எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, December 9, 2012

"90 சதவித இந்தியர்கள் முட்டாள்கள்' : நீதிபதி கட்ஜு விமர்சனம்


நாட்டின், 90 சதவீத இந்தியர்கள், முட்டாள்கள். மதத்தின் பெயரால் அவர்களை, சமூக விரோத சக்திகள் எளிதில் ஏமாற்றி விடுகின்றன,"" என, பிரஸ் கவுன்சில் தலைவர், நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த, கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்ற, நீதிபதி கட்ஜு, 66, கூறியதாவது:

நாட்டில் உள்ள மக்களில், 90 சதவீதம் பேர் முட்டாள்கள் என்று, உறுதியாக சொல்வேன்; அவர்கள் தலையில் மூளை கிடையாது; அவர்களை எளிதாக ஏமாற்றி விடலாம்.வெறும், 2,000 ரூபாய் இருந்தால் போதும், டில்லியில் பெரிய மதக்கலவரத்தை ஏற்படுத்திவிடலாம்; தவறாக சைகை காண்பிப்பதன் மூலமும், பிற மதத்தவரின் வழிபாட்டு இடங்களை, அவமரியாதை செய்வதன் மூலமும், எளிதில் மத கலவரத்தை ஏற்படுத்தி விடலாம்.

அந்தத் தகவல் தெரிந்ததும், முட்டாள் ஜனங்கள், ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வர். இந்தச் செயலுக்கு பின்னால், சில சமூக விரோத சக்திகள் இருக்கிறது என்பதை, அவர் கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

பின்தங்கி விட்டோம்:

நாட்டில், 1857ம் ஆண்டிற்கு முன், மதக் கலவரமே கிடையாது; மதத்தின் பெயரால், சண்டையிட்டுக் கொண்டதே கிடையாது. ஆனால், இப்போது நிலைமையை யோசித்து பாருங்கள். 80 சதவீத இந்துக்கள், மத உணர்வுடன் உள்ளனர்; அதுபோலவே, 80 சதவீத முஸ்லிம்களும் மத உணர்வுடன் உள்ளனர்.இதனால், நாம், 150 ஆண்டுகள் முன்னேறிச் செல்வதற்குப் பதிலாக, 150 ஆண்டுகள் பின்தங்கி விட்டோம். இதற்கு காரணம், ஆங்கிலேயர்கள் தான். அவர்கள் தான், மக்கள் மனதில் விஷத்தை பாய்ச்சி விட்டனர். சிப்பாய் கலகம் நடந்த, 1857ம் ஆண்டில், லண்டனில் இருந்த சில சக்திகள், "இந்தியர்களை இப்படியே விட்டால் சரிப்பட்டு வர மாட்டார்கள்' என கருதி, இந்தியர்களை பிரித்தாழ, மதம் என்ற வார்த்தையை பயன்படுத்தத் துவங்கின. அதன் மூலம், இந்துக்களையும், முஸ்லிம்களையும் அடித்துக் கொள்ளச் செய்தனர்.

இந்தி மொழி, இந்துக்களுக்கும், உருது மொழி, இஸ்லாமியருக்கும் என, தவறாக பிரசாரம் செய்யப்பட்டது; அதையும், உண்மை என நம்பி, ஏராளமானோர், இன்னும் மோதிக் கொள்கின்றனர்.

ஆனால், நம் முன்னோர்களில் ஏராளமானோர், உருது மொழி படித்துள்ளனர்; இங்கு, மக்களை முட்டாள் ஆக்குவது எளிது; நிறைய பேர் முட்டாள்களாக இருப்பதால், அவர்கள் பிறரை எளிதாக முட்டாள் ஆக்கிவிடுகின்றனர்.இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், இனிமேலாவது உண்மையை உணர்ந்து, முட்டாள்களாக இருக்க வேண்டாம் என்பதற்காகத் தான்.இவ்வாறு, கட்ஜு பேசினார்.

வித்தியாசமானவர்:

மார்க்கண்டேய கட்ஜு, 2004ல், சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர்; அதற்கு பின், 2006ல், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். கடந்த ஆண்டு, அக்., முதல், "பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா'வின் தலைவர் பொறுப்பில் உள்ளார். தனக்கு நியாயம் என தெரிந்ததை, அப்படியே சொல்வதிலும், நியாயமானதை செய்வதிலும், கட்ஜு வித்தியாசமானவராக திகழ்கிறார்.

Wednesday, December 5, 2012

எப்.டி.ஐ. வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி!


சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக லோக்சபாவில் பாஜக கொண்டு வந்த தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக 218 வாக்குகளும் எதிராக 253 வாக்குகளும் பதிவாயின. இதையடுத்து மத்திய அரசு தப்பியது.
இந்தத் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடந்தது. மாலையில் வாக்கெடுப்பு நடக்கவிருந்த நிலையில் அரசைக் காப்பாற்ற பல திரைமறைவு வேலைகள், பேரங்கள் நடந்தன.
குறிப்பாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி ஆகியவற்றை தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க பல்வேறு முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டது.
இந்த விவகாரத்தில் இருவருமே திட்டவட்டமாக எதையும் கூறவில்லை. ஆனாலும் இருவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோ அல்லது வெளிநடப்பு செய்தோ மத்திய அரசைக் காப்பாற்றி விடுவார்கள் என்பது காலையிலேயே தெரிந்துவிட்டது.
அதே போல ஓட்டெடுப்புக்கு சற்று முன் பகுஜன் சமாஜ் கட்சியும் அதைத் தொடர்ந்து சமாஜ்வாடி கட்சியும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டன.
அது எப்படி வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றினர்?.. தொடர்ந்து படியுங்கள்.
544 பேர் கொண்ட மக்களவையில் காங்கிரஸ் கூட்டணிக்கு 261 எம்பிக்கள் உள்ளனர். பாஜக, எதிர்க் கட்சிகளிடம் 219 எம்பிக்கள் உள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணியில் எப்டிஐக்கு ஆதரவான எம்பிக்கள் எண்ணிக்கை:
காங்கிரஸ்- 206
திமுக- 18
மற்ற கூட்டணிக் கட்சிகள்- 30
கூட்டணியில் இல்லாவிட்டாலும் மத்திய அரசை ஆதரிக்கும் கட்சிகள்:
லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்- 4
கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம்- 3
ஆக மொத்தம் காங்கிரஸ் கூட்டணிக்கு 261 எம்பிக்கள் ஆதரவு இருந்தது.
எப்டிஐக்கு எதிரான கட்சிகள், எம்பிக்கள் எண்ணிக்கை:
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் எண்ணிக்கை- 152
இடதுசாரிக் கட்சிகள்- 24
மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ்- 19
அதிமுக- 9
ஆக மொத்தம் இவர்களது எண்ணிக்கை 204
544 எம்பிக்களும் அவையில் இருந்தால் ஓட்டெடுப்பில் அரசு வெல்ல 272 வாக்குகள் தேவைப்பட்டிருக்கும். ஆனால், பகுஜன் சமாஜ் (21 எம்பிக்கள்), சமாஜ்வாடி (22 எம்பிக்கள்) கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டால் அவையில் மொத்தமுள்ள எம்பிக்கள் எண்ணிக்கை 501 ஆகக் குறைந்துவிட்டது. இந்த நிலையில் வாக்கெடுப்பில் அரசு வெல்ல 501ல் பாதி அளவான 251 வாக்குகள் இருந்தாலே போதும் என்ற நிலை உருவானது.
இந் நிலையில் வாக்கெடுப்பு நடந்தபோது அவையில் 501 எம்பிக்கள் இல்லை. 471 எம்பிக்களே இருந்தனர். இதில்
253 எம்பிக்களின் ஆதரவுடன் ஓட்டெடுப்பில் மத்திய அரசு வென்றது. இதில் திமுக எம்பிக்களின் ஆதரவும் அடக்கம். அரசுக்கு எதிராக 218 வாக்குகள் பதிவாயின.
சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜ் கட்சியும் அவையில் இருந்திருந்தால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால் தான் அரசு வெல்ல முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், எப்டிஐக்கு ஆதரவாக வாக்களிக்க இவர்கள் விரும்பவில்லை. இதனால் வெளிநடப்பு செய்து அரசைக் காப்பாற்றிவிட்டனர்.
இதனால் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு இனி சாத்தியமாகிவிடும்.