பிரதிபலிப்பான்

எண்ணங்களின் பிரதிபலிப்பு

Saturday, March 12, 2016

ஆளுங்கட்சியை எதிர்ப்பது மட்டும் தான் எதிர்க்கட்சியின் வேலையா?

ஆளுங்கட்சியை எதிர்ப்பது மட்டும் தான் எதிர்க்கட்சியின் வேலையா?
'அரசின் அறிவிப்புகள், மக்கள் நலனுக்கு எதிரானவை; விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். ஏழை, எளியவர்களின் நலன் சார்ந்த எந்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை; இது கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட். இதுவரை அறிவித்த அனைத்து திட்டங்களும், கானல் நீராவே உள்ளன; ஒரு திட்டம் கூட முழுமை பெறவில்லை' இவை, மாநில சட்டசபை மற்றும் பார்லிமென்ட்டில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளன்று, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஊடகங்களுக்கு தந்த பேட்டியில் குறிப்பிட்டவை.முக்கிய மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு மற்றும் விவாதங்களின் போது சபையில் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தி மையப்பகுதியில் கூடி, துறை அமைச்சரை பேசவிடாமல் செய்வது, கூண்டோடு வெளிநடப்பு செய்து சபை நேரத்தை வீணடிப்பது, இவை தான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களின் ஆஸ்தான செயல்பாடு; இது, தங்கள் தொகுதியை மேம்படுத்துவார் என நம்பி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் தார்மீக கடமையாகி விட்டது!


எதிர்க்கட்சி என்ற பிம்பம் :

இதன் மூலம் அரசின், ஆளுங்கட்சியின் அனைத்து திட்டங்கள், அறிவிப்புகளை எதிர்க்கும் கட்சியே, எதிர்க்கட்சி என்ற பிம்பம் உருவாகி விட்டது. இன்னும் சொல்லப் போனால் அரசின் செயல்பாடுகள் அனைத்தையும், கண்மூடித்தனமாக எதிர்ப்பது மட்டுமே தங்கள் பணி என்ற வகையில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. நம் நாட்டில் மட்டும் தான் இந்த நிலையா அல்லது உலகெங்கும் உள்ள அரசியல் அகராதியில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்றாலே அரசை எதிர்ப்பவர்கள் என்ற வகையில் தான் நடந்து கொள்கின்றனரா?


'ஷேடோ கேபினட்':

சமீபத்தில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி தலைமையில் ஒரு கருத்தரங்கு நடந்தது. அதில் அவர், 'ஷேடோ கேபினட்' பற்றிக் கூறினார். அப்படி என்றால் என்ன? பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், எதிர்க்கட்சி உறுப்பினர்களும், அமைச்சர்களை போல் செயல்படுகின்றனர். ஆளுங்கட்சி அமைக்கும் அரசில், ஒவ்வொரு துறைக்கென தனித்தனி அமைச்சர்கள் இருப்பது போல், எதிர்க்கட்சியினரும் அந்தந்த துறைக்கென அமைச்சர்களை நியமிப்பர். இவர்களுக்கு, 'நிழல் அமைச்சர்'கள் எனப்பெயர். இவர்கள் அமைக்கும் அமைச்சரவை தான் ஷேடோ கேபினட் எனப்படும், 'நிழல் அமைச்சரவை!' இந்த நிழல் அமைச்சரவை, அரசின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கூர்ந்து கவனிக்கும். நிழல் அமைச்சர்கள், அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களின் செயல்பாட்டை கண் கொத்திப் பாம்பாக கவனிப்பர்.அரசின் திட்டங்கள், அதற்காக ஒதுக்கப்படும் நிதி, திட்டத்தின் சாதக பாதகங்களை, நிழல் அமைச்சரவை விரிவாக அலசும். பார்லிமென்டில் இதுகுறித்த விவாதங்களும் இடம்பெறும். அரசு, ஒரு திட்டத்தை முன்

மொழிந்தால், அதுகுறித்து அமைச்சர்கள் விளக்க வேண்டும். அதற்கு செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காண்பிக்க வேண்டும்.


நிழல் அமைச்சரவை :

அதே திட்டத்தை, எவ்வளவு தொகை செலவில் முடிக்கலாம்; அதனால்,ஏற்படும் சாதக பாதங்கங்கள் குறித்து, நிழல் அமைச்சரவை ஆய்வு செய்யும். இதன் மூலம் அரசின் பிடி, எதிர்க்கட்சிகளின் கையில் இருக்கும்; ஊழல், தன்னிச்சையான செயல்பாடு, எதேச்சதிகாரம் தடுக்கப்படும். நிழல் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ன்று நிழல் அமைச்சர்களாக செயல்படும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அடுத்த தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அதே துறையின் அமைச்சர்களாக அவர்கள் பொறுப்பேற்கின்றனர். அப்போது, முந்தைய அரசின் செயல்பாட்டில் இருந்த குறைகளை களைந்து, சிறப்பான ஆட்சியை வழங்க முடிகிறது.

நம் நாட்டில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. ஐந்து ஆண்டுகளும் சபையில் கூச்சலிட்டு, சபை நடவடிக்கையை முடக்கி, அரசின் செயல்பாடுகள் அனைத்தையும் குறை கூறிய எதிர்க்கட்சிகள், தேர்தல் பிரசாரத்தின் போது மட்டும், ஒரு நீண்ட அறிக்கையை வெளியிடுகின்றன. அதில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...' என்ற அடைமொழியுடன், இலவச அறிவிப்பு, ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் ஆசை துாண்டும் வகையிலான அறிவிப்புகள் அந்த அறிக்கையில் இடம்பெறும்.

இலவச அறிவிப்பு:

இவர்களுக்கு சற்றும் சளைக்காமல், ஆளுங்கட்சியின் சாதனை என்ற பெயரில், ஆளுயர போஸ்டர், பேனர்கள் வைக்கப்படும். கடந்த முறை வழங்கிய இலவசங்களை மிஞ்சும் வகையில், புதிய இலவச அறிவிப்புகள் வெளியாகும். ஒரு வேளை ஆளுங்கட்சி மீண்டும் வென்றால், மெகா ஊழல்கள் மீண்டும் அரங்கேறும்.

எதிர்க்கட்சி வெற்றி பெற்றால், புதியவர்களுக்கு கொள்ளையடிக்க வாய்ப்பு கிடைக்கும். சபை நாகரிகம், சபை நடவடிக்கை கூட தெரியாத பலரும், அமைச்சர்களாகி, சட்டசபை, பார்லிமென்டை அலங்கரிப்பர். கிரிமினல் குற்றவாளிகள், குண்டா ராஜ்யம் செய்வோர் என, பல தரப்பினரும் மக்கள் பிரதிநிதிகளாய், நம் சார்பாக அங்கு அமர்ந்திருப்பர். ஆனால், நாம் எதை எண்ணி ஓட்டளித்தோமோ அதற்கு நேர்மாறாக அவர்களின் நடவடிக்கைகள் அமையும்.
கடந்த முறை ஆளுங்கட்சியின் எந்த திட்டங்களை குறை கூறினார்களோ, அதே திட்டங்களை இன்னும் கூடுதல் செலவில், புதிதாக அமைந்த அரசு நிறைவேற்றும். இதுதான், அன்றைக்கு எதிர்க்கட்சியாக செயல்பட்டவர்களின் உச்சபட்ச சாதனை.


Advertisement
மக்கள் மத்தியில்...

இவை அனைத்திற்கும் தீர்வாக, வெளிநாடுகளில் இருப்பது போல் நம் நாட்டிலும், எதிர்க்கட்சிகள் நிழல் அமைச்சரவை அமைத்து, ஆளுங்கட்சியின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கலாம். அவர்களின் தவறுகளை, சட்டசபை அல்லது பார்லிமென்டில் தைரியமாக சுட்டிக் காட்டலாம். அந்தந்த துறை சார்ந்த வல்லுனர்களின் வழிகாட்டுதலின் படி, பட்ஜெட்டில் இடம்பெறும் திட்டங்களை ஆய்வு செய்து ஆய்வறிக்கை வெளியிடலாம். ஊடகங்கள் வாயிலாக, தங்கள் ஆய்வறிக்கையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கலாம்.இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்க்கட்சியினர், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, நீண்ட தேர்தல் அறிக்கையை வெளியிடத் தேவையில்லை. அதில், இலவசங்களை அள்ளி வீசி, விலை மதிப்பற்ற ஓட்டுகளை விலை பேசி விற்க வேண்டிய அவசியமில்லை; ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடத் தேவையில்லை. இப்படி செயல்படுவதன் மூலம் தங்கள் தொகுதி மக்களிடையே நல்ல, நேர்மையான மக்கள் பிரதிநிதி என்ற பெயரெடுத்து, தங்கள் தொகுதியை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ளலாம்; மக்கள் நம்பிக்கையை பெறுவதின் மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம். இதுபோல், நேர்மையான வகையில் செயல்பட்டு, தன் கடமையை சரிவர செய்த எதிர்க்கட்சி உறுப்பினர், ஆளுங்கட்சி வரிசையில் அமரும் போது, முந்தைய ஆட்சியின் தவறை எண்ணிப் பார்த்து, சரியான பாதையில் அரசை வழி நடத்துவார்.

வேலைவாய்ப்பு பெருகும் :

தான் தவறிழைத்தால், தற்போது எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர் தன் செயல்பாடுகளை விமர்சிப்பர் என்ற அச்ச உணர்வுடன் செயல்படுவார். இதனால் ஊழல், சர்வாதிகாரம் மெல்ல மெல்ல மறையும். நல்லாட்சியின் மூலம் நாடு வளம் பெறும்; இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பெருகும். தரமான கல்வி, சுத்தமான குடிநீர், குண்டு குழி இல்லா சாலைகள், சிறந்த இலவச மருத்துவ வசதி, அனைவருக்கும் உணவு என, நாட்டு மக்களின் கனவு மெய்ப்படும்.இவை அனைத்தும், ஆளுங்கட்சியின் கையில் மட்டுமில்லை; எதிர்க்கட்சியினர் நினைத்தால் எதையும் மாற்றலாம். அரசின் கொள்கை முடிவுகள், திட்டங்களை எதிர்ப்பவர்கள் மட்டும் எதிர்க்கட்சியினர் அல்ல; ஊழலை எதிர்த்து, எதிர்பாராத மாற்றங்களை கொண்டு வருபவர்கள் தான் எதிர்க்கட்சிகள் என்பதை உணர வேண்டும்.

Wednesday, February 17, 2016

பா.ம.க தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்த வழிகாட்டு முறை

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பாமக. அதில் கூறியிருப்பதாவது:-

1. தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், செயல்திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளைக் கூறி வாக்கு கேட்க வேண்டும்.
2. ஒவ்வொரு வாக்காளரையும் தேர்தலுக்குள் குறைந்தது 3 முறையாவது நேரில் சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளை விளக்கிக் கூறி அவர்களை பா.ம.க.வின் நிரந்தர ஆதரவாளராக மாற்ற வேண்டும்.

3. தமிழகத்தின் பெரும்பான்மை வாக்காளர்களான பெண்கள் அதிமுவுக்கும், திமுகவுகும் ஏன் வாக்களிக்கக் கூடாது? பாமகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? என்பதை விளக்கும் துண்டறிக்கையை ஒவ்வொரு பெண் வாக்காளரிடமும் கொண்டு சென்று சேர்க்க/விளக்க வேண்டும்.

4. வறுமையை ஒழிக்க கல்வியும், ஆரோக்கியமும் முக்கியம். ஆனால், இவற்றை பெறுவதற்காக கடன் வாங்கி மக்கள் வறுமையில் தள்ளப்படும் நிலையை திராவிடக் கட்சிகள் உருவாக்கி யிருப்பதையும், பா.ம.க. ஆட்சியில் கல்வியும், மருத்துவமும் இலவசமாக வழங்கப்படுவதால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மிச்சமாகும் என்பதையும் வாக்காளர்களிடம் விளக்கிப் புரிய வைக்கவேண்டும்.

5. விவசாயிகளுக்கான அனைத்து இடுபொருட்கள், வேளாண் பயன்பாட்டுக்கான கருவிகள், தடையற்ற மின்சாரம் ஆகியவற்றை இலவசமாக வழங்கி விவசாயத்தை லாபமான தொழிலாக மாற்றுவதற்கான செயல்திட்டம் பாட்டாளி மக்கள் கட்சியிடம் மட்டுமே உள்ளது என்பதை விளக்க வேண்டும்.

6. பா.ம.க. முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் யார்? மத்திய அமைச்சராக இருந்த போது அவர் படைத்த சாதனைகள் என்ன? உலக அளவில் அவர் பெற்ற விருதுகள்/பாராட்டுக்கள் என்ன? தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அவர் உருவாக்கியுள்ள செயல்திட்டம் என்ன? என்பதையெல்லாம் பொதுமக்களுக்கு விரிவாக விளக்க வேண்டும்.

7. வாக்கு கேட்கச் செல்லும் போது தேநீர் வாங்கித் தரும்படி வேட்பாளரை கேட்கக்கூடாது. மாறாக வேட்பாளருக்கு தொண்டர்கள் தேநீர் வாங்கித் தர வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி வலிமையான கட்சி... அதன் தொண்டர்கள் எதையும் எதிர்பாராதவர்கள். எனவே, பிரச்சாரத்திற்கான செலவுகளை அவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும்.

8. வேட்பாளர் சொந்த வாகனம் வைத்திருந்தால் அதில் சென்று வாக்காளர்களை சந்திக்கலாம். வேட்பாளரிடம் வாகனம் இல்லை என்றால் வாகனம் வைத்திருக்கும் நிர்வாகிகள் வேட்பாளரின் பிரச்சாரத்திற்காக வாகனம் அளித்து உதவ வேண்டும்.

9. அதிமுக, திமுக கட்சிகள் அளிக்கும் ரூ.1000, ரூ.500 பணத்திற்காக விலை மதிப்பற்ற ஜனநாயக உரிமையான வாக்குகளை விற்று ஏமாந்து விடக்கூடாது என வாக்காளர்களிடம் விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விலை மதிப்பற்ற வாக்குரிமையை விலை கொடுத்து வாங்கும் திமுக, அதிமுகவின் கலாச்சாரத்தை பிரச்சாரத்தின் மூலம் இந்த தேர்தலுடன் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

10. பூத் செலவு என்பது இடைக்காலத்தில் ஏற்பட்ட தேவையற்ற கலாச்சாரம் மற்றும் செலவு ஆகும். பூத் செலவு என்பது பா.ம.க.வின் அகராதியில் இல்லை என்பதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

11. பா.ம.க.வின் சுவர் விளம்பரங்கள் சுவற்றின் உரிமையாளர்களிடம் முறைப்படி அனுமதி பெற்றுத் தான் எழுதப்பட வேண்டும். பொதுக்கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடந்த இடங்களில் சேரும் குப்பைகளை கட்சியினரே அப்புறப்படுத்த வேண்டும்.

12. ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றை தீர்ப்பதற்கான செயல்திட்டங்களுடன் தொகுதி நிலையிலான தேர்தல் அறிக்கைகள் ஒவ்வொரு தொகுதியிலும் வெளியிடப்பட வேண்டும்.

13. ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்த பகுதி மக்களின் பிரச்சினைகளில் சாத்தியமானவற்றை தீர்ப்பதற்கான வாக்குறுதியை அளித்து, ஊர்த் தலைவர்களுடன் சமூக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

14. பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் யாருக்கும் தொல்லை தராத வகையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். பிரச்சாரத்திற்காக செல்லும் போது ஏதேனும் இடத்தில் மற்ற கட்சியினர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தால் அவர்களின் பிரச்சாரம் முடிவடையும் வரை காத்திருத்து அதன் பின்னர் வாக்கு சேகரிப்பைத் தொடங்க வேண்டும். எதிர்க்கட்சியினரிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.

15. தேர்தல் பிரச்சாரத்தின் போது மிகவும் நாகரீகமான முறையில் நடந்து கொள்ள வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள், நோக்கங்கள், கடந்த கால சாதனைகள் ஆகியவற்றைக் கூறி மட்டுமே வாக்கு கேட்க வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சிக்கக் கூடாது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பா.ம.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வழங்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான அரசியலை உறுதி செய்யும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தகைய தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து பின் பற்ற வேண்டும் என்று பா.ம.க. கேட்டுக் கொள்கிறது'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, February 7, 2016

தோணிமடுவு திட்டத்தையும், மேட்டூர் அணை காவிரி உபரிநீர் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.

தோணிமடுவு திட்டத்தையும், மேட்டூர் அணை காவிரி உபரிநீர் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.

 ''தமிழகத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் மேட்டூர் அணையாகும். அதிலிருந்து வெளியேற்றப்படும் நீர்தான் காவிரி டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதிவரை சென்றடைந்து, அதன்மூலம் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும், விவசாயிகளும் பயன்பெறுகின்றனர். மேட்டூர் அணையின் அருகில் இருக்கின்ற கொளத்தூர் மற்றும் மேச்சேரி பகுதிக்கு இந்த அணையால் எவ்வித பயனும் இல்லை. மேலும் கனமழை காலங்களில் சுமார் 100 டி.எம்.சி வரை தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கும் நிலையும் உள்ளது.

கொளத்தூர் மற்றும் மேச்சேரி பகுதி பயன்பெறும் வகையிலும், வீணாக சென்று கடலில் கலக்கும் தண்ணீரை தடுக்கவும், கொளத்தூர் அருகிலுள்ள தோணி மடுவிலிருந்து, பாலாறு வழியாக காவிரியில் கலக்கும் உபரி நீரை தடுப்பணை கட்டி தேக்கிவைக்க தோணி மடுவு திட்டத்தையும், மேட்டூர் அணைக்கு அருகிலுள்ள ஏத்துவாமலைக்கு காவிரி நீரை ஏற்றி கோனூர், கூணான்டியூர் வழியாக மேச்சேரி ஏரியை இணைத்திட தானதியூர் - மூலக்காடு நீரேற்று திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் சுமார் 50 ஆண்டுகாலமாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள்.

1984ல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தோணி மடுவு திட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அவர் மறைவிற்குப்பின் தமிழகத்தில் மாறி, மாறி ஏற்பட்ட ஆட்சிகளால் தோணி மடுவு திட்டம் என்றால் என்னவென ஆட்சியாளர்கள் கேட்கும் நிலை உருவாகியுள்ளது.

மேலும், மேச்சேரி ஏரியிலிருந்து இயற்கையாக அமைந்துள்ள நீர்வழிப் பாதைகளை பயன்படுத்தி தாரமங்கலம், சின்னப்பம்பட்டி வழியாக சரபங்கா ஆறு, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளுடன் காவிரி நதியின் உபரி நீரை இணைத்தால், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம், குட்டை களுக்கு காவிரியின் உபரி நீர் சென்றடையும். நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், பல லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அதற்கு மேட்டூர் அணை காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.

தற்போது இப்பிரச்சனை மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி பகுதி மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. எனவே தோணிமடுவு திட்டத்தையும், தானதியூர்-மூலக்காடு நீரேற்று திட்டத்தையும், மேட்டூர் அணை காவிரி உபரிநீர் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் ர்.

Thursday, February 26, 2015

2015-2016 க்கான இரயில்வே பட்ஜெட்

 2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தாக்கல் செய்து, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதில் பயணிகள் மற்றும் சரக்கு  கட்டண உயர்வு எதுவும் இடம்பெறவில்லை. அதேப்போன்று புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.
ரயில்வே பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க வகையிலான திட்டங்களோ அல்லது அறிவிப்புகளோ இடம்பெறவில்லை என்பதால், பங்கு சந்தையில் ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

முக்கிய அம்சங்கள்:

* நாட்டின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் ரயில்வே மிகப்பெரிய பங்காற்றுகிறது. ரயில்வே துறையில் செய்யப்படும் முதலீடுகள் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்.

 *  ரயில் பாதை அகலமாக்கல் மின்மயமாக்கல் அதிகரிக்கப்படும்
*  ரயில்வே துறையில் கட்டுமானம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப் பணிகள் பல முடங்கிக் கிடக்கின்றன .
* ஏற்கெனவே உள்ள வழித் தடங்களில் கூடுதல் ரயில்கள்  இயக்கப்படும்.
* ராஜ்தானி சதாப்தி போன்ற விரைவு ரயில்கள்  அதிகம் தேவை.
* சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை.

கட்டண உயர்வில்லை
* பயணிகள் கட்டணத்தில் மாற்றமில்லை.
* அடுத்த 5 ஆண்டுகளுக்கு 4 அம்ச இலக்குகள்.
* கூடுதல் முதலீடுகளால் வேலை வாய்ப்புகள் பெருகும்.
* 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற திட்டம்.

 பசுமை கழிவறைகள்
* ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் தூய்மைக்கென தனி துறை உருவாக்கம்.
* 650 ரயில் நிலையங்களில் புதிய பசுமை கழிவறைகள்.
* 17 ஆயிரம் கழிப்பறைகள் சீரமைப்பு

குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்
* 24 மணிநேரமும் செயல்படும் குறை தீர் மையங்கள்.
*  நாடு முழுமைக்கும் ரயில்வே உதவி எண் 138
* மார்ச்-1 முதல் குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன்ஸ்

120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்
* டிக்கெட் முன்பதிவுக்கான கால அவகாசம் தற்போதுள்ள 60 நாட்களிலிருந்து செய்யும்  120 நாட்களாக நீட்டிப்பு.
* எஸ்.எம்.எஸ்.  மூலம் குறைகளை பதிவுசெய்யும் வசதி அறிமுகம்.
* ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் டிக்கெட்டுகள்
* தானியங்கி எந்திரங்கள் அதிகரிப்பு.
* ரயில் வரும் நேரம் குறித்து அறியும் எஸ்.எம்.எஸ்.வசதி
* 108 ரயில்களில்   இணைய தளம் மூலம் உணவு பெரும் வசதி.
* கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பொது பெட்டிகள் இணைப்பு

 புல்லட் ரயில்
* முக்கிய ரயில் நிலையங்களில் wify வசதி.
* புல்லட் ரயில் அடுத்த 2 ஆண்டுகளில் அறிமுகம்.
* பெண்கள் பெட்டிகளில் சிசிடிவி கேமிராக்கள்
* சாமானியரோடு தொடர்பு கொள்ள எம்.பி.க்கள் தலைமையில் குழு.

1,200 கி.மீ.நீளத்திற்கு புதிய ரயில் பாதைகள்

* புதிய விளக்கு வசதிகளுடன் பெட்டிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தல்
* 9,400 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர் கேஜ் பாதை அகலப்பாதையாக மற்றப்படும்.
* 1,200 கி.மீ.நீளத்திற்கு புதிய ரயில் பாதைகள்.
* இரட்டைப் பாதை, மின்மயமாக்கல் உள்ளிட்ட 77 புதிய திட்டங்கள் அறிமுகம்.
* சரக்கு ரயில் போக்குவரத்துக்கு ரெண்டு தனிப் பாதைகள்.
* ரயில் நிலையங்களை நவீனப் படுத்த தனியாருக்கு அனுமதி.

5 நிமிடத்தில் டிக்கெட்
* வரும் நிதியாண்டில் 6,000 கி.மீ.நீளம் பாதைகள் மின்மயமாக்கம்.
* மெட்ரோ ரயில் 160 கி.மீ.முதல் 200 கி.மீ. வரை நீட்டிப்பு.
* காகிதமில்லாத ரயில்வே டிக்கெட்டுகள்.
* மாநிலத்தின் கலாச்சாரம் பிரதிபலிக்கும் வகையில் அம்சங்கள் கொண்ட  ரயில் நிலையங்கள் அமைப்பு
  * சரக்கு ரயில்களின் வேகம் அதிகரிப்பு
* 9 ரயில்களின் வேகம் 160 கி.மீ.ஆக அதிகரிப்பு
* நிலையத்திற்குள் நுழைந்த 5 நிமிடத்தில் டிக்கெட் வழங்க நடவடிக்கை

அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ரயில் சேவை
* முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு  கீழ்ப்படுக்கை முன்னுரிமை
* 3438 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் ஒழிப்பு
* தேர்வு செய்யப் பட்ட 4 பல்கலைக் கழகங்களில் ரயில்வே ஆய்வு மையங்கள்.
* அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ரயில் சேவை பரிசீலனை.
* மாநிலங்களுடன் இணைந்து புதிய கூட்டுத்  திட்டங்கள்.
* ரயில் பேருந்துகளுக்கு ஒரே டிக்கெட்.
* ரயில் பெட்டிகளில் தீ விபத்து எச்சரிக்கைக் கருவி பொருத்தப்படும்.

இ-கேட்டரிங் வசதி அறிமுகம்
108 ரயில்களில் இ-கேட்டரிங் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ரயில்களில் பயணிப்பவர்கள் தங்களுக்கு வேண்டிய விருப்பமாக உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட முடியும்

புதிய ரயில்கள் இல்லை
* புதிய ரயில்கள் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்ல. ஆய்வுகள் முடிவடைந்த பின்னர் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்கப்படும்

ரயில்வே தனியார் மயமாக்கப்படாது
* ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படமாட்டாது
 * ரயில்வே சொத்துக்களின் விற்பனை தவிர்ப்பு
* ரயில்வே நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தவிர்க்க டிஜிட்டல் மேப்பிங் மூலம்  கண்காணிப்பு
*  ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு யோகா பயிற்சி
* எரிசக்தி பயன்பாட்டைக் கண்காணிக்க தனி வாரியம்
* பயணிகளின் வசதிக்காக 67 விழுக்காடு கூடுதல் நிதி ஒதுக்கீடு
*  வன விலங்கு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்
* ரயில்களின் ஒலி அளவு குறைப்பு
* கடலோர நகரங்களை இணைக்க 2,000 கோடி ரூபாய் நிதி
* 21 ரயில்வே பணியாளர் வாரியம் அமைப்பு
* 1000 வாட் மின்சாரம் சூரியஒளி மூலம் உற்பத்தி செய்ய திட்டம்

Tuesday, February 17, 2015

அதிமுக மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு

அதிமுக அரசு மீது 18 வகையான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, 200 பக்க புத்தக வடிவில் மிகப் பெரிய ஊழல் பட்டியலை பாமக ஆளுநர் ரோசய்யாவிடம் கொடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக சட்டசபையில் நேற்று காலை ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்துகையில், தமிழக அரசைப் பாராட்டிப் பேசியிருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஆளுநரைச் சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி ஆகியோர் இந்தப் புகார்ப் பட்டியலை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழல் புகாரைக் கொடுத்த பாமக குழு, அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவும் ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தது.

அதிமுகவின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் என்ற முறையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியமைத்ததுடன், தமிழகத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். அதன் பின், வருவாய்க்கு மீறி சொத்து குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டதையடுத்து, முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் பொறுப்பேற்றார். 2011 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்ற நாளில் இருந்தே, மாநில அரசின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடத் தொடங்கியது.

ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சரான பின்னர், திறமையில்லாத அரசுக்கும், முழுக்க முழுக்க ஊழல் நிறைந்த நிர்வாகத்திற்கும் தலைமை தாங்கி வருகிறார். ஜெயலலிதா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அரசுகளில்அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மீது அவர்களின் ஊழல் நிறந்த செயல்பாடுகளை காட்டும். செல்லுபடியாகக் கூடிய ஆதாரங்களுடன் கீழ்க் கண்ட குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறோம்.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த இ.ஆ.ப. அதிகாரி உ. சகாயம் அவர்கள் கடந்த 19.5.2012 அன்று தமிழக அரசுக்கு அனுப்பிய அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் இமாலய ஊழலுக்கான வளங்களில் ஒன்றாக கிரானைட் குவாரிகள் இருப்பது உறுதியாகியிருக்கிறது. சகாயம் அவர்கள் அப்போது அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், பொதுப் பாதைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நிலங்கள், குளங்கள், பாசனக் கால்வாய்கள் ஆகியவை கிரானைட் தொழிலில் செல்வாக்கு மிக்க சிலரால் வளைக்கப்பட்டு, அவற்றில் இருந்த கிரானைட் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு அதிக வருவாயை ஈட்டும் வகையில் இந்த சட்டவிரோத கிரானைட் கொள்ளையைத் தடுக்க அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். முதல்கட்ட ஆதாரங்களின்படி, கிரானைட் கொள்ளையால் அரசுக்கு ரூ.16,388 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து மேலும் விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அதன்படி, விசாரணை நடத்த தமிழக அரசு மறுத்துவிட்ட நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில் மட்டும் ஆய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இந்த விசாரணையின்போது, மதுரை மாவட்டத்தில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சமணர் படுக்கை மலைகள், பாண்டவர் மலைகள் உள்ளிட்ட மலைகளில் விதிகளை மீறி கிரானைட் வெட்டியெடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மதுரை மாவடட்டத்தில்தான் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது என்பதாலும், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெருமளவில் கிரானைட் கொள்ளை நடைபெற்றிருப்பதாலும். இந்த வகையில் மட்டும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 5 லட்சம் கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு தயங்கியது, இதுகுறித்து விசாரணை நடத்த சகாயம் தலைமையில் குழு அமைக்கப்பட்ட பிறகும் அவரது விசாரணைக்கு ஆதரவு அளிக்க அரசு நிர்வாகம் மறுப்பது ஆகியவை இந்த ஊழலில் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதைக் காட்டுகிறது. இதுகுறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வர விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும்.

ஊழல் தொடர்பான வழக்கில் சில வாரங்களுக்கு முன் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், "இந்த நாட்டின் மிகப்பெரிய எதிரி ஊழல் தான்'' என்று எச்சரித்திருந்தது. உச்சநீதிமன்றத்தால் எதிரி என்று எச்சரிக்கப்பட்ட ஊழல், தமிழக அரசு நிர்வாகத்தில் ஆழமாக ஊடுருவி தலைவிரித்தாடி வருவதாகத் தெரிகிறது. அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மோனோசைட் என்ற தாதுவை வெட்டியெடுப்பதற்கு அனுமதி அளிக்கும் அளவுக்கு, தமிழக அரசின் நிலவியல் மற்றும் சுரங்கத்துறையில் ஊழல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மோனோசைட் என்பது அணுசக்தியை உள்ளடக்கிய தாது ஆகும். இதிலிருந்து தோரியம், யுரேனியம் போன்ற தாதுக்களை பிரித்தெடுக்க முடியும்.

இந்த தாது இயல்பாகவே, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒரிசா உள்ளிட்ட தென்மாநிலங்களில் உள்ள கடற்கரை மணலில் பெருமளவில் காணப்படுகிறது. இந்த தாதுவைக் கொண்ட மணல் கடற்கரை மணல் அல்லது தாதுமணல் என்று அழைக்கப்படுகிறது. இது பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்ட தாது ஆகும். இதுவிர இல்மனைட், கார்னெட், ரூட்டைல், சிலிமனைட், ஜிர்கான் உள்ளிட்ட தாதுக்களும் கடற்கரை மணலில் அளவுக்கு அதிகமாக காணப்படுகின்றன.

தாது மணல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், 1998 ஆம் ஆண்டு வரை இதை தோண்டியெடுக்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. தாது மணலை வெட்டியெடுக்கும் உரிமை இந்திய அரசுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. 1998 ஆம் ஆண்டு விதிகள் திருத்தப்பட்டு, கார்னெட், இல்மனைட், ரூட்டைல் ஆகியவற்றை கடுமையான விதிகளுக்கு உட்பட்டு தனியார் நிறுவனங்களும் வெட்டியெடுக்க அனுமதி அளிக்கப்படடது. எனினும், மோனோசைட் தொடர்ந்து தடை செய்யப்பட்ட தாதுவாகவே இருந்து வந்தது. மோனோசைட் தாதுவை கையாளவேண்டுமானால், இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்திடமிருந்து உரிமம் பெறவேண்டும் என்று 1962 ஆம் ஆண்டின் அணுசக்தி சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெட்டியெடுக்கப்பட்ட தாது மணலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மோனோசைட் தாது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஹைதராபாத்தில் உள்ள அணு தாது வாரியத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும். 1957 ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின்படி, தாதுமணலை வெட்டியெடுப்பதற்கான உரிமங்களை வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது; மாநில அரசுக்கு இல்லை. ஆனால், இந்தச் சட்டங்களை மதிக்காமல், கடந்த 2012&13 ஆம் ஆண்டில் மோனோசைட் கலந்த தாது மணலை வெட்டியெடுப்பதற்கான 16 உரிமங்களை தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் நிலவியல் மற்றும் சுரங்கத்துறை வழங்கியுள்ளது. அணுசக்தி எரிபொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருளாகக் கருதப்படும் மோனோசைட்டைக் கொண்ட தாது மணலை விருப்பம்போல வெட்டியெடுப்பதற்கான உரிமத்தை தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு விதிகளை மீறி வழங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஒரு டன் மோனோசைட்டை எடுப்பதற்கான உரிமத் தொகையாக வெறும் 125 ரூபாயை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மோனோசைட் தாதுவை உற்பத்தி செய்து வெளிச்சந்தையில் விற்க மறைமுகமாக தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இது இந்திய அரசின் சட்டத்தை மீறிய செயல் என்பது மட்டுமின்றி, தேசியப் பாதுகாப்புக்கும் பெறும் அச்சுறுத்தலாகும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் கடலோரப்பகுதிகளில் இயற்கை கொடுத்த கொடையான தாதுமணல் ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற வைகுண்டராஜன் என்பவருக்கு சொந்தமான வி.வி. மினரல்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படுகிறது.

இந்தியாவில் கார்னெட் மணல் அள்ளுவதற்காக வழங்கப்பட்ட 111 உரிமங்களில் 96 உரிமங்கள் இந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர இல்மனைட் எனப்படும் தாது மணலை அள்ளுவதற்கான 44 உரிமங்களும் இந்த நிறுவனத்திற்கே வழங்கப்பட்டிருக்கின்றன. உரிமம் பெற்ற இடங்களை விட பலமடங்கு இடங்களில் தாது மணல் அள்ளப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. கடந்த 2002 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில்மட்டும் மொத்தம் 2.1 மில்லியன் டன் எடையுள்ள மோனோசைட் அல்லது 2.35 லட்சம் டன் தோரியத்தை கடற்கரைகளில் இருந்து தாதுமணல் நிறுவனங்கள் கொள்ளையடித்திருக்கின்றன. இதன் மதிப்பு அளவிட முடியாத அளவுக்கு அதிகம் என்ற போதிலும், மிகக்குறைவாக வைத்துக் கொண்டாலும் ரூ.60 லட்சம் கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களிலேயே உள்ளன.
இந்திய அணுசக்தித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அணு தாதுக்களை கண்டுபிடித்தல் மற்றும் ஆராய்ச்சி செய்வதற்கான இயக்குநரகத்தின் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இந்திய கடலோரப் பகுதிகளில் 10.7 மில்லியன் டன் அளவுக்கு மோனோசைட் தாது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் 2002 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இதே இயக்குநரகம் தாக்கல் செய்த அறிக்கையில், இந்திய கடலோரப் பகுதிகளில் 12.8 மில்லியன் டன் மோனோசைட் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் 2.1 மில்லியன் டன் மோனோசைட் அல்லது 2,35,000 டன் தோரியம் வெட்டியெடுக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

அ) இந்தியா முழுவதற்கும் தோரியம் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தான் வழங்கப்படுவதாக வைத்துக் கொண்டால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் 700 ஆண்டுகளுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். ஆ) உலகில் இப்போது எந்த அளவுக்கு அணுமின்சாரம் தயாரிக்கப்படுகிறதோ, அதே அளவுக்கு மின்சாரத்தை தயாரிப்பதாக இருந்தால் தாதுமணல் நிறுவனங்கள் கொள்ளையடித்த தோரியத்தைக்கொண்டு 23,500 ஆண்டுகளுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இ) தாதுமணல் நிறுவனங்கள் கொள்ளையடித்ததாக கூறப்படும் தோரியத்தில் 75% வி.வி. மினரல்ஸ்நிறுவனத்தால் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் ரூ.45 லட்சம் கோடி ஆகும்.

வி.வி. மினரல்ஸ் நிறுவனம் இந்த அளவுக்கு கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் போதிலும்,அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் தாது மணல் கொள்ளை குறித்து அரசிடம் புகார் அளித்த அடுத்த நாளே (06.08.2013) அம்மாவட்ட ஆட்சியர் ஆசிஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் இரு நாட்கள் கழித்து தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்ய அப்போதைய வருவாய்த்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவின் அறிக்கை 17.09.2013 அன்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் தாது மணல் கொள்ளை குறித்து திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அதனால், அந்த அறிக்கையை வெளியிட தமிழக அரசு மறுத்து வருகிறது. இந்த அறிக்கையை ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்; அடுத்த இரு வாரங்களில் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை கடந்த 29.05.2014 அன்று தமிழக அரசுக்கு ஆணையிட்டது. ஆனால், இன்றுவரை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அதுமட்டுமின்றி, மற்ற மாவட்டங்களில் உள்ள 71 தாதுமணல் குவாரிகளில் ககன்தீப்சிங் பேடி குழு ஆய்வு நடத்தி ஓராண்டு ஆகியும் அது குறித்த அறிக்கையை குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ள தமிழக அரசு மறுத்து வருகிறது.

வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் தலைவரான வி.வைகுண்ட ராஜன் அ.தி.மு.க. தொலைக் காட்சியான ஜெயா தொலைக்காட்சியில் பங்குதாரராக இருப்பதாலும், தாதுமணல் கொள்ளை மூலம் கிடைத்த பணத்தில் பெரும்பகுதி ஆட்சியாளர்களுக்கு செல்வதாலும் தான் இந்த விஷயத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள தாதுமணல் குவாரிகளை மூட கடந்த 17.9.2013 அன்று மாநில அரசு ஆணையிட்டது. ஆனால், அதன் பின் 30.5.2014 வரையிலான 9 மாதங்களில் வி.வி. மினரல்-ஸ் நிறுவனம் 4.45 டன் எடையுள்ள தாதுக்களை ஏற்றுமதி செய்ய தமிழக அரசு அனுமதித்திருப்பதாகவும், இந்த வகையில் மட்டும் தமிழக அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைத்து, விசாரிக்க ஆணையிட வேண்டும் என்று கோரி ஜி.விக்டர் ராஜமாணிக்கம் என்பவர் தாக்கல் செய்ய பொதுநல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

வடசென்னை அனல் மின்திட்டங்களுக்கான ஒப்பந்தம் பெல் நிறுவனத்திற்கும், மேட்டூர் அனல் மின் திட்டத்திற்கான ஒப்பந்தம் பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டிருந்தன. இந்த ஒப்பந்தங்களின் படி மேட்டூர் மின்திட்டப்பணிகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் கால தாமதத்திற்காக மாதத்திற்கு ரூ.107 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். மேட்டூர் மின்திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்படும் தாமதத்திற்காக முதல் 4 மாதங்களுக்கு ஒவ்வொரு வாரமும் திட்ட மதிப்பான ரூ.3114.71 கோடியில் 0.5 விழுக்காடு வீதமும், 5 மற்றும் 6 ஆவது மாதங்களில் ஒவ்வொரு வாரமும் 0.75% வீதமும், அதன் பின்னர் திட்டப்பணிகள் முடிவடையும் வரை ஒவ்வொரு வாரத்திற்கும் ஒரு விழுக்காடு வீதமும் அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். அதன்படி இந்த இரு நிறுவனங்களிடமிருந்தும் ரூ.7418. 07 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், அவ்வாறு வசூலிக்கப்பட வில்லை என்றும் இந்திய தலைமைக் கணக்காயர் அறிக்கையில் குற்றஞ்சாற்றப்பட்டிருக்கிறது. (ஆதாரம்: 2012&13 ஆம் ஆண்டிற்கான இந்திய தலைமைக் கணக்காயர் அறிக்கை, பக்கம்: 35&37 மற்றும் 101). தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக அனைத்து மின்திட்டங்களும் பல ஆண்டுகள் தாமதமாகத் தான் செயல்படுத்தப்படுகின்றன. அந்த மின்திட்டங்களை செயல்படுத்தியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய அபராதத் தொகை மட்டும் சுமார் ரூ.10,000 கோடி இருக்கும்.

தமிழ்நாட்டில் 3,600 மெகாவாட் திறன்கொண்ட அனல்மின் திட்டங்களை செயல்படுத்துவதில், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தேவையற்ற காலதாமதம் செய்யப்படுவதாகவும் இதனால், மின் திட்டச் செலவுகள் அதிகரித்திருப்பதாகவும் இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. 2007 ஆம் ஆண்டில் இருந்து 2012 ஆம் ஆண்டு வரையிலான 11 ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மொத்தம் 7,808 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட மின் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்தக் காலக்கட்டத்தில் ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்குக்கூட அனல் மின்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. 112 மெகாவாட் திறன்கொண்ட நீர் மற்றும் எரிவாயு மின் திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்பட்டதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் போதிய அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யாததால், தனியாரிடமிருந்து அதிக விலை குறித்து மின்சாரத்தை வாங்கும் நிலை உருவாகியுள்ளது. என்.எல்.சி., கல்பாக்கம் அனல்மின் நிலையம், தேசிய அனல்மின் கழகம் உள்ளிட்ட மத்திய அரசு மின் நிறுவனங்களிடமிருந்து மின்சார வாரியம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.2.94 முதல் ரூ.3.85 வரை விலை கொடுத்து வாங்குகிறது. பிற தனியார் நிறுவனங்களிடமிருந்து, ஒரு யூனிட் 4.26 முதல் 4.76 வரை விலைகொடுத்து வாங்குகிறது. ஆனால், சாமல்பட்டி மின் நிறுவனம், மதுரை மின் நிறுவனம், பிள்ளை பெருமாள் நல்லூர் மின்நிறுவனம், ஜி.எம்.ஆர். மின் நிறுவனம் ஆகிய 4 தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் ரூ.15.14 என்ற விலையில் நடப்பாண்டில் 79 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்க மின்சார வாரியம் தன்னிச்சையாக முடிவு செய்திருக்கிறது. தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கும்போது ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும்; ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.5.50க்கும் மேல் விலை தரக்கூடாது என்பவை ஒழுங்கு முறை ஆணையத்தின் விதிகளாகும். இந்த விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு மிக அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது
அண்மையில் சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் 12 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு ஊழல்தான் காரணம் என்றும், இந்தக் கட்டடத்தைக் கட்டியவர் அப்போதைய முதலமைச்சருக்கு நெருக்கமாக இருந்த அமைச்சரின் பினாமி என்று கூறப்படுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் கட்டட அனுமதி பெறுவதற்காக, பெருமளவில் கையூட்டு கொடுக்கவேண்டும் என்பது விதியாகிவிட்டது. சென்னையில் ஒரு வீடு கட்டுவதற்காக குறைந்தது ஒரு லட்சம் ரூபாய் கையூட்டு தர வேண்டியிருக்கிறது. அடுக்குமாடிக் கட்டடங்களை கட்டுவதற்கான அனுமதி பெறும்போது, ஒரு சதுர அடிக்கு 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கையூட்டு பெறப்படுகிறது. இந்த வகையில் மட்டும் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 36,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ், நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிப்பதற்கான உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதிலும் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருக்கின்றன. அடுத்த ஓராண்டுக்கு தலா ஒரு லட்சம் டன் துவரம் பருப்பையும், உளுந்தம் பருப்பையும் வினியோகிப்பதற்கான ஒப்பந்தம் ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டு எந்த நேரத்திலும் ஆணை பிறப்பிக்கப்படும் நிலையில் உள்ளது. ராசி நியூட்ரி ஃபுட்ஸ் நிறுவனம் வழங்கும் ஒரு டன் உளுந்தம் பருப்புக்கு ரூ. 89 ஆயிரமும், ஒரு டன் துவரம் ( பருப்புக்கு ரூ. 75 ஆயிரமும் விலையாக தரப்படவிருக்கிறது. ஆனால், அரசு அதிக விலை கொடுத்து வாங்கவிருப்பதால் உளுத்தம் பருப்புக் கொள்முதலில் ரூ.350 கோடி, மசூர்பருப்பு கொள்முதலில் ரூ.380 கோடி என ஆண்டுக்கு மொத்தம் ரூ.730 கோடி இழப்பு ஏற்படும்.

தமிழ்நாட்டில் சத்துணவு திட்டத்திற்கான முட்டைகளை கொள்முதல் செய்வதிலும் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஒரு முட்டை ரூ. 4.51 என்ற விலையில் ஓராண்டுக்கு முட்டைகளை வினியோகிப்பதற்கான ஒப்பந்தம் நாமக்கல்லைச் சேர்ந்த நேச்சுரல் ஃபுட் புராடக்ட்ஸ், திருச்செங்கோட்டைச் சேர்ந்த சுவர்ணபூமி எண்டர்பிரைச-ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது நாமக்கல் பகுதியில் முட்டை கொள்முதல் செய்வதற்காக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.3.31 என்ற விலையைவிட, 1 ரூபாய் 20 பைசா அதிகமாகும். ஒரு மாதத்திற்கு 8.55 கோடி முட்டை கொள்முதல் செய்யப்படும் நிலையில், அதற்கு அதிக விலை கொடுப்பதால், மாதத்திற்கு ரூ.12.31 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது.

ஆட்சியாளர்களின் ஆதரவுடன் ஆவின் பாலிலும் கலப்படம் நடைபெற்றிருக்கிறது. விழுப்புரம் அருகே ஆவின் பாலை ஏற்றி வந்த லாரியிலிருந்து 2 ஆயிரம் லிட்டர் பாலை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேதிப்பொருட்கள் அடங்கிய தண்ணீரை கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகி வைத்தியநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த ஊழலில் முக்கியப்பங்கு வகித்த பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி பதவி நீக்கம் செய்யப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் 104 லாரிகளில் தலா 2 ஆயிரம் லிட்டர் வீதம் மொத்தம் ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் பால் கொள்ளையடிக்கப்பட்டு அதற்குப் பிறகு தண்ணீர் கலக்கப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ. 300 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. ஆனால், ரூ. 2.89 லட்சம் அளவுக்கு மட்டுமே ஆவின் பால் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி இந்த ஊழலை மூடிமறைக்க தமிழக அரசு முயன்று வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை ஆகியவற்றின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை செய்வதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அமைச்சர்கள் நிலையில் தொடங்கி கீழ்நிலை அதிகாரிகள் வரை அனைத்து மட்டங்களிலும் சதவீதக் கணக்கில் லஞ்சம் பெறப்படுகிறது. இந்த 3 துறைகளுக்கான ஒப்பந்தங்களை பெறுவதற்காக ஒவ்வொரு நிலையில் உள்ளவர்களுக்கும் ஒப்பந்த மதிப்பில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகை லஞ்சமாக வழங்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 7500 ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலையில் சேர விரும்புபவர்களிடம் தலா ரூ. 3 முதல் 4 லட்சம் வரை லஞ்சம் வாங்கப்படுகிறது. போக்குவரத்துக்கழக உதவி பொறியாளர் பணிக்கு ரூ.10 லட்சமும், இளநிலைப்பொறியாளர் பணிக்கு ரூ.6 லட்சமும் லஞ்சமாக வாங்கப்படுகிறது.போக்குவரத்துப் பணியாளர்கள் நியமனத்தில் மட்டும் ரூ.300 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் கோகோ கோலா ஆலை அமைப்பதற்கு அனுமதி அளிப்பதில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தொழில்துறை அமைச்சர் தங்கமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இவர்களில் எடப்பாடி பழனிச்சாமி மூலமாக பல கோடி ரூபாய் லஞ்சமாக தரப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் கல்வித்துறையையும் விட்டு வைக்கவில்லை. பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 30 கோடி வரை லஞ்சம் பெறப்படுகிறது.பல்கலைக்கழக பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நியமனத்தில் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கையூட்டு பெறப்படுகிறது. சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. முறைகேடுகள் நடந்திருப்பதை அதிகாரிகள் குழு உறுதி செய்ததை அடுத்து பணி நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்கள்/ இணைப்பேராசிரியர்கள் நியமனத்திலும் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன

பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஓராண்டில் மட்டும் 10 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அதற்காக ரூ.500 கோடி கையூட்டாக பெறப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கையூட்டு பெற வேண்டும் என்பதற்காகவே பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை வேண்டுமென்றே சம்பந்தமில்லாத ஊர்களுக்கு இடமாற்றம் செய்யும் உத்தியை அரசு கடைபிடித்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை புதுப்பிக்க ரூ. 75 ஆயிரமும், தனியார் பள்ளிகளுக்கு புதிதாக அங்கீகாரம் வழங்க ரூ.7.5 லட்சமும் லஞ்சமாக தர வேண்டியுள்ளது. சத்துணவு அமைப்பாளர்கள் பணிக்கு ஆட்களை நியமிக்க ரூ.2.5 லட்சம் கையூட்டாக பெறப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்புக் கட்டமைப்புடன் கூடிய பசுமை வீடுகளும், இந்திரா காந்தி வீட்டு வசதித் திட்டத்தின்படியான வீடுகளும் ஏழை மக்களுக்கு கட்டித் தரப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 2.40 லட்சம் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதற்காக பயனாளிகளிடமிருந்து ரூ.900 கோடி கையூட்டாக பெறப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்திராகாந்தி வீட்டு வசதித் திட்டத்தின் 4 லட்சம் பயனாளிகளிடம் ரூ.1,000 கோடி கையூட்டாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளின் மூலம் சில்லறையில் மது விற்பனை செய்வதே மிகப்பெரிய ஊழல் ஆகும். ஏனெனில், மது விற்பனை ஏழைகளின் வருமானத்தை கொள்ளையடிக்கிறது; தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை பாதிக்கிறது; குடும்பங்களைச் சீரழிக்கிறது; பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகளுக்குத் தேவையான மது வகைகளில் பெரும்பாலானவை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் குடும்பத்தினருக்குச் சொந்தமான மது ஆலையிலிருந்து (மிடாஸ்) கொள்முதல் செய்யப்படுவது மிகப்பெரிய ஊழல் ஆகும். மதுவிற்பனை மூலம் இந்த ஆலை ஈட்டும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வருமானம் கருப்புப் பணமாக பதுக்கப்படுவதுடன், தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு ஜனநாயக பரவலாக்கல், நிர்வாகத்திறமை ஆகிய தத்துவங்களின் அடிப்படையில் நிர்வகிக்கப்படவில்லை. மாறாக, அனைத்து அதிகாரங்களும் மக்கள் முதல்வர் என்றழைக்கப்படும் நிழல் அதிகார மையத்திடம் குவிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படும் அவலம் நடைபெறுகிறது. இந்த நிழல் அரசுக்கு உதவ ஓய்வு பெற்ற அதிகாரிகள், வணிகக் கூட்டாளிகள் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவும் உள்ளது. இவர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்திலிருந்து செயல்படுகிறார்கள். அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஊழல் இலக்குகளை இக்குழு தான் தீர்மானிக்கிறது. அமைச்சர்களின் செயல்பாடுகள் அவர்கள் வசூலித்துத் தரும் லஞ்சப் பணத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றனவே தவிர, அவர்களின் பணித்திறன் அடிப்படையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகேடுகள் அனைத்தும் பொது ஊழியரால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஒப்பானவையாகும். பொது ஊழியர்களாக இருப்பவர்கள், பணப்பயன் அடையும் நோக்குடன் தங்களின் பதவியை பயன்படுத்தி செய்யும் குற்றங்களை இந்திய தண்டனைச் சட்டமும், 1988 ஆம் ஆண்டின் ஊழல் தடுப்புச் சட்டமும் தெளிவாக வரையரை செய்திருக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 163(1) பிரிவின்படி ஒரு மாநிலத்தின் ஆளுனராக இருப்பவர் தமது அமைச்சரவையின் உதவி மற்றும் அறிவுரையின்படி ஏராளமான பணிகளையும், கடமைகளையும் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆளுனருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவர் அமைச்சரவையின் மூலம் செயல்படுத்த வேண்டும் என்ற போதிலும், சில நேரங்களில் அவர் தமது அதிகாரத்தை அவரது விருப்பப்படி செயல்படுத்த முடியும். இத்தகைய அதிகாரத்தை ஆளுனருக்கு வழங்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளில் 167(பி) முக்கியமானதாகும்.

அந்த சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் ஆளுனர் கோரும்போது மாநில அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்ட தகவல்களையும், புதிய சட்டம் தொடர்பான திட்டங்களையும் ஆளுனரிடம் வழங்க வேண்டியது அம்மாநில முதலமைச்சரின் கடமை ஆகும். அதுமட்டுமின்றி, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 163(1)&ன் முதல் பகுதியில் அமைச்சரவையின் பரிந்துரைப்படி தான் ஆளுனர் செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் போதிலும், அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுனர் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களில் அவர் சுதந்திரமாக செயல்பட இந்த சட்டத்தின் பின்பகுதி அதிகாரம் அளிக்கிறது.

அமைச்சரவையின் அறிவுரைப்படி செயல்படுவது சாத்தியமில்லாத விஷயங்களில் ஆளுனர் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை தன்னிச்சையாக பயன்படுத்த முடியும் . ஊழல் தடுப்புச் சட்டத்தின் 7, 11 ஆகிய பிரிவுகளின்படி அதிகாரத்தில் உள்ள பொது ஊழியர் ஒருவர் மற்றவர்களுக்கு சலுகை காட்டுவதற்காக பணப்பயன் அல்லது பரிசுகள் பெற்றால் அது ஊழலாக கருதப்படும்; இதற்காக அவர்களுக்கு 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படலாம்

மேற்குறிப்பிட்ட சட்ட விதிகளின்படி உங்களின் பரிசீலனைக்காக நாங்கள் இந்த மனுவை வழங்குகிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 167(பி) பிரிவின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கண்ட குற்றச்சாற்றுகள் குறித்து, பொதுநலனைக் காக்கும் நோக்குடன் தமிழக முதலமைச்சரிடமிருந்து விளக்க அறிக்கை கோருவீர்கள் என்று நம்புகிறோம். முதலமைச்சர் சார்பில் அளிக்கப்படும் விளக்கம் திருப்தியளிக்கும் வகையில் இல்லாவிட்டால், இதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாற்றுகளின் உண்மைத் தன்மை குறித்து விசாரிப்பதற்காக உச்சநீதிமன்ற/ உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் பாமக கூறியுள்ளது.