்.பி.,க்கு இடம் கிடைக்காதது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலுக்கு மிக நெருக்கமானவர், மீனாட்சி நடராஜன். காங்கிரஸ் செயலராக உள்ள, மத்திய பிரதேசத்தை சேர்ந்த அவர், கடந்த லோக்சபா தேர்தலில், மாண்சார் தொகுதியில், 1971ம் ஆண்டு முதல் வெற்றி பெற்று வந்த, பா.ஜ., பிரமுகர் லட்சுமி நாராயண் பாண்டேவை வீழ்த்தினார்.இதன் மூலம் அவர் நாடு முழுவதும் அறியப்பட்டார். அதனால், ராகுலின், காங்., இளம் படை வட்டாரத்தில், செல்வாக்கு பெற்றிருந்தார்.நேற்றைய அமைச்சரவை மாற்றத்தில், மீனாட்சிக்கு, அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிபார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இது, பலருக்கும் ஏமாற்றம் அளித்தது.

Thursday, May 30, 2013

மத்திய அரசால் அமைக்கப்படும் ” அல்ட்ரா மெகா பவர் “ திட்டத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து, எட்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும், செய்யூர், "அல்ட்ரா மெகா பவர்' அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. அது போல், உடன்குடி அனல் மின் திட்டத்திற்கும், சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்துள்ளது.

தமிழகத்தின் தற்போதைய மின் பற்றாக்குறை, 4,000 மெகா வாட்டாக உள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல், தமிழக அரசு திணறி வரும் நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில், இரண்டு முக்கிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு, ”ற்றுச்‹ழல் அனுமதி கிடைத்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரத்தை ஒட்டி அமைந்த செய்யூர் பகுதியில், 1995ம் ஆண்டில், 1,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் திட்டம் அமைக்க, பிரபல பொதுத்துறை நிறுவனமான, என்.டி.பி.சி., களம் இறங்கியது.ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த மிகப்பெரிய நிறுவனம் ஒன்று, தன் "கோல்ப்' விளையாட்டு மைதானம், அந்தத் திட்டத்தால் பாதிப்படையும் என கருதியதால், அந்த அனல் மின் நிலையத்தை, அமைய விடாமல் தடுத்து விட்டது.

கடந்த, 2005ம் ஆண்டு, நாடு முழுவதும், ஐந்து இடங்களில், "அல்ட்ரா மெகா பவர்' மின் உற்பத்தி திட்டங்கள் அமைக்கப் படும் என, மத்திய அரசுஅறிவித்தது. அதில் ஒன்று, தமிழகத்திற்கும் கிடைத்தது. செய்யூர் பகுதியில் அந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. நிலம் கையப்படுத்துவது உள்ளிட்ட பல காரணங்களால், அந்த திட்டமும் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், செய்யூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் திட்டத்திற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் கிடைத்துள்ளது. கடந்த, 20ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, இந்த திட்டத்திற்கான, ஆவணங்களை, மத்திய மின்சார அமைச்சகம் தயார் செய்து கொண்டிருக்கிறது. திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிவிவரங்களை தொகுத்து அந்த ஆவணம் தயாராகி வருகிறது.தனியார் நிறுவனத்துடன் இணைந்து தான், இந்த மெகா திட்டத்தை செயல்படுத்த முடியும். எனவே, அந்த தனியார் நிறுவனம் எது என்பதை தேர்வு செய்து, தேவையான நிதி விவரங்களை இறுதி செய்து, அதன் பிறகு தான் பிற வேலைகள் ஆரம்பமாகும். இவை எல்லாம் ஒழுங்காக நடைபெற்றாலும் கூட, திட்டத்தை செயல்படுத்த, எப்படியும், மூன்று
அல்லது நான்கு ஆண்டுகள் வரை ஆகிவிடும்.தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை, 4,000 மெகா வாட் என இருக்கும் நிலையில், இதை பூர்த்தி செய்ய, இந்தசெய்யூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் உற்பத்தி நிலையம் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. திட்டத்தை விரைந்து செயல்படுத்த, ஆட்சியாளர்கள், ஆர்வமும், வேகமும் காட்டினால் மட்டுமே, இது சாத்தியமாகும்.

உடன்குடிக்கும் "ஓகே':தமிழகத்தின் மின்சார பற்றாக்குறை பிரச்னைக்கு ஓரளவு தீர்வு ஏற்படுவதற்கான வகையில், உடன்குடியில், 1,600 மெகா வாட் மின் உற்பத்தி திட்டத்திற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் கிடைத்துள்ளது.திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில், அனல் மின் நிலையம் அமைக்க, கடந்த 2006ம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது; அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. தமிழ்நாடு மின்சார வாரியமும், "பெல்' நிறுவனமும் இணைந்து, திட்டம் நிறைவேற்றப்படும் என, அறிவிக்கப்பட்டது.

உடன்குடியில், 800 மெகா வாட் திறன் கொண்ட, இரண்டு யூனிட்டுகளை அமைப்பது எனவும், 1,600 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.இந்தியாவில் உள்ள அனைத்து அனல்மின் நிலையங்களுக்கும், பாய்லர்களை தயாரித்து அளிக்கும் திருச்சியில் உள்ள, "பெல்' நிறுவனம், கடந்த, ஆறு ஆண்டுகளாக உடன்குடி மின் உற்பத்தி திட்டத்தை கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து, உடன்குடி மின் உற்பத்தி திட்டத்தில் இருந்து, கடந்தாண்டு, "பெல்' நிறுவனத்தை, தமிழக அரசு நீக்கிவிட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்துடன் இணைந்து, தமிழக அரசே இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டது.இந்த


திட்டத்தை ஆரம்பிக்க தேவையான,சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் கேட்டு, மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அந்த கோரிக்கையை ஏற்று, கடந்த, 10ம் தேதி, உடன்குடி அனல் மின் உற்பத்தி திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது.

கடலூரில் எப்போது?: மத்திய மின்சாரத்துறை அமைச்சராக, சுஷில்குமார் ஷிண்டே இருந்த போது, தமிழகத்துக்கு மேலும் ஒரு, "அல்ட்ரா மெகா பவர்' மின் திட்டத்தை அறிவித்தார். அந்த திட்டத்தை கடலூரில் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்த, தமிழக அரசு இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன், தமிழக காங்கிரஸ், எம்.பி.,க்கள் சிலர், கடலூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் திட்டம் குறித்து, மத்திய மின்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் முறையிட்டனர்.

அப்போது, நிலம் வழங்க மாநில அரசு முன்வந்தால், கடலூர், "அல்ட்ரா மெகா பவர்' மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க தயார் என, கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, May 8, 2013

கார்நாடகாவில் காங்கிரஸ் அபார வெற்றி :


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு, ஆளும் பாரதிய ஜனதாவுக்கு, நேற்று பேரிடியாக அமைந்தது. ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சியில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் துவங்கியுள்ளது. முதல்வராகப் பொறுப்பேற்பது, சித்தராமைய்யாவா அல்லது மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவா என்பது, இன்று தெரியும்.
மாறி மாறி முன்னிலைவட மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு பெற்றிருந்த பா. ஜ.,வுக்கு, ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என, தென் மாநிலங்களில் ஒன்றான, கர்நாடகாவில் ஆட்சி செய்ய, 2006ம் ஆண்டு வாய்ப்பு கிடைத்தது.
முதல்வராக இருந்த எடியூரப்பா மீது, ஊழல் புகார்கள் கூறப்பட்டதால், அவர் கட்சியிலிருந்து கழற்றி விடப்பட்டார். ஜெகதீஷ் ஷெட்டர், முதல்வராக இருந்தார்.கடந்த, 5ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. இதற்காக, மாநிலம் முழுவதும், ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுகள் எண்ணத் துவங்கிய சில நிமிடங்களில், பா.ஜ.,வும், அடுத்த சில நிமிடங்களில், தேவகவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளமும், மாறி மாறி முன்னிலையில் வந்தன.
அறுதிப் பெரும்பான்மை
காலை, 9:00 மணியளவில் முன்னிலை பெறத் துவங்கிய காங்கிரஸ், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, முன்னிலை பெற்று, ஆட்சி அமைக்கத் தேவையான, 113 இடங்களுக்கும் மேலாகப் பெற்றது.
மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்து விட்டதால், தேர்தல் நடைபெறவில்லை. ஓட்டுகள் பதிவான தொகுதிகளுக்கு நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையில், அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை பெற்ற காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்த தேர்தல் முடிவு, சில பெரிய தலைவர்களுக்கு, தோல்வியை அளித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநிலத் தலைவர், குமாரசாமியின் மனைவி அனிதா, மாநில காங்கிரஸ் தலைவர், பரமேஸ்வரா, மாநில, பா.ஜ., தலைவர், ஈஸ்வரப்பா, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் இப்ராகிம், தொழில்துறை அமைச்சராக இருந்த, நிரானி போன்றோர், தோல்வி அடைந்துள்ளனர்.
முன்னாள் துணை முதல்வர் சித்தராமைய்யா, பா.ஜ.,விலிருந்து பிரிந்து, தனிக்கட்சி துவக்கி, ஓட்டுகளைப் பிரித்து, பா.ஜ.,வுக்கு சிக்கலை ஏற்படுத்திய எடியூரப்பா, முடிவுகளைப் பார்த்த உடன், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த, ஜெகதீஷ் ஷெட்டர், முதல்வர் கனவில் மிதந்த, முன்னாள் முதல்வர் குமாரசாமி என, பலரும் வெற்றி பெற்றுள்ளனர்.
பா.ஜ.,வின் ஆதிக்கம் மிகுந்த, தக்ஷிண கன்னடா, உடுப்பி, பெல்லாரி போன்ற பகுதிகளிலும், அந்தக் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், முந்தைய தேர்தலை விட, இந்த தேர்தலில், காங்கிரஸ் வளர்ச்சி அமோகமாக இருந்ததை, முடிவுகளில் காண முடிந்தது.
சித்தராமைய்யாவுக்கு சிக்கல்
முடிவுகள் வெளியானதும் எழுந்த கேள்வி, காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தான். ஏனெனில், தேர்தலின் போது, முதல்வர் வேட்பாளர் யார் என, காங்கிரஸ் அறிவிக்கவில்லை. முன்னாள் துணை முதல்வர் சித்தராமைய்யா, தனக்குத் தான் அந்தப் பதவி என கூறி வந்தார்.இந்நிலையில், நேற்று திடீரென, மத்திய அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே, "நானும் போட்டியில் உள்ளேன்' என அறிவித்து, சித்தராமைய்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்.
வெற்றி பெற்றால், முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தோல்வி அடைந்துள்ளதால், இப்போதைக்கு போட்டி, சித்தராமைய்யாவுக்கும், கார்கேவுக்கும் தான்.
கார்கே தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்; சித்தராமையா, சிறுபான்மை குறும்பர் இனத்தை சேர்ந்தவர். மாநிலத்தின் பெரும்பான்மை சமுதாயங்களான, ஒக்காலிகா, லிங்காயத்தை சேர்ந்த யாரும், முதல்வர் வேட்பாளர் பட்டியலில், நேற்று இரவு வரை இல்லை.கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் புது முதல்வர் யார் என்பது, இன்று தெரிய வரும். அது போல், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெறப் போவது, பா.ஜ.,வா அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளமா என்பதும் தெளிவாகிவிடும்.


ஜெகதீஷ் ஷெட்டர் ராஜினாமா
சட்டசபை தேர்தல் தோல்வியை அடுத்து, கவர்னர் பரத்வாஜை சந்தித்த, முதல்வர், ஜெகதீஷ் ஷெட்டர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.நேற்று மதியம், கவர்னர் பரத்வாஜை சந்தித்த, முதல்வர், ஜெதீஷ் ஷெட்டர் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது, கவர்னர் பரத்வாஜ், புதிய அரசு அமையும் வரை, தற்காலிக முதல்வராக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.

சமாஜ்வாதி வெற்றி
உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி, கர்நாடக மாநிலத்தில், முதல் முறையாக வெற்றி பெற்று, கணக்கை துவக்கியுள்ளது.
சென்னபட்னா தொகுதியில் போட்டியிட்ட, சமாஜ்வாதியின், சி.பி.யோகேஸ்வரா, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான, குமாரசாமியின் மனைவி, அனிதாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
யோகேஸ்வராவுக்கு ஆதரவாக, உ.பி., முதல்வர், அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பதவிக்கு கார்கே போட்டி
""கட்சி மேலிடம் அனுமதித்தால், முதல்வர் பதவிக்கு போட்டியிட தயார்,'' என, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான, மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:கடந்த, 2009ம் ஆண்டு, லோக்சபா தேர்தலில் போட்டியிடுமாறு, கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டது. அதன் படி போட்டியிட்டு, வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளேன். அது போல், கர்நாடக முதல்வராக வேண்டும் என, கட்சி கேட்டுக் கொண்டால், அந்த உத்தரவை பணிந்து செயல்பட தயாராக உள்ளேன்.
எனினும், நான் தலித் சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால், மாநில முதல்வர் பதவியை வகிக்க விரும்பவில்லை. அந்தப் பதவிக்கு நான் தகுதியானவன் என கட்சி மேலிடம் தெரிவித்தால், ஏற்கத் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., கடும் அதிர்ச்சி
கர்நாடகாவில், பாரதிய ஜனதா, ஆட்சியைஇழந்துள்ளதால், அதன் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கட்சியின் செய்தித் தொடர்பாளர், ராஜிவ்பிரதாப் ரூடி கூறும் போது,""எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. தோல்வி எங்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்கு பல காரணங்கள் இருக்கின்றன. எல்லாமும் சேர்ந்து, எங்களை பாதித்து விட்டது,'' என்றார்.


நடிகை பூஜா காந்தி படுதோல்வி

டூ ராமநகரம் தொகுதியில் போட்டியிட்ட, மதச்சார்பற்ற ஜனதா தளம், கர்நாடக மாநில தலைவர், எச்.டி.குமாரசாமி, வெற்றி பெற்றார். அவரை அடுத்து வந்த, காங்கிரஸ் வேட்பாளர், மாரித்தேவரை விட, 25 ஆயிரம் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார்.மாநில காங்கிரஸ் தலைவர், ஜி.பரமேஸ்வரா தோல்வி அடைந்தார். கரடகெரே தொகுதியில் போட்டியிட்ட அவர், 18 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். வெற்றி பெற்றிருந்தால், முதல்வர் வேட்பாளர்கள் பட்டியலில் அவரும் இடம்பெற்றிருப்பார்.டியூரப்பா கட்சி சார்பில், ராய்ச்சூர் தொகுதியில் போட்டியிட்ட, கன்னட நடிகை பூஜா காந்தி, வெறும், 1,815 ஓட்டுகள் பெற்று, படுதோல்வி அடைந்தார்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, முன்னாள், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர், சி.எம்.இப்ராகிம், பத்ராவதி தொகுதியில் தோல்வி அடைந்தார்.ஜெகதீஷ் ஷெட்டர் அரசில், அமைச்சர்களாக இருந்தவர்களில், 12 பேர் படுதோல்வி அடைந்தனர்.

Thursday, March 28, 2013

கலைஞர் விளக்கம் ஜெயலலிதாவிற்கு இலங்கை தமிழர் விவகாரத்தில்


ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி
திமுக தீர்மானம் கண்துடைப்பு என்றால் அதிமுக தீர்மானம் ஓரங்க நாடகமா?சென்னை : இலங்கை தமிழர்களுக்காக திமுக அரசு நிறைவேற்றிய தீர்மானம் கண்துடைப்பு நாடகம் என்றால் அதிமுக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஓரங்க நாடகமா என்று ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சில நாட்களாக சட்டப் பேரவை நடைபெற்றுக் கொண்டிருப்பதையும், அங்கே திமுகவினரை வாய் திறந்து கருத்து தெரிவிக்க விடாமல் ஆளும் கட்சி தங்களது மெஜாரிட்டியை கொண்டு விருப்பம் போல் பேசியும் வெளியேற்றியும் வருவதையும், முதலமைச்சர் பதிலுரை என்ற பெயரால் பிரச்னையை விட்டுவிட்டு முழுக்க முழுக்க என்னை தனிப்பட்ட முறையில் எப்படியெல்லாம் தாக்கி தரக் குறைவாக பேச முடியுமோ அந்த அளவிற்குத் தாக்கி உரையாற்றுவதையும் கண்டு வருகிறோம்.

அந்த வரிசையில் நேற்று ஈழத் தமிழர்களுக்காக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை நசுக்கிட காவல் துறையினர் முயற்சிப்பது குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம். அதற்கு பதிலளிக்க வேண்டிய முதலமைச்சர் தன் பேச்சு முழுவதிலும் இலங்கை பிரச்னையில் நான் கபட நாடகம் ஆடுவதாகவும், இரட்டை வேடம் போடுவதாகவும் பல பக்க பேச்சை தயார் செய்து அவையில் படித்து விட்டு ஏடுகளுக்கும் விநியோகம் செய்திருக்கிறார்.

இலங்கைப் பிரச்னையில் நான் கபட நாடகம் ஆடுவதாக ஜெயலலிதா பழி சுமத்துவது இது எத் தனையாவது முறை என்றே ஞாபகம் இல்லை. கச்சத்தீவு பிரச்னையாக இருந்தாலும், இலங்கைப் பிரச்னையாக இருந்தாலும், காவிரி பிரச்னையாக இருந்தாலும் அரைத்த மாவையே அரைப்பதைப் போல், ஜெயலலிதா சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். அந்தப் பேச்சினை ஏடுகள் பெரிதாக வெளியிடுகின்ற காரணத்தால், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமையாகிறது.

தமிழர் நலன் கருதி மத்திய காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேற வேண்டுமென்று அவர் 2009ம் ஆண்டே கூறியதாகவும், நானோ அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி 2 வாரத்தில் போர் நிறுத்தத்துக்கு மத்திய அரசு முன்வராவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார் கள் என்ற தீர்மானம் நிறைவேற்றியதாகவும், பின்னர் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்னை சந்தித்த பிறகு மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது என்று தெரிவித்து ராஜினாமா நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன் என்றும் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இதில் எதை அவர் நாடகம் என்கிறார்? இலங்கையில் போர் கடுமையாக நடக்கிறது என்று கேள்விப்பட்ட உடனே 14.10.2008ல் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது நாடகமா? (அவரது அகராதியில் அனைத்துக் கட்சி கூட்டம் என்றாலே அலர்ஜி ஆயிற்றே?) அந்த கூட்டத்தில் ‘போர் நிறுத்தம் செய்ய முன்வராவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது நாடகமா?

அந்த தீர்மானத்தை உடனடியாக பிரதமருக்கு அனுப்பி, பிரதமர் அரசியல் தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் அரசு விரைவாக எடுத்திடும் என்று கூறியது நாடகமா?
அந்த அனைத்துக் கட்சி தீர்மானத்தைப் பற்றி ஜெயலலிதா என்ன சொன்னார்? ‘தீர்மானத்தைப் பார்த்தால், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இலங்கைப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை 5 முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிட்டால், பின்னர் நம் உள்விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடும் வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது’ என்று ஜெயலலிதா தெரிவித்தார்.

அதை தற்போது வசதியாக மறந்து விட்டுப் பேசுவதற்கு பெயர்தான் இரட்டை வேடம். நமது வேண்டுகோளினை ஏற்று இந்திய பிரதமர் 18,10&08ல் இலங்கை அதிபருடன் பேசியதும், பிறகு 24,10,08ல் சென்னையில் நாம் பிரமாண்டமான மனிதச் சங்கிலி நடத்தியதும், 26,10,08ல் பிரணாப் சென்னை வந்து என்னை சந்தித்ததும்,

12&11&08ல் இலங்கைத் தமிழர்களுக்காக பேரவையில் நான் தீர்மானம் முன் மொழிந்து நிறைவேற்றியதும், 4,12,08ல் அனைத்துக் கட்சி தலைவர்களையும் பிரதமரிடம் அழைத்துச் சென்று பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனு ப்பி பேசச் சொன்னதும், அவ்வாறே பிரணாப் சென்று பேசியதும், 27,12,08ல் திமுக பொதுக்குழுவில் இலங்கைத் தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றியதும் நாடகமா? இரட்டை வேடமா?

அதற்குப் பிறகும் திமுக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி ஏற்கனவே நான் விரிவாக எழுதி விட்டேன். ஆனால் ஜெயலலிதா பல்வேறு கண்துடைப்பு நாடகங்கள்தான் அப்போது நடந்தன என்று சொல்லியிருக்கிறார். திமுக தீர்மானம் நிறைவேற்றியது கண்துடைப்பு என்றால், நேற்று ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம் கபட நாடகமா? ஓரங்க நாடகமா?

ஜெயலலிதா போன்ற ஒரு சிலரின் அபிலாஷையின்படி, திமுக மத்திய அரசிலிருந்து தற்போது வெளியேறி விட்டது.
இதனால் என்ன நடந்துவிட்டது? ஈழத் தமிழர்களின் பிரச்னைக்கு விடிவு ஏற் பட்டுவிட்டதா?
அமெரிக்கத் தீர்மானத் தில் இந்தியா திருத்தங் களைக் கொண்டு வந்து விட்டதா?
நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை திருத்தங்களோடு நிறைவேற்றி விட்டதா?

மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறியது மட்டும்தான் நடந்தது.
ஆனால் அதற்காக திமுக சிறிதும் கவலைப்படவில்லை. 2009ல் திமுக மத்திய அரசிலிருந்து வெளியேறியிருந்தாலும் இதே நிலைதான் என்பதை நடுநிலையோடு சிந்தித்துப் பார்ப்பவர்கள் உணர்வார்கள்.

அப்போதே வெளியேறியி ருந்தால் இலங்கைத் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம், திமுக மீது பழியைப் போடுகின்ற செயலே தவிர வேறல்ல. அனுமானத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை உறுதி செய்வதை, வரலாறு அறிந்தவர்கள் ஏற்கமாட்டார்கள். அதுமாத்திரமல்ல. திமுக ஆட்சியில் இருந்த போதும், இல்லாத போதும் ஈழத் தமிழர்களுக்காக இத் தனைப் போராட்டங்களையும் நடத்தியது;

அரசியல் ரீதியாகப் பல்வேறு இழப்புகளுக்கும் ஆளானது. ஆனால் ஜெயலலிதா, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது ஈழத் தமிழர்களுக்காக எதுவும் செய்யாமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பின், திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல இலங்கைத் தமிழர் பிரச்னையில் அதிக அக்கறை செலுத்துவது போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறேன் என்றெல்லாம் ஏதோ ஈழத் தமிழர்களுக்காக இழப்பைச் சந்தித்தவரை போல குறிப்பிட்டிருக்கிறார்.

ஆட்சிக்கு வருவதைப் பற்றி கற்பனைகூட செய்துபார்க்காத 1956ம் ஆண்டிலேயே, சிதம் பரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஈழத் தமிழர்களுக்காக தீர்மானத்தை முன்மொழிந்த எனக்கு திடீரென்று ஞானோதயம் என்று கூறுகின்ற ஜெயலலிதாவிற்கு இலங்கைத் தமிழர்கள் மீது எத்தனை நாட்களாக அக்கறை?
தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா?

1956ம் ஆண்டிலிருந்து நடந்து வரும் நிகழ்வுகளையும், ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பின் நடக்கும் நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார்களா?
16,4,02ல் இதே சட்டசபையில் ‘பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்து விடுவார்களா?

17,1,09ல் இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ‘போர் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்’ என்று ஜெயலலிதா கூறியதை மறக்க முடியுமா? இதையெல்லாம் மறைத்துவிட்டு நான் இரட்டை வேடம் போட்டேன் என்பதா? பேரவையில் மெஜாரிட்டி உள்ளது என்ற கித்தாப்பில் எதை வேண்டுமென்றாலும் பேசுவதா?

அடுத்து ஜெயலலிதா தன் பேச்சில் என் மீது சாற்றியுள்ள குற்றச்சாட்டு, நான் இருந்த உண்ணாவிர தத்தை பற்றி புது விளக்கத்தை சமீப காலமாக கூறுவதாகவும், போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அரசு மத்திய அரசுக்கு தெரிவித்ததாகவும், அதனை மத்திய அரசு நம்பி தனக்கு தெரியப்படுத்தியதாகவும், அதனை நான் நம்பியதாகவும் எந்தத் தமிழரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

சமீப காலமாக நான் இதைக் கூறவில்லை. இதோ, 28,4,09 தினத்தந்தியின் தலைப்பு: ‘மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார்

கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி போரை நிறுத்தி விட்டதாக இலங்கை அறிவிப்பு’
இதைத் தவிர 2ம் பக்கத்தில் ‘போர் நடவடிக்கை முடிவுக்கு வந்தது; இலங்கை ராணுவம் அறிவிப்பு’ என்ற தலைப்பில் இலங்கை அதிபர் ராஜபக்சே அலுவலகத்தில் இருந்து வெளியான அறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

எனவே நான் சமீபகாலமாக இதை கூறவில்லை. அன்றே வெளியான செய்தி இது. ஜெயலலிதா கூறியுள்ள உண்மைக்கு மாறான தகவல்களுக்கு இதுவும் ஓர் உதாரணம்.
திமுக பொதுச் செயலா ளர் பேராசிரியர், ‘மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகிய போதிலும், மத்திய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான முயற்சியில் யாராவது ஈடுபட்டால் அதற்கு திமுக துணை போகாது’ என்று பேசியதை எடுத்துக்காட்டி, இது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். எப்படியாவது மத்திய ஆட்சி கவிழாதா? சந்தடிசாக்கில் தான் பிரதமராகிவிட முடியாதா? என்ற நப்பாசை ஜெயலலிதாவுக்கு. அதனால் நாங்கள் செய்வதெல்லாம் துரோகமாக தெரிகிறது.

எதற்கெடுத்தாலும் நான் இரட்டை வேடம் போடுவதாக கூறுகிறார். சேது திட்டம் வேண்டுமென்று தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தற்போது வேண்டாம் என்கிறாரே, அதற்கு பெயர்தானே இரட்டை வேடம்!

காவிரி ஆணையத்தை பல் இல்லாத வாரியம் என்றெல்லாம் கூறிவிட்டு, தற்போது அதை ஆதரிப்பதற்கு பெயர்தானே இரட்டை வேடம்! இன்று (28&3&13) இந்து நாளிதழில் வெளிவந்துள்ள ‘விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்தவர், தமிழ் ஈழத்தின் ஆதரவாளராகியுள்ளார்’ என்ற செய்தியை படித்துப் பார்த்தால் யார் இரட்டை வேடம் போடுபவர் யார் இரட்டை முகம் கொண்டவர் என்பதை அறிந்து கொள்ளலாம் இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.